கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!

கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை! E_1559893725

அரசியல் தலைவர்களுக்கு தான், சிலை வைக்க 
வேண்டுமா… 
விளையாட்டு வீரர்களுக்கு வைக்கக் கூடாதா? 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. 
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜெயித்தால், பணம், புகழ் 
மட்டுமல்ல, சாதனை புரிந்தால், சிலையும் வைப்பர் 
என்றால், வேண்டாம் என்றா சொல்லப் போகின்றனர்.

இதுவரை, யார் யாருக்கெல்லாம் சிலை வைத்துள்ளனர் 
என்று பார்ப்போம்: 

சச்சின் டெண்டுல்கருக்கு, மும்பை வான்கடே மைதானத்தில், 
சிலை உள்ளது. அவரை தவிர, ரஞ்சித் சிங், சி.கே.நாயுடு, 
விஜய் ஹசாரே, வினோ மன்காட் மற்றும் முகமது அசாருதீன் 
உட்பட, இந்திய கிரிக்கெட் வீரர்கள், 11 பேருக்கு வெவ்வேறு 
இடங்களில், சிலைகள் உள்ளன.

வீரேந்திர சேவாக் மற்றும் வி.வி.எஸ்.லட்சுமணனுக்கு சிலைகள் 
வைக்கும் முயற்சி நடந்து வருகிறது.

உலகிலேயே கிரிக்கெட் வீரர்களின் சிலைகள் அதிகம் கொண்ட
நாடு, ஆஸ்திரேலியா. அங்கு, 20 பேருக்கு சிலைகள் உள்ளன.

இதில், நான்கு சிலைகள், டான் பிராட்மேனுக்கு மட்டுமே 
உள்ளன. பிராட்மேனின் சொந்த ஊர், அடிலைட், ஓவல் மைதானம், 
எம்.சி.ஜி., மெல்போர்ன் மைதானம் மற்றும் பிராட்மேன்
அருங்காட்சியகம் ஆகிய இடங்களில், சிலைகள் உள்ளன.

மேலும், ஷேன்வார்னே, ஸ்டீவ் வாக், டேவிட் பூன், கீத் மில்லர், 
டென்னிஸ் லில்லி, ரிச்சி பெனாட், கிளென் மெக்ரத், 
ஜெசன் கிலஸ்பி ஆகியோருக்கும் சிலைகள் உள்ளன. 

தற்போது, ஆஸ்திரேலிய கோச்சான, டாரென் லெக்மானுக்கும் 
சிலை உள்ளது.

இங்கிலாந்து நாட்டில், 12 சிலைகள் உள்ளன. பிரபல அம்பயரான, 
டிக்கி பேர்ட்க்கு கூட சிலை உள்ளது. கிரேஸ், ஹரால்ட் லார்ட்வுட், 
பேசில் டோலிவாரா மற்றும் கிரஹாம் கூச் ஆகியோருக்கும் சிலை
வைக்கப்பட்டுள்ளன.

மேற்கு இந்திய தீவுகளில், போர்ட் ஆப் ஸ்பெயினில், 
ப்ரெயின் லாராவுக்கும்; டிரினிடாட் அண்ட் டொபாக்கோ ஆன்டி 
குவாவில், விவியன் ரிச்சர்ட்சுக்கும்; கேரி சோபர்ஸ் மற்றும் 
ஜார்ஜ் ஹெட்லி ஆகியோருக்கும் சிலைகள் உள்ளன.

கடந்த, 1960 – 70களில், ஒரு கிரிக்கெட் வீரர், மைதானத்தில் 
நுழைந்தாலே, ‘சிக்சர்… சிக்சர்…’ என, குரல் கொடுப்பர். அவரும் 
வஞ்சனையில்லாமல் அடிப்பார்.

அவரின் பர்சனாலிட்டியும், கிரிக்கெட் புகழும், பாலிவுட்டில் 
பர்வின் பாபியுடன் கதாநாயகனாக கூட நடிக்க வைத்தது. 
இன்று, அவருக்கு வயது, 84. அவர் தான், முன்னாள் கிரிக்கெட் 
வீரர், சலீம் துரானி. 
அதிரடி பேட்டிங்குடன், சிறந்த சுழற்பந்து வீச்சாளரும் கூட.
மும்பையில் உள்ள, ஜாம் நகரை சேர்ந்த இவரை தவிர, 
ரஞ்சித் சிங், வினோ மன்காட், இன்றைய, ரவீந்திர ஜடேஜா 
ஆகியோரும், மும்பையை சேர்ந்த ஆட்டக்காரர்கள் தான். 

இதில், ரஞ்சித் சிங் மற்றும் வினோ மன்காட்குக்கு, சொந்த 
ஊரான, ஜாம் நகரில் சிலைகள் உள்ளன. 

—————————-

ராஜி ராதா
வாரமலர்

Advertisements

துள்ளி ஆடும் முயல் !

