வலையோசை- யுவகிருஷ்ணா

வலையோசை- யுவகிருஷ்ணா Vikata29
வலையோசை- யுவகிருஷ்ணா Vikata30

நன்றி-விகடன்

இவங்க வேற மாதிரி அம்மா!

இவங்க வேற மாதிரி அம்மா! Tamil_News_1_7_2021_19565981627


இடுப்புவலி தாங்காமல் அந்த மாட்டுத் தொழுவத்தில் வந்து விழுந்தாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த இருபது வயது பெண்.“அம்மா” என்று அடிவயிற்றில் இருந்து குரலெடுத்து கதறிய அவளது கதறலை செவிமடுக்க, அக்கம் பக்கத்தில் ஆளரவமே இல்லை.மாட்டுத் தொழுவத்தில் இயேசுநாதர் மட்டும் பிறக்கவில்லை. அவளது மகளும் அங்கேதான் பிறந்தாள்.

குழந்தையை கையில் எடுத்துப் பார்த்தாள். தொப்புள் கொடி தாயையும், சேயையும் இணைத்திருந்தது.வீட்டில் பிரசவம் நடந்திருந்தால் விபரம் தெரிந்தவர்கள் யாராவது பத்திரமாக அகற்றியிருப்பார்கள். உலகம் அறியா அந்த சின்னப் பெண்ணுக்கு என்ன தெரியும்? அருகிலிருந்த கூரான கருங்கல்லை எடுத்து…

இந்த ‘கதை’யை வாசிக்கும்போதே நாடி, நரம்பெல்லாம் பதறுகிறது இல்லையா? கதையல்ல, நிஜம்.மகாராஷ்டிராவின் வார்தா மாவட்டத்தில் இருக்கும் குக்கிராமமான பிம்ப்ரியில், நவம்பர் 14, 1948 அன்று சிந்துதாய் சப்கல் பிறந்தார்.

குழந்தைகள் தினமன்று பிறந்திருந்தாலும், அவர் பெற்றோருக்கு தேவையற்ற குழந்தை.ஒரு குதிரை லாயத்தில் சொற்ப கூலிக்கு பணியாற்றிக் கொண்டிருந்த அப்பா அபிமான்ஜிக்கு அக்குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டுமென்று ஆசைதான். ஆனால் வாழ்க்கை நெருக்கடி அப்படியில்லையே. எல்லோரும் அக்குழந்தையை ‘சிந்தி’ என்றுதான் அழைத்தார்கள்.

‘சிந்தி’ என்றால் மராத்தி மொழியில் ‘கிழிந்த துணி’ என்று அர்த்தம். பெற்றோருக்கு கூடுதல் சுமையாக வந்து பிறந்ததால், அந்த செல்லப் பெயர்.

‘அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு?’ என்பது அம்மாவின் வாதம். ஆனால் அப்பா அபிமான்ஜிக்கோ தன் மகள் படித்து பெரிய ஆள் ஆவாள் என்று நம்பிக்கை. பலகை வாங்கித்தரக்கூட வக்கில்லை என்றாலும் பள்ளிக்கு அனுப்பினார். நான்காம் வகுப்பு வரைதான் படித்தார் சிந்து.அவருக்கு பத்து வயதாக இருக்கும்போது குடும்பத்தினரின், உறவினர்களின் வற்புறுத்தலால் திருமணம் நடந்தது.

கணவர் ஹரி சப்கலுக்கு வயது அப்போது முப்பது.“ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் இரண்டே இரண்டு முக்கியமான நிகழ்வுகள்தான் இருக்கிறது என்று எனக்கு கற்பிக்கப்பட்டது. முதல் நிகழ்வு திருமணம். அடுத்தது மரணம். எனக்கு முதல் நிகழ்வு நடந்து நவர்கான் காட்டுக்குள் இருந்த வார்தா என்கிற ஊருக்கு வாழப்போனேன்” என்று அந்நாட்களை நினைவுகூர்கிறார்

சிந்து.குடித்துவிட்டு வந்து அடிப்பதுதான் ஹரி, சிந்துவோடு நடத்திய பத்து வருட தாம்பத்யம். மூன்று மகன்கள். நான்காவதாக நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது வீட்டை விட்டு, இரக்கமேயின்றி நடு இரவில் அடித்து
துரத்தினார்.

ஒரு பண்ணையாரோடு சிந்துவுக்கு தொடர்பிருந்தது, அவரது குழந்தையைதான் வயிற்றில் சுமக்கிறார் என்று அபாண்டமாக குற்றம் சாட்டினார் ஹரி. அதன் பின்னர்தான் கட்டுரையின் தொடக்கத்தில் வரும் சம்பவம் நடந்தது.குழந்தை பெற்ற பச்சை உடம்புக்காரியாக இருந்த நிலையிலும், கைக்குழந்தையோடு சில கிலோ மீட்டர்களுக்கு வெறும் காலோடு நடந்து அம்மா வீடு போய் சேர்ந்தார் சிந்து. “கணவனோடு வருவதாக இருந்தால் வீட்டுக்குள் கால் வை. இல்லா விட்டால் எங்கேயாவது போய் ஒழி” என்று பிறந்தவீடு தன் பொறுப்பை நிராகரித்தது.

புகுந்த வீட்டுக்கும் போக சாத்தியமே இல்லை என்கிற நிலையில் தற்கொலை உணர்வுக்கு ஆளானார். தண்டவாளத்தில் தலை வைக்க போனபோது புதியதாய் பிறந்திருந்த மழலையின் சிரிப்பு அவர் மனதை மாற்றியது. பிச்சையெடுத்தாவது பிழைக்கலாம் என்கிற எண்ணத்துக்கு வந்தார்.

ரயில்வே பிளாட்ஃபாரங்களில் குழந்தையை தரையில் கிடத்தி உணவுக்காக கையேந்தினார். கால் வயிறு, அரை வயிறு நிரம்பியது.அப்போதுதான் கவனித்தார். தான் மட்டுமே அனாதை அல்ல. ரயில்வே நிலையம் முழுக்கவே அனாதைகளாலும், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளாலும் நிறைந்திருந்தது. ‘பசிக்கிறது’ என்று உச்சரிக்கக்கூட கற்றுக்கொள்ளாத வயது வந்த குழந்தைகளும் கூட அவரோடு பிச்சையெடுத்துக் கொண்டிருந்தது.

“உயிர்வாழ உணவுக்காக தெருவில் பிச்சை எடுக்கும்போதுதான் உணர்ந்தேன். எங்கேயும் போக வழியில்லாத எண்ணிலடங்காதோர் இருக்கிறார்கள். நான் முடிவெடுத்தேன். பிச்சை எடுத்தாவது அனைவரையும் காப்பேன் என்று”1973ல் யாருமற்றவர்களை வயது வித்தியாசமின்றி, பால் வேறுபாடின்றி தத்தெடுக்க ஆரம்பித்தார் சிந்து.

குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு கல்வி, திருமணம் என்று வாழ்க்கையில் நிலைநிறுத்த அத்தனை உதவிகளையும் (யாசகம் பெற்றுதான்) செய்ய ஆரம்பித்தார். வயதானோருக்கு உணவு, மருத்துவ வசதிகள் போன்ற ஏற்பாடுகளை செய்தார்.

