‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை

Tamil Nadu temple elephant with bob-cut is an internet sensation ...

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் யானை
செங்கமலத்துக்கு, அதன் பாகன் பாப் கட்டிங் ஸ்டைலில்
முடிவெட்டி மேக்கப் போட்டு பராமரித்து வருகிறார்.

மன்னார்குடியில், பெரிய கோயில் என்றழைக்கப்படுவது
ராஜகோபால சுவாமி கோயில். சிறப்பு மிக்க இந்தக்
கோயிலுக்கு வரும் பக்தர்கள், முகப்பில் நிற்கும் யானை
செங்கமலத்தைப் பார்த்து வியக்கிறார்கள்.

மகிழ்ச்சியுடன் செங்கமலத்தோடு செல்ஃபி எடுத்துக்
கொள்கிறார்கள். குழந்தைகள் கூதுகலம் அடைகின்றனர்.

இந்த யானை, மனிதர்களைப் போலவே பாப் கட்டிங்
ஸ்டைலில் தலை முடியை வெட்டிக்கொண்டு பார்ப்பதற்கு
அழகாக இருப்பதே காரணம்.

மேலும், இந்த யானை, ‘பாப் கட்டிங் செங்கமலம்’ என்றே
அப்பகுதியில் எல்லோராலும் அழைக்கப்படுகிறது.
யானைக்கு பாப் கட்டிங் வெட்டிவிடுவதோடு, அதைத் தன்
குழந்தையைப் போல பராமரித்து வருகிறார் பாகன்
ராஜகோபால்.

எப்போதும் இந்த கெட்டப்பிலேயே வலம் வரும் இந்த
யானைக்கு உள்ளூர் மட்டுமில்ல, வெளியூரிலும் ரசிகர்கள்
உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்

சொந்தமும் பந்தமும் இதுக்குத்தான் வேணும் – நெகிழ வைக்கும் யானைப் பாசம் (வீடியோ)

தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது மலப்புரம்
பகுதியின் நடுக்கனி சுரம். இந்த பகுதியில் யானைகள்
நடமாட்டம் மிக அதிகம். சாலையில் கீழ் புறத்தில் இருந்து
மேல்புறம் நோக்கி மூன்று யானைகள் சென்று கொண்டிருக்கும்
வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த பகுதியில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்ள சென்ற
4 நண்பர்களில் ஒருவரான அனீஷ் கட்டா இந்த காட்சியை
படமாக்கியுள்ளார். யானைகள் சாலையை கடப்பதில் என்ன
இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.

சென்ற மூன்று யானைகளில் இரண்டு யானைகள் நன்றாக
வளர்ந்தவை. ஆனால் ஒரு யானை மிகவும் சிறியது. தடுப்பு
சுவர் உயரம் மட்டுமே இருக்கும் அந்த யானை தடுப்புச் சுவரை
தாண்டி மேலே ஏறிச் செல்ல இயலவில்லை.

இதனால் சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தது யானை.

இதனைத் தொடர்ந்து மேலே சென்ற யானை கீழே இறங்கி
அந்த குட்டி யானைக்கு தடுப்புச் சுவரை எப்படி கடக்க வேண்டும்
என்று வழிகாட்டுகிறது. அது மட்டுமில்லாமல் தும்பிக்கையை
வைத்து அந்த குட்டியானையை தூக்கி உதவுகிறது,

இந்த வீடியோவை பார்த்தால் நீங்கள் வாவ் சொல்லாமல் போகவே
முடியாது. அத்தனை அழகு. அறிவு மிகுந்த விலங்கினங்கள் என்றால்
அது நிச்சயமாய் யானைகள் தான்.

அந்த யானைகள் சாலையை கடக்கும் வரை எந்த தொந்தரவும்
செய்யாமல் நின்று கொண்டிருந்த ட்ரக் ட்ரைவருக்கும் வாழ்த்துகள்
குவிந்து வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்

https://www.youtube.com/embed/Oif3Y7VyVos\

பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை

பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை Gallerye_053455564_2570605

சென்னை :
அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் இருந்து ஓய்வு
பெறும் ஊழியர்களை கவுரவிக்க, சிறப்பு தபால்தலை
திட்டத்தை அஞ்சல்துறை அறிமுகம் செய்துள்ளது.

