ஆஸ்கர் பரிந்துரையில் மீண்டும் இடம்பிடித்த ஏ.ஆர்.ரஹ்மான்

இரண்டு ஆஸ்கர் விருதுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் | கோப்பு படம்

இரண்டு ஆஸ்கர் விருதுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் | கோப்பு படம்

‘பீலே’ படத்தின் ‘ஜிங்கா’ பாடலின் இசைக்காக, மீண்டும் ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

2009-ம் ஆண்டு வெளியான ‘ஸ்லம் டாக் மில்லினர்’ படத்தின் பின்னணி இசை மற்றும் ‘ஜெய் ஹோ’ பாடலுக்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்நிலையில், 2017-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி நடைபெறவிருக்கும் 89-வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் மீண்டும் இடம்பெற்றுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

‘Pele: Birth of a Legend’ படத்தின் இசைக்காக அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஜேஃப் ஜிம்பாலிஸ்ட் மற்றும் மைக்கேல் ஜிம்பாலிஸ்ட் இணைந்து இயக்கியுள்ளனர். புகழ்பெற்ற பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பீலே வாழ்க்கை வரலாறு தான் இப்படம் என்பது நினைவுக் கூரத்தக்கது.

145 படங்கள் உள்ளடக்கிய நீளமான பட்டியலில், ‘பீலே’ படத்துக்கான இசையமைப்பும் இடம்பெற்றிருக்கிறது. சிறந்த பாடலுக்கான விருதுப்பட்டியலில், ‘பீலே’ படத்தின் ‘ஜிங்கா’ பாடலும் இடம்பெற்றுள்ளது. இறுதி பரிந்துரைக்கான பட்டியலில், இப்பாடல் இடம்பெற கடும் போட்டி நிலவி வருகிறது.

அகாடமி விருதுகள் இணையத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. 2017 ஜனவரி 24-ம் தேதி இறுதிப் பட்டியலை வெளியிட இருக்கிறது. பிப்ரவரி 26ம் தேதி நடைபெறும் விழாவில் இந்தப் பிரிவில் ஆஸ்கர் விருது யாருக்கு என்பது அறிவிக்கப்படும்.

முன்னதாக 2011-ம் ஆண்டு நடைபெற்ற 83-வது ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் ‘127 ஹவர்ஸ்’ படத்தின் பாடல் ஒன்றுக்காக இடம்பெற்றிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால், அதில் அவருக்கு விருது கிடைக்கவில்லை.

 தமிழ் தி இந்து

பின்னூட்டமொன்றை இடுக