இந்த வகையில் இன்றுவரை 1,500க்கும் மேற்பட்டோரை தன் குழந்தைகளாக உருவாக்கி உலக சாதனை படைத்திருக்கிறார் சிந்து. அனைவருமே இவரை ‘மா’ (அம்மா) என்றுதான் அழைக்கிறார்கள். இவரிடம் வளரும் ஒரு குழந்தையைகூட யாருக்கும் இதுவரை தத்து கொடுத்ததில்லை.

ஆனால், தன் சொந்த மகள் மம்தாவை மட்டும் தத்து கொடுத்துவிட்டார். ஏனெனில் குழந்தைகளிடம் காட்டும் பாசத்தில் வேறுபாடு வந்துவிடுமோ என்கிற அச்சத்தில். மகள் மம்தா சப்கல்லும் தாய்வழியிலேயே இப்போது ஆதரவற்றவர்களுக்கு இல்லம் அமைத்து, ‘மா’வுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார்.

‘மா’வின் குடும்பம் எவ்வளவு பெரியது தெரியுமா?இருநூறுக்கும் மேற்பட்ட மருமகன்கள், ஏறத்தாழ நாற்பது மருமகள்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேரன் பேத்திகள். ‘மா’விடம் வளர்ந்தவர்களில் இன்றும் டாக்டர்களும், வழக்கறிஞர்களும், என்ஜினியர்களும் கூட உண்டு.

“இவர்களை வளர்க்க நான் பிச்சைதான் எடுத்தேன். ஆனால் தெருவோரங்களிலும், ரயில்வே பிளாட்ஃபாரங்களிலும் அல்ல. எனக்கு நன்றாக பேசவரும். ஒவ்வொரு ஊராக போய் பேசினேன். பசி என்னை பேசவைத்தது.

எங்களுக்கு பிச்சை கொடுங்கள். நாங்கள் வாழவேண்டும். எங்கள் குழந்தைகள் வளரவேண்டும் என்று மனமுருக கேட்டேன்” என்று வருமானத்துக்கு தான் தேர்ந்தெடுத்த வழியை சொல்கிறார்.

இப்போது இவரது பெயரில் ஆறு ஆதரவற்றோர் இல்லங்கள் நடைபெறுகிறது. அரிய சேவைக்காக ஐநூறுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்றிருக்கிறார். இவரது வாழ்க்கை ‘மீ சிந்துதாய் சப்கல்’ என்கிற பெயரில் மராத்தியில் படமாகி, தேசிய விருதும் வென்றிருக்கிறது.

நன்றி-தினகரன்

வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்


வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட் 530414

எஸ்.ராமகிருஷ்ணன்

பெர்ஷியாவின் புகழ்பெற்ற கதைத்தொகுப்பான
ஆயிரத்தொரு இரவுகளில்தான் ‘அலிபாபாவும் நாற்பது
திருடர்களும்’ கதை இடம் பெற்றிருக்கிறது.

எனது பள்ளி நாட்களில் இப்படம் பார்த்த பாதிப்பில்
கோவில்பட்டியின் கதிரேசன் மலைக்குப் பின்னுள்ள
புலிக்குகையின் முன்பாகச் சிறுவர்கள் ஒன்றுகூடி
‘அண்டா காகசம், அபு காகசம், திறந்திடு சீசேம்’ என்று
கத்தியிருக்கிறோம். ஒரு மந்திரச்சொல்லைக் கற்றுக்
கொள்வதிலும் அதைப் பயன்படுத்துவதிலும்
சிறுவர்களுக்கு உள்ள மகிழ்ச்சி அளப்பரியது.

ஆனால், படத்தில் வருவதுபோல குகையின் கதவு
திறக்கவில்லை. காரணம், குகைக்குக் கதவுகளே இல்லை
என்பதுதான்.

திருடர்கள் முன்புபோல குகையில் வசிப்பதில்லை.
இப்போது நம்மோடு ஒன்றாக நகருக்குள்தானே
வசிக்கிறார்கள். நாற்பது என்றிருந்த திருடர்களின்
எண்ணிக்கை பல்லாயிரம் மடங்கு பெருகியிருக்கிறது
என்பதுதான் வருத்தப்பட வேண்டிய செய்தி.

திருடர்களிடம் திருடுகிற நாயகனைப் பற்றிய கதை
சினிமாவில் எப்போதும் வெற்றியடையக்கூடியது.
இன்று வரை அதுபோன்ற கதைகள் திரும்பத் திரும்பப்
படமாக்கப்பட்டுக்​கொண்டேவருகின்றன.

‘நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென்’ ஓர் சிறந்த உதாரணம்.
பைபிளுக்கு அடுத்தபடியாக ஆயிரத்தோரு இரவுகளின்
கதைகளே அதிகம் திரைப்படமாக்கப்​பட்டிருக்​கின்றன.
எங்கோ அரபு தேசத்தில் சொல்லப்​பட்ட ஆயிரத்தோரு
இரவுகள் கதைத் தொகுப்பி​லிருந்து தமிழில்
‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ மட்டுமல்ல;
‘பாக்தாத் திருடன்’, ‘பாக்தாத் பேரழகி’,
‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ போன்ற பல படங்கள்
உருவாக்கப்பட்டுள்ளன.

பாக்தாத் நகரம் பற்றியோ, அரபுப் பண்பாடு பற்றியோ எதுவும்
அறிந்திராதபோதும் தமிழ் மக்கள் இப்படங்களைக்
கொண்​டாட​வே செய்தார்கள். அதுதான் சினிமாவின் அதிசயம்.

இன்று ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு
பாக்தாத் நகரை அழித்துச் சிதைத்துவிட்டது. ஒரு நகரை
யுத்தம் அழித்துவிடக்கூடும். ஆனால், கதைகளின் வழியே
பதிவான அதன் நினைவுகளை ஒருபோதும் அழிக்க
முடியாது என்பதன் அடையாளமே பாக்தாத்.

பாக்தாத் படங்களைக் கொண்டாடிய தமிழ் மக்கள் ஏன்
பாக்தாத்தின் சமகால அரசியல் மற்றும் யுத்தம் பற்றிக்
கவனமே கொள்ளவில்லை?

1956-ல் மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆர்,
பானுமதி நடித்த ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’
படம்தான் தமிழின் முதல் வண்ணப்படம்.

இதே படம் 1941-ல் கறுப்புவெள்ளையிலும் உருவாக்கப்
பட்டிருக்​கிறது. அப்போது அலிபாபாவாக நடித்தவர்
என்.எஸ்.கிருஷ்ணன்.

அலிபாபா கதைக்கும் திரைப்படத்துக்கும் நிறைய
மாற்றங்கள் உள்ளன. கதையில் அலிபாபா திருமணம்
செய்துகொண்டவன். மார்சியானா ஒரு அடிமைப்பெண்.
திருடர்கள் குகையின் முன்பாக அலிபாபா நின்று
கொண்டு, ‘திறந்திடு சீசேம்’ என்றுதான் சொல்கிறான்.

அதுதான் உலகின் முதல் பாஸ்வேர்ட் என்று நினைக்கிறேன்.

அலிபாபா திருடிய தங்கத்தை எடைபோட்டுப் பார்க்க
சகோதரன் வீட்டில் தராசு இரவல் வாங்குகிறான்.
தராசில் மெழுகை ஒட்டவைத்து அவனது அண்ணி
தங்கக் காசுகளை எடைபோட்டிருப்பதைக் கண்டு
பிடிக்கிறாள்.