அஞ்சல் உறையில், நாம் விரும்பும் நபரின் படத்தை
வைத்துக்கொள்ளும், ‘மை ஸ்டாம்ப்’ திட்டம், 2014ல் அறிமுகம்
செய்யப்பட்டது. ஒரு பாஸ்போர்ட் அளவு போட்டோ,
300 ரூபாய் கட்டணமும் செலுத்தினால், ஐந்து ரூபாய்
மதிப்புள்ள, போட்டோவுடன் கூடிய, 12 தபால் தலைகள்
அடங்கிய அட்டை, ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும்.

பள்ளி குழந்தைகள், பெரிய தொழில் நிறுவனங்கள் வரை
பலரும், ‘மை ஸ்டாம்ப்’ பெற ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பிறந்த நாள், திருமண நாள், ஆண்டு விழா போன்ற
முக்கிய நிகழ்வுகளை சிறப்பிக்க, இச்சேவையை
பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், ஓய்வு பெறும் ஊழியர்களை கவுரவிக்கவும்,
அவர்களின் சேவையை பாராட்டும் விதமாகவும்,
‘ஹாப்பி ரிடையர்மென்ட்’ என்ற, தலைப்பில், தபால்தலை
அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

‘மை ஸ்டாம்ப்’ போலவே, ஐந்து ரூபாய் மதிப்புள்ள தபால்
தலையில், ஓய்வு பெறுவோரின் போட்டோவையும்,
இடம்பெற செய்யலாம்.

விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களை
அணுகலாம், என அஞ்சல்துறை அறிவித்து உள்ளது.

தினமலர்

ஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி

reliance-launches-unlimited-free-conferencing-app-jiomeet-as-competition-to-zoom

ஜூம் செயலிக்குப் போட்டியாக இலவச, காலவரம்பற்ற
வீடியோ கான்ஃப்ரன்சிங் காரணத்துக்காக ஜியோமீட்
என்னும் செயலியை ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடியாக
அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஜியோமீட் செயலி, ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ்,
விண்டோஸ், மேக்ஓஎஸ் என அனைத்துத் தளங்களிலும்
செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி
மூலம் அதிகபட்சமாக 100 பயனர்கள், காணாலி மூலம்
இலவசமாக கான்ஃப்ரன்சில் பேசமுடியும்.
ஆடியோ, வீடியோ இரண்டும் எச்டி தரத்தில் இருக்கும்.

ஜூம் செயலியைப் போல 40 நிமிட நேரக் கட்டுப்பாடு
எதுவுமில்லாமல் பாதுகாப்பான முறையில் அதிக
பட்சமாக 24 மணி நேரம்வரை ஜியோமீட் மூலம் பேச
முடியும். ஒரு பயனர், ஒரு நாளைக்கு எத்தனை
கருத்தரங்குகளை வேண்டுமானாலும் உருவாக்கி, பேச,
பார்க்க முடியும்.

தேவைப்பட்டால் ’வெயிட்டிங் ரூம்’ என்னும் தெரிவு மூலம்
கருத்தரங்கில் கலந்துகொள்ளும் நபர்கள்,
அனுமதியில்லாமல் உள்நுழைவதைத் தடுக்கும் வசதியும்
இதில் உண்டு.

மொபைல் எண் அல்லது இ-மெயில் ஐடி மூலம் எளிதாக
செயலிக்குள் நுழைந்து கருத்தரங்கை உருவாக்க முடியும்.
ஜியோமீட் செயலியில் உள்ள ‘சேஃப் டிரைவிங் மோட்’
தெரிவின் மூலம் வண்டி ஓட்டும்போது பேசும் வசதியும்
ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 5 சாதனங்களில் உள்நுழையும்
வசதியும் இதில் செய்யப்பட்டுள்ள்ளது.

