101. விழித்திருக்கும் போதே அடித்துக் கொண்டிருப்பான்.
102. சின்னச் சின்னச் சாத்தான்,
வயிறு பெருத்துச் செத்தான்.
103. ஊரெல்லாம் மூடியிருக்கும் – ஆனால்
ஊறுகாய்ப் பானை திறந்தே இருக்கும்.
104. மேலே பறக்கும் வால் நீண்ட குதிரைக்குத்
தரையிலே இருக்கும் தம்பி கையில் கடிவாளம்.
105. ஒன்றும் இரண்டும் கலப்பு:
உள்ளங்கையால் பிடிப்பு;
ஆவியிலே நடப்பு:
ஆண்டவனுக்குப் படைப்பு.
106. குண்டோதரன் வயிற்றிலே,
குள்ளன் நுழைகிறான்.
107. இறந்த மாட்டை
அலற அலற அடிக்கிறார்கள்.
108. எத்தனை பேர் ஏறினாலும் சலிக்காத குதிரை.
109. வட்ட முகம் உண்டு, வாய் திறந்து பேசாது.
காட்டக் கை உண்டு, காலூன்றி நடக்காது.
110. வட்ட வட்டச் சிங்கண்ணா,
வாயில்லாத சிங்கண்ணா,
எலும்பில்லாத சிங்கண்ணா,
என்னை வந்து எழுப்பண்ணா.
111. முற்றத்தில் நடப்பாள்;
மூலையில் கிடப்பாள்.
112. தொட்டால் சுருங்கி – அதற்குத்
தொண்ணுறு கால்.
113. ஊருக்கெல்லாம் ஒரே கூரை – அது என்ன?
114. அரக்கன் தலை – அதோ
அந்தரத்தில் தொங்குது.
115. சாத்தின. கதவு இருக்க,
ஏத்தின விளக்கு இருக்க,
இராத்திரி வந்தது யார்?
இசையோடு எழுப்பியது யார்?
116. வாயில் பற்கள் உண்டு; கடிக்காது,
தலையைப் பிராண்டும்; வலிக்காது,
அழுக்கை அகற்றும்; பூச்சியைப் பிடிக்கும்.
அது என்ன?
117. அடித்தால் அழுவான்; பிட்டால் சிரிப்பான்.
118. இரண்டு வீட்டுக்கு ஒரே உத்தரம்.
119. பட்டு ரோஜா மலர்ந்தது;
கிட்டப் போனால் சுட்டது.
120. தட்டுப் போல் இருக்கும் – அதில்
சொட்டுத் தண்ணிர் ஒட்டாது.
121. கழுத்தை வெட்டினால் கண் தெரியும்.
122. வெட்கம் கெட்ட புளிய மரம்
வெட்ட வெட்ட வளருது.
123. ஒ ஓ மரமே, உயர்ந்த மரமே
ஒரு பிடி தழைக்கு விதியற்ற மரமே.
124. பார்த்ததோ இரண்டு பேர்,
எடுத்ததோ பத்துப் பேர்,
ருசி பார்த்ததோ ஒரே ஒருவன்.
125. சின்னக் குதிரைக்கு நூறு கடிவாளம்.
126. பார்க்கப் பச்சை, பழுத்தால் சிவப்பு.
பல்லிலே பட்டால் கண்ணிலே நீர்.
127. சாப்பாட்டுக்குக் குறைவில்லை,
தண்ணிர் பட்டால் மரணம்.
128. வெள்ளைக் குதிரைக்குப் பச்சை வால்.
129. ஒ ஓ அண்ணா, உயர்ந்த அண்ணா,
தோளிலே என்ன தொண்ணுறு முடிச்சு?
130. ஊசி முனையிலே ஒய்யார சங்கீதம்.
131. முத்துக் கோட்டைக்குள்
மூன்று பேர் புகுந்தார்கள்.
புகுந்தவர் வரவில்லை.
போர் நடக்குது; ரத்தம் சொட்டுது.
132. இருண்டதோர் காட்டில், மிரண்டன. பன்றிகள்.
பத்துப் பேர் பிடிக்க இரண்டுபேர் குத்தினர்.
133. உழைக்க உழைக்க உடம்பிலே தோன்றும்.
134. கண்டதுண்டமாய்க் கரியைத் தின்பேன்.
கண்கள் இல்லாமல் காதம் போவேன்.
தாகம் எடுக்காமல் தண்ணீர் குடிப்பேன்.
