துவார பாலகர்கள்!

துவார பாலகர்கள்! E_1662726168

‘எத்தனையோ கோவிலுக்கு போய் வந்து விட்டேன்.
என் வேண்டுதல் எதுவும் பலிக்கவில்லை. விதிப்படி தானே எல்லாம்
நடக்கிறது…’ என்று சலித்துக் கொள்பவர்கள் உலகில் அதிகம்.

கோவிலுக்கு முறைப்படி யார் சென்று வருகின்றனரோ, எந்தக்
கோவிலில் முறைப்படி பூஜை நடத்தப்படுகிறதோ அந்தக் கோவிலுக்கு
சென்று வருபவர்களுக்கு, வேண்டுதல் நிச்சயம் பலிக்கும்.

அநேகமாக, கோவிலுக்கு செல்பவர்களில் பலர், கருவறை அல்லது
நுழைவு வாயிலில் இருக்கும் துவார பாலகர்களை கண்டு கொள்வதே
இல்லை. ஏதோ, இரண்டு பெரிய உருவங்களாகத்தான் அவர்களைப்
பார்க்கின்றனர்.

சிவன், பெருமாள் மற்றும் சக்தி ஆகிய தெய்வங்களுக்கு துவார பாலகர்
அல்லது பாலகியர் வாசலில் காவல் இருப்பர்.

துவாரம் என்றால் வாசல். பாலகர் என்றால் காவலர். இவர்களைக்
கடந்து தான் பக்தர்கள், கருவறைக்குள் செல்ல வேண்டும். நம் மனதில்
என்ன எண்ண ஓட்டம் இருந்தாலும், அதையெல்லாம் அப்படியே நிறுத்தி
விட்டு, துவார பாலகர்களை வணங்க வேண்டும்.

‘உள்ளிருக்கும் இறைவனை வணங்கி திரும்பும் வரை, என் மனதில்
இறை எண்ணம் தவிர வேறு எதுவும் இருக்காது…’ என்று துவார
பாலகர்களிடம் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அதன்பின், உள்ளே
சென்று வந்தாலே போதும்.

நம் மனதில் என்ன நினைக்கிறோமோ, அது தானாக நடந்து விடும்.
இதற்காக, மருகி உருகி வேண்ட அவசியமில்லை. காரணம், கடவுளுக்கு
எல்லாம் தெரியும். அவர், நம் வேண்டுதலை அறிவார். அது நியாயமாக
இருக்கும் பட்சத்தில் நிறைவேற்றி விடுவார்.

சிவன் கோவில்களில் நந்தி, மகாகாளர், திண்டி, முண்டி, சிருங்கி, பிருங்கி,
கோபதி, அனந்தன், விமலன், சுபாகு என்றும்; பெருமாள் கோவில்களில்
ஜெயன், விஜயன், சண்டன், பிரசண்டன், சங்கோதமன், சக்ரோதமன், தத்ரு,
விதத்ரு என்றும்; அம்மன் கோவில்களில் மந்தோதரன், குண்டோதரன்,
சுமுகன், சுதேகன் என்ற பெயர்களிலும் துவார பாலகர்கள் அருள்கின்றனர்.

துவார பாலகர்கள் மரியாதையின் அடையாளம். ஒருவரது அறைக்குள்
நுழையும் போது, கதவை லேசாக தட்டி அனுமதி பெற்றே செல்கிறோம்.
சாதாரண மனிதனுக்கே இப்படி என்றால், கடவுளின் வீட்டுக்குள் நுழையும்
போது, எவ்வளவு மரியாதையுடன் செல்ல வேண்டும்.

‘நான் கடவுளை தரிசிக்க செல்கிறேன். இதற்கு உங்கள் அனுமதி வேண்டும்…’
என, துவார பாலகர்கள் முன் நின்று, மனதுக்குள்ளாகவே அனுமதி கேட்க
வேண்டும். ‘மனதில் எந்த தேவையற்ற எண்ணமும் இல்லாமல் சென்று
வா…’ என, துவார பாலகர்கள் சொல்வராம்.
அதன்படி, உள்ளே சென்று கடவுளிடம் நியாயமானதை மட்டும் கேட்க
வேண்டும்.

பிரம்மாண்டமான துவார பாலகர்கள் சிலையை, கும்பகோணம் அருகிலுள்ள
திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில் காணலாம். துவார பாலகர்கள்
நமக்கு கற்றுத்தருவது ஒழுக்கமும், மரியாதையையும் தான். மரியாதையின்
சின்னமான இவர்களை வணங்கி, நல்ல பண்புகளை பரிசாகப் பெறுவோம்.

தி. செல்லப்பா
-வாரமலர்

பின்னூட்டமொன்றை இடுக