‘நர்ஸ் தான் ஆனா மெக்கானிக் வேலையும் தெரியும்’: தன் குழந்தைகளுக்காக மினி ஆட்டோ தயாரித்த ஒரு மனிதனின் கதை


!

By கார்த்திகா வாசுதேவன்  |   தினமணி

mini_auto2

என் பெயர் அருண் குமார் புருஷோத்தமன். கடந்த ஏழரை வருடங்களாகப் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நர்ஸிங் ஆஃபீஸராக இருந்தேன். இப்போது இடுக்கி ஜில்லா மருத்துவமனையில் கேரளா ஹெல்த்கேர் சர்வீஸில் நர்ஸாக வேலைபார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் எனது குழந்தைகளுக்காக கடந்த ஏழரை மாதம் மிகுந்த சிரத்தையோடு இந்த மினி ஆட்டோவை உருவாக்கி இருக்கிறேன். இந்த ஆட்டோவின் பெயர் சுந்தரி ஆட்டோ.

இதை நான் எப்படி உருவாக்கினேன் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள். இதில் நான் பயன்படுத்தி இருக்கும் பொருட்களில் பலவும் நமது வீடுகளில் நாம் முன்பே உபயோகப்படுத்தி கழித்துப் போட்டவை தான். இந்த ஆட்டோவின் முன்புறத்தின் வலப்பகுதியை உருவாக்க நான் என் வீட்டில் ரிப்பேர் ஆகி பயனற்று இருந்த சன் டைரைக்ட் டி டி ஹெச்சை வொர்க்‌ஷாப்பில் மோல்ட் செய்து வாட்டமாக வளைத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.

ஆட்டோவின் அடியில் இருக்கும் மெட்டல் பாகத்திற்கு வீட்டில் இருந்த பழைய ஸ்டீல் ஸ்டவ்வை வெட்டிப் பயன்படுத்தி இருக்கிறேன். அதே போலத்தான் இந்த ஆட்டோவின் உட்புறத்தில் சாவி போட்டால் தான் வண்டி ஸ்டார்ட் ஆவதற்கான ஒரு ஏற்பாட்டை செய்து வைத்திருக்கிறேன்.

சாவி தவிர கிக் ஸ்டார்ட் செய்வதற்கும் இதில் வசதி உண்டு. அது மட்டுமல்ல, சாதாரணமாகப் பெரிய ஆட்டோக்களில் காணப்படும் வைப்பர் மெக்கானிஸன் என் குழந்தைகளுக்கான ஆட்டோவிலும் உண்டு. 

இது தவிர ஆட்டோவின் முன்புறக் கண்ணாடிப்பகுதியின் ரப்பர் மெட்டீரியலுக்காக பழைய செருப்புகளில் இருக்கும் ரப்பரை வெட்டிப் பயன்படுத்தி இருக்கிறேன்.

இந்த மினி ஆட்டோவை இயக்க இரண்டு 12  வோல்ட் டி சி மோட்டாரைப் பயன்படுத்தி இருக்கிறேன். மொத்தம் 24 வோல்ட் மோட்டார் பவர் இதற்குப் போதும். பெரிய ஆட்டோக்களில் இருப்பதைப் போன்றே இதிலும் முன்புற ஹெட் லைட்டுகள், உட்புற லைட், பிரேக் வசதி, ஹார்ன் வசதி, முதலுதவிப் பெட்டி வசதி, மொபைல் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி,

சும்மா ஃபேன்ஸிக்காகவேனும் மீட்டர் பாக்ஸ் வசதி என ஒரு பெரிய ஆட்டோவுக்குண்டான அத்தனை அம்சங்களையும் நான் என் மினி ஆட்டோவிலும் உருவாக்கி வைத்திருக்கிறேன். ஆட்டோவில் செல்லும் போது என் குழந்தைகளுக்குச் சலிப்புத் தட்டக்கூடாது என்பதற்காக இதில் டிரைவர் ஷீட்டுக்கு அடியில் பென் டிரைவ் வசதியும், மெமரி கார்டு வசதியும் கூட செய்து வைத்திருக்கிறேன்.