இதுவெல்லாம் படத்தில் கிடையாது. கதையில்
கொள்ளையன் அபு ஹுசைன் முன்னால் மார்சி​யானா
வாள் ஏந்தி நடனமாடி தந்திரமாக அவனைக் கொல்​கிறாள்.
இதனால், அவளுக்கே தனது மகனைத் திருமணம் செய்து
வைக்கிறான் அலிபாபா.

இப்படித்தான் அராபிய இரவுக் கதைகளில் வருகிறது.
ஆனால், படத்துக்காகச் செய்த மாற்றங்களில்
முக்கிய​மானது. மார்சியானாவை அலிபாபாவின்
காதலியாக்கியது.

‘மாசிலா உண்மைக் காதலே’ பாடல் மிக இனிமையானது.
ஏ.எம்.இராஜா – பி.பானுமதி பாடிய இப்பாடலை எழுதியவர்
கவிஞர் அ.மருதகாசி,

இசை எஸ்.தெட்சிணாமூர்த்தி. பானுமதி சிறந்த நடிகை
மட்டுமல்ல; அவர் ஒரு எழுத்தாளரும்கூட. சிறந்த
சிறுகதைகளை எழுதியதற்காக ஆந்திர சாகித்ய அகாதமி
விருது பெற்றிருக்கிறார்.

அவரே படங்களைத் தயாரித்து இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் உடையலங்காரம் சிறப்பானது. குறிப்பாக,
இப்பாடலில் பானுமதி அணிந்துள்ள ஆடையும் அவரது
தலையலங்காரமும் அணிந்திருக்கும் நகைகளும் அவரது
கண்ணசைவும் அபாரம். அலிபாபா படத்தின் சலாம் பாபு
பாடலில் நடனமாடுகின்ற பெண்களில் ஒருத்தியாக ஹிந்தி
சினிமாவின் தாரகை வஹிதா ரஹ்மான் ஆடியிருக்கிறார்.

அவர் ஹிந்தி சினிமாவில் அங்கீகாரம் பெறாத காலமது.
இந்தப் படத்தில் தங்கவேலு குலாம், செருப்பு தைக்கும்
தொழிலாளியாகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

திருடர் குகையில் அகப்பட்டுக்கொண்ட காசிம், பிணத்தைத்
தைத்துக் கொடுத்துப் பணம் பெற்ற பிறகு அவர்
சந்தோஷத்தின் மிகுதியில் ‘உல்லாச உலகம் உனக்கே
சொந்தம், தய்யடா தய்யடா தய்யடா,
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா…’ என ஆடிப்பாடும்
பாடல் மறக்க முடியாதது.

ஆயிரத்தோரு இரவுகளின் அலிபாபா கதை எப்படி தமிழ்
சினிமாவுக்கு வந்தது? இந்நூலின் முதல் மொழிபெயர்ப்பு
1704-ல் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டது.
அந்தோனி கல்லேன்டு இதை மொழியாக்கம் செய்திருந்தார்.
இதன் பிறகு, ரிச்சர்ட் பர்ட்ன் மொழிபெயர்ப்பில் ஆயிரத்தோரு
இரவுகள் 1885-ல் ஆங்கிலத்தில் வெளியானது.

அதன் பிறகே உலகெங்கும் அராபிய இரவுகளின் மீது கவனம்
குவிய ஆரம்பித்தது. மௌனப்படங்கள் காலத்தில்
1902-லேயே அலிபாபா திரைப்படமாக்கபட்டுவிட்டது.
அதன் பிறகு, 1937-ல் வங்காளத்தில் இப்படத்தை
உருவாக்கினார்கள். 1942-ல் ஆங்கிலத்திலும் 1954-ல்
ஹிந்தியிலும் உருவாக்கப்பட்டு பெரும் வெற்றி​யடைந்தது.

அதன் தொடர்ச்சியாகவே தமிழில் 1956-ல் மார்டன் தி
தியேட்டர்ஸ் இப்படத்தை உருவாக்கியிருக்​கிறார்கள்.

படத்தில் வரும் கொள்ளையன் அபு ஹுசைன் எண்ணெய்
வணிகன்போலவே நகரினுள் வருகிறான். அமெரிக்க
நடத்திய ஈராக் யுத்தத்தின் பின்னால் இருப்பதும் எ
ண்ணெய் வணிகத்தின் ஏகபோகமே.

அலிபாபா இன்று ஒரு குறியீடாக உருமாறியிருக்கிறான்.
அலிபாபாவின் வெற்றிக்கு, வில்லனாக நடித்த
பி.எஸ்.வீரப்பாவின் பங்கும் முக்கியமானது. அன்று
அலிபாபா போல இன்னொரு கலாச்சாரத்தை,
வாழ்க்கையை விவரிக்கும் ஒரு தமிழ்ப் படத்தை எடுத்து
வெற்றியடையச் செய்ய முடிந்திருக்கிறது.

ஆனால், பிஜி தீவின் கரும்புத் தோட்டத்துக்கு அடிமையாகப்
போன தமிழர்களின் வாழ்க்கை பற்றியோ, ஆ
ப்பிரிக்காவுக்குக் கூலிகளாகப்போன தமிழ் மக்கள் பற்றியோ,
பிரெஞ்சு கயானா தமிழ் மக்கள் பற்றியோ, உலகெங்கும்
அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழ் மக்களின் துயர
வாழ்க்கை பற்றியோ தமிழ்ப் படங்கள் உருவாக்கப்படவில்லை.

கதையில்லை, கதையில்லை என்று தமிழ் சினிமா எத்தனை
காலத்துக்குத்தான் கதைவிடுவார்களோ தெரிய​வில்லை.

—————————–
– எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.
நன்றி-இந்து தமிழ் திசை

கைம்மண் அளவு

கீரை எளிய, பசிய உணவு.  நம்மில் பலருக்கும் அது தொடுகறி. வறுமையில் வாடிய ஒருவருக்கு கீரையே மொத்த உணவும். குப்பையில் வளரும் கீரையைக் கொய்து எடுத்து, உப்புக்கூட இல்லாமல் வேக வைத்துத் தானும் பெண்டு பிள்ளைகளும் பசியாறியதாகப் புலவர் பாடினார். நகத்தினால் கிள்ளி எடுப்பதால் சில கீரைகளைக் கிள்ளுக்கீரை என்றனர். ‘‘என்னை என்ன கிள்ளுக்கீரைன்னு நெனச்சியா?’’ என்றார்கள். ‘அத்தனை தாழ்வான மனிதனா’ என்பது கேள்வியின் பொருள். ‘முளையிலேயே கிள்ளி எறி’ என்றனர் பகைவர்களை.

ஆண்டாள் திருப்பாவையின் பதின்மூன்றாவது பாடல், ‘புள்ளின் வாய் கீண்டானை், பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை’ என்கிறது. ‘பறவை வடிவில் வந்த பகாசூரனின் அலகுகளைக் கிழித்துக் கொன்றவனும், பொல்லாத அரக்கனான ராவணனின் பத்துத் தலைகளையும் கிள்ளிக் களைந்தவனும்’ என்று பொருள்.