டுப்ளெஸ்ஸிஸுக்கு நன்றியோ நன்றி!” – குவாலிஃபையர்2 ஆட்டம் குறித்து வாட்சன்
ஐபிஎல் தொடரில் விளையாடிய 10 தொடர்களில் 8 முறை 
இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது சென்னை அணி. 
முதலாவது குவாலிபையர் ஆட்டத்தில் மும்பை அணியுடனான 
தோல்விக்கு பின்னர் தற்போது வாட்சன் மற்றும் டுப்ளெஸ்ஸிஸ் 
ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் டெல்லி அணியை 
வீழ்த்தி மீண்டும் மும்பை அணியைச் சந்திக்க தயாராகியுள்ளது 
தோனியின் சிங்கப்படை. 

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு அதிக கவலை 
அளித்த விஷயம் வாட்சனின் ஃபார்ம்தான். அவர் தொடக்க
ஓவர்களில் ஆட்டமிழந்துவிட அடுத்து வரும் வீரர்களுக்குச் 
சிரமமாகி விடுகிறது. 

நேற்றைய ஆட்டத்துக்கு முன்னர் ஹைதராபாத் அணிக்கு 
எதிராக மட்டுமே வாட்சன் சிறப்பாக விளையாடியிருந்தார். 
எனினும் அவர் மீது நம்பிக்கை வைத்து சென்னை அணித் 
தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கியது. 

இதற்கு ஹைதராபாத் போட்டியின் போதே நன்றியும் 
தெரிவித்திருந்தார். 

நேற்றைய குவாலிஃபையர் 2 போட்டியில் வாட்சன் 
மெதுவாகத்தான் தனது ஆட்டத்தைத் தொடங்கினார். அவருக்கு 
ஃபாஃப் டுப்ளெஸ்ஸிஸ் நல்ல கம்பெனி கொடுக்க வாட்சனின் 
ப்ரஷர் குறைந்தது. 

பின் தனது வழக்கமான அதிரடியால் மிரட்டினார். 
அதுவும் டுப்ளெஸ்ஸிஸை விடக் குறைவான பந்தில் அரைசதம் 
அடித்து மிரட்டினார். 
————–

`டுப்ளெஸ்ஸிஸுக்கு நன்றியோ நன்றி!” - குவாலிஃபையர்2 ஆட்டம் குறித்து வாட்சன் Faf_ipl_07472

டுப்ளெஸ்ஸிஸ்–Photo: IPLT20.COM

தனக்கு நல்ல கம்பெனி கொடுத்த பாட்னர் டுப்ளெஸ்ஸிஸுக்கு
நன்றி தெரிவித்தார் வாட்சன். போட்டிக்குப் பின்னர் பேசிய 
அவர், “தொடக்கத்தில் ரொம்ப பதற்றமாக உணர்ந்தேன். 
சென்னை அணி என்மீது கொண்ட நம்பிக்கையை இன்னும் 
தொடர்கிறார்கள். 

இந்த ஐபிஎல் எனக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. 
இன்றைய தினம் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியாக 
இருக்கிறது. 

டுப்ளெஸ்ஸிஸ் சிறப்பாக விளையாடினார். 
அந்தக் கட்டத்தில் அவர்தான் எனக்கு உதவினார். 
அதற்கு அவருக்கு எனது நன்றிகள். அனுபவம் என்பது 
பாசிட்டிவ் எனர்ஜி தருவது போன்றது. அணியின் அனுபவ 
வீரர்கள் இருக்கும்போது ஆட்டத்தில் இனி என்ன செய்ய 
வேண்டும் என்ற புரிதல் கூடுதலாக இருக்கும். 

எங்களின் மொத்த அனுபவத்தைக் கொண்டு இறுதிப் 
போட்டியில் விளையாடுவோம். 

`டுப்ளெஸ்ஸிஸுக்கு நன்றியோ நன்றி!” - குவாலிஃபையர்2 ஆட்டம் குறித்து வாட்சன் AP19130614765087_07189

மும்பை ஒரு சிறந்த அணி. அந்த அணியில் பெரிதாக எந்த 
பிரச்னையும் இல்லை. இறுதிப் போட்டி நிச்சயம் எங்களுக்குச் 
சவால் நிறைந்ததாக இருக்கப் போகிறது. 

தோனி ஒரு அற்புதமான மனிதர். தனது சக வீரர்கள் மீது 
அதிக நம்பிக்கை கொண்டவர். அவருடன் இணைந்து 
விளையாடுவது பெருமையான விஷயம். 

அவரிடம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டுள்ளேன்” 
என்றார். 

————————————
-பிரேம்குமார்.எஸ்.கே
விகடன்

சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? 2–வது தகுதி சுற்றில் டெல்லியுடன் இன்று மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? 2–வது தகுதி சுற்றில் டெல்லியுடன் இன்று மோதல் 201905100210138324_Will-Chennai-Super-Kings-reach-the-finalChallenges-today_SECVPF

விசாகப்பட்டினம், 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்–டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட்
12–வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி விட்டது. லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி 5–வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை சாய்த்து 2–வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. ஐதராபாத் அணி வெளியேற்றப்பட்டது.

2–வது தகுதி சுற்று ஆட்டம்
இந்த நிலையில் 2–வது தகுதி சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்–ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும். இறுதிப்போட்டி ஐதராபாத்தில் நாளை மறுநாள் இரவு நடக்கிறது.

இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2–வது அணி எது? என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்ட சென்னை அணியும், இளம் வீரர்களை அதிகம் உள்ளடக்கிய டெல்லி அணியும் மல்லுக்கட்டுகின்றன.

பேட்டிங் பலவீனம்
3 முறை கோப்பையை வென்றுள்ள சென்னை அணி 8–வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வேட்கையில் உள்ளது. இந்த சீசனில் லீக் ஆட்டம் இரண்டிலும் சென்னை அணி, டெல்லியை வீழ்த்தியது. பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்திலும் சென்னை அணி வெற்றி கண்டு இருந்தது. ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 20 தடவை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 14 முறையும், டெல்லி அணி 6 முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

இந்த சீசனில் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட சென்னை அணி கடைசி சில ஆட்டங்களில் எதிர்பார்த்தபடி ஜொலிக்கவில்லை. குறிப்பாக முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை அணி 131 ரன்களே எடுத்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் டோனியை தவிர பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. டோனி இதுவரை 405 ரன்கள் சேர்த்து நல்ல பார்மில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சுரேஷ் ரெய்னா 364 ரன்னும், பாப் டுபிளிஸ்சிஸ் 320 ரன்னும், அம்பத்தி ராயுடு 261 ரன்னும் எடுத்துள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே (ஐதராபாத்துக்கு எதிராக 96 ரன்) சிறப்பாக ஆடினார். இதுவரை 268 ரன்கள் எடுத்துள்ள ஷேன் வாட்சன் நல்ல தொடக்கம் அமைத்து கொடுக்க வேண்டியது சென்னை அணிக்கு அவசியமானதாகும்.

வலுவான பேட்டிங்
பந்து வீச்சில் சென்னை அணி பலமாகவே உள்ளது. இம்ரான் தாஹிர் 23 விக்கெட்டும், தீபக் சாஹர் 17 விக்கெட்டும், ஹர்பஜன்சிங் 14 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 13 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்கள். சென்னை மைதானத்தில் டோனி 3 சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவார். விசாகப்பட்டினத்தின் ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தபடி வீரர்களை அவர் முடிவு செய்வார். சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் நீக்கப்பட்டால் வேகப்பந்து வீச்சாளர் ‌ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.

டெல்லி அணியின் பேட்டிங் வலுவானதாக இருக்கிறது. ஷிகர் தவான் (503 ரன்கள்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (450 ரன்கள்), ரிஷாப் பான்ட் (450 ரன்கள்), பிரித்வி ஷா (348 ரன்கள்) நல்ல நிலையில் உள்ளனர். வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பிரித்வி ஷா, ரிஷாப் பான்ட் ஆகியோர் அதிரடியாக ஆடினார்கள். பந்து வீச்சில் ரபடா இல்லாதது இழப்பு என்றாலும் கிறிஸ் மோரிஸ் (13 விக்கெட்), இஷாந்த் ‌ஷர்மா (12 விக்கெட்), அமித் மிஸ்ரா (10 விக்கெட்), அக்‌ஷர் பட்டேல், கீமோ பால் (இருவரும் தலா 9 விக்கெட்) ஆகியோர் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

டெல்லி அணி, விசாகப்பட்டினம் ஆடுகளத்தில் ஏற்கனவே ஆடிய அனுபவம் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். முந்தைய லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்குள் முதல்முறையாக அடியெடுத்து வைக்க டெல்லி அணி தீவிரம் காட்டும். இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

அணி வீரர்கள்
இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

சென்னை சூப்பர் கிங்ஸ்: பாப் டுபிளிஸ்சிஸ், ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, எம்.விஜய், அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, தீபக் சாஹர், ஹர்பஜன்சிங் அல்லது ‌ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷாப் பான்ட், காலின் முன்ரோ, அக்‌ஷர் பட்டேல், ரூதர்போர்டு, கீமோ பால், அமித் மிஸ்ரா, டிரென்ட் பவுல்ட், இஷாந்த் ‌ஷர்மா.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

தினத்தந்தி

ஐ.பி.எல். கிரிக்கெட்:ஐதராபாத்தை வெளியேற்றியது டெல்லி அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்:ஐதராபாத்தை வெளியேற்றியது டெல்லி அணி 201905090149192471_The-IPL-CricketThe-Hyderabad-team-was-expelled-from-the_SECVPF


விசாகப்பட்டினம்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வி கண்டு வெளியேறியது.

வெளியேற்றுதல் சுற்று

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. சென்னையில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை சந்தித்தது. இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டது. டெல்லி அணியில் காலின் இங்ராம் நீக்கப்பட்டு காலின் முன்ரோ சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் யூசுப் பதானுக்கு பதிலாக தீபக் ஹூடா இடம் பிடித்தார்.

விருத்திமான் சஹா

8 ரன்னில் அவுட்

‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹா, மார்ட்டின் கப்தில் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் டிரென்ட் பவுல்ட் வீசிய முதல் பந்திலேயே விருத்திமான் சஹாவுக்கு நடுவர் ‘அவுட்’ வழங்கினார். ஆனால் நடுவரின் முடிவை எதிர்த்து விருத்திமான் சஹா அப்பீல் செய்து எல்.பி.டபிள்யூ. கண்டத்தில் இருந்து தப்பினார்.

