ஒப்பிலியப்பன் கோவில்

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திரு விண்ணகர் எனப்படும் ஒப்பிலியப்பன் கோவிலின் தல வரலாறு நம் வாசகர்கள் அனைவருமே அறிந்த ஒன்றுதான். துளசி வனம் என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட அத்திருத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் தவம் புரிந்து வந்தார். அவரது வளர்ப்பு மகளாக ஒரு துளசிச்செடியின் அடியில் பூமாதேவி தோன்றினாள்.

அவளை மணக்க விரும்பிய திருமால், பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று, வயோதிகராக வேடம் தரித்து மார்க்கண்டேயரிடம் வந்து அவரது மகளைத் தனக்கு மணம் முடித்துத் தருமாறு கோரி னார்.

“என் மகள் வயதில் மிகவும் சிறியவள். பழைய சாதத்துக்கு எவ்வளவு உப்பு போட வேண்டும் என்று கூட அவளுக்குத் தெரியாதே!” என்று மார்க்கண்டேயர் கூற,

“இனி நான் உப்பில்லாத பண்டங்களையே அமுது செய்வேன்!” என்று சபதம் செய்தார் முதியவர்.

வீடு தேடி வந்தவரின் கோரிக்கையை நிராகரிக்கலாகாது என்ற எண்ணத்தில் தனது மகளை அவருக்கு மணம் முடித்துத் தருவதற்கு மார்க்கண்டேயர் சம்மதிக்கவே அடுத்த நொடி முதியவர் வேடத்தை கலைத்துத் திருமால் தனது இயற்கையான வடிவத்துடன் காட்சி தந்தார்.

உப்பில்லாத பண்டங்களையே உண்பதாகச் சபதம் ஏற்றதால், உப்பிலியப்பன் என்று அப்பெருமாள் பெயர் பெற்றார். பின் மார்க்கண்டேயர் ஏற்பாடுகளைச் செய்ய, ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் உப்பிலியப்பனுக்கும் பூமாதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

பின் மார்க்கண்டேயருடைய கோரிக்கைக்கு இணங்கி, ஒப்பிலியப்பன் கோவில் என்ற அத்திருத்தலத்தில் என்றென்றும் பூமாதேவியுடன் தான் குடியிருப்பதாகத் திருமால் உறுதி பூண்டார்.

திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்துக்கு என்னென்ன பெருமை உண்டோ, அத்தனை பெருமைகளும் ஒப்பிலியப்பன் கோவிலுக்கும் இருப்பதால், விண்ணகர் என்று அவ்வூர் பெயர்பெற்றது. விண்ணகர் என்றால் விண்ணில் உள்ள நகரமான வைகுண்டம் என்று பொருள்.

ஒப்பிலியப்பன் கோவிலில் குடிகொண்ட பெருமாளிடம் மார்க்கண்டேயர், “உப்பிலியப்பா! இந்தத் திருத்தலம் வைகுண்டத்துக்குச் சமமானது என்று நீயே கூறி, இதற்குத் திருவிண்ணகர் என்ற திருப்பெயர் ஏற்படும்படிச் செய்து விட்டாய். அத்துடன் இன்னொரு இன்னருளையும் நீ செய்தருள வேண்டும்! நீ இந்த ஊருக்கு முதன் முதலில் வந்து என்னிடம் பெண் கேட்ட நாள் பங்குனி மாதத் திருவோண நன்னாள்.

அதன்பின் முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ வந்து பூமாதேவியை மணந்து கொண்ட நாள் ஐப்பசி மாதத் திருவோண நன்னாள். எனவே வைகுண்டத்தில் எப்படி நீ ஒளிமிக்க சுடராக அடியார்களுக்குத் தரிசனம் தருகிறாயோ, அதுபோலவே வைகுண்டத்துக்கு நிகரான இவ்வூரிலும் திருவோண நட்சத்திரத்தன்று சோதி வடிவில் நீ காட்சி அளிக்க வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.

அதற்குப் பெருமாளும் இசையவே, அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று ஒப்பிலியப்பன் கோவிலில் திருவோண தீபம் ஏற்றப்படும்.

பரம்பரையாகத் தீபம் பிடிக்கும் தொண்டைச் செய்து வரும் அடியார்கள், அகண்ட தீபத்தைக் கையில் ஏந்தியபடி கோவிலை வலம் வருவார்கள்.

சாட்சாத் உப்பிலியப்பனே அந்தத் தீப சோதியின் வடிவில்வந்து அடியார்களுக்கு அருள் புரிவதாக ஐதிஹ்யம்.

இதைக் கருத்தில் கொண்டுதான் ‘பரஞ்சுடர் உடம்பாய்’ என்று நம்மாழ்வாரும், ‘சுடர்போல் என் மனத்திருந்த தேவா’ என்று திருமங்கை ஆழ்வாரும் சோதி வடிவமாகவே ஒப்பிலியப்பனைப் பாடியுள்ளார்கள்.

-கே.எஸ்.ராமகிருஷ்ணன்

;

1 பின்னூட்டம்

  1. மே 20, 2023 இல் 7:19 முப

    சிறப்பு.


பின்னூட்டமொன்றை இடுக