கீரையே எளிது. கிள்ளுதல் மிக எளிது. ஆனால் கீரை என்று நினைத்துக் கற்பாறையை  நகத்தால் கிள்ள இயலாது. ‘கல் கிள்ளிக் கை இழந்தற்று’ என்கிறது நாலடியார். கீரையை ‘இலைக்கறி’ என்பார்கள். கீரைக்கு ‘அடகு’ என்ற மாற்றுச்சொல் உண்டு. ‘குறு முறி அடகு’ என்கிறது மதுரைக்காஞ்சி. சிறிய இலைகளை உடைய கீரை. ‘அங்குழைக் கீரை அடகு மிசையினும்’ என்று நீள்கிறது மற்றொரு செய்யுள்.

பாரி மகளிரான அங்கவையும் சங்கவையும் சமைத்துப் போட்ட கீரையை அமுது நிகர்த்தது என்கிறார் ஒளவையார். ‘வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய் நெய்தான் அளாவி நிறம் பசிந்து – பொய்யா அடகென்று சொல்லி அமுதினை இட்டார் கடகம் செறிந்த கையால்’ என்பது பாடல். ‘சூடாக, நறுமணம் கொண்டதாக, வேண்டிய மட்டும் தின்பதாக, நெய் விட்டு அளாவி, பசிய நிறமுடையதான அதனைப் பொய்யாகக் கீரை என்று சொல்லிப் பரிமாறினாள் கடகம் அணிந்திருந்த கையினால். ஆனால் அது அமுதமாக இருந்தது’ என்பது பொருள். கேழ்வரகுக் களியும், முருங்கைக் கீரையுமாக இருக்கலாம்; அல்லது கொங்கு மண்டலத்துக் களியும் ‘ராக்ரி’ எனப்படும் கீரைக்கறியும் ஆகலாம்.

கம்ப ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின் காட்சிப் படலம். அசோகவனத்துச் சீதை தன் நிலை எண்ணிப் புழுங்கும் காட்சியில் பாடல். ‘அருந்தும் மெல் அடகு யார்இட அருந்தும்?’ என்று அழுங்கும்; ‘விருந்து கண்டபோது என் உறுமோ?’ என்று விம்மும்; ‘மருந்தும் உண்டுகொல் யான் கொண்ட நோய்க்கு?’ என்று மயங்கும்; இருந்த மாநிலம் செல்லரித்து எழவும் ஆண்டு எழாதாள்.

தான் அமர்ந்துள்ள இடப்பரப்பு கரையான் அரித்துப் புற்றுத் தோன்றினாலும் பெயர்ந்து போகாத சீதை, பலவிதமாக எண்ணியெண்ணிச் சோர்ந்து போகிறாள். ‘கீரை சமைத்து விளம்பினால் விரும்பி உண்பானே ராமன். இனி எவர் பரிமாற உண்பான்? விருந்து வந்துவிட்டால் என்ன நடக்கும்? யானே வலிய வரவழைத்துக்கொண்ட இந்த நோய்க்கு மருந்தும் உண்ேடா?’ என்றெல்லாம் இரங்கித் துன்புறுவாள்.

எளிய உணவென்று  நாம்  எண்ணும் கீரைக்கு எத்தனை சிறப்பு பாருங்கள்! தமிழின் 96 வகையான சிற்றிலக்கியங்களில் ‘பிள்ளைத்தமிழ்’ சிறப்பான வகை. மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், திருநெல்வேலி காந்திமதியம்மன் பிள்ளைத்தமிழ், திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், ஆண்டாள் பிள்ளைத்தமிழ் என்பன குறிப்பிடத் தகுந்தவை. குழந்தை பிறந்தது முதல் பத்து பருவங்கள் பேசப்படும். குழந்தை, பிறந்த ஐந்தாம் மாதம் – தன் தலையை நிமிர்த்து இங்குமங்கும் அசைந்தாடுவதைப் பாடும் பருவத்தை ‘செங்கீரைப் பருவம்’ என்பார்கள்.
குமரகுருபரர், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவம் பாடுகிறார்: ‘அருள் விழியொடும் வளர் கருணை பொழிந்திட ஆடுக செங்கீரை, அவனி தழைத்திட மவுலி புனைந்தவள் ஆடுக செங்கீரை’ என்று.

மலையாள தேசத்தவருக்கு சிவப்புநிறத் தண்டன் கீரை வெகு பிடித்தம். செங்கீரையைச் ‘சீரை’ என்பார்கள் அவர்கள்.நான் பிறந்து, 27 வயது வரை வாழ்ந்த நாஞ்சில் நாட்டில் கீரைச் செல்வம் குறைவுபடாதது. வயல் கரைகளில், தோப்புகளில் கீரைப் பாத்தி இருக்கும். முதலில் பிடுங்கினால் முளைக்கீரை. பிறகு பிடுங்கினால் தண்டன் கீரை. தண்டன் கீரையின் இலைகளை ஆய்ந்து ‘துவரன்’ வைப்பார்கள். துவரன் என்பது உங்கள் மொழியில் ‘பொரியல்’. அல்லது கடைவார்கள். கீரைக் கடைசலைத்தான் ‘மசியல்’ என்பார்கள். காயம் இட்டுக் கீரை கடைய வேண்டும்.

தமிழ்ப்பாடல் ஒன்று உண்டு: ‘சற்றே துவையல் அரை தம்பி, ஓர் பச்சடி வை, வற்றல் ஏதேனும் வறுத்து வை – குற்றமில்லை
காயமிட்டு கீரை கடை, கம்மெனவே மிளகு காயரைத்து வைப்பாய் கறி’ என்று. கடைந்த கீரையில் மோர் மிளகாய் வறுத்துத் தாளிப்பது விசேஷம்.
நாஞ்சில் நாட்டில் செண்பகராமன்புதூர் கீரைத்தண்டு சிறப்பு. தோவாளை பூந்தோட்டங்களில் ஊடுபயிராக வளர்க்கப்பட்ட அரைக்கீரைக்கு சுவை அதிகம். தண்டன் கீரையின் தண்டு போட்டு ‘புளிக்கறி’ வைப்பார்கள். விரதம் பொங்கும்போது, பச்சரிசிச் சோற்றில் விட்டுப் பிசைய கீரையும் கீரைத்தண்டும் போட்டு வைக்கும் புளிக்கறி பிரசித்தம்.

அரைக்கீரையைக் கடைந்தால் அடுத்த தெருவுக்கும் மணக்கும். அங்கு முருங்கை இல்லாத வீடில்லை, தோட்டம் இல்லை, வயல் மேடு இல்லை. மழை பெய்து தழைந்து நிற்கும் முருங்கைக்கீரை பறித்து வந்து ஆய்ந்து துவரன் வைப்பார்கள். முருங்கைக்கீரையைக் கழுவுவது இல்லை. அன்று காற்றும் மாசற்று இருந்தது. முருங்கைக்கீரைக்கு, சித்துக் கடுப்பு உண்டு. கடுப்பை மாற்ற, துவரனில் கருப்பட்டித்துண்டு சேர்ப்பார்கள். தேங்காய்ப் பூவுக்கு  இளம் தேங்காய். முருங்கைக்கீரையில்் மோர்க்குழம்பு நன்றாக இருக்கும். பச்சைத் தேங்காய் அரைத்து, புளி ஊற்றாமல் ‘சம்சோறு’ என்றொரு குழம்பும் உண்டு.

