
–
—-
சிவ… சிவ… சிவ… வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன்
‘சிவன் எனும் ஓசையல்லது அறையோ உலகில் திருநின்ற செம்மை உளதே!’
நாவுக்கு அரசராம் அப்பர் பெருமானின் திருவாக்கு இது. சிவன் எனும் ஓசை அல்லாது உலகில் வேறொரு செம்மை உளதோ? இல்லை. முத்தி தரும் செம்பொருள் அவன் ஒருவனே. சிவநாமமே முழக்கத்துக்கு உரியது. அது செம்மையானது என்று அறிவுறுத்துகிறார் அவர்.
சிவம் என்ற சொல்லுக்கு அன்பு, உயர்வு, கடவுள், பிரம்மம், மகிழ்ச்சி, நித்ய யோகம், நன்மை, பசு, வேதம், மங்கலம் ஆகிய பல பொருள்கள் உண்டு. இப்படிப் பரவலாக இருக்கும் ஒன்றை- ஒரு பொருளை- இறை வனை ‘சிவம்’ என்ற சொல்லால் அழைத்தனர். தோற்றம், பிறப்பு, அவதாரம், வளர்ப்பு, பால் வேறுபாடு போன்ற மாசு மலங்கள் இல்லாமல், எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட தூய்மையான – மங்கலமான செம்பொருளே சிவபெருமான்.
இப்படி எல்லாமுமாகி நிற்கும் பரம்பொருளுக்கு லிங்க வடிவம் எதற்கு? அதன் அரும்பெரும் தத்துவம்தான் என்ன?
உலகங்களுக்கு கருணை செய்யவே சிவபிரான் லிங்க வடிவில் விளங்குகிறார். உருவ திருமேனிக்கும், கண்ணுக்குப் புலப்படாத அருவ திருமேனிக்கும் மூலமான சிவபெருமானை வழிபடுவதற்கு, ஓர் அடையாளமாக விளங்குவது சிவலிங்கம்.
லிங்கம் என்றால் குறியீடு அல்லது சித்திரித்தல் என்று பொருள். லிங் – லயம்; கம் – தோற்றம். அதாவது, உலகம் தோன்றி ஒடுங்கும் இடம். உலக முடிவில் அண்டசராசரங்களும் லயிப்பதற்கு உரிய இடம் என விளக்குகின்றன ஞானநூல்கள். லிங்கம் என்பதற்கு பிரகாசம் என்றும் பொருள் உண்டு. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் பஞ்ச கிருத்தியங்களால்- ஐந்து தொழில்களால் உலகைப் பிரகாசிக்கச் செய்வது. எனவே, லிங்க வடிவம் என்பது சிவபரம்பொருளுக்கு உரிய அடையாளம்.
லிங்க வழிபாடு இந்தியாவில் மாத்திரம் காணப்படுவது அன்று. முற்காலத்தில் உலகின் எல்லாப் பகுதிகளிலும் சிவலிங்க வழிபாடு சிறப்புற்றிருந்தது.
‘தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்பது மாணிக்கவாசகரின் அருள்வாசகம். விச்வேச்வரன் சர்வேச்வரன் என்ற திருப்பெயர்கள் உலகத்துக்கெல்லாம் இறைவனாக, எல்லோருக்கும் கடவுளாக ஈசன் விளங்குவதை வலியுறுத்துகின்றன.
பாரத நாடு ஜம்புத் தீவின் ஒரு பகுதி என்று வடமொழி ஸ்லோ கம் கூறுகிறது. ‘ஜம்பூத்வீபே – பாரத வர்ஷே – பரதக் கண்டே…’ என்று சங்கல்பத்தில் வருகிறது அல்லவா?
இந்திய நாட்டோடு தொடர்புற்று, தெற்கே விரிந்து அகன்று மேருவை மையத்தில் உடையதாகக் கொண்டு திகழ்ந்த நிலப்பரப்புக்கு ஜம்பூத்வீபம் – சம்புத்தீவு என்று பெயர். ஜம்புத்தீவை நாவலம் தீவு என்கின்றன தமிழ் இலக்கியங்கள். அதாவது இன்றைய ஆசியாவும், ஐரோப்பாவும் சேர்ந்த பகுதியான யூரேஷியா, அன்றைய ஜம்புத் தீவாக விளங்கியது. இந்த சம்புத் தீவு என்பது சிவன் தீவு என்பதாகும். சம்பு – சிவன்.

வட அமெரிக்காவில் கொலராடோ என்னும் ஒரு ஆறு ஓடுகிறது.
