ஒரு மழை நாளில்

புதிய கவிதைகள்-11

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட
ஒரு மழை நாளில்

குமாஸ்தாக்கள் கோப்புகளிலிருந்து
சற்றே நிமிர்ந்து உட்காருகிறார்கள்

நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு
சற்றே மிதமான தண்டணைகளை
வழங்குகிறார்கள்

கணவர்கள் மனைவிகளுக்கு அளிக்கும்
சுதந்திரத்தைக் கண்காணிக்க கொஞ்சம் மறந்துபோகிறார்கள்.

ஒரு கண்டன ஊர்வலம்
சட்டென மகிழ்ச்சியான ஒரு மன நிலைக்கு மாறுகிறது

செய்யப்படாத வேலைகள் பற்றி
தொழிலாளிகள் பயம் குறைந்து காணப்படுகிறார்கள்

வேலை கொடுத்துக்கொண்டிருப்பதை
மறந்து முதலாளிகளும் கொஞ்சம் மழையை வேடிக்கை பார்க்கிறார்கள்

பெட்ரோல் பங்கில் எனக்கு பின்னால் காத்திருப்பவன்
இன்று எந்த விரோதமும் இல்லாமல் இருக்கிறான்

வகுப்பறைகளில் குழந்தைகள்
ஆசிரியர்களைப் பற்றிய பயங்கரம் நீங்கி
வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

நண்பர்கள்
நண்பர்களைப் போலவே காட்சியளிக்கிறார்கள்.

எல்லா இடத்திலும் ஈரம் பரவிக்கொண்டிருந்த
ஒரு மழை நாளில்
நான் என் காதலைச் சொன்னபோது
நீ அதை
மறுக்கவும் இல்லை
ஏற்கவும் இல்லை

*******

மனுஷ்ய புத்திரன்

**************************

Thanks:http://uyirmmai.blogspot.com/2005/06/11.html

2 பின்னூட்டங்கள்

  1. நவம்பர் 17, 2008 இல் 2:20 பிப

    சொல்லிக்கொள்ளக்கூடிய அவசரமும் அவசியமும்
    இல்லாத ஒன்றை மழை நாளில் தான் குடைகளும் தொலைந்த நினைவுகளும் ஞாபகப் படுத்தி போகின்றன.

    மனுஷ்யபுத்திரனுக்கு எனது வாழ்த்துகள்….

    அன்புடன்,
    ஆர்.நாகப்பன்.

  2. நவம்பர் 17, 2008 இல் 2:37 பிப

    சொல்லிக்கொள்ளக்கூடிய அவசரமும் அவசியமும் இல்லாத ஒன்றை மழை நாளில் தான் குடைகளும் தொலைந்த நினைவுகளும் ஞாபகப் படுத்தி போகின்றன. மனுஷ்யபுத்திரனுக்கு எனது வாழ்த்துகள்….

    அன்புடன்,
    ஆர்.நாகப்பன்.


பின்னூட்டமொன்றை இடுக