சங்கீதத்தில் உலகை காணும் ‘கலைமாமணி’ ரத்னகுமாரி


சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி E_1614747148மனிதனையும், மற்ற உயிரினங்களையும் பணிய வைக்கும் ஓர் அருஞ்சாதனம், இசை. ஒவ்வொரு மனிதனின் மனோநிலையையும் இசை தீர்மானிக்கிறது. பெரும்பாலான மனிதர்களின் நினைவுகளையும், அதன் நிகழ்வுகளையும், இசை மீட்டெடுக்கக் கூடிய வல்லமை பெற்றது.

இசை என்பது உணர்வுகளுக்குள் உயிர் வாழ்கிறது என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார், ‘கலைமாமணி’ ரத்னகுமாரி கல்யாணசுந்தரம்.வடவள்ளியை சேர்ந்தவர் ரத்னகுமாரி கல்யாணசுந்தரம்,82. எதிர்பாராத விதமாக, சிறு வயதிலேயே, பார்வை இழந்தபோதிலும், தன்னம்பிக்கையுடன் சங்கீதம் கற்றார். விடாமுயற்சியால், சங்கீதத்தில் தேர்ச்சியடைந்து, வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் கச்சேரி நடத்தியுள்ளார். 75 ஆண்டுகள் அவரது இசை வாழ்க்கைக்கு, மகுடம் சூட்டும் விதமாக, தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது பெற்றுள்ளார்.

இதுகுறித்து, ரத்னகுமாரி கல்யாணசுந்தரம் நம்மிடம் பகிர்ந்தவை:எனது தந்தை பெரியசாமி; வேலுாரில் சப்-ரிஜிஸ்டராக பணிபுரிந்தார். நான், மூத்தவள்; ஒரு தம்பி, தங்கை உள்ளனர். எனது தந்தை, சங்கீதத்திலும், நாடகத்திலும் சிறந்து விளங்கினார். எனது ஐந்தாவது வயதில், பெரியம்மை நோய் தாக்கியது. அதில், எனது இரு விழிகளிலும் பார்வை முற்றிலும் பறிபோனது; பல சிகிச்சை மேற்கொண்டும் பயனில்லை.

பார்வையற்ற நிலையில் இருந்த எனக்கு, ஏழாம் வயதில், தந்தை, சங்கீதம் கற்றுக்கொடுத்தார். அதன்பின், நடேஷ் ஐயர், கிருஷ்ணமூர்த்தி பாகவதர் ஆகியோரிடம் சங்கீதம் கற்றேன். 8ம் வயதில், வேலுாரில் உள்ள பிள்ளையார் கோவிலில் முதல் அரங்கேற்றம் நடத்தினேன். 

தொடர் பயிற்சி விளைவாக, 11வது வயதில், விஜயவாடாவில் உள்ள, ‘ஆல் இந்தியா ரேடியோ’வில் பாடினேன். தொடர்ந்து, சென்னை, திருச்சி, கோவையிலுள்ள, ‘ஆல் இந்தியா ரேடியோ’விலும் பாடினேன். 28வது வயதில், சேலத்தில் நடந்த கச்சேரியில் பாடினேன்.அக்கச்சேரிக்கு வந்திருந்த கணவர், என் இசையில் ஈர்த்து, திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு முன்பு வரை, என் தம்பியும், தங்கையும், கச்சேரிகளுக்கு அழைத்துச் செல்வர். திருமணத்துக்கு பின், கச்சேரிகளுக்கு கணவர் அழைத்துச் சென்றார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் கச்சேரி நடத்தியுள்ளேன். 

1972ல், நெல்லை ஞானசம்பந்தி ஆதீனம் சார்பில், யாழ்ப்பாணத்தில் நடந்த கச்சேரியில், ‘கானமிர்தவானி’ பட்டம் பெற்றேன். தற்போது, தமிழக அரசின், 2020ம் ஆண்டு, ‘குரலிசை கலைஞர்’ என்பதற்கான ‘கலைமாமணி’ விருது பெற்றுள்ளேன்.நம்மிடம் குறை உள்ளதை நினைக்காமல், திறமையை கண்டறிந்து, முழு கவனத்தையும் செலுத்தி, விடா முயற்சி செய்தால், வெற்றி பெறலாம், என்றார் அவர்.நிஜம்தானே!

தினமலர்யூடியூப் டீச்சர்


யூடியூப் டீச்சர் Ld4613054618907


நன்றி குங்குமம் தோழி

கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு கிடக்கின்றன. ஆன்லைன் மூலம் கற்பிப்பது அதிகரித்து வருகிறது. ஆனால் ஆந்திராவின் ராஜமுந்திரி அருகேயுள்ள முராரி கிராமத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் யூடியூப் மூலம் 3ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகிறார். மங்கா ராணி என்ற இந்த ஆசிரியை கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றுவது ராஜமுந்திரி நகராட்சி உயர்நிலைப்பள்ளியில்.

படித்தது பி.எஸ்.சி பி.எட். கம்ப்யூட்டர் பாடத்தில் பி.எட் படித்துள்ள இவர் பாடம் நடத்துவது 3ம் வகுப்பு மாணவர்களுக்கு. இதற்காக இவர் தொடங்கியுள்ள யூடியூப் சேனலுக்கு 44 ஆயிரம் சந்தாதாரர்கள் உள்ளனர். அவர்கள் அத்தனை பேரும் சின்னஞ்சிறு பள்ளி மாணவ, மாணவிகள். விடுமுறையில் வீட்டில் இருக்கும்போது கூட படிக்கனுமா என கேட்கும் சிறுவர்கள் மத்தியில் இவரது சேனல் விரும்பிகள் புதிய வீடியோ எப்போது வெளியிடுவார் என காத்திருக்கின்றனர்.

வழக்கமாக பள்ளி வேலை நாளில் கூட வாரத்தில் 3 நாட்கள் வீடியோக்களை கொண்டு வகுப்புகளில் பாடம் நடத்துவார் மங்கா ராணி. இந்த வீடியோவில் ஆங்கில பாடல்கள் (ரைம்ஸ்), கடினமான கணக்குகளை எளிதாக புரிய வைக்கும் வகையில் கழித்தல், கூட்டல் கொண்டவையாகவே இருக்கும். அந்த பாடலை வகுப்பில் வீடியோ மூலம் ஆசிரியை காண்பிக்கும் போது குழந்தைகளும் கோரசாக பாடுவது தான் மங்கா ராணிக்கு கிடைத்த வெற்றி.

கடந்த 2012ல் வீடியோ மூலம் கற்பிக்கும் பணியை தொடங்கிவிட்டாலும் கொரோனா காலத்தில் அவரது யூடியூப் சேனலுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு முறை வீடியோவில் ஒளிபரப்பு செய்யப்படும் பள்ளி பாடங்களை அடுத்த வகுப்பில் அந்த சின்னஞ்சிறு குழந்தைகள் மனப்பாடமாக சொல்லிவிடுகிறார்கள். “கூட்டுக்குடும்பத்தில் இருந்து வந்ததால் என்னால் குழந்தைகளின் தேவையை புரிந்து கொண்டு அதற்கேற்ப பாடம் தொடர்பான வீடியோக்களை உருவாக்கி வருகிறேன்.

இதனால் நான் பெரும்பாலும் கரும்பலகையில் எழுதுவதை விட வீடியோவாக எப்ப டீச்சர் போடுவீங்க என கேட்கும் குழந்தைகள் தான் அதிகம். நான் கணினி பட்டப்படிப்பு முடித்துள்ளதால் இந்த யூடியூப் சேனலை கையாள்வது எளிதாக உள்ளது. இணைய தளத்தில் பல தகவல்கள் கொட்டிக்கிடந்தாலும் அதை மாணவர்களுக்கு எளிமையாக கொண்டு செல்வது எப்படி என யோசித்ததால் தான் இந்த யூடியூப் சேனலை என்னால் வெற்றிகரமாக நடத்த முடிகிறது.