குரல் இல்லாமல் கூச்சல் போடுவேன்.
135. ஜாடி மேலே குரங்கு.
136. இரண்டு கை உண்டு; எட்டிப் பிடிக்க முடியாது.
நான்கு கால் உண்டு நடந்து செல்ல முடியாது;
முதுகு உண்டு, ஆனால் முகம் கிடையாது.
137. பொரி பொரித்தேன்; பொட்டியில் வைத்தேன்.
விடிந்து பார்த்தேன்; வெறும் பொட்டி இருந்தது.
138. முதுகிலே இருப்பது கூடு – அது மீனாக்குட்டிக்கு வீடு.
139. வெய்யிலில் காய்வேன்; மழையில் நனைவேன்.
அண்டி வந்தவர்க்கு அடைக்கலம் தருவேன்.
140. இத்தனூண்டு தண்ணிக்குள்ளே
சித்திரப் பூ பூத்ததாம்.
141. பெட்டியைத் திறந்தேன் கிருஷ்ணன் பிறந்தான்.
142. அரியலூரு அம்மாமி அதிகப் பிள்ளைக்காரி,
பால் இல்லாமல் பிள்ளை வளர்ப்பதில்
பலே கெட்டிக்காரி.
143. நடலாம்; பிடுங்க முடியாது – அது என்ன?
144. வால் நீண்ட குருவிக்கு
வாய் உண்டு; வயிறில்லை.
145. மூன்று கொம்பு மாடு: ஒரு கொம்பால் குத்துது.
146. பிள்ளை பிறந்தது; பிறந்ததும் எழுந்தது.
எழுந்து நாலு பேரைக் கடித்தது.
147. எங்கள் அப்பா பணத்தை எண்ண முடியாது;
எங்கள் அம்மா புடவையை மடிக்க முடியாது.
148. தவழும்போது ஒரு பெயர்,
விழும்போது வேறு பெயர்,
உருளும்போது இன்னொரு பெயர்.
149. இரண்டு தோட்டத்துக்கு நான்கு வேலி,
பூ பூத்ததோ தோட்டம் பாழ்.
150. கடல் நீரில் வளர்வேன்; மழை நீரில் மடிவேன்.
151. மாட மாளிகையில் வசிப்பான்; மன்னவனும் அல்ல.
கூட கோபுரத்தில் வசிப்பான்; கொற்றவனும் அல்ல.
152. கரை உண்டு; படிக்கட்டு இல்லை.
தலைப்பு உண்டு; கட்டுரை இல்லை.
153. அண்ணன் வீட்டில் தம்பி போகலாம்;
தம்பி வீட்டில் அண்ணன் போக முடியாது.
154. உரசினால் போதும்; உயிர் முடிந்து போகும்.
155. இறக்கை இல்லாத குருவிக்கு
இரும்பிலே மூக்கு.
பாய்ந்து செல்லும் குருவிக்குப்
பஞ்சிலே வால்.
156. ஆனைக்கும் குதிரைக்கும்
அண்டாத தண்ணீர்.
தொண்டைமான் குதிரைக்குத்
தொடையளவு தண்ணீர்.
157. பூவில் பிறக்கும் – அது வாயில் சுவைக்கும்.
158. மத்தால் அடித்து, பத்துப்பேர் பிடித்து,
பதமாய் எடுப்பது எது?
159. கையில் பந்தாடும்; கதிரவனுடன் போராடும்.
கனலுக்கு இரையாகும்; கரிசாம்பல் பொடியாகும்.
160. கால் நான்கு; நடக்காது;
கண் ஆயிரம்; இமைக்காது.
161. உச்சியிலே குடுமி உண்டு; மனிதனல்ல.
உருண்டையான வடிவம் உண்டு; முட்டையல்ல.
நீர்ததும்பி நிறைந்திருக்கும்; குளமும் அல்ல.
நெற்றியிலே கண் இருக்கும்; சிவனும் அல்ல.
162. ஆயாள் வீட்டுத் தோட்டத்திலே
பச்சைப் பாம்பு தொங்குது.
163. மஞ்சப் பெட்டி, மரக்காப் பெட்டி,
ஒருநாளும் திறக்காப் பெட்டி.
164. உரித்த முயல் ஊருக்குப் போகுது.
165. கொத்துக் கொத்து ஈச்சங்காய்;
கோடாலி ஈச்சங்காய்;
மதுரைக்குப் போனாலும்,
வாடாத ஈச்சங்காய்.
