இளைஞனே எழுந்து வா…!


இளைஞனே விழித்துக்கொள்
உன் இளமையை
உறங்கிக் கழிக்காதே

விடிகின்ற பொழுதை
எல்லாம்
உன் வாழ்க்கைக்கு விழுதாக்கு

உலகம்
ஓர் அச்சில் சுழல்கிறது
என்பது உண்மை

நமது இந்திய மண்ணோ
உன்னையல்லவா நம்பியிருக்கிறது

நீ கண் விழித்து
சூரியனை விழிக்கச் செய்

நீ எழுந்து வந்தால்
சாதி மத பேதங்கள்
சம பந்தி போட்டுக் கொள்ளும்

ஏழை பணக்கார
ஏற்றத் தாழ்வுகள்
ஏணிப்படிகளாய் ஒன்றாகும்

உன்னாலும் முடியும்
என்பதை உருவாக்கு

————————————
> க.இளங்கோவன்
தாய்மொழி தந்தவள் – கவிதை தொகுப்பிலிந்து

படம் — இணையம்

அந்நியயத்தனம் – கவிதை


பெண்ணை ஒருவரிடம் ஒப்படைத்தோம்
ஆறு மாதங்களிலேயே சாம்பலாகி விட்டாள்

ஊரை ஒருத்தரிடம் ஒப்படைத்தோம்
ஒட்டு மொத்தமும் விழுங்கி
விவசாயிகளைக் கூலிகளாக்கி விட்டார்

மாநிலத்தை ஒருவரிடம் ஒப்படைத்தோம்
நம்பிக்கையில்லாத் தீர்மானம்
ஒத்திசைவற்ற கூச்சல்கள்
இடைக்காலத் தேர்தல்கள்

நாட்டை ஒருத்தரிடம் ஒப்படைத்தோம்
எவ்வளவு அழகாய்
அடகு வைத்து விட்டான்…!
————————————————-
>சாவித்ரி
நன்றி:
இருபதாம் நூற்றாண்டில் தெலுங்கு பெண் எழுத்தாளர்கள்