மேலும் 41 பேர் படிக்கும் எனது வகுப்பில் மாணவர்கள் வருகை பெரும்பாலும் 40க்கு குறையாது என்கிறார் மங்கா ராணி. அரசு பணியை செய்தோமா சம்பளம் வாங்கினோமா என்று இல்லாமல் மாணவர்களின் அறிவுக்கு தீனி போடும் மங்கா ராணி உண்மையிலேயே அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார் என்பதே உண்மை.

கோமதி பாஸ்கரன்

மகளிர் தின வாழ்த்துகள்

மகளிர் தின வாழ்த்துகள் Womens-Day-Wishes-2019-2-1

மகளிர் தின வாழ்த்துகள் Womens-Day-Wishes-2019-1
மகளிர் தின வாழ்த்துகள் JHg5BnnNQp2q3W7nouJr+Womens-Day-Wishes-2019-3

மகளிர் தின வாழ்த்துகள் WC8IiPHxQ4aZXzIgyTvw+Womens-Day-Wishes-2019-5
மகளிர் தின வாழ்த்துகள் WR_20200308051146


யானைகளை அடக்கும் கும்கிப் பெண்

PRABAHT

யானை வரும் போது கையில் அங்குசத்துடன் வரும் ஆண் பாகன்களைப் பார்த்து இருப்போம். பெண் ஒருவர் அங்குசத்துடன் வரும் அரிய காட்சியை அசாம் மாநிலத்தில் பார்க்க முடிகிறது.

அந்த பெண்ணின் பெயர் ஃபர்பாடி பர்வா. நம்ம ஊர் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் இவர் கும்கிப் பெண். 60 வயதை எட்டிய நிலையிலும் அத்தனை சுறுசுறுப்பாகக் காட்சி தருகிறார். வெயில், மழை என கடின உழைப்பினால் அவர் முகத்தில் விளைந்த சுறுக்கங்கள் முகவரிகளாகக் காட்சிதருகின்றன. இனி ஃபர்பாடி பர்வா பேசுகிறார்: 


“காட்டு யானை என்றால் யாராக இருந்தாலும் பயந்து ஓடிவிடுவார்கள். அந்தக் காட்டு யானைகளை அடக்கி, நாம் சொல்வதை கேட்க வைப்பது தான் என்னுடைய பிரதான வேலை என்று அவர் சொல்லும் போது முகம் இறுக்கமாக இருந்து வார்த்தைகள் மென்மையாக வந்து விழுகின்றன.

இது எங்கள் பரம்பரைத் தொழில். அப்பா சந்திர பர்வா சர்வதேச அளவில் யானை பயிற்சியாளர். அவரைக் கண்டாலே காட்டு யானைக் கூட்டம் தலைதெறிக்க ஓடும். யானை பலத்திற்கு நிகரானவர் கிடையாது அவர். ஆனால் எத்தனை யானைகள் வந்தாலும் அத்தனையையும் அடக்கி ஆளக்கூடிய அசாத்திய சக்தியும் தைரியமும் படைத்தவர்.


நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது பாடங்களில் முழு அக்கறை செலுத்திப் படிக்க மாட்டேன். யானைகளுடன் தான் அதிகம் இருப்பேன். பரீட்சை எழுத மட்டுமே பள்ளிக்குப் போவேன். வருடத்திற்கு ஆறு, எட்டு மாதங்கள் காட்டுக்குள் அப்பாவுடன் இருப்பேன்.

சிறு வயதில் நான் பொம்மைகளுடன் விளையாடியதில்லை. யானை குட்டிகளுடன் தான் விளையாடுவேன். அம்மா-அப்பா இருவரும் என்னைக் கட்டாயப்படுத்திக் கல்லூரியில் சேர்த்தார்கள். ஒரு வழியாகப் படிப்பை முடித்தேன். 


முதல் அனுபவம் !


அப்போது எனக்கு பதினைந்து வயது. அப்பா யானை பிடிப்பதைப் பார்த்து இருக்கிறேன். அவர் ஊக்கம் தரவே இந்த வேலையில் இறங்கினேன். மிகவும் ஆபத்தான வேலைதான். ஆனால் மனதில் அசாத்திய துணிச்சல் உண்டு. ஒரு யானையின் மீது உட்கார்ந்து கொண்டு, 20 கிலோ எடையுள்ள சணல் கயிற்றில் ஒரு முடிச்சுப் போட்டு, அதைக் காட்டிற்குள் இருக்கும் யானைக் கூட்டத்தின் மீது வீச வேண்டும்.

சணல் முடிச்சு எந்த யானையின் மீது விழுகிறதோ அது சிக்கிக் கொள்ளும். அது தன்னுடைய முழுப் பலத்தையும் பிரயோகித்துத் தப்பிக்க முயலும்போது ஏற்கெனவே நான் உட்கார்ந்திருக்கும் பழக்கப்பட்ட யானையும், யானைப் பாகனும் சேர்ந்து, முடிச்சை இறுக்க, யானையைத் தப்பிக்க விடாமல் செய்து, அந்த யானையைப் பிடித்துவிடலாம். இப்படியாக இதுவரை ஆயிரம் யானைகளைப் பிடித்து இருக்கிறேன்.


யானை பிடிக்கக் காட்டுக்குள் செல்லும்போது, உயிரோடு திரும்பி வருவது என்பது உத்தரவாதம் இல்லை. அதுவும் காட்டு யானைகளிடம் தப்பித் தவறி சிக்கி விட்டால் காலால் மிதித்தே கொன்றுவிடும்.

ஒருமுறை, இரு பெண் யானைகள், என்னைத் தாக்க அருகில் ஓடிவந்தன. நல்லவேளையாக, பழக்கப்பட்ட யானைகள் சில என் பக்கத்தில் இருந்ததால் அவைகள் என்னைக் காப்பாற்றின.


காட்டு யானைகளைப் பிடித்து வந்த பிறகு, முதலில் அளிக்கப்படும் பயிற்சி, நான்கு உத்தரவுகளுக்குக் கீழ் படிவதுதான். “நில்… முன்னே போ… பின்னே போ… திரும்பு’ போன்றவைதான் . பழக்கப்பட்ட இரு யானைகளுடன், ஒரு பிடிபட்ட யானையைக் கயிற்றால் கட்டி, அதைப் பழக்குவோம். இரண்டு வாரங்கள் வரை அடம்பிடிக்கும். அதன் பிறகு வழிக்கு வந்துவிடும். 


அது முரண்டு பிடித்தாலும் அதனுடன் தொடர்ந்து பேசப் பேச அது நம்முடைய பாஷையை பழகிக் கொள்ளும். பிடிபட்ட யானையோடு பல நாட்கள் இரவும், பகலும் பேசி, அதைச் சமாதானப்படுத்த வேண்டும். உன்னைப் பாதுகாக்க நான் இருக்கிறேன்.

உன்னை நன்றாகக் கவனித்துக் கொள்வேன். சாப்பாடு தருகிறேன் என்று மனிதர்களிடம் பேசுவது போல் அன்பான வார்த்தைகளை யானைகளிடம் தொடர்ந்து பேச வேண்டும். ஒரு கட்டத்தில் குழந்தையைப் போல நம் சொல்பேச்சுக் கேட்கும்.

வருமானம் !
அசாமில் தேயிலை தோட்டங்கள் அதிகம். அவற்றைக் காட்டு யானைகள் நாசம் செய்து விடும். தோட்டங்களைப் பாதுகாக்கும் பணியை அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் எங்களைப் போன்றவர்களிடம் வழங்குவார்கள்.

காட்டு யானைகள் தோட்டங்களை நாசம் செய்து விடாமல் பாதுகாக்க வேண்டும். அதற்குப் பழகிய யானைகளை வைத்துக் கொண்டு இந்தப் பணிகளைச் செய்வோம். அதற்கான கூலி கிடைக்கும். யாருடைய தோட்டங்களைப் பாதுகாக்கிறோமோ அவர்களே எனக்கும், யானைக்கும் சாப்பாடு தந்து விடுவார்கள். 