வீட்டுப் படிப்புரையில் எவரும் சுளவில் போட்டு முருங்கைக்கீரை ஆய உட்கார்ந்தால், அண்டை அயலார் அடுத்திருந்து நாலு கை ஆய்வார்கள்.
இந்தியிலிருந்து தமிழுக்கு சிறப்பான மொழிபெயர்ப்புகள் செய்தவர் சரஸ்வதி ராமநாதன்.  தாராபுரத்துக்காரர். கோடைக் காலத்தில் கோவையில் சில மாதங்கள் மூத்த மகள் வீட்டில் தங்கியிருப்பார். அடிக்கடி பார்க்கப் போவேன். மோகன் ராகேஷ் எழுதிய ‘ஆதே அதுரே’ நாடகத்தை ‘அரையும் குறையும்’ என தமிழில் பெயர்த்தவர். அந்த நாடகத்தில் நான்கு அங்கங்கள். நான்கு அங்கங்களிலும் வேறுபட்ட பாத்திரங்களில் அம்ரீஷ் பூரி நடிப்பதுண்டு. வேறுபட்ட நான்கு பெண் பாத்திரங்களிலும் சுல்பா தேஷ்பாண்டே நடிப்பார். பண்டு ஒரு காலத்தில் பம்பாய் சாபில்தாஸ் அரங்கில் நடைபெறும்.

சரஸ்வதி ராமநாதனிடம் சொன்னேன், ‘‘எங்கூர்லே அடை சுடும்போது முருங்கைக்கீரை உருவி மாவில் சேர்ப்போம்’’ என்று. அடுத்த முறை அவரைப் பார்க்கப் போனபோது, முருங்கைக்கீரை அடை காத்திருந்தது.பெரும்பாலும் வெற்றிலைக் கொடிக்கால்களில் நடப்படும் மரம் அகத்தி.
மஞ்சள் வயல்களில் செம்மஞ்செடி நடுவதைப் போன்று. அகத்தியில் சித்தகத்தி, பேரகத்தி என்று இருவகை. ‘சித்தகத்திப் பூக்களே…’ என்று தொடங்கும் பாடல் கேட்டிருப்பீர்கள்! அகத்திக்கீரையும் துவரன் வைப்போம். கசப்பைச் சகித்துக்கொள்ள வேண்டும். கசப்பு என்பதும் அற்புதமானதோர் சுவைதானே!

தண்ணீர் பாயும் கால்வாய், ஓடை, சிற்றாறு என்பனவற்றின் கரையோரம் செழித்து வளரும் கொடுப்பைக் கீரை. யாரும் விதை போட்டு வளர்ப்பதில்லை. நான் சிறுவனாக இருந்த காலத்தில், முழங்கால் தண்ணீரில் நின்று பறித்து மடியில் போட்டுக்கொண்டு வருவார்கள். பண்ட மாற்று விற்பனை. பாத்திரம்  நிறையப் பழைய சோறும், கொதிக்கச் சுட வைத்த பழங்கறியும். கொடுப்பைக் கீரையை அதிகமாகச் சீர் பார்க்க எதுவும் இருக்காது. பெரும்பாலும் குழம்பு தீயல் என்றால், துவரன் கொடுப்பைக்கீரை.

தை மாதம் வயலறுப்பு முடிந்ததும், மண்ணில் ஈரப்பதம் இருக்கும்போது, நெல்லறுத்த  தாளுடன் சேர்ந்து, பெரு வெட்டாக ஓருழவு உழுது இடைப்பயிராக உளுந்து, சிறுபயிறு விதைப்பார்கள். சிறுபயிறு என்று நாங்கள் சொல்வது பாசிப்பயிறு. பெரும்பயிறு என்றால் தட்டப்பயிறு. காணம் என்றால் கொள்ளு. இரண்டு மாதத்தில் நெற்றாகிவிடும். உளுந்து நெற்றுப் பறிக்க நான் போயிருக்கிறேன். பறித்த நெற்றில், ஆறில் ஒரு பங்கு கூலி. சிறுபயிற்றஞ்செடியின் கொழுந்து இலைகளைப் பறித்து வந்து இலையைக் கழுவி, கசக்கி, அரிந்து வைக்கப்படும்  துவரன்.

பூசணி, மஞ்சள் பூசணி, பரங்கி, அரசாணி, மலையாளிகளால் மத்தன் என்றும் அழைக்கப்படுவது ஒரு படவரை. ‘படவரை’ எனில் படர்ந்து வளரும் கொடி என்று பொருள். அதன் இளந்தளிர் இலைகளைப் பறித்து வந்து, இலைகளிலும் தண்டிலும் நெருங்கி இருக்கும் பூனை மயிர் போன்ற முட்களைக் கையால் கசக்கி, அரிந்து, துவரன் செய்வார்கள்.

பிரண்டைக் கொடியின் இளம் தளிர், பொடுதலை, வல்லாரை, கையாந்தகரைக் கீரைகளைச் சேர்த்துப் போட்டு, நல்லெண்ணெயில் வதக்கி, கீற்றுத் தேங்காயும் புளியும் தீயில் சுட்டுக் காரமாகத் துவையல் அரைப்பார்கள். நான் துவையல் என்பது சட்னி, துகையல், சம்மந்தி, ஈழத்தில் சம்பல் என்றும் வழங்கப் பெறும். நான் சொன்ன துவையல், காய்ச்சல் வந்துபோன பின் நாக்கு செத்துப்போனவர்களுக்கு கஞ்சிக்குத் தொட்டுக்கொள்ள!
மேற்சொன்னவை தவிர ஆலங்கீரை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரைகள் உண்டு. ஐம்பதாண்டுகள் முந்திதான் நாங்கள் கொத்தமல்லிக் கீரைக்கும் புதினாக் கீரைக்கும் அறிமுகம் ஆனோம்.

எனது இருபதாண்டு மும்பை வாழ்க்கையின்போது அறிமுகமான கீரைகள் பாலக், வெந்தயக்கீரை, முள்ளங்கிக்கீரை. பாலக் என்பது வல்லாரை போல, நேராகத் தரையிலிருந்து ஒற்றைக் காம்புடன் முளைத்தெழுந்து வருவது. இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு உதகமண்டலத்தில் பால்சன் பள்ளத்தாக்கு புல் பரப்பில் அமர்ந்தவண்ணம் முகாம்  உறுப்பினர்களுக்கு உரையாடிக்கொண்டிருந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், உட்கார்ந்த இடத்திலிருந்து  நகராமல், சுற்றிச் சுற்றித் தேடி கை நிறைய வல்லாரை  பிடுங்கினார். இப்போதும் கோவை மணிக்கூண்டு பேருந்து நிறுத்தத்தில், வேலந்தாவளத்தில் இருந்து ஆத்தா ஒருத்தி வல்லாரைக்கீரை பறித்து வந்து விற்கிறாள். சாக்கடைத் தண்ணீரில் வளராத சுத்தமான புத்தம் புது பசிய கீரை.

பாலக் பன்னீர் என்றும், ஆலு பாலக் என்றும் பரிமாறப்படும் பஞ்சாபித் தொடுகறிகளில் பயன்படுவது பாலக் கீரைதான். வெந்தயத்தை ‘மேத்தி’ என்பர் வடமொழியில். வெந்தயக்கீரையும், பாசிப்பருப்பும் சேர்த்து கூட்டு செய்வார்கள். உருளைக்கிழங்கு தோல் சீவி, பொடிப் பொடியாய் நறுக்கிப் போட்டு வதக்குவார்கள் வெந்தயக்கீரையுடன்.

