வரலாறு என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை பற்றி படிப்பது என்பதை தாண்டி நமது மூதாதையர்களின் வாழ்வியல் குறித்த புரிதலை ஏற்படுத்தவும் உணரவும் அறியவும் குழந்தைகளுக்கு உறுதுணை செய்ய வேண்டும்.
நடைமுறையில் வரலாறு கற்பித்தல் அதற்கு நேர்எதிரில் உள்ளது. மன்னர்களையும் அவர்களது வாரிசுகளையும் அவர்களின் வீரதீர செயல்களையும் வரலாறு நெடுகிலும் வியந்து பேசுகிறோம்.
அந்த வியப்பின் அடிநாதம் தொட்டே போர்களையும் வருடங்களையும் வகுப்பறையில் வலிய திணித்து மனனம் செய்ய வைத்து குழந்தைகளை திணறடிக்கிறோம்.
நமது மூதாதையர் விட்டுச் சென்ற தொல் எச்சங்களை நேரில் பார்த்து, உணர்ந்து அதன் மூலம் அவர்களின் வாழ்வியல் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அதன் நீட்சியாக குழந்தை புதிய வரலாற்று தேடலுக்குள் செல்ல வேண்டும். வரலாற்றின் பெருமைமிகு போர்களைத் தாண்டி புதைந்து கிடக்கும் வரலாற்றுச் சின்னங்களையும் தொல் எச்சங்களையும் நேரில் பார்த்து அறிந்து கொள்ள குழந்தைகளோடு பயணித்தேன்.
அரிட்டாபட்டி: அரிட்டாபட்டி மலை குன்றில் சமணர் படுக்கை யும் அதன் அருகே தமிழ் பிராமி கல்வெட்டும் குடைவரைக் கோயில் ஒன்றும் உள்ளது. கிமு 2-ம் நூற்றாண்டின் சமயம் மற்றும் பண்பாட்டு வரலாற்றினை அறிந்து கொள்வதற்காக 42 குழந்தைகளுடன் சுமார் 27 கிலோமீட்டர் பயணம் செய்து மேலூருக்கு மேற்கே உள்ள அரிட்டாப்பட்டிக்கு சென்றோம். பெரிய மலை குன்றும் அதன் அடிவாரத்தில் உள்ள அழகிய நீர் நிலையும் புதிய உணர்வை ஏற்படுத்தியது.
குடைவரைக் கோயில்: குடைவரைக் கோயில் என்பது மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டது என்று வகுப்பறையில் எத்தனை நிழற்படங்களை கொண்டு பாடம் நடத்தினாலும் நேரில் சென்று பார்த்து, தொட்டு, உணர்ந்து அங்குள்ளவர்களிடம் கேட்டு அறிந்து அதன் மூலம் ஏற்படும் கற்றல் நிலைக்கு ஈடாகாது.
அரிட்டாபட்டியில் உள்ள குடைவரைக் கோவில் கிபி 7-ம் நூற்றாண்டினை சேர்ந்தது. பாண்டிய மன்னர்களால் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட 34 குடைவரைக் கோயில்களில் அரிட்டாபட்டி குடைவரைக் கோயிலிலும் ஒன்று. இந்த கோவிலில் சிவலிங்கமும் இலகு லீசர் சிலையும் உள்ளது. கோவிலின் அருகில் உள்ள இடைச்சி மண்டபத்தில் பெண் தெய்வம் ஒன்றும் உள்ளது.
சமணர் படுக்கையும் தீர்த்தங்கரர் சிற்பமும்: அரிட்டாபட்டி மலையின் மற்றொரு பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சமணர் படுக்கையும் தீர்த்தங்கரர் சிற்பமும் தமிழ் பிராமி கல்வெட்டு ஒன்றும் 1300 ஆண்டுகள் பழமையான வட்டெழுத்து கல்வெட்டும் உள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பு என்று வெறும் வார்த்தையில் வரலாறு சொல்லும் போது ஏற்படாத நெருக்கம் நேரில் சென்று பார்த்தபோது குழந்தைகளுக்கு ஏற்பட்டது. பழமையான அந்த கல்வெட்டுகளை பார்த்து வியந்து நின்றனர். படிப்பதற்கு முயற்சி செய்து முடியாமல் போகவே அந்த எழுத்துகளை சித்திரம் போல வரைந்து கொண்டனர்.
தங்களுடைய பாடப்புத்தகத்தில் இருக்கக்கூடிய தமிழ் பிராமி எழுத்துக்களோடு ஒப்பிட்டு வாசிக்க முயற்சி செய்யப் போவதாக அவர்கள் கூறியது வியப்பின் உச்சம்.
தமிழ் பிராமி கல்வெட்டு: நெல்வேலி சிழிவன் அதினன் வெலியன் என்பவர் இந்த சமண பள்ளியை உருவாக்கினார் என கல்வெட்டு விளக்குகிறது என்று பேராசிரியர் சாந்தி கல்வெட்டினை வாசித்துக் கூறினார்.
இந்த சுற்றுப்பயணம் மூலம் எங்கள் பள்ளிக் குழந்தைகள் வரலாற்றை உணர்ந்து உள்ளூர பயணிக்க தொடங்கிவிட்டனர் என்பதைக் கண்டபோது அவர்களின் உணர்வு நிலைக்குள் நுழைந்து நான் மெல்ல கரைந்து போனேன்.
– கி அமுதா செல்வி | கட்டுரையாளர் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, குலமங்கலம்,மதுரை மாவட்டம்.