ஆட்டோ ஓட்டும் போது பாட்டுக் கேட்டுக் கொண்டே வண்டி ஓட்டலாம் பாருங்கள், அதற்காகத்தான், அதோடு, இதை உருவாக்க அதிக செலவாகவில்லை, வீட்டிலிருக்கும் பழைய பிளாஸ்டிக் கண்டெய்னர் பாக்ஸைத்தான் இதற்காக உபயோகித்திருக்கிறேன்’ என்கிறார் அருண்குமார் புருஷோத்தமன்.

பெரும்பாலான பெற்றோர்கள் தம் குழந்தைகள் விளையாடுவதற்காக எதைக் கேட்டாலும், அந்தப் பொருள் எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் இந்தக் காலத்தில் வாங்கித் தர சித்தமாகவே உள்ளனர். காரணம் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிட முடியாதபோது, குழந்தைகளை இப்படியாவது திருப்திப்படுத்தலாமே என்ற ஆசையில் தான் அப்படிச் செய்கிறார்கள்.

ஆனால், அப்படியெல்லாம் பணம் செலவழித்தும் கூட அவர்களால் தமது குழந்தைகளை முழுமையாகத் திருப்திப் படுத்தி விட முடியாது போகிறது.

காரணம், கடைகளில் பணத்தைக் கொட்டி வாங்கித் தரும் எலெக்ட்ரானிக் விளையாட்டுப் பொருட்கள் (கார், ஸ்கூட்டர், ட்ரெய்ன் போன்றவை) சில மாதங்களிலேயே தங்களுடைய வேலையைக் காட்டத் தொடங்கி விடும். முதலில் அவற்றிற்கு பேட்டரி வாங்கி மாளாது. இரண்டாவது மெயிண்டனென்ஸ் தொல்லை. சில குழந்தைகளுக்கு அவற்றைப் பக்குவமாகக் கையாளத் தெரியாது.

அவர்கள் ஏனோதானோவென்று உபயோகித்து சில மாதங்களிலேயே அவற்றை ரிப்பேர் ஆக்கி விடுவார்கள். இந்தக் கஷ்டம் எல்லாம் அருண்குமார் புருஷோத்தமனுக்கு இல்லை.

இந்த சுந்தரி மினி ஆட்டோவை அவர் தானே தன் கைகளால், தன் குழந்தைகளுக்காகச் செய்வித்திருக்கிறார். அதனால் என்ன? பாசமுள்ள எல்லா அப்பாக்களும் செய்யக் கூடியது தானே? என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்.

ஏனெனில், இந்த அப்பா, தான் வாங்கித் தந்த பொருள் ரிப்பேர் ஆனால், அதை உடனடியாக சரி செய்யக்கூடிய அளவுக்கு பொருள் குறித்த ஞானம் கொண்டவராகவும் இருப்பது அவரது ஸ்பெஷல். அதனால் தான் இந்த விடியோவைப் பகிரத் தோன்றியது.

அருண்குமார் உருவாக்கிய இந்த மினி ஆட்டோ, இரவுகளிலும் பயணத்திற்கு ஏற்றதாம். குழந்தைகள் இரவில் எங்கே செல்லப்போகிறார்கள். இந்த ஆட்டோக்களை குழந்தைகள் மட்டும் பயன்படுத்துவதைக்காட்டிலும் பிறவியிலேயே குள்ளமாகப் பிறந்து வாழ்க்கைத் தேவைக்கு என்ன செய்வது? என்று ஏங்கிக் கொண்டிருக்கும் குள்ள மனிதர்களுக்கும் கூட பயன்படுத்தலாம்.

அவர்கள் இந்த ஆட்டோக்களை பள்ளிச் சிறுவர்களை அழைத்துச் சென்று பள்ளி மற்றும் வீடுகளில் விடப் பயன்படுத்தலாம். இது ஒரு மாற்று உபயோகமே தவிர இப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அருண்குமார் இதை உருவாக்கவில்லை என்பது நிஜம். அவரது நோக்கம் அவரது குழந்தைகளின் சந்தோஷம் மட்டுமே!