சிறுவயதில் இருந்தே கரடுமுரடான பணி செய்து பழகிவிட்டேன். எனக்கு மென்மையான வேலை எதுவும் செய்யத் தெரியாது. எனக்கு இந்த யானைகள்தான் குடும்பம். இந்த ஊர் மக்கள்தான் என் உறவு. எனக்கென்று வேறு யாருமில்லை.” மனதில் இருப்பதைப் பட்டென்று சொல்லிவிட்டு, “வா டா ராஜா’ என யானை மீது ஏறிச் செல்கிறார் ஃபர்பாடி பர்வா.


-ராஜன்

மகளிர்மணி

தோழியுடன் “கேட் வாக்’ செய்த சிந்து..!

sindhu

இறகுப் பந்தாட்ட உலகப் போட்டியில் தங்கப் பதக்கம்
வென்ற பி. வி. சிந்து இந்தியா வந்ததும் பிரதமர்
மோடியைச் சந்தித்துப் பாராட்டு பெற்றார்.

அடுத்தபடியாக ஆந்திர ஆளுநர் ஏற்பாடு செய்திருந்த
பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டார்.

“முதலில் வீட்டிற்குப் போய் சாப்பிட்டுவிட்டு எல்லாத்தையும்
மறந்து நல்லா தூங்கணும்’ என்று சொன்ன சிந்து அப்படி
செய்ய முடியவில்லை. அடுத்தடுத்து வரிசையாக வந்து நின்ற
நிகழ்ச்சிகள் சிந்துவை பிசியாக்கிவிட்டன. தூங்கும் முடிவை
சிந்து மூலையில் தூக்கிப் போட்டார். வேறு வழி ?

சிந்து கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று மட்டும்
வித்தியாசமாக அமைந்துவிட்டது. சிந்துவின் தோழியான
டிசைனர் க்ஷியா பூபால்ஸ் ஏற்பாடு செய்திருந்த குளிர்கால
ஆடை அலங்கார அணிவகுப்பு விழாவில் வித்தியாசமான
உடை அணிந்து சிந்து மேடையில் தோழியுடன்

“கேட் வாக்’ நடந்தார். எல்லாம் தோழிக்காக.


  • அங்கவை
    மகளிர்மணி

‘நான் கூச்சம் நிறைந்த பெண்..’ – அமிதாப்பச்சன் மகள் மனந்திறக்கிறார்

‘நான் கூச்சம் நிறைந்த பெண்..’ - அமிதாப்பச்சன் மகள் மனந்திறக்கிறார்

ந்தி சீனியர் ஸ்டார் அமிதாப்பச்சனின் வாரிசுகளில் நடிகர் அபிஷேக்பச்சனை அறிந்த அளவுக்கு அவரது புதல்வி ஸ்வேதா பச்சனை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், பேஷன் டிசைனர், எழுத்தாளர் என்று தனக்கென ஒரு தனி அடையாளத்தை வளர்த்துக்கொண்டிருப்பவர், ஸ்வேதா.


அவரது பேட்டி:


ஆடைகள் வடிவமைப்பது, எழுதுவது இரண்டில் உங்களுக்கு கடினமானது எது?


ஆடைகள் வடிவமைப்பதுதான் கடினம். காரணம், நான் அதற்கான பயிற்சி பெற்றவள் இல்லை. ஆனால், நான் என் வாழ்க்கை முழுவதும் அவ்வப்போது எழுதிக்கொண்டே இருந்திருக்கிறேன். நமக்குப் பொருத்தமான ஆடையை அணிந்து பார்த்து தேர்வு செய்வது இயல்பானது. ஆனால், மற்றவர்களுக்கான ஆடைகளை, அவர்கள் உடல் வகை, நிறத்தை மனதில் கொண்டு வடிவமைப்பது கடினமானது. நான் மோனிஷா சிங்குடன் இணைந்து ஆடை வடிவமைப்பு தொழிலில் இறங்கியிருக்கிறேன். இத்துறையில் 28 ஆண்டுகளாக இருக்கும் அவர், அருமையான ஆசிரியை. அவர் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறார், கைகொடுத்திருக் கிறார்.


இரண்டு குழந்தைகளுக்குத் தாயான நீங்கள் இதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?


எனக்கு 44 வயது. 23 வயதிலேயே குழந்தைகள் பெற்றுவிட்டேன். இன்று அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டார்கள். அவர்கள் என்னை சார்ந்திருப்பதில்லை. அதனால் நான் அதிர்ஷ்டசாலி. நான் ஒரு வழக்கமான இல்லத்தரசிதான். குழந்தைகள் இருவரும் பெரியவர்களாகி வெளியே சென்றுவிட்டபிறகு நானும் வீட்டைத் தாண்டி காலடி வைத்து, நான் விரும்புவதையும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.

ஆனால் இப்போதும் அவர்கள் வீட்டுக்கு வந்தால், நான் ஒரு வழக்கமான அம்மாவாகி விடுவேன்.


உங்கள் ஆடைகளுக்கான விளம்பர போஸ்டர்களில் உங்களுடன் உங்கள் மகள் நவ்யாவும் தோன்றுகிறார். ஆடை வடிவமைப்பில் அவர் உங்களுக்கு உதவுகிறாரா?


நவ்யா தற்போது நியூயார்க்கில் இருக்கிறாள். அவள் பேஷன் ஆடைகளில் அதிக ஆர்வம் உள்ளவள். அவள் இந்தியாவுக்கு வரும்போதெல்லாம், ஏதாவது வித்தியாசமாக அணிந்து வருவாள். அதைப் பார்த்து நான் ‘வாவ்’ என்பேன்.

ஆடை வடிவமைப்பில் நவ்யா எனக்கு உதவுகிறாள் என்றோ, அவள் அணியும் ஆடைகளின் தாக்கம் எனது வடிவமைப்பில் இருக்கிறது என்றோ கூற மாட்டேன். ஆனால் இந்தக் காலத்துப் பசங்க எந்த மாதிரி ஆடைகளை, பிராண்ட்களை விரும்புகிறார்கள் என்பதை நவ்யா மூலமாகத் தெரிந்துகொள்கிறேன்.


நீங்கள் உங்கள் மகளிடம் இருந்து நகை மற்றும் அலங்கார பொருட்கள் எதையாவது வாங்கி பயன்படுத்துகிறீர்களா?
இல்லை, அவள்தான் என்னிடம் இருந்து அதிகம் எடுத்துக்கொள்வாள். சிலசமயங்களில் நான் எனது அணிகலன் பெட்டியைத் திறந்தால் சிலது காணாமல் போயிருக்கும். நான் உடனே அதை நவ்யாதான் எடுத்திருப்பாள் என்று புரிந்துகொள்வேன்.

ஆனால் அதை அவளிடம் இருந்து திரும்பி வாங்கிவர வேண்டும் என்றால் நான் மூன்று விமானம் பிடிச்சு போகணும். திருப்பிக் கொடுப்பதற்கு அவளும் கூட அதே காரணத்தை சொல்லலாம். ஆனால் அவளோ, ‘மம்மி… நான் போட்டுப் பார்த்தேன்… நல்லாயிருந்துச்சு… அப்படியே நைசா கிளம்பிவந்துட்டேன்’ என்பாள்.
நீங்கள் உங்கள் பெற்றோரின் ஆடை, அணிகலன்களை அணிந்திருக்கிறீர்களா?
நான் எப்போதும் அம்மாவிடம் இருந்துதான் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

நான் டெல்லியிலும் மும்பையிலும் மாறி மாறி வசிக்கிறேன். சிலநேரங்களில் நான் மும்பையில் வெளியே செல்ல நினைக்கும்போது சரியான ஆடை இருக்காது. அதனால் அம்மாவிடம் இருந்து கடன் வாங்கி, ‘அட்ஜஸ்ட்’ செய்து அணிந்துகொள்வேன்.