அதன் வாசமே தனியானது. இரண்டங்குல நீளமுள்ள முளைக்கீரையாகவும் பிடுங்கிக்கொண்டு வருவார்கள். அப்படியே அலசிவிட்டு  நறுக்க வேண்டியதுதான். இவை எல்லாம் சப்பாத்திக்குத் தொடுகறிகள். பஞ்சாபிகள், கடுகுக்கீரையில் ‘சர்சூக்கா சாக்’ என்றொரு கூட்டு செய்வார்கள். மக்காச்சோள ரொட்டிக்கு அருமையான சேர்மானம். மேத்தி பரோட்டா என்ற வெந்தயக்கீரை பரோட்டா எங்காவது மெனு அட்டையில் பார்த்தால் தயவுசெய்து விட்டுவிடாதீர்கள்!

கொங்கு நாடு, கீரைகளின் கொண்டாட்ட பூமி. மற்றெங்கும் நான் காணாத கொங்குக்கீரைகள் வள்ளக்கீரை, காட்டுக்கீரை, கோவக்கீரை, பண்ணெக்கீரை, சுக்கட்டிக் கீரை, வெங்காயத்தழைக்கீரை, பூண்டு தழைக்கீரை. மழை பெய்து ஓய்ந்து இரு கிழமைகள் கடந்த பின்பு, சிங்கநல்லூர் உழவர் சந்தைக்குப் போனேன். பத்தாண்டுகளுக்கும் மேலிருக்கும்.

அப்போது நான் நீலிக்கோனான் பாளையத்தில் குடியிருந்தேன். எனக்கு வழக்கமாக வாழைப்பூ, வாழைத்தண்டு, பப்பாளிப்பழம், சுண்டைக்காய், சுக்கட்டிக்கீரை எனப்படும் மணத்தக்காளிக்கீரை விற்கும் ஆத்தா முன்னால், செழிப்பாக வளர்ந்திருந்த கீரைக்கட்டுகள் கிடந்தன. ‘‘இது என்னங்க ஆத்தா?’’ என்றேன். ‘‘காட்டுக்கீரைங்க… சின்ன வெங்காயம் அரிஞ்சு போட்டு, தக்காளி, பச்சை மிளகாய் எல்லாம் சேத்துக் கடையச் சொல்லுங்க… தேங்கா எண்ணெய் ஊத்தணுங்க…

வாங்கீட்டுப் போங்க… நல்லா இருக்குமுங்க…’’ என்றார்.கீரைக்கட்டைக் கையில் எடுத்து திருப்பிப் பார்த்தேன். கட்டினுள் சில வேற்றுத் தாவரங்களும் தெரிந்தன. ‘‘இது என்னங்க ஆத்தா… கண்ட செடியெல்லாம் சேர்த்துக் கட்டீருக்கு!’’ என்றேன். ‘‘சாமி! அது களையில்லீங்க… தொய்யக்கீரைங்க… எடுத்து வெளியே போட்றாதீங்கோ… காட்டுக்கீரையோட சேத்து வச்சுக் கடஞ்சா வாசமா இருக்கும்’’ என்றார். தொய்யக்கீரை வித்தியாசமான மணத்துடன் இருந்தது, பச்சையாக மோந்து பார்க்க. அதை நாற்றம் என்றும் சொல்லலாம். ஆனால், அன்று முதல் காட்டுக்கீரை கடைசலுக்கு நான் அடிமை. நாமென்ன ஆளுங்கட்சி அமைச்சரா, அபகரித்து வைத்திருக்கும் ஆயிரம் ஏக்கர் பூமியில் இரண்டு ஏக்கரை உழவர் சந்தை ஆத்தாள் பேரில் எழுதி வைக்க?

தயிர் கடைவதற்கு தயிர் மத்து இருப்பதுபோல், கீரை கடைவதற்கு கீரை மத்து வேண்டும். ‘மத்துறு தயிர்’ என்பான் கம்பன். ‘மத்துறு தயிர்’ என்ற தலைப்பில் ஜெயமோகனின் அற்புதமான சிறுகதை ஒன்றுண்டு, ‘அறம்’ தொகுப்பில்.அண்மையில் ஈரோடு சென்று திரும்பியபோது, முன்னாள் மத்திய அமைச்சர் – இந்நாள் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் திருமதி. சுப்புலட்சுமி அவர்களின் கணவர் ஜெகதீசன் அண்ணா, அவர் ேதாட்டத்தில் இருந்து பண்ணைக்கீரை பறித்துக் கொடுத்தார். அதுவும் அடகு எனப்பட்ட அமுது.

இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு, திருப்பூர் எழுத்தாளர் ‘பசலை’ கோவிந்தராஜனின் அம்மா, ராத்திரிச் சோற்றுக்கு செலவு ரசம் வைத்துக் கொடுத்தார். பயன்படுத்தப்பட்ட தழைகள் – மொடக்கத்தான், கொழுஞ்சி, அவரை இலை, மொசு மொசுப்பான், தூதுவளை என்று நினைவு. என்னுடன் உணவு உண்டவர்கள், அன்று சிறுவனாக இருந்த கவிஞர் மகுடேசுவரன், குடும்பத்துடன் பெருமாள் முருகன், கவிஞர் சிபிச்செல்வன், நாவலாசிரியர் எம்.கோபாலகிருஷ்ணன். யாவரும் இன்று தீவிர இலக்கியவாதிகள்.

என்ன கீரையில் என்ன சத்து, மருந்து என்பதற்கு, ‘பதார்த்த குண சிந்தாமணி’ பாருங்கள். சுதான் சுகுமார் ஜெயின் எழுதித் தமிழில் மொழிபெயர்ப்பாகி, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட ‘மூலிகைகள்’ நூலும் பார்க்கலாம்.

‘சற்றே துவையல் அரை தம்பி, ஓர் பச்சடி வை, வற்றல் ஏதேனும் வறுத்து வை – குற்றமில்லைகாயமிட்டு கீரை கடை, கம்மெனவே மிளகு காயரைத்து வைப்பாய் கறி’

வெந்தயக் கீரையும், பாசிப்பருப்பும்  சேர்த்து கூட்டு செய்வார்கள். உருளைக்கிழங்கு தோல் சீவி, பொடிப் பொடியாய்  நறுக்கிப் போட்டு வதக்குவார்கள் வெந்தயக்கீரையுடன். அதன் வாசமே தனியானது.

– கற்போம்…

நாஞ்சில் நாடன்

ஓவியம்: மருது- நன்றி- குங்குமம் -11=01-2016

எங்க குலசாமி திருவள்ளுவர்!

ஒன்றே முக்கால் அடியில் உலகை அளந்தவர் திருவள்ளுவர். அவருக்கு கன்னியாகுமரியில் பிரமாண்ட சிலை இருப்பது நமக்குத் தெரியும். அதே குமரியில் வள்ளுவரை குலதெய்வமாக, கோயில் கட்டி வழிபடும் குடும்பம் இருப்பது தெரியுமா?

குமரி மாவட்டத்தில் சுசீந்திரத்திற்கும் மருங்கூருக்கும் இடையே இருக்கிறது நல்லூர். ‘‘இங்கே திருவள்ளுவருக்குக் கோயில்…’’ என்று இழுத்தாலே எல்லோரும் வழிகாட்டுகிறார்கள், ஓய்வுபெற்ற சார்பதிவாளர் மாணிக்கவாசகத்தின் வீட்டுக்கு. அந்த வீட்டில் திரும்பிய திசையில் எல்லாம் புத்தகங்கள், சி.டிகள் ஆக்கிரமித்திருக்கின்றன.