இந்த விடியோவை முதல்முறை காணும் போது, மேலுமொன்று தோன்றியது. இது குழந்தைகள் இயக்கும் ஆட்டோ என்பதால் பாதுகாப்புக்கு ஜிபிஎஸ் கருவி வசதியையும் இதில் இணைக்கலாம். தவிர குழந்தைகள் தனியே இந்த வாகனத்தில் செல்லும் போது புதியவர்களால் அவர்களுக்கு ஆபத்து ஏதேனும் ஏற்படுமாயின் உடனடியாக பெற்றோர்க்கும், காவல்துறைக்கும் அந்த அபாயத்தைப் பற்றிய எச்சரிக்கை கடத்தப்படும்படியான அலார்ம் செட்டப் வசதிகளையும் இதில் இணைக்கலாம். இத்தனையையும் இணைத்து விட்டால் சற்று வயதில் மூத்த குழந்தைகள் இதில் தாராளமாகப் பள்ளி சென்று திரும்பலாம்.

தன் குழந்தைகளுக்காகத் தான் என்றாலும் கூட புதுமையாக இப்படி ஒரு முயற்சியை முன்னெடுத்த அருண்குமாரை நாம் பாராட்டினால் தவறில்லை.

வாழ்த்துக்கள் அருண்குமார்.

Advertisements

மீன் துஞ்சும்பொழுதும் தான் துஞ்சாத் தலைவன்!

By காழிக்கம்பன் வெங்கடேசபாரதி | தமிழ்மணி

தலைவியின் களவொழுக்கத்தைத் தாய் அறிந்தாள்.
உடனே இல்லத்தினுள் வைத்து இரு கதவையும் தாழிட்டாள்;
கடுமையான சிறைக் காவலுக்குள் வைத்து மகளைக்
காத்தாள்.

இரவிலே அவளைக் காணவந்த தலைவனோ, அவளைக்
காணாது ஏங்கித் தவித்தான். பாதையெல்லாம் மணல் மலிந்த
பழைய ஊர்.

அகன்ற நீண்ட அந்தத் தெருவிலே அயர்ந்து அமர்ந்துவிட்டான்;
பேதுற்ற மனத்திடம் பேசினான்.

“உள்ளமே! ஓங்கிய கடலும் ஒலியடங்கிவிட்டது.
மண்டும் ஊதைக் காற்றும் மகரந்தத்தைக் கிண்டிக் கிளப்பும்
அலையோசைக் கடற்கரைச் சோலையும் அழகிழந்ததே!

பெட்டையும் தானும் வந்திட்ட கூகைச் சேவல் மக்கள் நடமாட்டம்
இல்லாத மாபெரும் தெருவில் அச்சம் உண்டாக்குமாறு அலறிக்
குழறுகின்றதே.

தீண்டி வருத்தும் தெய்வப் பெண்கள் வேண்டியதைப் பெற
வெளிவரும் நடுநாளானதே! தோகைமயில் என் முன்னே
தோன்றவில்லையே; தோழியின் உதவியும் தோற்றுவிட்டதோ?

மெல்லியலாள் அழகுக்குக் “கொல்லிப்பாவை’ அழகும்
குறைவாகுமல்லவா? முற்றிய, மென்மை மிகுந்த மூங்கிலன்ன
பருத்த தோள்களைப் படைத்தவள்; இளமை நலம் எல்லாமும்
கொண்டவள்; அழகு தேமல் படர்ந்த அங்கமெனும் தங்கமதில்
மதர்த்து நிற்கும் மார்பகத்தைத் தழுவிஇன்பம் பெறும் வாய்ப்பு
தவறிப் போய்விட்டதே!’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்ட
தலைவன், உடன் மணம்புரிந்து இல்லறம் இயற்றுவான் என்பது
கருத்தாகும்.

நெய்தல் திணைப் பாடலான இதைப் பாடிய புலவர்

வினைத்தொழிற் சோகீரனார் ஆவார்.

“ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும்
தாதுஉளர் கானல் தவ்வென் றன்றே
மணல்மலி மூதூர் அகல்நெடுந் தெருவில்
கூகைச் சேவல் குராலொடு ஏறி
ஆரிரும் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும்
அணங்குகால் கிளறும் மயங்கிரு நடுநாள்
பாவை யன்ன பலர்ஆய் வனப்பின்
தடமென் பணைத்தோள் மடம் மிகு குறுமகள்
சுணங்கு அணி வனமுலை முயங்கல் உள்ளி
மீன்கண் துஞ்சும் பொழுதும்
யான்கண் துஞ்சேன் “யாதுகொல் நிலையே!’

