சொர்க்கத்தில் துரியோதனன்

மகாபாரதப் போர் முடிவுக்கு வந்தது.

மகாபாரதப் போர் முடிவுக்கு வந்தது.
பாண்டவர்கள் அனைவரும் சொர்க்கத்துக்குச் சென்றனர்.
நரகத்துக்கு அனுப்பப்பட்ட கௌரவர்களில், துரியோதனன்
மட்டும் திடீரென சொர்க்கத்தில் இருந்தான்.

‘மகாபாரதத்தின் முக்கிய கெடு மதியாளனான துரியோதனன்
மட்டும் எப்படி சொர்க்கத்தில் இருக்க முடியும்?’ இதுதானே
உங்கள் கேள்வி.

புராணத்தின்படி, போர்க்களத்தில் துரியோதனன் இறக்கும்
தருவாயில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவனுக்கு அருகில்
அமர்ந்திருந்தார். அப்போது துரியோதனன்

ஸ்ரீ கிருஷ்ணரிடம், “நான் எப்போதும் ஒரு நல்ல அரசனாக
இருந்திருக்கிறேன். நான் இறந்தாலும் எனக்கு சொர்க்கத்தில்
நிச்சயம் இடம் கிடைக்கும். ஆனால், கிருஷ்ணா… நீதான்
எப்போதும் துயரத்தில் இருப்பாய்” என்று கூறினான்.

இதனை துரியோதனன் கூறியவுடன், வானுலகத்தில்
இருந்தவர்கள் துரியோதனன் மீது பூமாரி பொழிந்தனர்.

கர்ணனும் துரியோதனன் மனைவி பானுமதியும் அன்பான,
புரிந்துகொள்ளக்கூடிய, நேர்மையான குணம் கொண்டவர்கள்.
அதனால், துரியோதனனின் மனைவிக்கும் கர்ணன் சிறந்த
தோழனாக விளங்கினான்.

ஒரு முறை துரியோதனன் இல்லாதபோது, கர்ணனும் பானுமதியும்,
தாயம் விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாட்டில்
பானுமதியை ஜெயிக்கும் தருவாயில் இருந்தான் கர்ணன்.
அந்த நேரம், துரியோதனன் உள்ளே நுழைந்தான். அந்த
காலத்தில், பெரியவர்களையும் கணவனையும் கண்டவுடன்,
பெண்கள் எழுந்து நிற்பது வழக்கம்.

அதுவும் துரியோதனன் ஒரு அரசனாக இருந்தபடியால்,
அரசியாகிய அவன் மனைவி பானுமதி, உடனே எழுந்து நின்றாள்.
ஆனால், அவள் தோல்வியடையும் தருவாயில் உள்ளதால் எழுந்து
போகிறாள் என்று தவறாக எண்ணிய கர்ணன், அவளின்
சேலையை பிடித்து இழுத்தான். அப்போது, அவளுடைய சேலையில்
கோர்த்திருந்த மணிகள் அறுந்து சிதறின. கர்ணன், பானுமதியின்
சேலையைப் பிடித்து இழுக்கவும், துரியோதனன் வீட்டின் உள்ளே
நுழையவும் சரியாக இருந்தது.

அப்போது, அந்த நிகழ்வை துரியோதனன் கையாண்ட விதம் மிகவும்
சிறப்புக்குரியது. அங்கு நடந்தது என்ன என்பதை சரியாக
அறிந்திராத அந்த நேரத்தில் கூட துரியோதனன், ‘அறுந்து விழுந்த
மணிகளை எடுக்கவா, கோர்க்கவா?’ என்று கேட்டான்.

இந்த நிகழ்வில் இருந்து துரியோதனன் தனது மனைவியிடமும்
நண்பனிடமும் கொண்ட நம்பிக்கை வெளிப்படுகிறது.

கர்ணன் குந்தி தேவியின் மகன் என்பது யாருக்கும் தெரியாது.
துரியோதனன் உட்பட அனைவரும் அறிந்தது, ‘அவன் சூத்திர
குலத்தைச் சேர்ந்தவன்’ என்பது மட்டுமே. இதனால் கர்ணன்
பெருந்துயர்களை அனுபவித்தான். சுயம்வரத்தில் கலந்துகொள்ள
கர்ணன் நினைத்தபோது, திரௌபதி கூட இதனைக் குறித்து
கேள்வி எழுப்பினாள்.

அந்த சூழ்நிலையில் துரியோதனன் மட்டுமே, “மாவீரர், முனிவர்
மற்றும் தத்துவ ஞானி போன்றவர்களுக்கு எந்த ஜாதியும் மூலமும்
தேவையில்லை. அவர்கள் பிறப்பால் பெரியவர்கள் இல்லை
என்றாலும் வளர்ப்பால் பெரியவர்களே” என்று கர்ணனுக்கு
சாதகமாகப் பேசினான். வர்ண பாகுபாட்டில் துரியோதனனுக்கு
நம்பிக்கை இல்லை என்பது இதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது.

துரியோதனன் ஒரு நல்ல அரசன், நண்பன், கணவன் மற்றும்
மனிதன் என்பதை விளக்கும் பல நிகழ்வுகள் மகாபாரதக்
காவியத்தில் உள்ளன. உண்மையைச் சொல்வதென்றால்,
சகுனியின் தீய நோக்கத்துக்கு பலியானவன் துரியோதனன்.

தாய்மாமன் சகுனியின் தவறான வழிநடத்துதல் காரணமாக
துரியோதனன் தவறான செயல்களைப் புரிந்தான். சகுனிக்கு
பழிவாங்கும் எண்ணம் மனதில் கொழுந்து விட்டு எரிந்ததால்,
திருதராஷ்டிரன் வம்சத்தையே அழிக்கும் எண்ணத்துடன்,
அவனது மகனையே பகடையாக வைத்து கௌரவர்களை
அழிக்க எண்ணினான் சகுனி.

சகுனியின் மீது வைத்த நம்பிக்கையால் துரியோதனன்
அனைத்து தீங்கையும் இழைத்தான்.

சொர்க்கத்தில் துரியோதனனைக் கண்ட பாண்டவர்கள்,
யமதர்மனிடம் அதற்கான காரணத்தைக் கேட்டபோது, யமதர்மன்
மேற்கண்ட இந்த விளக்கத்தை அளித்தார். மேலும், துரியோதனன்
செய்த பாவத்துக்கான தண்டனையை நரகத்தில் கழித்த பின்
அவனுடைய நற்செயல்களுக்காக சொர்க்கத்துக்கு அழைக்கப்
பட்டதாகவும் கூறினான்.

தான் குற்றமே செய்திருந்தாலும் அதை நிமிர்த்திய நெஞ்சோடு,
தைரியமாகச் சொல்லும் நேர்மை, தன் நாட்டு மக்கள் மீது
கொண்ட அன்பு, நட்புக்கு கொடுத்த மரியாதை, மனைவியின்
மீதான நம்பிக்கை, வர்ண பாகுபாட்டை எதிர்த்து கர்ணனை
அரசனாக்கியது என பல நன்மைகளுக்குச் சொந்தக்காரனாக
துரியோதனன் இருந்ததால்தான் இறந்த பின் அவன்
சொர்க்கத்துக்குச் சென்றான்.

நன்றி: எம்.கோதண்டபாணி
தீபம் -இதழ்

பின்னூட்டமொன்றை இடுக