பெரும்பாலானவை திருக்குறள் தொடர்பானவையே! இவர்களின் நிலத்தில்தான் 49 வருடங்களாக கோயில் கொண்டிருக்கிறார் அய்யன் வள்ளுவர்.
‘‘எங்க தாத்தா மகாராஜன் பிள்ளை இந்தக் கோயிலை 1957ல கட்டினார். அவருக்கு திருக்குறள்னா உயிர். வள்ளுவரை குலசாமியாவே பார்த்தார். வாழ்நாளுக்குள்ள இப்படி ஒரு கோயிலைக் கட்டிடணும்னு நினைச்சவர், அதை சாதிச்சும் காட்டினார். ஆனா, அடுத்த ரெண்டே வருஷத்துல காலம் அவரைக் கொண்டு போயிருச்சு.

தன் காலத்துக்குப் பிறகும் இந்தக் கோயில் தடையில்லாம இயங்கணும்னு நினைச்சவர் தன் குடும்பத்தில் தனக்கடுத்து இருக்கும் மூத்த ஆண் வாரிசு இதை நிர்வகிக்கணும்னு உயில் எழுதி வச்சிருக்கார். அதன்படி, தாத்தாவோட மறைவுக்குப் பிறகு எங்க அப்பா எம்.அருணாச்சலம் பிள்ளை, அவருக்கு அடுத்து எங்க சித்தப்பா முத்துக்குமாரசாமிப் பிள்ளைனு நிர்வாகம் மாறி, இப்ப தாமரைக்குளத்தைச் சேர்ந்த எங்க இளைய சித்தப்பா சிவராமலிங்கம் பிள்ளை கையில இருக்கு!’’ – கோயிலைச் சுற்றிக் காட்டியபடியே பேசுகிறார் மாணிக்கவாசகம்.

சின்ன கோயில்தான். கோயிலின் கருவறையில் ஒரு கல் பேழை இருக்கிறது. அதற்குள் இருக்கும் ஓலைச்சுவடி ஒன்றுதான் இந்தக் கோயிலின் மையப் பொருளாக மதிக்கப்படுகிறது. மகாராஜன் பிள்ளை தன் கைப்பட 1330 திருக்குறளையும் அந்த ஓலைச்சுவடியில் எழுதி வைத்தாராம். வெகுநாட்களாக இது மட்டுமே வழிபாட்டுப் பொருளாக இருந்திருக்கிறது. 2006ல்தான் மாணிக்கவாசகம் தன் சொந்த ஆர்வத்தில் ஒரு சிலை உருவாக்கி பிரதிஷ்டை செய்து வைத்திருக்கிறார். அப்போதும் கல்பேழை அங்கேயேதான் இருக்கிறது.

‘‘தன் சந்ததிகள் திருவள்ளுவரை வணங்குவாங்களானு தாத்தாவுக்கு சந்தேகம். அதனால கோயில் பேர்ல 13 சென்ட் நிலத்தை எழுதி பதிவும் பண்ணி வச்சார். ஆனா, எங்க குடும்பத்துல எல்லாரையுமே திருக்குறள் கவர்ந்துடுது.

வள்ளுவர்னா எங்க எல்லாருக்குமே உயிர். வருஷா வருஷம் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தின் மறுநாள் அனுஷம் நட்சத்திரம் அன்னைக்குதான் திருவள்ளுவர் மறைந்த தினம்னு நம்பப்படுது. அன்னைக்குதான் நாங்க இந்தக் கல்பேழையைத் திறப்போம். தாத்தாவின் ஏட்டை எடுத்து, காலை 9.30 மணியில் இருந்து பகல் 1.30 மணி வரைக்கும் முற்றோதுதல் நடத்துவோம்.

அன்னைக்கு மகாராஜ பிள்ளையின் வாரிசுகள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து, காய், கனி படையல் போட்டு திருவள்ளுவரை வணங்குவோம். அந்த 13 சென்ட் நிலத்தில் இருந்து வர்ற வருமானத்துல அன்னைக்கு பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கிடுறோம்.

இது போக, எங்க தலைமுறை சார்பா கோயில் பேர்ல ஒரு தொகையை டெபாசிட் பண்ணி வச்சிருக்கோம். அதில் வர்ற தொகையில நிகழ்ச்சிய நல்லபடியா நடத்திடுறோம்!’’ என்கிற மாணிக்கவாசகம், கோயிலின் தற்போதைய நிர்வாகியான தன் சித்தப்பா சிவராமலிங்கம் பிள்ளையை அறிமுகப்படுத்தி வைக்கிறார். கிட்டத்தட்ட தலபுராணத்துக்கு நிகரான கோயில் சரித்திரம் இருக்கிறது இவரிடம்.

‘‘அப்பா படிச்சது 5ம் வகுப்பு வரைதான். ஆனா, தேவாரம், திருவாசகம், திருவருட்பானு பாடல்களை எல்லாம் படிச்சு ஓலையில எழுதுவார். திருக்குறளை முழுசா பொருளோட சொல்வார். சின்னப் பையன்களா இருந்த எங்களுக்கு பத்து குறள் சொன்னா ஒரு சக்கரம் (அப்போதைய காசு) பரிசா கொடுத்து ஊக்கப்படுத்துவார்.

ஆனா, திருக்குறளை ஓலையில் எழுதுற சக்தி மட்டும் தனக்கு இல்லைனு நினைச்சார். மருங்கூர் மலைமேல இருக்குற சுப்பிரமணிய சாமி கோயிலுக்குப் போய், திருக்குறளை ஓலையில எழுதும் சக்தியைக் கொடுனு கேட்டிருக்கார்.

கோயிலை விட்டு வெளியே வரும்போது, எதிர்ல ஒருத்தர் தலையில் பனை ஓலையோட வந்தாராம். அவர் பேர் ‘சுப்பிரமணி’னு சொன்னாராம். முருகப் பெருமானே பனை ஓலையை எடுத்துக் கொடுத்ததா நினைச்ச எங்கப்பா, அந்த ஓலையை வாங்கி, அதில்தான் திருக்குறளை எழுதி வச்சார். தன் காலம் முழுக்க அதை உயிரை விட மேலானதா பாதுகாத்தார்.

எத்தனைக் காலம் ஆனாலும் அந்த ஓலையையும் திருக்குறளோட பெருமையையும் எங்க தலைமுறை போற்றிப் பாதுகாக்கும்!’’ – தடுமாற்றமே இன்றி கணீரென முழங்குகிறது இந்த 89 வயதுக்காரரின் குரல்! இன்னும் எத்தனைக் காலம் ஆனாலும் திருக்குறள் ஓலையையும் திருக்குறளோட பெருமையையும் எங்க தலைமுறை போற்றிப் பாதுகாக்கும்!

– சி.உமாசங்கர்
படங்கள்: மணிகண்டன்

நன்றி- குங்குமம்-11-01-2016

‘சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்’ என்ற நுாலிலிருந்து:

ச.குமார் எழுதிய, ‘சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்’
என்ற நுாலிலிருந்து:

விவேகானந்தரின் இயற்பெயர், நரேந்திரநாத்.
சிறு வயதில் நரேந்திரநாத், பெரியவர்களை பார்த்து,
அவரது நண்பர்களுடன் சேர்ந்து தியானம் செய்ய
அமர்வார்.

