மனைவி – பூவே வேராய்

வேறு தோட்டத்திலிருந்து
கொண்டு வந்து
பதியனிடப்பட்ட ரோஜா

நாற்றங்காலிலிருந்து நாற்றாய் வந்து
இங்கு ஊடுபயிராய் விளைந்தவள்
வேரையே வேறாக மாற்றிக்
கொண்டவள் – தன் பெயரையும் சேர்த்து.

இந்த விசித்திர
திருமண விளையாட்டில்
எல்லோருக்கும் இவள்
பொம்மையாகி போகிறாள்

ஒரு அரைமணி நேர நிகழ்ச்சியில்
இவளைப்பற்றிய எதிர்பார்ப்புகள்
ஏராளமாக மாறிப்போகின்றன –
இவளுடைய அது நாள் வரையான
வாழ்க்கையையே மாற்றப் போகின்றன.

ஒரு பூவுக்கு
வேராய் பதவி மாற்றம்.

இந்த சதுரங்கத்தில்
இவள்தான் ராணி –
ராஜா, குதிரை, யானை எல்லாம் உண்டு,
சேவகர்கள் மட்டும் இல்லை –
இவள் இருப்பதால்.

இவள் வரையும் ஓவியத்தில்
ஒவ்வொரு கோடிலும்
உயிரோடும் –
பார்க்கும் நமக்கு
பார்க்கத் தெரியாததால்
ஓவியங்கள்
வெறும் கிறுக்கல்களாய்
மொழிபெயர்க்கப்படுகின்றன

இவள் ஏதோ இடையில்
ஒட்டிக்கொண்ட
ஒட்டுண்ணி அல்ல –
வளர்ந்து நீளும் விழுது –
ஆலமரத்துக்கான
புதிய வேர்.
—————————
– சந்தர் சுப்ரமணியன்
Thanks: http://youthful.vikatan.com/youth/santharpoem08042009.asp

பின்னூட்டமொன்றை இடுக