– (நற்.319)


இருவகை அன்புகள் & புன்னகை & மல்லிகை தெய்வம் – கவிதைகள்

காகிதப் பறவை – கவிதை

`நல்ல படங்களுக்காக பொறுமையுடன் காத்திருக்கேன்!’- நடிகை சாந்தி கிருஷ்ணா

`பன்னீர் புஷ்பங்கள்’ சாந்தி கிருஷ்ணாவை, தமிழ் ரசிகர்கள்
எளிதில் மறக்க முடியாது. தமிழ் சினிமாவைக் காட்டிலும்,
மலையாளத்தில் அதிகம் புகழ்பெற்றவர்.

தற்போது மலையாள சினிமாக்களில் மட்டும் நடித்துவருபவர்,
பெங்களூருவில் வசித்துவருகிறார். தற்போதைய செயல்பாடுகள்
குறித்து, சாந்தி கிருஷ்ணாவிடம் பேசினோம்.

சாந்தி கிருஷ்ணா

“ஹீரோயினா இருந்தப்போ, மாறுபட்ட நடிப்புக்கு நிறைய ஸ்கோப்
இருந்துச்சு. நான் ரீ-என்ட்ரி கொடுத்தப்போ, மலையாள சினிமாவில்
பெரிய எதிர்பார்ப்பு இருந்துச்சு. பட வாய்ப்புகளும் நிறைய வந்துச்சு;
தொடர்ந்து வருது.

ஆனா, மனசுக்கு நிறைவான, ஆக்டிங்குக்கு ஸ்கோப் இருக்கிற
மாதிரியான படங்கள் வருவதில்லை. அதனால எனக்கு வருத்தம்
உண்டு. தமிழில் `நேருக்கு நேர்’ படத்துக்குப் பிறகும், இதுவரை நல்ல
வாய்ப்புகள் வரலை.

இப்போ நடிக்க ஆர்வம் இருப்பதால், நல்ல படங்களுக்காக
பொறுமையுடன் காத்திருக்கேன். ஒருகாலத்தில் டான்ஸ்தான்
என் பிரதான அடையாளமா இருந்துச்சு. இப்போ அபார்ட்மென்ட்
வீட்டில் வசிப்பதால், டான்ஸ் ஆடுறதுக்கும் பிரச்னைகள் வருது.

நடிப்பு, குடும்பம் மட்டும்தான் இப்போதைக்கு என் பிரதான
வேலைகள். பையன் அமெரிக்காவில் காலேஜ் படிக்கிறான்.
பொண்ணு ஒன்பதாவது முடிச்சிருக்காள். என் குடும்ப வாழ்க்கையில்
நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கேன்.

ஆனாலும், எப்போதுமே பொறுப்புள்ள அம்மாவாக இருக்கேன்
என்பதால் மன நிறைவுடன் இருக்கேன்” எனப் புன்னகைக்கிறார்,

சாந்தி கிருஷ்ணா.


கு.ஆனந்தராஜ்
-விகடன்

ஹாலந்து நாட்டிலிருந்து ஒரு சமஸ்கிருத ரசிகர்

அத்வைத வேதாந்தத்தில் அபாரமான ஈடுபாடு உள்ளவர்
சமஸ்கிருத மொழியின் வளமையை – செழுமையைப்
பெரிதும் போற்றி மகிழ்ந்து, ஆம், வழிபடுகிறார்.
ரட்ஜர் கோர்ட்டனீஹர்ஸ்ட் வயது 58.

இவர் பிறந்தது ஹாலண்ட். வளர்ந்தது அயர்லாந்து;
தற்சமயம் பணிபுரிவது டப்ளலின், தொழில் சமஸ்கிருத
வாத்தியார்.