ஜூம் செயலியில் 40 நிமிடங்களுக்கும் மேலான
கருத்தரங்கம் என்னும்போது மாதாமாதம் 15 டாலர்கள்
(ஆண்டுக்கு 180 டாலர்கள்) செலுத்த வேண்டியிருக்கும்.

ஆனால் ஜியோமீட் செயலி மூலம் ஆண்டுக்கு
ஒவ்வொருவருக்கும் சுமார் ரூ.13,500 மிச்சமாகும் என்று
ரிலையன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்து தமிழ் திசை

தங்கத்தில் முக கவசம்


தங்கத்தில் முக கவசம் Tamil_News_0307_2020__598827540874482

மும்பை :
மகாராஷ்டிராவில் ஒருவர், கொரோனாவில் இருந்து
தன்னை பாதுகாக்க, உலகின் முதல் விலை உயர்ந்த
முகக் கவசம் செய்து அணிந்துள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசிடம்
இருந்து தப்பிக்க முகக்கவசம் அணிதல் இன்றியமையாத
ஒன்றாக கருதப்படுகிறது.

கொரோனாவை தடுக்க அத்தியாவசியமான ஒன்றான மாஸ்க்,
பல்வேறு வடிவங்கள் மற்றும் பல்வேறு தரங்களில்
கிடைக்கின்றன. சிலர் கைக்குட்டை, துப்பட்டா, டவல், முந்தானை
என தங்களிடம் இருப்பதையே மாஸ்க்காக பயன்படுத்துவதை
காண முடிகிறது.

இந்நிலையில் புனேவைச் சேர்ந்த சங்கர் குராடே என்பவர்
ரூ. 2.89 லட்சம் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்து அனைவரையும்
ஆச்சரியப்படுத்தியுள்ளார். புனே மாவட்டம் அடுத்த பிம்பிரி
பகுதியில் வசிக்கும் செல்வந்தர் சங்கர் குராடே, கை, கழுத்து,
விரல்களில் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிபவர் ஆவார்.

அவர் சமூக வலைதளத்தில், காப்பரால் ஆன முககவசம்
அணிந்திருந்த வீடியோ ஒன்றை பார்த்துள்ளார்.
இதையடுத்து அதே போன்று தங்கத்தால் முககவசம் அணிய
வேண்டும் என ஆசை கொண்ட சங்கர் குர்காடே, தங்க வியாபாரி
ஒருவரை அணுகி உள்ளார். அவரும் சுமார் 3 லட்ச ரூபாய் செலவில்
மாஸ்க் செய்து கொடுத்துள்ளார்.

இந்த முகக்கவசம் சுவாசத்துக்கு இடையூறாக இல்லை என்றும்
முகக்கவசத்தில் நுண்ணிய துளைகள் உள்ளதாகவும் சங்கர் குராடே
கூறுகிறார். தனக்கு தங்கத்தின் மேல் எப்போது அளவில்லா பிரியம்
இருப்பதாக தெரிவிக்கும் சங்கர் குர்காடே, அதன் காரணமாகவே
இந்த முக கவசத்தை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த மாஸ்க் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்குமா என்பது
கேள்விக்குறியே என்கின்றனர் இணையவாசிகள்.

தினகரன்

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்

புதுடெல்லி:

இந்தியாவின் புனேயை தலைமையிடமாக
கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு
COVAXIN என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.

ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன்
இணைந்து கண்டுபிடித்துள்ள இந்த மருந்து பல்வேறுகட்ட
சோதனைகளுக்கு பிறகு, விலங்குகளுக்கு செலுத்தி
பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனை வெற்றியடைந்ததால், இந்த தடுப்பூசிக்கு
இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல்
அளித்துள்ளது.

COVAXIN தடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு
செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல்
அளித்துள்ளது.

அடுத்த மாதம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு

மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை தொடங்க உள்ளது.


மாலைமலர்

கொரோனா பாதிப்பு – ஜூன் 28

பெண் என்றால் இளக்காரமா?


பெண் என்றால் இளக்காரமா? E_1593264492

தென் அமெரிக்க நாடான பெருவில், லிமா என்ற நகரில்,
லா ரோசா நாடிகா என்ற பிரபலமான ஓட்டல் செயல்பட்டு
வருகிறது; பணக்காரர்களுக்கான ஓட்டல் இது.