மறுமுனையில் மார்ட்டின் கப்தில் அதிரடியாக ஆடினார். அவர் இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் ஒரு சிக்சரும், டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் தொடர்ந்து 2 சிக்சரும் அடித்து கலக்கினார். 3.1 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 31 ரன்னாக இருந்த போது விருத்திமான் சஹா (8 ரன்) இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து மனிஷ் பாண்டே களம் இறங்கினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது.

மார்ட்டின் கப்தில் 36 ரன்

அணியின் ஸ்கோர் 6.3 ஓவர்களில் 56 ரன்னாக உயர்ந்த போது அடித்து ஆடிய மார்ட்டின் கப்தில் (36 ரன்கள், 19 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) அமித் மிஸ்ரா பந்து வீச்சில் கீமோ பாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பிறகு அணியின் ரன் வேகம் குறைந்தது. அடுத்து நிதானமாக ஆடிய மனிஷ் பாண்டே (30 ரன்கள், 36 பந்து, 3 பவுண்டரி) கீமோ பால் பந்து வீச்சில் ரூதர்போர்டிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

இதனை அடுத்து விஜய் சங்கர், கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். விஜய் சங்கர் ஆட்டத்தில் அதிரடி தென்பட்டது. 14.3 ஓவர்களில் ஐதராபாத் அணி 100 ரன்னை கடந்தது. நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேன் வில்லியம்சன் (28 ரன்கள், 27 பந்து, 2 பவுண்டரி) இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் போல்டு ஆனார். சற்று நேரத்தில் விஜய் சங்கரும் (25 ரன்கள், 11 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் அக்‌ஷர் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

ஐதராபாத் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள்

கடைசி ஓவரில் முகமது நபி (20 ரன்), தீபக் ஹூடா (4 ரன்), ரஷித் கான் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர்குமார் ரன் எதுவும் எடுக்காமலும், பாசில் தம்பி 1 ரன்னுடனும் களத்தில் நின்றனர். டெல்லி அணி தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் நல்ல தொடக்கம் ஏற்படுத்தினார்கள். 7.3 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 66 ரன்னாக இருந்த போது ஷிகர் தவான் (17 ரன்) தீபக் ஹூடா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (8 ரன்) விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.

டெல்லி அணி வெற்றி

இதனை அடுத்து ரிஷாப் பான்ட், பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்தார். அடித்து ஆடிய பிரித்வி ஷா 38 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் கலீல் அகமது பந்து வீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த காலின் முன்ரோ (14 ரன்), அக்‌ஷர் பட்டேல் (0), ரூதர்போர்டு (9 ரன்) ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள். ஆனால் மறுமுனையில் ரிஷாப் பான்ட் அதிரடியாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். அணியின் ஸ்கோர் 18.5 ஓவர்களில் 158 ரன்னாக இருந்த போது ரிஷாப் பான்ட் (49 ரன்கள், 21 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் முகமது நபியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 4-வது பந்தில் அமித் மிஸ்ரா(1 ரன்) சர்ச்சைக்குரிய முறையில் ரன்-அவுட் ஆனதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த பந்தை கீமோ பால் பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பெற வைத்தார். 19.5 ஓவரில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்கிறது. தோல்வி கண்ட ஐதராபாத் அணி வெளியேறியது.

நாளை நடைபெறும்
2-வது தகுதி சுற்றில் சென்னை-டெல்லி அணிகள் மோதல்

ஐ.பி.எல். போட்டி தொடரில் இன்று ஓய்வு நாளாகும். விசாகப்பட்டினத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி முதலாவது தகுதி சுற்றில் மும்பையிடம் தோல்வி அடைந்தாலும் 2-வது வாய்ப்பின் மூலம் இந்த தகுதி சுற்றில் விளையாடுகிறது. 

வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் டெல்லி அணி 2-வது தகுதி சுற்றில் விளையாட தகுதி பெற்றது. இந்த 2-வது தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அத்துடன் 12-ந் தேதி இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதும்.

தினத்தந்தி

கொஞ்சம் சுத்திப் போகணும்… அவ்ளோதான்!” – குவாலிஃபையர் போட்டிகுறித்து தோனி

மும்பை அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில், 
சென்னை அணியின் ஆட்டம்குறித்து தோனி மனம் 
திறந்து பேசினார். 

``கொஞ்சம் சுத்திப் போகணும்... அவ்ளோதான்!” - குவாலிஃபையர்  போட்டிகுறித்து தோனி AP19127641725942_07267


செய்யத் தவறியது, லக்கி, அன்லக்கி எனப் பல்வேறு 
விஷயங்கள்குறித்து பேசினார், கேப்டன் தோனி. 

ஐபிஎல் தொடரின் முதல் ப்ளே ஆஃப் போட்டி. சொந்த மண்ணில் 
சென்னை அணி மீண்டும் ஒருமுறை மும்பை அணியுடன் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. கடைசி நான்கு முறை சென்னை அணி 
மும்பையிடம் தோல்வியை மட்டும்தான் சந்தித்தது. 