இந்தப் பிரபஞ்சத்தின் ரகசியத்தை, அதில் மறைந்துள்ள
உண்மையை மானுட இனத்திற்குத் தெரிவிக்கும் ஆற்றல்
கொண்ட ஒரே மொழி சமஸ்கிருதம்தான் என்று அடித்துச்
சொல்கிறார், இவர்.

இவருக்கு, ஆங்கிலம், சமஸ்கிருதம் மட்டுமின்றி டச்சு, ஐரிஷ்,
பிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழிகளும் தெரியும்.

சமஸ்கிருத மொழி பற்றி பல்வேறு நாடுகளில் உள்ள
பல்கலைக் கழகங்களில் கெஸ்ட் லெக்சர் கொடுப்பதுடன்,
சமஸ்கிருத மொழியின் சிறப்பையும் இந்த மொழியில் உள்ள
இலக்கியத்தின் சிறப்பையும் பற்றி குழந்தைகளுக்கும்
கற்பித்து வருகிறார்.

தற்சமயம், டப்ளினில் உள்ள ஜான் ஸ்காட்டிஷ் ஸ்கூலில்
சமஸ்கிருதத் துறைத் தலைவராக பணிபுரிகிறார்.
இவரிடம், 5 முதல் 14 வயது வரை உள்ள 250 மாணவர்கள்
சமஸ்கிருதம் பயில்கின்றனர்.

கல்லூரியில் தத்துவம் பயிலச் சென்றபோது, அத்வைத
வேதாந்தம் ஆங்கிலத்தில் (பயிற்று மொழி) சொல்லித்
தரப்பட்டது. இவருக்கு அந்த வேதாந்தத்தை மூல
மொழியில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற
ஆர்வம் தோன்றிற்று. இந்தியாதான் அதற்கு உரிய இடம்
என இங்கு வந்தார்.

புதுச்சேரியில் உள்ள ஸ்ரீஅரவிந்த ஆசிரமத்தில் நரேந்திரா
என்பவரைச் சந்தித்தார். சமஸ்கிருத மொழியை
ஒவ்வொருவரும் இலகுவாக, குழந்தைகள் கூட விரும்பும்
வகையில் சொல்லித்தர முடியும் என்ற தொழில்
நுணுக்கத்தைக் கையாள முடியும் என்பது இவருடைய
ஆய்வின் முடிவு.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை
இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்வது இவரது வாழ்க்கை.
இந்த ஆண்டு சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்குப்
பெரும் பங்காற்றி வரும் கர்நாடக மாநிலத்திற்கு வருகை
புரிந்து, மவுண்ட் காரிமல் கல்லூரியில் சிறப்பு சொற்
பொழிவாற்றினார்.

பள்ளிப் பாடத்திட்டத்தில் இல்லாத போதிலும்
வ்வொருவரும் (5-14 வயது வரை) காலை அரைமணி
நேரமாவது சமஸ்கிருதம் கற்கவும், பின்னர் அது தொடர்பான
இலக்கியங்களைப் பயிலவும் வேண்டும் என்று யோசனை
கூறுகிறார், இந்த அயர்லாந்துக்காரர்.

சமஸ்கிருத மொழியில் ஒலி, சப்தம் ஆகியவை உச்சரிக்கப்
படுகையில் ஒரு தெய்வீக அதிர்வு உணரப்படும் என்பதும்
இவரது அபிப்பிராயம்.

தெய்வீக மொழி என்பது ஒரு எல்லைக்குள் சுருங்கி,
முடங்கிவிடக்கூடாதல்லவா? பல்கிப் பரவ வேண்டும்,
இப்பூவுலகு முழுவதும் என்பது இவரது ஆசை.

  • ஜனகன்
  • நன்றி-மஞ்சரி & வாரமலர்-1-10-2014

நல்லவைக்குத் தடையில்லை!

ஓர் இஸ்லாமியத் துறவி இருந்தார். அவர் ஆண்டவனின்
பெரும் பக்தர். நாள் ஒன்றுக்கு, ஐந்து முறை தவறாமல்
வழிபாடு செய்வார்.

ஒருநாள் அவருக்கு ஏற்பட்ட களைப்பால் தூங்கிவிட்டார்.
வழிபாட்டு நேரம் வரவே யாரோ அவரைத் தட்டி
எழுப்பினார்கள்.