சிறிது நேரத்திலேயே அவருக்கு, தியானம் கை கூடிவிடும்.
இதை புரிந்து கொள்ளாத அவரது நண்பர்கள்,
‘நரேந்திரநாத் உட்கார்ந்து கொண்டே துாங்குகிறார்…’
என்று, கேலி செய்வர்.

ஒருநாள், இப்படி அவரும், நண்பர்களும் தியானம் செய்யும்
போது, அந்த அறையினுள் நாகப் பாம்பு ஊர்ந்து வந்தது.
இதை பார்த்த சக நண்பர்கள் பயந்து, ‘ஓடு ஓடு… நரேந்திரா
பாம்புடா…’ என்று, அலறி, ஓடினர்.

ஆனால், நரேந்திரநாத் மட்டும், தியானத்திலிருந்து
எழவில்லை.
பாம்பு தன் நண்பனை கடித்து விடுமே என்று பயந்து
உற்று நோக்கினர்.
சிறிது நேரத்தில், வந்த வழியே போய் விட்டது, பாம்பு.

——————————–
நடுத்தெரு நாராயணன்
திண்ணை – வாரமலர்

ஜன., 12, விவேகானந்தர் பிறந்த தினம் ELARGE_20210112100015344230

ஜன., 12, விவேகானந்தர் பிறந்த தினம்

க.அருச்சுணன் எழுதிய, ‘பெரியோர் வாழ்வில்
சுவையானவை’ நுாலிலிருந்து:

அமெரிக்காவில், மெட்காப் நகர் மகளிர் மன்றத்தில்,
விவேகானந்தர் பேச்சை கேட்டு வியந்த இளம் பெண்
ஒருவர், அவரை தனிமையில் சந்தித்து பேச ஆவல்
கொண்டார்.

பல இடங்களில் விவேகானந்தரை சந்திக்க வாய்ப்பு
கிடைத்தாலும், தனியாக அவரிடம் பேச முடியவில்லை.
எங்கும் அவரைச் சுற்றி ஏராளமான கூட்டம்.

அமெரிக்காவிலிருந்து, பாரீஸ் புறப்படும் சமயம்…
அமெரிக்க விமான தளத்தில், விவேகானந்தரை,
அப்பெண் சந்தித்து, ‘தங்களிடம் தனியாக பேச வேண்டும்…’
என்றார்.

கூட்டத்திலிருந்து தனியாக வந்த, விவேகானந்தர்,
‘சொல்லு தாயே…’ என்றார்.

அந்த பெண்ணுக்கு வயது, 20 இருக்கும். விவேகானந்தருக்கு,
30 வயது. அந்த பெண், நவநாகரிக மங்கை; விவேகானந்தரோ,
முற்றும் துறந்த முனிவர்.

‘அமெரிக்க இளைஞர்கள் பலர், என் அழகில் மயங்கி,
என்னை சுற்றி வருகின்றனர். நானோ, உங்கள் அறிவில்
மயங்கி, உங்களை சுற்றி வருகிறேன்…’ என்றார்.

‘நான் என்ன செய்ய வேண்டும் தாயே…’ என்றார்,
விவேகானந்தர்.

‘என்னுடைய அழகும், உங்களுடைய அறிவும் சேர்ந்தால்,
எவ்வளவு நன்றாக இருக்கும். நாம் திருமணம் செய்து
கொண்டால், என் அழகோடும், உங்கள் அறிவோடும்
குழந்தை பிறக்கும்.

அதற்காக தான், உங்களை தனியாக பேச அழைத்தேன்…’
என்றார், அப்பெண்.

‘தாயே… எனக்கு, 30 வயது. உங்களுக்கோ, 20 வயது
இருக்கலாம்… நாம் திருமணம் செய்து, நமக்கு குழந்தை
பிறந்து, வளர்ந்து, 20 வயதை தொடுகிற போதுதான்,
அந்த குழந்தை அறிவுமிக்கதா, இல்லையா என்பது
தெரியும்.

‘அதற்கு பதிலாக, என்னையே நீங்கள், மகனாக ஏற்றுக்
கொள்ளலாமே… இன்று முதல் நான், உங்கள் மகன்…’
என்றார், விவேகானந்தர்.

எல்லா பெண்களையும், தாயாக காணுகிற விவேகானந்தர்
குணம், அப்போது தான், அப்பெண்ணுக்கு, புரிந்தது.

—————————

பல்சுவை பதிவுகள்

தமிழனுக்கு மதம் பிடிப்பது எப்போது?

சமணரை கழுவில் ஏற்றும் காலத்திற்கு முன்பே!

-முத்தாரம்
————————————————-

படித்ததில் பிடித்தது E2227410
படித்ததில் பிடித்தது 50687410
படித்ததில் பிடித்தது 79773910

இந்தியாவின் முக்கிய பிரச்சனைகள் பத்து:

இந்தியாவின் முக்கிய பிரச்சனைகள் பத்து:
(அரசு பதில்)

சாதி
அரசியல்வாதிகள்
சகோதரத்துவம் இல்லாதது
வலுவில்லாத சட்டங்கள்
வேலையின்மை
மக்கள் தொகை
லஞ்சம் & ஊழல்
விவசாயத்தை மட்டுமே அதிகம் சார்ந்திருப்பது.
நேர்மையின்மை!

————————–

அன்பின் பூரணத்துவம்:-

அன்பின் பூரணத்துவம்:-
——————
ரிசப்னிஸ்ட் வெறும் சம்பளத்திற்காக மட்டுமே
இனிமையான உடல்மொழிகளை வெளிப்
படுத்துகிறார்.
ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் இந்த
வரவேற்பு இவ்வளவு சந்தோஷம் கொடுத்தால்
காலம் முழுவதும் நம்மோடு இருக்கும் நமது
உறவுகளுக்கு நமது அன்பின் பூரணத்துவத்தை
காண்பித்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள்!

———————————-

முக்கால்வாசி மனிதர்களை தன் கட்டுப்பாட்டில்
வைத்துக்கொண்டு உலகத்தையே தன் ஆட்சியின்
கீழ் கட்டுப்படுத்தி ஆட்சி செய்து ஒவ்வொருவராக
அழித்துக் கொண்டு வரும் ஒரே ‘கிங்’- ஸ்மோக்கிங்!

-நன்றி-முத்தாரம்
————————

பொது அறிவு தகவல்
———–
நம் தேசப்பிதா காந்திஜியை முதலில் ஸ்டாம்பில்
வெளியிட்டது- அமெரிக்கா

இந்தோனேஷியாவின் தேசிய சின்னம் – கருடன்

பிரான்சின் தேசிய சின்னம் -கருடன்

ரஷ்யாவின் தேசிய விலங்கு – கரடி

சீனாவின் தேசிய விங்கு – பான்டா கரடி

வால்ரஸ் இசைக்கச்சேரி நடத்துகின்றன.

ரெயில் போக்குவரத்து இல்லாத நாடு- ஆப்கானிஸ்தான்

பென்ஹர் – ஆங்கில திரைப்படத்தில் ‘சாரட்’
பந்தய காட்சியை படம் பிடிக்க 42 காமிரக்கள்
பயன்படுத்தப்பட்டன.

கடிகார விளம்பரம்:
10.10 -ல் இருப்பதற்கு காரணம் …
அமெரிக்க முன்னாள் ஜனாபதி ஆபிரகாம் லிங்கன்
சுடப்பட்டு இறந்த நேரம்!

—————————–

« Older entries