அதுவும் சொந்த மண்ணில் 2010 -ம் ஆண்டுக்குப் பிறகு 
சென்னை அணி மும்பையை வீழ்த்தவே இல்லை. இறுதிப் 
போட்டியும் ஹைதராபாத் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளதால், 
மும்பை அணியை சென்னையில் வீழ்த்த இன்னும் ஒருவருடம் 
காத்திருக்க வேண்டும். 

போட்டி முடிந்த பின்னர் பேசிய சென்னை அணியின் கேப்டன் 
தோனி, சில விஷயங்களைச் சரியாகக் கணித்திருக்க வேண்டும் 
என்கிறார். தோனி, `

`போட்டி என்றால் ஒருவர் தோற்கத்தான் செய்வார். அதுதான் 
போட்டியின் தன்மை. எங்களுக்கு சில விஷயங்கள் சிறப்பானதாக 
அமையவில்லை. குறிப்பாக பேட்டிங். 

``கொஞ்சம் சுத்திப் போகணும்... அவ்ளோதான்!” - குவாலிஃபையர்  போட்டிகுறித்து தோனி AP19127518979997_07013


சொந்த மண்ணில் விளையாடும்போது, இங்கு இருக்கும் 
சூழலுக்கு ஏற்ப சீக்கிரம் மாற வேண்டும். இங்கு, நாங்கள்
ஏற்கெனவே 7 போட்டிகள் விளையாடியுள்ளோம். 

மற்ற அணிகளைவிட ஆடுகளத்தை நாங்கள்தான் நன்றாகப்
புரிந்துகொள்ள வேண்டும். ஆடுகளம் எப்படி இருக்கும் 
என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். 

இதைத்தான் சொந்த மண்ணில் விளையாடுவதற்கான 
சாதகங்கள் என்கிறோம். ஆனால், இதை நாங்கள் சரியாகச் 
செய்யவில்லை.

``கொஞ்சம் சுத்திப் போகணும்... அவ்ளோதான்!” - குவாலிஃபையர்  போட்டிகுறித்து தோனி AP19127566215166_07553

பேட்டிங்

என்னைப் பொறுத்த வரை பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை. 
அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் நல்ல திறமையானவர்கள்தான். 
சிறப்பாகவும் விளையாடியுள்ளனர். 

ஆனால், முக்கியமான ஆட்டத்தில் தேவையற்ற ஷாட்டுகள்
அடித்து விடுகின்றனர். ஆனால், அவர்களிடம் அனுபவம் 
இருக்கிறது. அடுத்த போட்டியில் நிச்சயம் சிறப்பாக 
விளையாடுவார்கள்” என்றார். 

``கொஞ்சம் சுத்திப் போகணும்... அவ்ளோதான்!” - குவாலிஃபையர்  போட்டிகுறித்து தோனி AP19127619290606_07176

சென்னையின் பந்துவீச்சு குறித்துப் பேசிய தோனி,
“பந்துவீச்சைப் பொறுத்தவரை கொஞ்சம் அன்லக்கி என்றுதான்
சொல்லுவேன். சில கேட்சுகள் பிடிக்காமல் தவறவிட்டோம். 

பேட்ஸ்மேன்களுக்கு சற்று தள்ளி பந்து வீசியிருக்க வேண்டும். 
பந்துவீச்சில் இன்னும் சில வேரியேஷன்ஸ் காட்டியிருக்க 
வேண்டும். இதனை செய்யத் தவறிவிட்டோம். 

எனினும், போதுமான ஸ்கோர் இல்லை என்பதுதான் உண்மை. 
130 மாதிரியான இலக்கினைக்கொண்டு ஆடும்போது, 
ஒரு பவுண்டரிகூட சிக்கலை ஏற்படுத்தும். 

இதுபோன்ற தொடரின் முக்கியமான கட்டத்தில் ஆட்டத்தை இழப்பது நல்ல விஷயம் கிடையாது. ஆனாலும், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் சென்னை அணி இடம்பிடித்தது லக்கி. 

இதனால் இன்னும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நேராகச் செல்ல முடியவில்லை. கொஞ்சம் சுற்றிச் செல்லவேண்டி இருக்கிறது. அதனால், இந்தப் பயணம் இன்னும் கொஞ்சம் நீண்ட பயணம் ஆகியுள்ளது” என்று நம்பிக்கையுடன் முடித்தார். 


-விகடன்

ஐ.பி.எல். கிரிக்கெட்: வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி–ஐதராபாத் அணிகள் இன்று மோதல்


ஐ.பி.எல். கிரிக்கெட்: வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி–ஐதராபாத் அணிகள் இன்று மோதல் 201905080247252462_In-the-game-of-the-exit-roundDelhiHyderabad-teams-face_SECVPFவிசாகப்பட்டினம்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி–ஐதராபாத் அணிகள் இன்று இரவு மோதுகின்றன.

வெளியேற்றுதல் சுற்று ஆட்டம்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்–ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் 3–வது இடத்தை பிடித்து ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளராகவும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை ஆலோசகராகவும் கொண்டுள்ள டெல்லி அணி பெயர் மாற்றம் செய்ததுடன், இந்த சீசனில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் எழுச்சி பெற்றுள்ளது. அத்துடன் 2012–ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி முதல்முறையாக ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு தகுதி கண்டு இருக்கிறது.