உடற்பயிற்சி வேளைகளுக்கு அப்பாவின் டி-ஷர்ட்களை வாங்கிக் கொள்வேன். அவற்றில் சில எனது கால் முட்டி வரை இருக்கும். ஆனால் அது எனக்கு வசதியாகவே தோன்றும்.
இப்போதும் அழகாக ஆடை அணியக்கூடியவர்களில் உங்கள் தந்தை குறிப்பிடத்தக்கவர். அவரது ‘ஸ்டைல் சென்ஸ்’ பற்றி உங்கள் கருத்து?


அவர் புதுப்புது வண்ணங்களை அணிந்து பார்ப்பார். ஒருவர் அணிந்திருக்கும்போது கண்றாவியாகத் தோன்றும் ஆடை கூட அப்பா அணிந்ததும் அழகாகிவிடும். அவரிடம் ஏதோ இருக்கிறது. ஊதா நிற சூட் கூட அப்பா அணிந்தால் கலக்கலாக இருக்கும்.
எழுத்து என்பது உங்கள் குடும்பத் திறமை. அது உங்களிடமும் வெளிப்பட்டபோது அப்பா என்ன சொன்னார்?


எழுத்து எங்கள் குடும்பப் பாரம்பரியம் என்பதால், நான் எழுதுவதை அறிந்தபோது அப்பா மிகவும் உற்சாகமாகிவிட்டார். எங்கள் தாத்தா ஒரு நல்ல எழுத்தாளர். நமது குடும்பத்தில் தமது பக்கத்தில் இருந்து ஒருவர் புத்தக வெளியீடு வரை போயிருக்கிறாரே என்று அப்பா, என்னை நினைத்து சந்தோஷப்பட்டார்.
உங்கள் சகோதரர் அபிஷேக்கும் கவிதை எழுதுவதாக ஒருமுறை கூறினாரே?


அபிஷேக் கவிதை எழுதுகிறானா? அவன் என்னிடம் காட்டியதே இல்லையே! இப்போதே நான் அவனிடம் சென்று, அவன் எழுதிய கவிதையை காட்டச்சொல்லப்போகிறேன்.
ஒருவேளை அவர் விளையாட்டுக்காக அப்படிச் சொல்லியிருக்கலாம்?


இல்லை… இல்லை. அவன் கவிதை எழுதுகிறேன் என்று சொன்னால் நிச்சயம் எழுதியிருப்பான். அதை யாரிடமும் காட்டாமல்தான் மறைத்திருக் கிறான். தற்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது! (சிரிக்கிறார்).


நீங்களும் உங்கள் கணவர் நந்தாவும் சினிமா பாரம் பரியத்தில் வந்தவர்கள். எனவே உங்கள் குழந்தைகளை சினிமாவுக்கு அனுமதிப்பீர்களா?


நிச்சயமாக மாட்டேன். முதலில் அவர்கள் படிப்பை முடிக்கட்டும், சொந்தமாக முடிவெடுக்கும் நிலையை எட்டட்டும். அதன் பிறகு பார்க்கலாம்.


ஆனால் உங்களுக்கு சினிமா ஆசை இருந்ததா?
எனக்கு சினிமாவுக்கான விருப்பமோ, திறமையோ, தோற்றமோ கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக, நான் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவள்.


புன்னகையுடன் சொல்லி முடிக்கிறார், ஸ்வேதா பச்சன்.

தினத்தந்தி

கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன?!

கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன?! 3

‘ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இல்லை’ என்பார்கள். 
அதேபோல் மனிதர்களிலும் ஒவ்வொருவரும் 
ஒவ்வொருவிதமான உடலமைப்பைக் 
கொண்டிருக்கிறார்கள். உயரம், குரல், எடை, தலைமுடி, 
நிறம் என ஒவ்வொருவருக்கும் பல்வேறு வித்தியாசங்கள் 
இருக்கின்றன. 

இதில் ஆரோக்கியமான நபர் என்பதை உருவத்தின் 
அடிப்படையில் எல்லாம் சொல்லிவிட முடியாது. ஓரளவு 
கணிக்கலாம்… அவ்வளவுதான்! 

விஷயத்துக்கு வருவோம். 

உடல் பருமன் என்பது தவிர்க்க வேண்டியது, 
பல நோய்களை வரவழைக்கக் கூடியது என்று 
மருத்துவர்கள் ஆலோசனை சொல்லி 
வருகிறார்கள் என்பது உண்மைதான். 

கட்டான உடலமைப்பைப் பராமரிக்க வேண்டும் என்ற 
விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சொல்லப்பட்ட 
மருத்துவ ஆலோசனை, எதிர்மறை பிரசாரமாக 
சமீபகாலங்களில் மாறிவிட்டது. 

குண்டாக இருப்பது ஆபத்து என்ற எண்ணம் மனதில்
பதிய வைக்கப்பட்டுவிட்டதால் பலருக்கும் தங்களது 
உடல் பெரும் பிரச்னையாக உருவாகிவிட்டது. 

எடையைக் குறைக்க வேண்டும் என்று சாப்பிடாமல் 
இருப்பது, ஃபிட்னஸ் பற்றிய புரிதல் இல்லாமலேயே 
உடற்பயிற்சிகள் செய்ய முயற்சிப்பது, 
மன உளைச்சலுக்கு ஆளாவது என்று தற்போது பலரும் 
அவதிப்பட்டு வருகிறார்கள். 

ஒல்லியாக இருப்பதுதான் ஆரோக்கியமா? 
குண்டாக இருப்பவர்கள் எல்லோருமே நோயாளிகளா? 
இதற்கு என்ன செய்ய வேண்டும்?

உணவியல் நிபுணரும், உடற்பயிற்சியாளருமான 
சாதனா ராஜ்குமாரை தொடர்பு கொண்டோம்…

‘‘ஒல்லியாக இருப்பவர்கள் எல்லோரும் 
ஆரோக்கியமானவர்களும் இல்லை. குண்டாக 
இருப்பவர்கள் எல்லாரும் நோயாளிகளும் இல்லை. 

உடல் பருமனாக இருப்பவர்களும் சுறுசுறுப்பாக எல்லா 
வேலைகளையும் செய்கிறார்கள். அவர்களால் நன்றாக 
மூச்சுவிட முடியும். உடலும் நல்ல வலிமை, ஸ்டாமினா
மற்றும் நெகிழ்ச்சித் தன்மையோடு இருக்கும். 

மூட்டுவலி, இடுப்புவலி, முதுகு வலி என உடலில் 
எந்தவிதமான பிரச்னையும் இல்லாமல் 
ஆரோக்கியமாகவே இருப்பார்கள். ஏனெனில், குழந்தைப்
பருவத்திலிருந்தே அவர்களது உடல் பருமனுக்கேற்றவாறு 
உடல் தகவமைத்துக் கொண்டுவிடும். 

எனவே, குண்டாக இருப்பது பிரச்னை அல்ல. ஒல்லியாக 
இருந்துவிட்டு குண்டாக ஆரம்பிக்கும்போதுதான் 
அது மருத்துவர்கள் சொல்வதுபோல் கவனத்துக்குரியதாகிறது. 

ஒல்லியாக இருப்பவர்கள் உடலிலும் எத்தனையோ 
பிரச்னைகள் இருக்கும். அவர்களுக்கும் கொலஸ்ட்ரால் 
இருக்கலாம். நன்றாக வளைந்து நெளிந்து வேலை 
செய்ய முடியாது. மூச்சு வாங்கும். 

நாம்தான் ஒல்லியாக இருக்கிறோமே உடற்பயிற்சி, 
உணவுகட்டுப்பாடு எல்லாம், நமக்கெதற்கு என்ற மனநிலை.’’

குறிப்பிட்ட வயதுக்கு மேல் உடல் எடை அதிகரிக்க காரணம் 
என்ன?