“எழுந்திரு! வழிபாட்டுக்கு நேரமாகிவிட்டது!’ என்று நினைவு
படுத்தினார்கள்.

துறவி எழுந்து உட்கார்ந்தார். தம்மைத் தட்டி எழுப்பியவருக்கு
நன்றி கூறி, “அன்பரே! உங்கள் இந்த உதவிக்கு என்ன கைமாறு
செய்தாலும் பற்றாது. என் வழிபாட்டு நேரம் தவறி இருந்தால்
என்ன ஆகியிருக்கும், ஆமாம் தங்கள் பெயர் என்ன?’ என்று
கேட்டார்.

“என் பெயரா? இப்லீஸ்’ என்றார் தட்டி எழுப்பியவர்.

“இப்லீஸ் என்றால், சாத்தான்-துர்தேவதை’ என்று பொருள்.

துறவிக்கு ஒரே வியப்பாகி விட்டது.

“அட, சாத்தானா நீ? வழிபாடு செய்கிறவர்களைத் தடுப்பதல்லவா
உன் வேலை? நற்காரியங்களுக்கு இடையூறு செய்வதும், தீங்கு
புரிவதும்தானே உன் தொழில்? அப்படி இருக்கும்பொழுது என்னை
வழிபாட்டுக்கு எழுப்பினாலே! உனக்கு எப்படி இந்த நல்ல குணம்
வந்தது?’ என்று கேட்டார்.

சாத்தான் பதில் சொன்னான்:

“இதிலும் என் குணம் மாறவில்லை. என் குறிக்கோளை நான்
மறக்கவில்லை. உங்களை எழுப்பியதனால் எனக்கு நல்ல பயனே!
முன்னம் ஒரு தடவை இதேபோலத்தான் தாங்கள் தூங்கி விட்டீர்கள்.
வழிபாட்டு நேரம் தாண்டி விட்டது. என் மகிழ்ச்சியும் எல்லை
தாண்டி விட்டது! நன்றாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் நீங்கள் விழித்து எழுந்ததும் மிகவும் வருத்தப்பட்டீர்கள்.
அழுதீர்கள். புலம்பினீர்கள். தலையில் அடித்துக் கொண்டீர்கள்.
ஆண்டவனுக்கு என்ன தவறு செய்து விட்டோம் என்று ஒரே
நினைவாக இருந்தீர்கள். அதனால் ஆண்டவனுக்கு இன்னம்
பிடித்தமானவராக ஆகிவிட்டீர்கள்.

எனவேதான் நான் மிகுந்த யோசனைக்குப்பின் உங்களை
எழுப்பினேன். நீங்கள் தூங்கி, அதனால் வருந்தி, ஆண்டவனின்
பிரியத்திற்கு இன்னும் அதிகப் பாத்திரராகி விடக்கூடாது, பாருங்கள்!
அதனால் நேரத்திற்கு எழுப்பி உங்களை பிரார்த்தனை புரிய
வைத்து விட்டால் ஆண்டவனின் அன்பு அளவுக்கு அதிகமாகி

விடக்கூடாதல்லவா?’ என்றது அந்த பிசாசு.


  • வீரசிகாமணி

பட்டிமன்றத்தில் செண்டிமென்டாக நடந்த ஒரு சம்பவம்


32 வருட பட்டிமன்ற அனுபவத்தில் எத்தனையோ ஆச்சரியங்கள்,
மனச் சங்கடங்கள், நெகிழ்வுகள், மகிழ்வுகள் எனச் சொல்லிக்
கொண்டே போகலாம். ஒரே ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்.

25 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ஒரு பட்டிமன்ற
நிகழ்ச்சியில் நான் தொடர்ந்து நகைச்சுவையாகப் பேசிக்
கொண்டிருக்க, கேட்டுக் கொண்டிருந்த மக்கள் வாய்விட்டு
சிரித்துக் கொண்டிருந்தபோது, தரையில் அமர்ந்திருந்த
10 வயது சிறுவன் ஒருவன், நான் பேசத் தொடங்கியதிலிருந்து
மகிழ்ந்து கைதட்டி சிரித்துக் கொண்டிருந்தவன்
சடாரென்று தரையில் படுக்க, அவன் கைகால்கள் சுண்டி இழுக்க,
எல்லோரும் பதறிப்போனோம்.