ஷிகர் தவான்
டெல்லி அணியில் ஷிகர் தவான் (486 ரன்கள்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (442 ரன்கள்), ரிஷாப் பான்ட் (401 ரன்கள்), பிரித்வி ஷா உள்ளிட்டோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். 25 விக்கெட்டுகள் வீழ்த்திய ரபடா (தென்ஆப்பிரிக்கா) உலக கோப்பை போட்டிக்கான தங்கள் நாட்டு அணிக்கு விளையாடுவதற்கு ஆயத்தமாக நாடு திரும்பி விட்டாலும், இஷாந்த் ‌ஷர்மா, அமித் மிஸ்ரா, அக்‌ஷர் பட்டேல் உள்ளிட்ட சிறந்த பவுலர்கள் அணியில் இருக்கிறார்கள்.

2016–ம் ஆண்டு சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி லீக் சுற்றில் 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றது. 4–வது இடத்துக்கான போட்டியில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் ஒரே புள்ளியுடன் சமநிலை வகித்த போதிலும் ‘ரன்–ரேட்’ அடிப்படையில் ஐதராபாத் அணி 4–வது இடம் பிடித்து ‘பிளே–ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது.

பேட்டிங் பலவீனம்
ஐதராபாத் அணியின் பேட்டிங் தூணாக விளங்கிய டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), பேர்ஸ்டோ (இங்கிலாந்து) ஆகியோர் உலக கோப்பை போட்டிக்கான தங்கள் நாட்டு அணிக்கு தயாராக சொந்த நாட்டுக்கு திரும்பி விட்டதால் அந்த அணியின் பேட்டிங் பலவீனம் அடைந்துள்ளது. மனிஷ் பாண்டே (314 ரன்கள்) பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டு வருகிறார். கேப்டன் கேன் வில்லியம்சன், மார்ட்டின் கப்தில், விஜய் சங்கர் ஆகியோர் தங்களது பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் கலீல் அகமது, ரஷித் கான், புவனேஷ்வர்குமார் ஆகியோர் நல்ல ரிதத்தில் உள்ளனர்.

ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் ஐதராபாத், டெல்லி அணிகள் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஐதராபாத் அணி 9 முறையும், டெல்லி அணி 5 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. நடப்பு சீசனில் இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் 2 முறை சந்தித்தன. இதில் முதலாவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், 2–வது ஆட்டத்தில் டெல்லி அணியும் வெற்றி பெற்றன. டெல்லி அணியின் அதிரடி ஆட்டத்துக்கு முன்பு ஐதராபாத் அணி தாக்குப்பிடிக்குமா? என்பது சற்று சந்தேகம் தான்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது. 10–ந் தேதி நடைபெறும் 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில், முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி போட்டியை விட்டு வெளியேறும்.

அணி வீரர்கள்
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷாப் பான்ட், காலின் இங்ராம், ரூதர்போர்டு, கீமோ பால், அக்‌ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா, இஷாந்த் ‌ஷர்மா, டிரென்ட் பவுல்ட்.

ஐதராபாத் சன் ரைசர்ஸ்: விருத்திமான் சஹா, மார்ட்டின் கப்தில், மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), விஜய் சங்கர், யூசுப் பதான், முகமது நபி, ரஷித் கான், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, பாசில் தம்பி.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

தினத்தந்தி

முதலாவது தகுதி சுற்றில் சென்னையை வீழ்த்திமும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

முதலாவது தகுதி சுற்றில் சென்னையை வீழ்த்திமும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது 201905080221349661_In-the-first-qualifying-roundBring-down-ChennaiThe_SECVPF
சென்னை, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முதலாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

முதலாவது தகுதி சுற்று

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் (18 புள்ளிகள்), சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளிகள்), டெல்லி கேப்பிட்டல்ஸ் (18 புள்ளிகள்), ஐதராபாத் சன் ரைசர்ஸ் (12 புள்ளிகள்) ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த 3 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

அதிர்ச்சி தொடக்கம்

‘டாஸ்’ ஜெயித்த சென்னை அணியின் கேப்டன் டோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாப் டுபிளிஸ்சிஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் களம் இறங்கினார்கள். 

சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. முதல் ஓவரை வீசிய மலிங்கா அந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 2-வது ஓவரில் பவுண்டரி விளாசிய பாப் டுபிளிஸ்சிஸ் (6 ரன்) அடுத்த ஓவரில் ராகுல் சாஹர் பந்து வீச்சில் மாற்று ஆட்டக்காரர் அன்மோல் பிரீத் சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா (5 ரன்) ஜெயந்த் யாதவ் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். ஜஸ்பிரித் பும்ரா வீசிய ஒரு ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்த தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் (10 ரன்) குருணல் பாண்ட்யா பந்து வீச்சில் ஜெயந்த் யாதவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். 

ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருந்ததால் சுழற்பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) சென்னை அணி 32 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதைத்தொடர்ந்து அம்பத்தி ராயுடு, எம்.விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும், அதேநேரத்தில் தவறான பந்துகளை தண்டிக்கும் விதத்தில் அடித்தும் ஆடினார்கள். அணியின் ஸ்கோர் 12.1 ஓவர்களில் 65 ரன்னை எட்டிய போது எம்.விஜய் (26 ரன்கள், 26 பந்து, 3 பவுண்டரி) ராகுல் சாஹர் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார்.

