லஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு!

சங்கீதத்தில் உள்ள மும்மூர்த்திகளைப் போல,
நாம பஜனை செய்வோரிலும் மும்மூர்த்திகள்
உண்டு.

அவர்கள், ஸ்ரீ பகவந்நாம போதேந்திராள்,
ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் மற்றும் ஸ்ரீ மருதாநல்லூர்
சத்குரு சுவாமிகள்!

இன்று, நாம பஜனை செய்வதற்கு நம்மில் பலர்
வெட்கப்படுகின்றனர்; இறைவன் நாமத்தைச் சொல்லி,
ஆடிப் பாடி பஜனை செய்வது எத்தகைய நன்மையைத்
தரும் என்பதை இக்கதை விளக்குகிறது…

குழந்தை இல்லாமல், துயரப்பட்ட அரசர் ஒருவருக்கு,
பல ஆண்டுகளுக்கு பின், அழகான ஆண் குழந்தை
பிறந்தது. எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தார் அரசர்.

ஆனால், அரசரின் மகிழ்ச்சியைக் குலைக்கும் விதமாக,
அரச குமாரனின் ஜாதகத்தைக் கணித்த அரசவை
ஜோதிடர், ‘மன்னா… இளவரசருக்கு ஆயுள் பலம்
நிறைவாக இல்லை; இளவரசர் இன்னும்
14 ஆண்டுகளும், 14 நாட்கள் மட்டும் தான் உயிருடன்
இருப்பார்…’ என்று சொன்னார்.

அதைக் கேட்டது முதல், அரசரின் மனதை துயரம்
கவ்வியது.

அரச குமாரன் வளர்ந்தான். கல்வி, கேள்விகளில்
சிறந்து விளங்கியதோடு, சிறு வயதிலேயே
சாஸ்திரங்களிலும் எல்லை கண்டவனாக விளங்கினான்.

ஒருநாள், தந்தையின் முக வாட்டம் கண்டு, ‘தந்தையே…
ஏன் எப்போதும் கவலை தோய்ந்த முகத்துடன்
காணப்படுகிறீர்?’ எனக் கேட்டான்.

‘மகனே… உன் ஆயுள், 14 ஆண்டுகளும், 14 நாட்களும்
தான் என, அரண்மனை ஜோதிடர் சொல்லி விட்டார்.
அவர், வார்த்தை தப்பாது. அந்நாள் நெருங்க நெருங்க
என் வேதனையை தாள முடியவில்லை…’ என்றார்
அரசர்.

‘தந்தையே… இதற்காகவா வருந்துகிறீர்… எல்லாருமே,
ஒரு நாள் இறப்பை சந்திக்க வேண்டியவர்கள் தானே…
ஆனாலும், உங்கள் வருத்தம் தீர ஒரு யோசனை
சொல்கிறேன்…

‘நான் தூர தேசத்திற்கு சென்று விடுகிறேன். அங்கு
நான் இறந்தால், உங்களுக்குத் தகவலே வராது.
அதனால், வெளியூரில், நான் உயிருடன் இருப்பதாக
நினைத்துக் கொள்ளுங்கள்…’ என்றான்.

இளவரசன் சொன்னதை ஒப்புக் கொண்ட அரசன்,
நிறைய செல்வத்தையும், துணையாக வீரர்கள்
சிலரையும் அவனுடன் அனுப்பி வைத்தார்.

வேற்று தேசத்தை அடைந்ததும், தன்னிடம் இருந்த
செல்வத்தை வைத்து, அந்நாட்டு மக்களுக்கு நிறைய
நன்மைகளைச் செய்தான் இளவரசன். அத்துடன்,
தினமும், அன்னதானம் மற்றும் தெய்வீக பஜனையுமாக
நாட்களை கழித்தான்.

குறிப்பிட்ட நாள் வந்தது. அன்று, ஏராளமான அடியார்கள்
பஜனைக்கு வந்திருந்தனர். அன்னதானம் முடிந்ததும்,
அனைவரும் பஜனை பாடல்களை பக்தியுடன் பாடினர்.

அந்த பக்தி மயமான ஆனந்த நிலையைக் காண,
சூட்சம வடிவத்தோடு தேவர்களும் வந்திருந்தனர்.
யம கிங்கரர்களில் ஒருவன், இளவரசனின் உயிரைக்
கவர்வதற்காக வந்தான். ஆனால், அங்கு நிகழ்ந்து
கொண்டிருந்த பஜனையைப் பார்த்து, வந்த வேலையை
விட்டு, அவர்களுடன் சேர்ந்து ஆடிப் பாடத் துவங்கினான்.

அதன்பின், யமதர்மராஜன் அங்கு வந்தார். அவரும்
பக்திமயமான பஜனையைப் பார்த்ததும், ஆடிப் பாடத்
துவங்கினார்.

பஜனை நிறைவு பெற்றதும், சுயநிலைக்கு வந்த
யமதர்மா ராஜா, இளவரசனின் உயிரை எடுக்க
முனைந்தார். அப்போது, அங்கிருந்த தேவர்கள்
அனைவரும், யமதர்மராஜனைத் தடுத்து, ‘இவன்
உயிரைப் பறிக்க வேண்டிய நேரத்தில், நீ பறிக்கவில்லை;
அந்நேரம் தவறியதால், இவன் உயிரைப் பறிக்க, உனக்கு
அதிகாரம் இல்லை…’ என்றனர்.

யமதர்மராஜன் முரண்டு பிடிக்கவே, இறைவனே
அங்கு காட்சியளித்து, இளவரசனுக்கு நீண்ட ஆயுளை
அருளினார்.

அரச குமாரன் நாடு திரும்பினான். பெற்றோர் அடைந்த
மகிழ்ச்சியை அளவிட முடியுமா என்ன!

நாம சங்கீர்த்தனம், யமனையும் வெல்லும்!

—————————————

பி.என்.பரசுராமன்
வாரமலர்

Newer entries »