ஆகஸ்ட் 8… சீன ஒலிம்பிக்கிற்கு இன்னும் ஒன்பதே நாட்கள்.
தொடக்க விழாவின்போது எந்தத் தடங்கலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறது சீனா. இப்போது சீனாவில்
பருவமழைக் காலம். இரண்டு தினங்களுக்கு முன்புகூட கொட்டிய மழையில், அடித்தக் காற்றி்ல் 5 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். சுமார் 1000 கிராமங்களில் கடல் நீர் புகுந்தது.
ஒலிம்பிக்கி்ற்காக பல தியாகங்களை செய்திருக்கிறது சீனா. பீஜிங்கில் மாசு அளவைக் குறைக்க நகரத்தில் இயங்கி வந்த ஆயிரக்கணக்கான தொழிற்சாலை இழுத்து மூடியிருக்கிறது சீனா.
பல்லாயிரம் கோடிகளை கொட்டி விளையாட்டுத் திடல்களை, வீரர், வீராங்கனைகள் தங்கும் இடங்களை பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறது.
உலக அளவில் சீனாவை கொண்டுபோய் சேர்க்கும் சங்கதியாய் ஒலிம்பிக்கைக் கருதுகிறது சீன தேசம். அதனால் ஒலிம்பிக் தொடங்கும் இந்த வருடத்தின் 8ஆம் மாதமான ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று இரவு 8 மணி 8 நிமிடத்தின் 8 நொடியில் இயற்கை எதுவும் சதி செய்துவிடக்கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சீனா.
முதலில் வருண பகவானை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது அது.
தொடக்கவிழா நடக்கவிருக்கும் பறவைக் கூடு தேசிய ஸ்டேடியத்துக்கு மேற்கூரை இல்லாததால் மழை வந்து விழாவை மறிக்கக்கூடும் என அஞ்சுகிறார்கள், எனவே தொடக்க விழா நடக்கும் அந்த மூன்றரை மணி நேரம், இந்த ஸ்டேடியம் இருக்கும் பகுதிக்குள்ளேயே நுழையவிடக்கூடாது என்று திட்டம் போட்டிருக்கிறார்கள்.
இதற்காக அமெரிக்கா பயன்படுத்தி வரும் ‘கிளவுட் சீடிங்’ என்ற நவீன மழைத் தடுப்பு முறையை பயன்படுத்தவுள்ளது சீனா. பெய்ஜிங் நகரத்தை நோக்கி திரண்டு வரும் மழை மேகங்களின் மீது சில்வர் அயோடைடு ரசாயனத் துகள்கள் அடங்கிய ராக்கெட்களை ஏவி முன்கூட்டியே மழை பெய்யவைக்க திட்டமிட்டுள்ளனர்.
சில்வர் அயோடைடு துகள்கள் மழை மேகங்களுக்குள் இருக்கும் நீர்த்துளிகளை பனிக்கட்டியாக மாற்றிவிடும். அவை உடனே பனிக்கட்டி மழையாக கொட்டித் தீர்த்துவிடும். இதுதான் ஐடியா!
இந்தப் பணிக்காக பெய்ஜிங் நகரைச் சுற்றி 26 மையங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதற்காக, தற்காலிகமாக பணியாற்ற 32 ஆயிரம் பேரை நியமித்துள்ளனர்.
இயற்கையை கொஞ்சம் வெல்ல செயற்கையாக எவ்வளவு செலவு செய்யவேண்டியிருக்கிறது.
மழைக்கு எதிராக மறியல் செய்ய ஒரு நாடே களத்தில் இறங்கியிருப்பது ஆச்சரியம்தான்!