சென்னை அணி 131 ரன்கள்

இதனை அடுத்து கேப்டன் டோனி, அம்பத்தி ராயுடுவுடன் இணைந்தார். ஜெயந்த் யாதவ் வீசிய ஒரு ஓவரில் டோனி, அம்பத்தி ராயுடு தலா ஒரு சிக்சர் தூக்கினர். 17.1 ஓவர்களில் சென்னை அணி 100 ரன்னை எட்டியது. மலிங்கா வீசிய ஒரு ஓவரில் டோனி அடுத்தடுத்து 2 சிக்சர்கள் விரட்டியடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். 

கடைசி ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் டோனி, இஷான் கிஷனிடம் கேட்ச் ஆனதும் நடுவர் அவுட் என்று அறிவித்தார். ஆனால் டெலிவிஷன் ரீப்ளேயில் அது நோ-பால் என்று தெரியவந்ததால் டோனி தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்பட்டார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நடப்பு சாம்பியன் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அம்பத்தி ராயுடு 37 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 42 ரன்னும், கேப்டன் டோனி 29 பந்துகளில் 3 சிக்சருடன் 37 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மும்பை அணி தரப்பில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டும், குருணல் பாண்ட்யா, ஜெயந்த் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

ரோகித் சர்மா 4 ரன்னில் அவுட்

பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (4 ரன்) தீபக் சாஹர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையிலும், குயின்டான் டி காக் (8 ரன்) ஹர்பஜன்சிங் பந்து வீச்சில் பாப் டுபிளிஸ்சிடம் கேட்ச் கொடுத்தும் அவுட் ஆனார்கள்.

அடுத்து இஷான் கிஷன், சூர்யகுமாருடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 13.2 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை எட்டியது. இஷான் கிஷன் 31 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் இம்ரான் தாஹிர் பந்து வீச்சில் போல்டு ஆனார். 

அடுத்து களம் கண்ட குருணல் பாண்ட்யா (0) இம்ரான் தாஹிர் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.

இறுதிப்போட்டியில் மும்பை

இதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமாருடன் இணைந்தார். இருவரும் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். 18.3 ஓவர்களில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு 5-வது முறையாக முன்னேறியது. 

சூர்யகுமார் யாதவ் 54 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 71 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 11 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 13 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

சென்னை அணியை, மும்பை அணி தொடர்ச்சியாக 4-வது முறையாக (கடந்த ஆண்டு உள்பட) வீழ்த்தி இருக்கிறது. தோல்வி கண்ட சென்னை அணிக்கு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இன்னொரு வாய்ப்பு உள்ளது. 

இன்று நடைபெறும் வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன், வருகிற 10-ந் தேதி சென்னை அணி மோதும். அதில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும்.

தினத்தந்தி

உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச், நவோமி ஒசாகா முதலிடத்தில் நீடிப்பு

உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச், நவோமி ஒசாகா முதலிடத்தில் நீடிப்பு

நியூயார்க், 

உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் 31 வயதான செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (11,160 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார்.

அவர் இந்த வாரத்தையும் சேர்த்து மொத்தம் 250 வாரங்கள் முதலிடத்தை அலங்கரிக்கிறார். இதன் மூலம் முதலிடத்தை 250 வாரங்கள் ஆக்கிரமித்த 5-வது வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றுள்ளார்.

ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (7,765 புள்ளிகள்) 2-வது இடத்தில் தொடருகிறார். சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (5,590 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (5,565 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தை பெற்றுள்ளார். ஆஸ்திரியாவின் டொமினிக் திம் (5,085 புள்ளிகள்) 5-வது இடத்தில் நீடிக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான 21 வயது ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா (6,151 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார்.

செக் குடியரசின் கிவிடோவா (5,835 புள்ளிகள்), ருமேனியாவின் சிமோனா ஹாலெப் (5,682 புள்ளிகள்), ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் (5,220 புள்ளிகள்), செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா (5,111 புள்ளிகள்), உக்ரைனின் எலினா ஸ்விடோலினா (4,921 புள்ளிகள்), நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸ் (4,765 புள்ளிகள்), அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (4,386 புள்ளிகள்), ஆஸ்திரேலியாவின் ஆஷ்லிக் பார்டி (4,275 புள்ளிகள்), பெலாரஸ்சின் சபலென்கா (3,520 புள்ளிகள்) ஆகியோர் முறையே 2 முதல் 10 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.

-தினத்தந்தி

இறுதிப்போட்டிக்குள் நுழையுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

இறுதிப்போட்டிக்குள் நுழையுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? 201905070419307724_Chennai-Super-Kings-to-enter-final-match_SECVPF


சென்னை, 

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளி), டெல்லி கேப்பிட்டல்ஸ் (18 புள்ளி), ஐதராபாத் சன்ரைசர்ஸ் (12 புள்ளி) ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. 

