
பேராசிரியர் ரா.மோகன் எழுதிய, ‘நகைச்சுவை நாயகர்கள்’
நுாலிலிருந்து:
கிருபானந்த வாரியார், எதையும் நகைச்சுவையாக சொல்வதில்
வல்லவர்.
முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது என
கூறுகையில், ‘முருகன், நாம் கேட்டதை எல்லாம் தரும்
வள்ளல். வள்ளல் என்பது ஆண் பால். அதன்
பெண் பால் தான், வள்ளி. ஆக, முருகனின் மனைவி,
அதாவது, வள்ளலின் மனைவி, வள்ளியானார்…
‘அதேபோல், இல்லாள்… இல்லத்தை ஆள்பவள்.
பெண் பாலாகத்தான் குறிப்பிடுகிறோம். இதையே
ஆண் பாலாக குறிப்பிட முடியுமா… அப்படி குறிப்பிட்டால்,
‘இல்லான்’ ஆகி விடுவார்.
பொருள்: எதுவுமே இல்லாதவன் என்பதாகும்.
‘இதனால், மனைவி, இல்லத்தை ஆள்பவள் என்பதை
உணர்ந்து தான், பிச்சைக்காரன் கூட, ‘அம்மா… பிச்சை…’
என்று கேட்கிறான். ‘அய்யா… பிச்சை…’ என, கேட்பதில்லை…
‘நம் புராணங்களில், மன்மதன் உண்டு; அவனை, காமன்
என, அழைப்பர். இவன், காதல் மன்னன். இவனுடைய
அருள் இருந்தால் தான், மனிதர்களுக்கு சிருங்கார
உணர்வே வரும். இவனுக்கு ஏன், காமன் என பெயர்
தெரியுமா… எல்லா மதங்களிலும், நாடுகளிலும் காதல்
தேவன் உண்டு. ஆக, அவன் பொது. இதை ஆங்கிலத்தில்,
‘Common’ என, அழைப்பர். தமிழிலும், காமன். புரிந்ததா?’
என்றார்.
–
——————————–
நடுத்தெரு நாராயணன்
திண்ணை -வாரமலர்