‘‘சிறு வயதில் விளையாட்டு, நடனம் என சுறுசுறுப்பாக 
இருந்துவிட்டு, பருவ வயதிற்குப்பிறகு திடீரென்று 
அதையெல்லாம் நிறுத்திவிட்டு, இயக்கமே இல்லாத 
நிலைக்கு மாறும்போது உடலில் கொழுப்பு சேர்ந்து 
எடைபோட்டுவிடுவார்கள்.

25 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு வருடமும், மெட்டபாலிச 
விகிதம் 3 சதவீதம் கூடிக்கொண்டே போகும். 
இந்த நேரத்தில்தான் இயக்கமற்ற வாழ்க்கை முறை,
அதிக கலோரிகள் உள்ள உணவை எடுத்துக் கொள்வது, 
நண்பர்களுடன் அடிக்கடி வெளியே சாப்பிடுவது, 
மதுப்பழக்கம் போன்ற எல்லாமும் சேர்ந்து கொண்டு, 
அவர்களை அறியாமலேயே எடை கூடிவிடுகிறது. 

நம் நாட்டு திருமணங்களிலேயே தொடங்கிவிடுகிறது 
உடல் எடை கூடும் வைபவம். புதுமணத் தம்பதிகள் 
விருந்து விழாக்களில் எடுத்துக் கொள்ளும் அதிக 
கலோரி உணவுகள் ஒரு மாதத்திலேயே அவர்கள் 
எடையை கூட்டிவிடும். 

அடுத்து, கர்ப்ப காலம், தாய்மைப்பருவம் என்று 
ஒன்றன்பின் ஒன்றாக வரிசை கட்டி, எல்லாம் முடிந்து 
திரும்பிப் பார்க்கும் போது, 35 வயதைக் கடந்துவிடும். 
அப்போதுதான் பெண்கள் அடடா… நாம் பெருத்து
விட்டோம் என்பதையே முதன் முதலில் உணர 
ஆரம்பிப்பார்கள். 

ஆண்களும் உடல் வேலைக்கு முக்கியத்துவம் 
தருவதில்லை.’’

பெண்களின் உடல் எடை அதிகரிப்பில் ஹார்மோனுக்கு
பங்கிருக்கிறதா?

‘‘பெண்களைப் பொறுத்தவரை, மாதம் முழுவதும் சேர்த்து 
வைத்த எனர்ஜியை மாதவிடாய் சுழற்சி தருணத்தில் 
உதிரப்போக்கில் இழந்து விடுகிறாள். 

மாதவிடாய் சுழற்சிக்கு முன் ஏற்படும் மன அழுத்தம், 
திருமணத்திற்குப் பிறகு புது சூழல், அதனால் வரும் 
மன அழுத்தம் போன்று Emotional Eating நிலைக்கு 
உள்ளாகிறார்கள். 

அதனால் உடல் எடை கூடுவதற்கு ஹார்மோனை 
குறை கூறக் கூடாது. கர்ப்பிணியாக இருந்தால் வீட்டில் 
உள்ள பெரியவர்கள் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் 
சேர்த்து சாப்பிடச் சொல்வார்கள். அப்படியொன்றும் 
கிடையாது. 

சாதாரணமாக எப்பொழுதும் போல் சாப்பிடலாம். 
கீரை, காய்கறிகள், பழங்கள் என சத்துள்ள உணவை 
தாய் சாப்பிட்டால் குழந்தை தானாகவே தனக்கு 
வேண்டிய சத்தை ஒரு ஒட்டுண்ணிபோல உறிஞ்சிக் 
கொள்ளும். 

அளவுக்கு அதிகமாக உணவையும் எடுத்துக் கொண்டு, 
கூடவே ரெஸ்ட் எடுக்கிறேன் என்று எந்த வேலையும் 
செய்யாமல் உட்கார்ந்திருந்தால் அந்தப் பெண்ணிற்குதான் 
உடல் எடை கூடும்.

கர்ப்பமாக இருக்கும்போதும் சரி, குழந்தை பெற்ற 
பின்னரும் சரி பெண்கள் மூச்சுப்பயிற்சி, மிதமான 
பிஸியோதெரபி பயிற்சிகள் செய்ய வேண்டும். 

உணவு குளுக்கோஸாக மாற ஆக்ஸிஜன் தேவை. 
ஒவ்வொரு செல்லிலும் குளுக்கோஸ் எனர்ஜியாக 
மாறுவதற்கு மூச்சை நன்றாக இழுத்துவிடும்போது 
தானாக எடையிழப்பு ஏற்படும்.

மேலும், பெண்களுக்கு, மெனோபாஸ் நிலையில் 
ஈஸ்ட்ரோஜன் சுரப்பில் மாற்றம் வரும்போது 
கொஞ்சம் எடை கூடும். அதைக்கூட, 
அதற்குத் தகுந்தாற்போல் உடற்பயிற்சிகள் செய்து 
சரி செய்துவிடலாம்.

மற்றபடி, எனக்கு தைராய்டு இருக்கிறது, 
PCOD பிரச்னை இருக்கிறது, நான் மெனோபாஸ் 
நிலையில் இருக்கிறேன் என்றெல்லாம் ஹார்மோன் 
மேல் பெண்கள் எல்லோரும் பழியை போட்டு
விடுகிறார்கள். 

கண்டிப்பாக கிடையாது. இப்போதெல்லாம்
அதற்கெல்லாம் தனிப்பட்ட யோகா பயிற்சிகள் 
இருக்கின்றன அவற்றை செய்யலாம்.’’

மரபணுவுக்கும் உடல்பருமனுக்கும் தொடர்பு உண்டா?

‘‘அதுவும் இல்லை. ஒருவரின் குடும்ப வழக்கம் 
வேண்டுமானால் காரணமாக இருக்கலாம். உதாரணத்திற்கு, 
நிறைய எண்ணெயும், நெய்யும் சேர்த்து சமைக்கும் வழக்கம் 
இருக்கலாம். அல்லது அதிகமாக இனிப்பு சேர்த்துக் 
கொள்ளும் வீடாக இருக்கலாம். 

இதெல்லாம் ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லோருமே 
உடல்பருமனாக இருப்பதற்கான காரணங்களாக இருக்குமே
தவிர, ஜீன்கள் காரணமாக இருக்க முடியாது.’’

உணவுக்கட்டுப்பாட்டு முறைகள் எந்த அளவிற்கு ப
யனளிப்பவை?

‘‘ஒருவரின் உடல் எடையை கூட்டுவதற்கும், குறைப்பதற்கும் 
எந்த ஒரு மேஜிக் உணவும் கிடையாது. அப்படி இருந்தால் 
ஒல்லியாக இருப்பவர்களையெல்லாம் குண்டாக்கிவிடலாம். 
குண்டாக இருப்பவர்களையெல்லாம் ஒல்லியாக்கிவிடலாம். 
மெட்டபாலிச விகிதத்தை அதிகரிக்கும் உணவுகள் 
வேண்டுமானால் இருக்கிறது. 

சிலர் காலை உணவை தவிர்ப்பார்கள். காலை உணவை 
தவிர்ப்பதால் ஏற்படும் விளைவுகளைப்பற்றிய ஆராய்ச்சி 
முடிவை வெளியிட்டுள்ளார்கள். 

அப்படி பட்டினி இருப்பதால் உடலில் ஆங்காங்கே 
கொழுப்பு டெபாசிட் ஆகுமே தவிர, உடல் எடையை 
குறைக்க முடியாது. அந்த கொழுப்பை எரிக்க உடற்பயிற்சி 
அவசியம். 

உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் 50:50 விகிதத்தில் 
இருந்தால்தான் முழு பயனை அடைய முடியும்.ஒருவர் 
எந்த வேலையும் செய்ய முடியாமல் படுக்கையில் 
இருந்தாலும், அவர் சுவாசிப்பதற்கும் சிந்திக்கவும் கூட
800 கலோரிகள் தேவைப்படும். 