அருகில் இருந்த அவன் தாயார் அவனைத் தூக்கிக் கொண்டு
வீட்டுக்குள் ஓடினார்.

நான் பேச்சை நிறுத்தியதைப் பார்த்த ஒருவர், “ஐயா! ஒன்னும்
பயப்பட வேண்டாம். அந்தப் பையன் அதிகமாக அழுதாலோ,
சிரித்தாலோ இப்படி ஏற்படுவதுண்டு. நீங்க பேசுங்க’ என்றார்.

நான் சற்றே சங்கடத்துடன் பேச்சைத் தொடர, அந்தப் பையன்
திரும்ப ஓடி வந்து அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டு சிரிக்க
ஆரம்பிக்க, அவன் தாயாரும் வெட்கத்தோடு வந்து அவனருகே
அமர்ந்துகொள்ள, நான் வியப்படைய, கூட்டமே அந்தக்

காட்சியைக் கண்டு மகிழ்ந்தது.

சிரிப்பு எந்நோய்க்கும் அருமருந்து.


பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்
நன்றி- மஞ்சரி

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி’

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி’ என்ற

சங்கத்தமிழ்ப் பாடலை இயற்றியவர் யார்?

பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பதில்கள்:

இந்தப் பாடலை இயற்றிய புலவரின் பெயர் இறையனார்.
இப்பாடல் சங்க இலக்கியமான எட்டுத்தொகை நூல்களில்
“குறுங்தொகை’ நூலில் இரண்டாவது பாடலாகத்
தொகுக்கப்பட்டுள்ளது.

ஆனால் “திருவிளையாடல்’ எனும் பராணப்படத்தில் தருமி
(நாகேஷ்) என்ற புலவருக்கு, இறைவனான் சிவபெருமான்
(சிவாஜிகணேசன்) எழுதித் தருவதாக அப்படத்தின்
இயக்குநர் ஏ.பி. நாகராஜன் காட்சியை அமைத்திருப்பார்.

இறையனார் என்ற பெயர் சிவபெருமானைக் குறிப்பதாக
இருக்கலாம் எனக் கருதி இப்பாடலை அவர்கள் பயன்
படுத்தியிருக்கலாம்.

ஆனால் உண்மையில் இப்பாடல் குறுந்தொகைப் பாடலே.
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம்
(வாசனை) உண்டா?
எனும் கேள்வியை உள்ளடக்கியதாக இப்பாடல்

இயற்றப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.


நன்றி-மஞ்சரி & தினமலர்

மருதகாசி திரையுலகில் ஓர் புனித காசி!

மனுசன மனுசன் சாப்பிடுறான்டா தம்பி பயலே – இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே

எனும் பாடலை எழுதியவர், திரையுலகில் ஒர காலத்தில்
அனைவராலும், போற்றப்பட்ட கவிஞர் மருதகாசி ஆவார்.

“தாய்க்குப் பின் தாரம்’ எனும் தேவர் பிலிம்ஸ் படத்தில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் சிறிய மாட்டுவண்டியில்
பாடிக் கொண்டு வருவதாக இப்பாடல் அமைந்திருக்கும்.

கே.வி. மகாதவேன் இசையில் டி.எம். சௌந்தரராஜன்
குரலில் காலத்தை வென்ற இசையாக இன்றைக்கும் ஒலித்துக்
கொண்டிருக்கிறது.

கவிஞர் மருதகாசியின் புகழ்பெற்ற பாடல்கள் என்று எடுத்துக்
கொண்டால் “அழகான பொன்னு நான்’
(அலிபாபாவும் 40 திருடர்களும்),

“ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே’ (பாவை விளக்கு),

“சிரிப்பு அதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு’
(என்.எஸ்.கே. நடித்த ராஜா ராணி),

இவர் கடைசியாக எழுதிய பாடல்
“கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்’

(நினைத்ததை முடிப்பவன்).


-பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பதில்கள்- வாரமலர்

« Older entries