இதில் 4-வது இடத்திற்கான போட்டியில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் ஒரே புள்ளியுடன் சமநிலை வகித்த போதிலும் ரன்ரேட் அடிப்படையில் ஐதராபாத் அணிக்கு அதிர்ஷ்டம் அடித்தது.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டாப்-2 இடங்களை பிடித்த 3 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்சும், சென்னை சூப்பர் கிங்சும் கோதாவில் இறங்குகின்றன.

நடப்பு சாம்பியனான சென்னை அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்விகளை சந்தித்ததுடன் முதல் அணியாக பிளே-ஆப் சுற்றை உறுதி செய்தது. இதுவரை பங்கேற்ற அனைத்து ஐ.பி.எல். தொடரிலும் லீக் சுற்றை தாண்டிய ஒரே அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8-வது முறையாக இறுதிசுற்றை எட்டுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

கேப்டன் டோனி (368 ரன்), துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா (359 ரன்), பாப் டு பிளிஸ்சிஸ் (319 ரன்) உள்ளிட்டோர் சென்னை அணியின் பேட்டிங்குக்கு வலு சேர்க்கிறார்கள். 

ஆனால் ஷேன் வாட்சன் ஐதராபாத் அணிக்கு எதிரான மோதலை (96 ரன்) தவிர்த்து மற்ற ஆட்டங்களில் சோபிக்கவில்லை. இருப்பினும் முக்கியமான இந்த ஆட்டத்தில் அவர் கைகொடுக்க வேண்டியது அவசியமாகும். 

பொதுவாக சென்னை அணி தொடக்கத்தில் மெதுவாகவே ஆடும். இந்த சீசனை கவனித்தால் பவர்-பிளேயில் சராசரியாக சென்னை அணியின் ரன்ரேட் 6.21 ஆகவும், மிடில் ஓவர்களில் (7-15 ஓவர்) 6.93 ஆகவும் உள்ளது. இறுதி கட்டத்தில் தான் (15 முதல் 20-வது ஓவர் வரை) பட்டையை (சராசரி ரன்ரேட் 9.31) கிளப்புகிறார்கள்.

இங்குள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு உகந்தது என்பதால் இம்ரான் தாஹிர், ஹர்பஜன்சிங், ரவீந்திர ஜடேஜா தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. தோள்பட்டை காயத்தால் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ் ஆடாதது சற்று பின்னடைவு தான்.

அதே சமயம் உள்ளூரில் ஆடுவது கொஞ்சம் அனுகூலமான விஷயமாகும். இந்த சீசனில் சொந்த ஊரில் விளையாடிய 7 லீக்கில் 6-ல் சென்னை அணி வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணிக்கு, மும்பை இந்தியன்ஸ் என்றாலே கொஞ்சம் அலர்ஜி தான். இந்த சீசனில் அந்த அணிக்கு எதிரான இரண்டு லீக் ஆட்டங்களிலும் தோல்வியே (37 ரன் மற்றும் 46 ரன் வித்தியாசம்) மிஞ்சியது. 

ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் மும்பைக்கு எதிராக 26 ஆட்டங்களில் விளையாடி அதில் 15-ல் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. எனவே முந்தைய தோல்விகளுக்கு பழிதீர்க்குமா? என்ற எதிர்பார்ப்போடு சென்னை ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் 9 வெற்றி, 5 தோல்வியை சந்தித்தது. இருப்பினும் ரன்ரேட்டில் அந்த அணி சென்னையை விட கொஞ்சம் மேலோங்கி நிற்கிறது. 

சரிசமகலவையில் அமைந்துள்ள மும்பை அணி சரியான நேரத்தில் எழுச்சி பெற்று விட்டது. ஹர்திக் பாண்ட்யா (373 ரன் மற்றும் 14 விக்கெட்) ஆல்-ரவுண்டராக மிரட்டுகிறார். இதே போல் கேப்டன் ரோகித் சர்மா, குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். 

பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (17 விக்கெட்), மலிங்கா (15 விக்கெட்), ராகுல் சாஹர் (10 விக்கெட்), குருணல் பாண்ட்யா (10 விக்கெட்) நம்பிக்கை அளிக்கிறார்கள். எல்லா வகையிலும் பலம் வாய்ந்த அணியாக மும்பை திகழ்வதால் இந்த ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும். 

நடப்பு தொடரில் மும்பை அணியின் சராசரி ரன்ரேட் பவர்-பிளேயில் 7.98 ஆகவும், மிடில் ஓவர்களில் 7.55 ஆகவும், கடைசி கட்டத்தில் 11.19 ஆகவும் இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்
போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணி உடனடியாக 
வெளியேறாது. 

அந்த அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது 
வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது 
தகுதி சுற்றில் மோதும் வாய்ப்பு கிடைக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, துருவ் ஷோரே அல்லது முரளிவிஜய், வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர், ஹர்பஜன்சிங், தீபக் சாஹர்.

மும்பை: குயின்டான் டி காக், ரோகித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், குருணல் பாண்ட்யா, ராகுல் சாஹர், மலிங்கா, பும்ரா, மெக்லெனஹான் அல்லது மயங்க் மார்கண்டே அல்லது அனுகுல் ராய்.

தினத்தந்தி

« Older entries