அதோடு, கடுமையாக வேலை செய்பவர்கள், மிதமான 
வேலை செய்பவர்கள் அல்லது உடல்உழைப்பே இல்லாமல் 
ஏசி அறையில், உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் என 
நம்முடைய வேலைக்குத் தகுந்தாற்போல ஒரு 400 அல்லது 
500 கலோரிகள் கூட்டிக்கொண்டு அதற்கேற்ற உணவை 
எடுத்துக் கொள்ள வேண்டும். 

எப்போது பார்த்தாலும் எதையாவது கொரித்துக் கொண்டே
இருப்பது, அதிக இனிப்பு பண்டங்களை சாப்பிடுவது, 
அப்படி சாப்பிடும் நாட்கள் மட்டுமாவது ரெகுலராக எடுத்துக் 
கொள்ளும் உணவை குறைத்துக் கொள்வார்களா? என்றால் 
அதுவும் இல்லை. 

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நாம் எந்த அளவு 
சாப்பிடுகிறோமோ அந்த அளவிற்கு உடற்பயிற்சி செய்து 
அதை எரித்துவிட வேண்டும்.

‘எனக்கு உடலில் இந்த பிரச்னை இருக்கு, எனக்கு, நேரமே 
இல்லை’. அதனால் நான் எதுவுமே செய்ய முடிவதில்லை’
என்றும் சொல்லக்கூடாது. 

ஜாக்கிங், ரன்னிங், மாரத்தான் என்றெல்லாம் போக வேண்டிய
அவசியமில்லை. எல்லோருமே எளிதில் செய்யக்கூடிய 
குறைந்தபட்ச உடற்பயிற்சியான 20 நிமிட நடைப்பயிற்சியே 
போதும். காலையில் ஒரு 20 நிமிடம் ஒதுக்கி, சிம்பிளாக 
ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை வீட்டிலேயே செய்தால், எந்த 
வலியும் இல்லாமல் சாதாரணமாக வேலைகளை செய்ய 
முடியும். 

உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்றால், 
ஒருநாள் மணிக்கணக்கில் மருத்துவமனைகளில் காத்துக்
கிடக்கும் நிலை ஏற்படும். 

கிட்டத்தட்ட இன்று இளவயதினர் மட்டுமல்லாமல், 
நிறைய நடுத்தர வயதுப் பெண்களும் ஜிம்மில் 
மெம்பர்ஷிப் கட்டி மாங்கு, மாங்கென்று உடற்பயிற்சி 
செய்வது, ‘இதைக்குடித்தால் ஒரே வாரத்தில் உங்கள் 
எடையை 5 கிலோ குறைக்கலாம்’ என்று யூடியூப்பிலும், 
வாட்ஸ்அப்பிலும் வரும் ஆலோசனைகளைப் பார்த்து 
எல்லா கஷாயங்களையும் செய்து குடிப்பது, 

போதாததற்கு அந்த டயட், இந்த டயட் என்று நெட்டில் 
பார்த்துவிட்டு அதையும் முயற்சி செய்வது, இப்படி 
எல்லாவற்றையும் விட்டு வைப்பதில்லை. 

இதையெல்லாம் செய்துவிட்டு, ஒரே மாதத்தில் எடை 
குறைந்திருக்கிறதா என்று, ஆர்வமாக எடை மிஷினில் 
ஏறி நின்றால், அது ஒரு ரவுண்ட் சுற்றி வந்து பழைய 
எடையையே காண்பிக்கும் 

அல்லது ஒரு 50 மிலி கிராம் குறைந்திருக்கும். 
அதைப்பார்த்து மனம் நொந்துபோய் ‘ஜிம்மும் வேண்டாம், 
டயட்டும் வேண்டாம்’ என்று பழையபடி ஆரம்பித்து
விடுவார்கள். 

25 வருடமாக சாப்பிட்டு, வளர்த்த உடலை
2 மினிட் நூடுல்ஸ் மாதிரி, இரண்டே மாதத்தில் குறைப்பது 
என்பது முடிகிற காரியமா? குறைக்கலாம்..
அதை தக்கவைத்துக் கொள்வது சாத்தியமே இல்லை. 

உடற்பயிற்சியின் மூலம் படிப்படியாக குறைப்பதே சரி
சரிவிகித உணவு, தொடர்ச்சியான யானதும், 
ஆரோக்கியமானதுமான வழி.

எல்லா முயற்சிகளிலும் தோல்வி, அதனால் வரும் 
மனஅழுத்தம். பின்னர் மனஅழுத்தத்தினால்
Emotional eating அதைத்தொடர்ந்து உடல் எடை 
அதிகரிப்பு என சங்கிலியாக தொடரும் பிரச்னைகள். 

சாப்பாட்டை மகிழ்ச்சியோடு, ரசித்து சாப்பிடுங்கள். 
அதற்கு ஏற்றாற்போல் உடலுக்கு வேலை கொடுங்கள். 
உடற்பயிற்சி ஒன்றே எடை இழப்புக்கு தாரக மந்திரம். 
பட்டினி கிடப்பதோ, மன உளைச்சலுக்கு ஆளாவதோ 
அல்ல!’’

——————————————

– உஷா நாராயணன்
நன்றி- குங்குமம் டாக்டர்

‘ஹைஹீல்ஸ்’ ஆபத்துகள்


ஜெமினி தனா – இந்து தமிழ் திசை

பென்சில்ஃபிட்  ஜீன்ஸ், இடுப்பைப் பிடிக்கும் ஸ்கர்ட்,  உள்ளே காற்று புகாத அளவுக்கு நெருக்கடியான டீஷர்ட் இதெல்லாம் பேஃஷன் என்று சொல்லும் பெண்கள் தங்களை

வெயிட் பார்ட்டியாக காட்டிக்கொள்வதில் கவலையும் ஹைட் பார்ட்டியாக காட்டிக்கொள்வதில் பெருமிதமும் கொள்கிறார்கள். ஆகவே, ஹை ஹீல்ஸ் செருப்புகளை மட்டும் விட்டுவைப்பார்களா என்ன? இன்று பெரும்பாலான பெண்கள் ஹைஹீல்ஸ் செருப்புகளை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

      வீட்டை விட்டு வெளியே செல்லும் போது  முள்ளும் கல்லும் படாமல் இருக்க காலில் அணிந்துகொள்வதற்காக உருவானதுதான்  காலணி. ஆனால் இன்று உலகமே ஃபேஷன் மயமாயிற்றே!  மாடலிங் பெண்கள் ஃபேஷனாக பயன்படுத்தும் பொருட்களை அன்றாடம் முக்கால்வாசி பேர் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். குறிப்பாக கூர்மையான முனைகளைக் கொண்ட பாயின்டட் ஹீல்ஸ், ஹைஹீல்ஸ்  செருப்புகளை சாதாரணமாகவே பயன்படுத்துகிறார்கள்.  

  ஹைஹீல்ஸ் அணிவதில் 60 சதவீதப் பெண்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் 90% க்கு மேற்பட்ட பெண்கள் முதுகுத்தண்டில் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி, காலில் ஆணி, கால் சுளுக்கு முதலான பாதிப்புகளால் அவதிப்படுகிறார்கள் என்பதை ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

    பெண்கள் ஹை-பை எனும் பெயரில்… நடைக்கும், உடைக்கும் பொருத்தமே ஹை ஹீல்ஸ்தான் என்று வளைய வருவது  பெரிய அளவில் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

      பெரும்பாலான  வீடுகளில் ஆடைகளுக்கு அலமாரி போல ஹை  ஹீல்ஸ் வைக்கவும் ஒரு அலமாரி ஒதுக்கப்படுகிறது. குள்ளமாக இருந்தால் ஹை ஹீல்ஸ் போட்டு உயரமாகக் காட்டலாம். உயரமாக இருந்தால் ஹை  ஹீல்ஸ் போட்டு அழகை இன்னும் கூட்டலாம் என்று யார் சொல்லிக்கொடுத்தார்களோ தெரியவில்லை.