நிலத்தை ஒரு மைல் ஆழம் வரையில் அரித்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் கரையில் உள்ள குன்றின் மீது சுமார் 10,000 ஆண்டுகள் பழைமையான ஒரு சிவாலயத்தை, 1937-ம் ஆண்டில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த ஆலயம் குறித்த கட்டுரைகள் லண்டன், அமெரிக்கா, இலங்கை, முதலான நாடுகளில் உள்ள செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளன. ‘பிமிழிஞிஹி கிவிணிஸிமிசிகி’ என்னும் நூலை எழுதிய ‘சமன்லால்’ என்பவர், அமெரிக்காவின் பல பாகங்களிலும் இன்னும் சிவலிங்க வழிபாடு இருப்பதை நன்கு எடுத்து விளக்கியுள்ளார்.
சிவன் வழிபாடு மேற்கு ஆசியா, கிரீஸ், ரோம் ஆகிய நாடுகளில் மிகப் பழங்காலத்திலேயே பரவியிருந்தது. பின்லாந்தில் வாழும் துரானிய வகுப்பைச் சார்ந்த மக்களின் காத்தற் கடவுள் சிவன். பண்டைய நாட்களில் எகிப்து, பாபிலோன், கிரீஸ், ரோம் முதலான நாடுகளில் லிங்கங்கள் தீவினையை ஓட்டும் அணிகலன்களாக அணியப்பட்டன. பெரும்பாலும் பெண்களே லிங்கங்களை அணிந்தனர். இதனால் மலட்டுத்தன்மை நீங்கும் என்றும், தீய ஆவிகள் அணுகாது என்றும் மக்கள் நம்பி வந்தார்கள்.
ரோமரும் எகிப்தியரும் சிவலிங்கங்களை ‘பிரியாபஸ்’ என்ற பெயரில் வணங்கினர். ‘பிரியாபஸ்’ எனும் சிவலிங்கங்களை நாட்டி கோயில் அமைத்தார்கள். இஸ்ரேலியர்கள் சிவலிங்கத்துடன் நந்தியையும் வழிபட்டிருக்கிறார்கள்.
லிங்க வழிபாடு ரோமானியர்களுடன் பிரான்சுக்கும் சென்றது. இன்றும் லிங்கங்களின் வடிவங்களை அங்குள்ள கிறிஸ்து ஆலயக் கட்டடங்களில் காணலாம். அலெக்சாந்தரியாவில் ‘தாலமி’ என்பவர் நடத்திய விழாவில், 129 முழம் உயரமுடைய லிங்கம் வீதிவலம் கொண்டு செல்லப்பட்டதாம். கிரேக்க நாட்டில் ‘பக்கஸ்’ என்ற சமய விழாவில் லிங்கத்தை வீதி வலமாகக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்த விழா இத்தாலியிலும் பரவியிருந்தது. பக்கஸ் என்னும் கடவுளுக்கு, இடபமும் புலியும் மிகவும் பிரியமானவை. பக்கஸ் கடவுள் புலித் தோலை உடுத்தி, கையில் திரிசூலத்தையும் வைத்திருப்பார். அவர் கையில் கபாலமும் உண்டு என்ற தகவல் வியப்பளிக்கிறது.
மேற்கு ஆசிய நாடுகளில் இடபம் (நந்தியும்) வழிபாட்டில் இருந்துள்ளது. கிரேக்கர்களின் ‘தயோனிசிஸ்’ எனும் கடவுள் இடப கடவுளாகவே இருந்தார்.
நமது ஜோதிட சாஸ்திரத்தில் இடபம் என்பது வைகாசி மாதத்தைக் குறிக்கும் சொல்லாகும். கிரேக்கர்கள் இடபத்தை ‘எபாபஸ்’ எனும் பெயரால் வழிபட்டனர். இவ்வடிவம் அவர்களின் பழைய நாணயங்களிலும், கட்டடங்களிலும் காணப்படுகிறது. அமேனியரின் ‘மொலொச்’ எனும் கடவுள் வடிவம் இடபமாகும். யூத மக்களும் ரிஷபத்தை வணங்கியுள்ளனர். இவ்வாறு மத்திய தரைக்கடலைச் சூழ்ந்த எல்லா நாடுகளிலும் இடபம் வழிபடப் பெற்றது.
