பார்வை படுகிறபோதுதானே…

* சிலை வடிப்பதைவிடச்
சிலாகிதமானது
கவிதை படைப்பது!

* அடிக்கும் சுத்தியலும்,
அடிபடும்
உளியும் இல்லாமல்
வந்து தெறிக்கிற
வார்த்தைத் துண்டுகளால்
வார்த்தெடுக்கப்படுவது
கவிதை!

* கண்ணிமைப்பதற்குள்
வந்த வார்த்தையைக்
கைது செய்யாவிட்டால்
கடவுளாலும் காப்பாற்ற முடியாதபடி
கவிதை
காணாமற் போய் விடும்!

* மனதின்
வார்த்தைப் பிரயோகத்தை
கைவேகம்
ஈடுசெய்ய இயலாதபோது
ஏற்படும் இதய வலியை
எழுதிக்காட்ட முடியாது!

* பூக்களுக்கு வலிக்காமல்
பூ கொய்வதுபோல
வார்த்தைகளுக்கு வலிக்காமல்
கவிதை வார்ப்பதே கலை!

* பூக்களின் இதழ் நுனிகளைத்
தூரிகையாக்கி எழுதுகையில்
பூமியையே
வர்ணமாக்கிவிடும்
கவிதை!

* உறக்கத்தைத் தியாகம் செய்து
உள்ளத்தோடு பந்தயம் வைத்து
தனக்குள்
தன்னைத் தானே
தகித்துக் கொள்கிற
தவம்-
கவிதையாத்தல்!

* இத்தனையும் தாண்டி
ஒரு கவிதை
உயிர் பெறுவது
அதன் மீது
தான் நேசிக்கிற பெண்ணின்
பார்வை படிகிறபோதுதானே!

———————————————-
— வளர்கவி, கோவை.
நன்றி; தினமலர்(வாரமலர்)

பின்னூட்டமொன்றை இடுக