      அழகு என்பது ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டது. ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தும் எதுவுமே  அழகு கிடையாது. ஆரம்பத்தில் ஹைஹீல்ஸ் செருப்புகள் ஏற்படுத்தும் குதிகால் வலியும், கால் சுளுக்கும் கெண்டைக்கால் வலியும், வீக்கமும் புது செருப்பு கடிக்கும் என்பதாகவே நினைத்துக் கொள்கிறார்கள். பிறகுதான், எவ்வளவு பெரிய பின்விளைவுகளைத் தருகின்றன என்பதை உணர்ந்து வேதனைப்படுகிறார்கள்.

குதிகால் உயர செருப்புகளை அணிவது தகுதியை மிகைப்படுத்திக் காட்டும் எனும் தவறான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் இது ஆரோக்கியமான விஷயமல்ல. .

      அதிக உயரம் கொண்ட  ஹைஹீல்ஸ்கள் அணிந்தால் வேகமாக நடக்கும் போது தடக்கென்று கால் நொடிப்பதற்கு, சுளுக்கிக் கொள்வதற்கு, கால் நரம்புகளோ எலும்போ பாதிப்பதற்கு எக்கச்சக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அதுமட்டுமல்ல அவசர காலங்களில் ஸ்லோமோஷனில் கூட ஓடமுடியாது. ஏனெனில் நம் உடலின் மொத்த எடையையும் கணுக்கால் தாங்குகிறது. கீழே விழும்போது  கணுக்கால்  எலும்பில் முறிவு ஏற்பட்டால் நீண்ட நாள்  சிகிச்சை பெறவேண்டியிருக்கும்.

   சாதாரணமாக தட்டையான அல்லது சற்றே உயரமிக்க செருப்புகள் நம் உடலில் எவ்விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாது.  சமநிலையில் நடக்கும் போது எலும்புகளும் மாற்றங்கள் இல்லாமல் இருக்கும். ஆனால் ஹைஹீல்ஸ் அணியும் போது  பாதங்களின் பின்பகுதியான குதிகால் தரையில் படாமல் மேல் நோக்கி நின்றபடி இருக்கும்.  உடல் சமநிலையில் இல்லாத  இத்தன்மையில் உடலில் எலும்பும் அதற்கேற்ப வளைந்து கொடுக்க வேண்டியதாக இருக்கும். அப்போது நமது  உடலின் மொத்த எடையையும் முன்பாதங்கள் தாங்கும்படி இருப்பதால் இயல்பாகவே முன்னோக்கி நடப்போம். இதனால் நமது உடல் எடையும் முன்னுக்கு தள்ளப்படுகிறது.  உடலின் சமநிலை இதனால்  தடுமாறு கிறது. தொடர்ந்து ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டே இருந்தால் கால் சுளுக்கு, கால் ஆணிகள், கொப்புளங்கள் ஏற்படுவதோடு  நம்மையும் அறியா மல் முதுகுத்தண்டிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

   முதுகுத்தண்டு  பாதிப்புகள் நாளடைவில்  அழுத்தத்தை உண்டாக்கி மூட்டு வலியையும் உண்டாக்குகிறது. இயற்கைக்கு மாறாக அதிகமாக வளைவதால் விரைவிலேயே கூன் தோற்றம் உண்டாகும் என்றும் அதிர்ச்சிதருகிறார்கள் மருத்துவர்கள். மேலும்  ஹைஹீல்ஸ் அணியும் போது கால்விரல்கள் இறுகு வதால் அழுத்தம் ஏற்பட்டு சீரான இரத்த ஓட்டம் தடைபடும், குதிகால்களில் உள்ள தசைநார்கள் சுருங்கிவிடும்  என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

     எனக்குத்தெரிந்த பெண்ணுக்கு  கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.  ஃபேஷன் உலகில் புதிய டிரெண்ட் என்ன என்று அவளைத்தான் கேட்போம். அனைத்தையும்  விரல் நுனியில் அப்டேட்டாக வைத்திருப்பாள்.  அவள் அணியும் ஆடை, அலங்காரமும் அதற்குப் பொருத்தமாக அணியும் ஹை ஹீல்ஸ் செருப்புகளையும் ரசிக்க, எங்கள் அபார்ட்மென்ட்டில் ஒரு கூட்டமே உண்டு. அவள் நடக்கும் போது இமைதட்டாமல்  நானும் பார்த்திருக்கிறேன். ’இவ்ளோ பெரிய ஸ்டூலை மாட்டிக்கொண்டு நடக்கிறாளே. எங்கேனும் விழுந்து விடுவாளோ’ என்று ஒரு வித அச்சத்தோடு, பார்த்திருக்கிறேன்.

   ஒருநாள் மகப்பேறு மருத்துவரிடம்  போனபோது அவளும் சிகிச்சைக்கு வந்திருந்தாள். இயல்பாகவே கண்கள் அவளது கால்களைப் பார்த்தது.  பார்த்தேன். சற்றே உயரமான செருப்பை அணிந்திருந்தாள். நலம் விசாரிப்புக்குப் பிறகு அவள் வந்த காரணத்தைத் தெரிவித்தாள்.  உயர்வகையான ஹைஹீல்ஸ்கள் அணிந்ததால்  இடுப்புவலியும் அதைத் தொடர்ந்து கருப்பையில் பாதிப்பும்  ஏற்படும் அளவுக்கு தீவிரமாகிவிட்டதாகவும் தெரிவித்தாள். தற்போது குழந்தை வேண்டி சிகிச்சை பெற்றுவருவதாகக்  கூறினாள்.  எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

    ஹைஹீல்ஸ் அணிவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்ற எச்சரிக்கைகள் பரவி வந்தாலும் வெளிநாடுகளில் உள்ள ரெட்கார்ப்பெட் நிறுவனங்கள், பெண்கள் ஹைஹீல்ஸ் அணிந்து வேலைக்கு வர வேண்டும் என்றே விதிமுறைகளை வகுத்திருக்கின்றன.  

  ”எப்போதாவது ஹைஹீல்ஸ் அணிவதையே  வெறுப்பவள் நான். தினமும் வேலைக்குச் செல்லும்போது அணிய வேண்டுமா” என்று ட்வீட்டில் குமுறியிருக்கிறார் யூமி இஷிகாவா என்னும் விளம்பர மாடல் பெண்மணி. இவர் உருவாக்கிய #kutoo என்னும் ஹேஷ்டேக் பெண்கள் மத்தியில் பிரபலம். பல பெண்கள் ஹைஹீல்ஸ் அணிந்ததால் கால்களில் ஏற்பட்ட  புண்களின் படங்களை அதில் பதிவிட்டிருந்தார்கள்.

   கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல ஹைஹீல்ஸ் தரும்  அதிகப்படியான வலிக்குப்  பிறகே உணர்ந்து புலம்புகிறார்கள்.

   உணர்ந்தால் சரி!

ஆணாதிக்கத்துக்கு இடையில் பெண்களாலும் சாதிக்க முடியும்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

தினமணி மகளிர் தின நட்சத்திர சாதனையாளர் விருது 
வழங்கும் விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த
லலிதா குமாரி, லலிதா தனஞ்செயன், பிருந்தாலட்சுமி, 
அர்ச்சனா, சுதாசேஷய்யன், லட்சுமிமேனன்.
———————————

திரையுலகில் ஆண்கள் மட்டுமே கோலோச்சிய 
கால கட்டத்தில் தடைகளைத் தகர்த்தெறிந்து அசாத்திய 
சாதனை படைத்த மங்கையரை கௌரவிக்க கடமைப்
பட்டுள்ளோம் என தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் 
புகழாரம் சூட்டினார்.

தினமணி நாளிதழ் சார்பில் திரைத்துறையில் சாதனை 
புரிந்த நட்சத்திர மங்கையருக்கு பாராட்டு விழா 
சென்னை கலைவாணர் அரங்கில் வெள்ளிக்கிழமை 
நடைபெற்றது. 