சிரியா மக்கள், தாங்கள் முழுமுதலாக வழிபட்ட தந்தைக் கடவுளுக்கு ‘அதாத்’ (ஆதி) என்று பெயரிட்டு வணங்கினர். அந்தக் கடவுள் தாடியுடையதாகவும் இடபத்தின் மேல் அமர்ந்த நிலையிலும் காணப்படுவார். வலது கையில் மழுவையும் இடது கையில் சூலத்தையும் வைத்திருப்பார். இடபத்தின் நெற்றியில் பூமாலை காணப்படும். சிரியாவுக்கு வடக்கே உள்ள நாடு ஹெய்ட்டி. இந்நாட்டு மொழிக்கும் தமிழுக்கும் மிகவும் தொடர்பு உண்டு. அங்கு பழைய இடிபாடுகளில் உள்ள ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சிரியாவின் ‘அதாத்’ கடவுள் போன்று, இடபத்தின் மேல் அமர்ந்த நிலையில் உள்ள வடிவம் கையில் மழுவும் கேடயமும் கொண்டு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இடப வழிபாடும், பாம்பு வழிபாடும் இவ்வுலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் காணப்பட்டுள்ளன. சூரிய வழிபாடும் சிவலிங்க வழிபாடும் உள்ள எல்லா நாடுகளிலும் பாம்பு வழிபாடும் இருந்தது.
சிவனைக் குறிக்கும் பசுபதியின் வடிவம் இரண்டு கரங்களுடன் காணப்படுகிறது. கி.பி. 50 வரை வட இந்தியாவில் அச்சடிக்கப்பெற்ற பொற்காசுகளில் காணப்படும் சிவன் வடிவமும், இரண்டு கரங்கள் உள்ளனவாகவே காட்டப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் கிடைத்த சிற்பங்களில் ‘சாஸ்தியன்’ எனும் கடவுள் மூன்று தலையுடைய சூலத்தைக் கையில் பிடித்திருப்பதாகவும், சூலத்தின் கைப்பிடியினின்றும் மழைத்துளி மானின் வாயில் விழுவதாகவும் காட்டப்பட்டுள்ளன.
‘சிந்தோயிஸம்’ என்னும் ஜப்பானிய மதத்தில் சிவலிங்கம் முதன்மையானது. மெக்சிகோ, பெரு, ஹெய்ட்டி முதலான நாடுகளிலும் சிவலிங்க வழிபாடு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. ஸ்பானிஷ் (SPAIN) மக்கள் முதன் முதலில் அமெரிக்கா சென்றபோது, அங்கு சிவலிங்கங்களை வைத்து வழிபட்டதைக் கண்டார்களாம். ‘முக்கேசி’ என்பவர் எழுதிய ‘இந்திய நாகரிகமும் அதன் பழைமையும்’ என்ற நூலில் மேற்படி விவரம் காணப்படுகிறது.
ஜப்பானிய மக்களின் பழைய தெய்வங்களில் ஒன்று ‘சிவோ’ என்றழைக்கப்பட்டது. வேட்டையாடும் மக்களைப் பாதுகாக்கும் கடவுள் அது என்று கருதினார்கள். சொரியா நாட்டினின்றும் சென்று ஜப்பான் தீவுகளில் குடியேறியவர்கள், சிவலிங்கங்களை முச்சந்தி, நாற்சந்திகளில் வைத்து நட்டு வழிபட்டனர்.
மேற்கு ஆசிய மக்களின் ஆண்டின் மூன்றாவது மாதம் ‘சிவன்’ என்ற பெயர் உடையது. சிவன் மாதம் ‘சிமானு’ எனவும் அழைக்கப்பட்டது.
கம்போடியா நாட்டில் பாலவர்மன் என்ற அரசன் மிகச் சிறந்த சிவபக்தன். இவன் கி.பி. 616-இல் ‘கம்பீரவாணன்’ என்னும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. கம்போடியாவில் சிவவழிபாடே முதன்மை பெற்றிருந்தது. அங்கு பல இடங்களில் காணப்படும் திருவுருவங்கள் சிவன் இடபத்தில் வீற்றிருக்கும் அமைப்பிலே உள்ளன. இத்தாலியில் உள்ள ரோம் அருங்காட்சியகத்தில் இன்றும் ஒரு சிவலிங்கம் காணப்படுகிறது.
இவ்வளவு தகவல்களையும் அறியும்போது, மணிவாசகப் பெருமானின் அருள்வரிகள் எவ்வளவு அற்புதமான ஆழமான பொருளுடையவை என்பது நன்கு புலப்படுகிறது.
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!
=
http://www.vikatan.com/article.php?aid=93624