–
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள
மணவாள நல்லூரில் முருகப்பெருமான் பிற
திருக்கோயில்களிலிருந்து மாறுபட்டு உருவமின்றி
அரூபமாகத் திருமேனி கொண்டு “கொளஞ்சியப்பர்’
என்ற திருநாமத்துடன் கோயில் கொண்டுள்ளார்.
–
நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படையில் முருகன்
விரும்பி உரையும் இடங்களைப் பட்டியலிட்டு கூறுமிடத்து
தன் அடையாளமாக நடப்பட்ட கல் நிற்கும் இடத்திலும்
முருகன் வீற்றிருப்பான் என்கின்றார். இவ்வாறு ஒரு கல்லில்
ஆவேசித்து (ஆபிர்வித்து) நிற்கும் முருகனின்
தொன்மையான நிலைக்கு கந்துடை நிலை என்று கூறுவார்கள்.
–
மேலும் கந்து என்ற சொல்லுக்கு தண்டாயுதம் கொண்டவன்
என்ற பொருளும் உண்டு. இனி கொளஞ்சியப்பர் கோயில்
கொண்ட வரலாற்றினைக் காண்போம்:
–
பல ஆண்டுகளுக்கு முன் விருத்தாசலத்திலிருந்து சுமார்
2 கி.மீ. தொலைவில் உள்ள மணவாள நல்லூர்ப்பகுதி காட்டுச்
செடிகளும், மரங்களும் முக்கியமாகக் கொளஞ்சி செடிகள்
மண்டி புதராக இருந்ததாம். காட்டுப்பகுதியில் மேயச்சென்ற
பசு மாடு ஒன்று செடிகளுக்குள் மறைந்திருந்த பலிபீட உருவில்
இருந்த ஒரு கல்லின் மீது பால் சொரிவதை வழக்கமாய்
கொண்டிருந்ததாம். இதைக்கண்ணுற்ற மக்கள் இந்த பீடத்தைப்
புனிதமானதாகக் கருதி முருகன்தான் அதில் ஆபிர்வித்துள்ளான்
என உணர்ந்து வழிபட்டு வரலாயினர்.
அவர்கள் அவ்வாறு கருதியதற்கு ஒரு காரணமும் உண்டு.
விருத்தாசலபுராண வரலாற்றில், இப்பகுதிக்கு தலயாத்திரையாக
வந்த சுந்தரர் திருமுதுகுன்றம் என்று அழைக்கப்படும் இத்தல
இறைவனை பாடாமல் சென்றாராம். இறைவன் திருவுளக்
குறிப்பறிந்த முருகன் ஒரு வேட்டுவக் குமரனாக சுந்தரரை
எதிர்சென்று அவரது பொன்னையும், பொருளையும் கவர்ந்து
கொண்டு திருமுதுகுன்றம் வந்து பெற்றுக் கொள்ளுமாறு
பணித்தாராம். தன் தவற்றினை உணர்ந்த சுந்தரரும்
விருத்தாசல இறைவனை தரிசித்து பாடிச் சென்றாராம்.
அவ்வாறு வேட்டுவக் குமரனாக வந்த முருகனே காவல்
தெய்வமாக
விருத்தாசலத்தின் நாற்புறங்களிலும் கோயில் கொண்டு
அமர்ந்தான் என்றும், அதில் மேற்கு திசையில் வீற்றிருப்பவர்
கொளஞ்சியப்பர் எனவும் செவிவழி செய்திகள் கூறுகின்றன.
ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் அழகுற அமைந்துள்ள இந்த
ஆலயத்தில் கருவறையில் பீடத்திருமேனிக் கொண்டு
கொளஞ்சியப்பர் அருள்புரிகின்றார். பீடத்தின் கீழ் முருகனது
சடாட்சரம் பொறிக்கப்பெற்ற ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டையாகிவுள்ளது.
அபிஷேக, ஆராதனைகள் யாவும் பீட வடிவில் உள்ள முருகனுக்கே.
இதைத் தவிர பெரிய உருவில் சித்தி விநாயகர் தனிச் சந்நிதி
கொண்டுள்ளார். இடும்பன், கடம்பன் சந்நிதிகளும், முனியப்பர்,
வீரனார் சந்நிதிகளும் ஆலயத்தில் நாம் தரிசனம் செய்யும் இதர
தெய்வமூர்த்தங்கள். கொளஞ்சி மரம் தல விருட்சமாகத்
திகழ்கின்றது.
இத்திருக்கோயிலிலில் அருள்மிகு கொளஞ்சியப்பர்
நீதிபதியாகவும், வைத்தியராகவும் அருள்பாலித்துவருகிறார்.
எழுத்து மூலம் பிராது செலுத்தி 90 நாட்களுக்குள் அது நிறைவேறி
பிராதை திரும்பப்பெறும் அதிசயத்தினை இன்றளவும் கண்
கூடாகக் காணலாம். இவ்வழிபாடு இத்திருக்கோயிலின் மிக
முக்கியப் பிரார்த்தனையாகும்.
முனியப்பர் சந்நிதியில் நடக்கும் இந்த பிரார்த்தனைக்கு
விதிமுறைகளும், பிரத்யேகக் கட்டணங்களும் உண்டு.
அருள்கருணையோடு மறக்கருணையும் நல்கும் இந்த முருகன்
சந்நிதியில் பூஜித்து வழங்கும் வேப்பெண்ணெயினை பக்தர்கள்
உடம்பில் பூசியும், அருந்தியும் பூரணகுணமடைந்து செல்வதும்
இத்திருக்கோயிலின் முக்கிய மகிமையாகும்.
இப்பகுதி மக்களில் பெரும்பாலோருக்கு இந்த முருகன்தான்
குல தெய்வமாகும்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ்
இயங்கிவரும் இத்திருக்கோயிலில் பால்குடம் எடுத்தல்,
காவடி எடுத்தல், அலகு குத்திக்கொள்ளுதல், மாவிளக்கு இடுதல்,
குழந்தைகளுக்கு காதணி அணிவித்தல், முடி காணிக்கை என்று
ரு முருகன் ஆலயத்திற்கு உரிய அனைத்து வைபவங்களும்,
முக்கிய விசேஷ தினங்களும் முறையாக நடத்தப்படுகின்றது.
ஆண்டுதோறும் வைகாசித் திங்கள் வசந்த உற்சவம்
அதிவிமரிசையாக நடைபெறும். வரும் ஆடிக்கிருத்திகை
நன்னாளில் இத்திருத்தலத்திற்குச் சென்று அன்று நடைபெறும்
சிறப்பு அபிஷேக வழிபாட்டில் பங்கேற்று
அருணகிரி நாதரின்,
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய்க் குகனே
என்ற கந்தரநுபூதிப் பாடலைப்பாடி பேரானந்தப் பெறுவாழ்வு
பெறுவோம்.
–
———————————————–
தினமணி