இன்றே விடியட்டும்! – கவிதை

இன்றே விடியட்டும் - கவிதை E_67213

சலசலத்து ஓடிய ஆறு
சாக்கடையாய் சீரழிந்தது
சீராய் பெருகியிருந்த சிறு மணலும்
சில்லரைக்கு விலை போனது!

வானத்திற்கே விசிறிகளாய்
விரிந்திருந்த வரிசை மரங்கள்
வெட்டப்பட்ட நெடுஞ் சாலைகளில்
வெப்பம் ஒன்றே மிச்சம் உள்ளது!

புழுதியில் ஆடியதும், பனியில் நனைந்ததும்
புல்லில் நடந்ததும், பூக்களுடன் பேசியதும்
பழங்கதையாய் புதைய, தினம் முளைக்கும்
புதுக் கல் மரங்களே கண்ணில் பதிகிறது!

நதியைக் கொன்றதால்
காசுக்கு நீர் என ஆனது
நச்சுப் புகை பரப்பியதால்
நல்ல காற்றும் காசு ஆகிறது

நல்ல வளங்களுடன் நாம் நடந்து வந்த பூமி
நம் வாரிசுக்கு இல்லை என ஆனது!

இன்னல் பல பட்டதால் இயற்கையின்
இனிய முகம் மாறி, சினத்தின் அலைகளால்
இன்னுயிர் பல சுருட்டிக் காட்டி விட்டாள் – கடலில்
இதயம் சிதறிக் குமுறுகிறாள் பூமியில்!

இதமாய் இயங்கிய நிலமின்றி
இறப்பைத் தழுவும் உழவன்
இற்று விட்ட வேராய் இருண்டு விட்ட
இன்றைய உலகம்…
இத்தனையும் பார்த்த பின்னும்

இழப்பின் விளிம்பை எட்டிய பின்னும்
இதுவே நேரம் என விழிக்காமல்
இன்னுமா நீ உறங்குகிறாய்?
——————————

—யசோதா சுப்ரமணியன், மதுரை.
நன்றி-வாரமலர்

பின்னூட்டமொன்றை இடுக