166. ஆத்தாள் தெருவிலே,
மகள் கொலுவிலே.
167. கண்ணாடிக் குண்டு காற்றிலே பறக்குது;
கையாலே தொட்டால் காணாமல் போகுது.
168. ஐந்து வீட்டுக்கு ஒரே முற்றம்.
169. கேட்டால் பேசமாட்டான் – இரண்டு
போட்டால் பேசுவான்.
170. அதிசயக் குளத்திலே அற்புதக் குருவி.
வாலினால் தண்ணீரை வற்றவற்றக் குடிக்குது.
171. அடிமலர்ந்து நுனி மலராத பூ
என்ன பூ?
172. ஏழுமலைக்கு அப்பாலே
எருமை மாடு கத்துது.
173. அஸ்திவாரம் இல்லாமல் அரண்மனை கட்டினேன்.
174. எங்கள் வீட்டு எருமைக்கு
வருஷத்துக்கு ஒரு மேய்ச்சல்.
175. மாமா வீட்டுத் தோட்டத்திலே
மதயானை படுத்திருக்கு.
176. ஒரு சாண் குதிரைக்கு
உடம்பெல்லாம் பல்.
177. உச்சாணிக் கிளையிலே
உரல் கட்டித் தொங்குது.
178. முதுகிலே மூட்டை சுமந்து,
மூன்று மணிக்கு முழம் போவான்.
179. மத்தாப்பு எரியுது பட்டாசு வெடிக்குது.
180. புதைத்து வைத்த பொருள்
பொத்துக் கொண்டு வருகிறது.
181. நடுவே இருக்கும் கருப்பனுக்கு
நாலு புறமும் வெள்ளையர் காவல்.
182. குட்டைக் குட்டைச் சீமாட்டி,
குளித்துக் குளித்துக் கரை ஏறுகிறாள்.
183. குற்றம் இல்லாமலே குடுமியைப் பிடிக்கிறான்.
184. நான் அவனைச் சுமக்கிறேன். அவன் என்னைச் சுமக்கிறான்,
185. விதை இல்லாமல் விளைவது எது?
வெட்டில்லாமல் சாகுமே அது.
186. என்னைப் பார்த்தால், உன்னைப் பார்ப்பேன்.
187. பால் இல்லாமல் பருப்பான்;
நோய் இல்லாமல் இளைப்பான்.
188. தேடாமலே கிடைக்கும் – அது
தேடும் செல்வத்தைக் குறைக்கும்.
189. இரண்டு பெண்கள் இரட்டைப் பிறவிகள்;
ஒருத்தி கீழே வந்தால், ஒருத்தி மேலே போவாள்.
190. நித்தம் குளிப்பாளாம் அம்மாப் பொண்ணு;
கூடக் குளிப்பாளாம் குட்டிப் பொண்ணு.
191. வெள்ளை மாளிகைக்கு
வாசலும் இல்லை; வழியும் இல்லை.
192. குளிச்சுக் குளிச்சுக் குத்த வைக்கும்.
கோமாளிப்பயல் பிள்ளை.
193. தாய் தரையிலே.
மகள், மகாராஜா முடியிலே.
194. இளஞ்சிவப்பு ராணிக்கு
இருபதினாறு வெள்ளையர்கள் – அவர்கள்
இரவும் பகலும் காவலர்கள்.
195. சுருங்கினால் எனக்கு அவன் அடக்கம்.
விரித்தால் நான் அவனுக்கு அடக்கம்.
196. கால் ஆறு: சிறகு இரண்டு;
கண் இரண்டும் கடுகுபோல.
ஈயாடா இளிச்சவாயா,
இன்னுமா தெரியவில்லை.
197. மரம் ஏறினால் வழுக்கும்;
காய் தின்றால் துவர்க்கும்;
பழம் தின்றால் இனிக்கும்.
198. ஒட்டமாய் ஒடும்; உருண்டு உருண்டு ஒடும்.
பள்ளத்தைக் கண்டால் பாய்ந்து பாய்ந்து ஒடும்.
199. பச்சைப் பங்களாவிலே,
வெண்பட்டு மெத்தையிலே,
கறுப்புத் துரை தூங்குகிறார்.
200. மஞ்சள் சேலை கட்டி,
மங்கையர் பத்துப் பேர்,
கயிற்றைப் பிடித்துக் கொண்டு
கடையிலே தொங்குகிறார்.
https://mathiyalagi.blogspot.com/2018/05/400_16.html?showComment=1602996572939#c5598204446221083719