விழாவுக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் 
தலைமை வகித்துப் பேசியது: 

தமிழ் சினிமாவின் நீண்ட நெடிய வரலாற்றில் மகளிரின் 
பங்கு மகத்தானது என்பதை உலகுக்கு பறை
சாற்றுவதற்காகவே தினமணி சார்பில் இந்தப் பாராட்டு 
விழா நடத்தப்படுகிறது. 

திரையுலகில் மட்டுமல்ல, தனி மனித வாழ்க்கையிலும் 
மகளிரின் பங்கு மகத்தானது. 

தாய், சகோதரி, மனைவி, மகள் என்கிற பெண்மையின் 
நான்கு பரிமாணங்களையும் தங்களது நடிப்பாற்றலால் 
நம் கண்முன்னே நிறுத்திய பெருமை திரையுலகில் 
தங்களது நடிப்பால் முத்திரை பதித்த நடிகையருக்கு 
உண்டு.

வரும் ஆண்டுகளிலும் தொடரும்… தினமணி நாளிதழின் 
இணைப்பான மகளிர் மணியின் சார்பில் 1950-ஆம் 
ஆண்டு முதல் 1970-ஆம் ஆண்டு வரையிலான கால
கட்டத்தில் தனி முத்திரை பதித்த 9 திரையுலகத் 
தாரகைகளுக்கு தற்போது பாராட்டு விழா நடைபெறுகிறது. 

அடுத்த ஆண்டு 1960-ஆம் ஆண்டு முதல் முதல் 1980-ஆம் 
ஆண்டு வரையிலும், அதற்கு அடுத்த ஆண்டு 1970-ஆம் 
ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரையிலும் என 20 ஆண்டு 
கால கட்டத்தில் தடம்பதித்த தாரகையர் பாராட்டப்பட 
இருக்கிறார்கள்.
=

ஆண்கள் முன்னால் பெண்கள் நிற்பதே தவறு என்று 
விலக்கி ஒதுக்கப்பட்டிருந்த காலத்தில், ஆண்களுக்கு எந்த 
விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்று தடையை
உடைத்தெறிந்து ஆடவர்களே அதிசயிக்கும் விதத்தில், 
அசாத்திய சாதனை புரிந்த அந்த மகளிருக்கு ரசிகர்கள் 
சார்பிலும் தினமணியின் சார்பிலும் திரையுலகின் சார்பிலும் 
இந்த நேரத்தில் முதல் வணக்கம் செலுத்தக் கடமைப்
பட்டிருக்கிறோம்.

டி.பி.ராஜலட்சுமியைத் தொடர்ந்து எஸ்.டி.சுப்புலட்சுமி, 
எம்.எஸ். சுப்புலட்சுமி, கே.பி.சுந்தராம்பாள், டி.ஏ.மதுரம், 
இங்கே விருது பெறும் வைஜயந்திமாலாவின் தாயார் 
வசுந்தராதேவி, டி.ஆர்.ராஜகுமாரி என்று தங்களது 
நடிப்பாற்றலாலும் இசை, நடனத் திறமையாலும் தமிழ்த் 
திரையுலகில் சூறாவளியை ஏற்படுத்திய அனைவரையும்
இந்த நேரத்தில் நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறோம்.

கடந்த 1950 முதல் 1970-ஆம் ஆண்டு வரையிலான காலகட்ட 
சினிமா பற்றி பேசவோ, எழுதவோ, ஆய்வு செய்யவோ முற்படும் 
எவராலும் அகற்றி நிறுத்த முடியாத அளப்பரிய ஆளுமையாகத் 
திகழ்ந்தவர் நடிகை பானுமதி. 

இன்று இங்கே பாராட்டப்படுவதற்கு பானுமதி, சாவித்ரி, 
வி.என்.ஜானகி, பத்மினி, தேவிகா, மனோரமா, பண்டரிபாய் 
ஆகியோர் நம்மிடையே இல்லை என்கிற குறை இருக்கத்தான் 
செய்கிறது. 

தனிப்பெரும் ஆளுமை ஜெயலலிதா: 

தமிழ்த்திரையுலகில் கால் நூற்றாண்டு காலம் தங்கத் தாரகையாக 
கோலோச்சி, அடுத்த 35 ஆண்டு காலம் அரசியலில் தனிப்பெரும் 
ஆளுமையாக வலம் வந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 

அவருடன் திரையுலகில் இணைந்து நடித்து நெருங்கிப் பழகிய 
9 நட்சத்திர சாதனை மகளிருக்கு இங்கே விருது வழங்கி பாராட்டு 
விழா நடத்தும்போது, அவர் தலைமையேற்கவில்லையே என்கிற 
குறை, விருது பெறும் 9 சாதனை நட்சத்திரங்களுக்கு மட்டுமல்ல 
பலருக்கும் இருக்கும்.

விருதுபெறும் ஒவ்வொருவரும் அவரவர் வகையில் ஆளுமைகள்.
வாழ்க்கை திரைப்படத்தில் தொடங்கி கலையையே தனது 
வாழ்க்கையாக மாற்றிவிட்டிருக்கும் வைஜயந்தி மாலா, நடிப்பின் 
உச்சம் என்று நானிலம் போற்றும் நடிகர் திலகம் 
சிவாஜி கணேசனுக்கும் பானுமதிக்கும் சளைத்ததல்ல என் திறமை
என்று தகுதி பெற்ற செளகார் ஜானகி, 

அமுதைப் பொழியும் நிலவாய் தமிழிலும் தெலுங்கிலும் தனி 
முத்திரை பதித்த ஜமுனா, ஒன்றல்ல இரண்டல்ல, மூன்றுமுறை
தேசிய அளவில் தலைசிறந்த நடிகை என்று ஊர்வசி பட்டம் 
வென்ற சாரதா, 

விண்ணில் பறந்த மங்கை, வண்ணப் படத்துக்கென்றே 
வடிவெடுத்த நங்கை காஞ்சனா, பூம்புகார் மாதவிக்கு உருவம் 
கொடுத்த பேரெழிலாள் ராஜஸ்ரீ, புன்னகைக்குப் பேரரசி,
நடிப்புக்கு இளவரசி, இன்றுவரை எழிலரசி கே.ஆர்.விஜயா, 
ஸ்ரீதரின் மோதிர விரலால் குட்டுப்பட்டு, நாயகியாய் நிலை
பெற்று, தனது நடன நேர்த்தியால் கண்ணில் தெரிகின்ற 
வானத்தைக் கைகளில் கொண்டுவந்த வெண்ணிற ஆடை நிர்மலா, 

அன்றும் இன்றும் என்றும் ரோஜா மலராய் ராஜகுமாரியாய், 
தென்றலெனத் திரையுலகில் வளையவரும் குமாரி சச்சு, 
இவர்களையெல்லாம் பெறுவதற்கு தமிழ்த் திரையுலகம் தவம் 
செய்திருக்கிறது என்றார் கி.வைத்தியநாதன்.

————————- தினமணி

மடம், பயிர்ப்பு என்பது என்ன தெரியுமா?

பெண்களுக்கு முக்கியமாக அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு
என்ற நான்கு குணங்கள் இருக்க வேண்டும் என்பார்கள்.

இவற்றில் அச்சம், நாணம் ஆகியவற்றைப் பற்றிப்
பலருக்குச் சந்தேகம் எழுவதில்லை. ஆனால் மடம், பயிர்ப்பு
என்பவை எதைக் குறிக்கின்றன?

மடம் என்பதற்குக் ‘கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை’
என்று பொருள் கூறுவர். யாரேனும் ஒன்றைச் சொன்னால்
அதைக் கேட்டுக்கொண்டு, அது தனக்குத் தெரிந்திருந்தாலும்
அதைக் காட்டிக் கொள்ளாமல் இருத்தல் அது. ஒருவகை அடக்கம்
அது.

பயிர்ப்பு என்பது பிற ஆடவரைத் தொடும்படி நேர்ந்தால்

உண்டாகும் அருவருப்பு உணர்ச்சி.


தினமணி கதிரில் வெளியானது
தொகுப்பு: கேசி

« Older entries