இந்த ஓட்டலுக்கு, ஒரு இளம்பெண், தன் காதலருடன் சாப்பிடச்
சென்றார். அங்கு வந்த ஊழியர், இருவருக்கும், ஓட்டலில்
என்னென்ன உணவு வகைகள் உள்ளன என்பதை குறிப்பிடும்,
‘மெனு கார்டை’ கொடுத்தார்.

இளம் பெண்ணுக்கு கொடுத்த, ‘கார்டில்’ உணவு பொருட்களின்
விலை குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவரது காதலருக்கு
கொடுக்கப்பட்டதில், விலை குறிப்பிடப்பட்டிருந்தது.

ஓட்டல் முதலாளியிடம், ‘இப்படி வெவ்வேறு, ‘கார்டு’களை ஏன்
தருகிறீர்கள்?’ என, இளம்பெண் கேட்டார்.

அதற்கு அவர், ‘இங்கு ஜோடியாக வருவோரில், ஆண்கள் தான்,
‘பில்’லுக்கு பணம் செலுத்துவர். பெண்கள், சாப்பிடுவதுடன் சரி;
பணம் தருவது இல்லை. எனவே, ஜோடியாக வருவோரில்,
பெண்களுக்கு தரும், ‘மெனு கார்டில்’ விலையை குறிப்பிடுவது
இல்லை…’ என, கிண்டலாக பதில் அளித்தார். அந்த பெண்ணுக்கு
அவமானமாகி விட்டது.

பெண்களை அவமதிப்பதாகவும், பாரபட்சம் காட்டுவதுமாகவும்
கூறி, ஓட்டல் நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
அந்த இளம் பெண்ணுக்கு, 50 லட்சம் ரூபாய் அபராதமாக
செலுத்தும்படி, ஓட்டல் நிர்வாகத்துக்கு, கோர்ட் உத்தரவிட்டது.
பெண்களை இளக்காரமாக கருதிய ஓட்டல் உரிமையாளர்,
அபராதத்தை செலுத்தி, அழுது புலம்புகிறார்.

———————–
— ஜோல்னாபையன், வாரமலர்

சிவப்புதான் இவருக்கு பிடிச்ச கலரு!


சிவப்புதான் இவருக்கு பிடிச்ச கலரு! E_1593264447

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியாவில்
உள்ள ப்ரிஷ் என்ற சிறிய நகரத்தில் வசிப்பவர்,
ஜோரிகா ரெபர்னிச், 67.

இவருக்கு சிறு வயதில் இருந்தே, சிவப்பு நிறம் மீது ஒருவித
மயக்கம். 18 வயதான பின், இவரது நடவடிக்கையில் பெரும்
மாற்றம் ஏற்பட்டது. தன்னைச் சுற்றிள்ள இடங்கள், தன்னைச்
சார்ந்த இடங்கள் எல்லாம், சிவப்பாக இருக்கும்படி பார்த்துக்
கொண்டார்.

திருமணமான பின்னும், தன் கணவர் அனுமதியுடன், சிவப்பு
நிற மயக்கத்தை தொடர்ந்தார். வீடு, படுக்கை, சாப்பிடும்
தட்டு என, இவரது வீட்டில் உள்ள அனைத்தும் சிவப்பு நிறம்
தான்.

இவரது வீட்டு தோட்டத்தில் சிவப்பு ரோஜாவுக்கு மட்டுமே
இடம் உண்டு. தலைமுடிக்கு கூட, சிவப்பு நிற சாயம் தான்
பூசியுள்ளார்.

‘சிவப்பு நிறம் மீது, ஏன் இவ்வளவு காதல்…’ என, கேட்டால்,
‘காரணம் எல்லாம் சொல்ல தெரியலைங்க…’ என,
அப்பாவியாக சிரிக்கிறார்.

—————————–
— ஜோல்னாபையன்

வரி சலுகை முதலீடு குழப்பத்திற்கு தீர்வு

வரிச்சலுகை முதலீடு மேற்கொள்வதற்கான அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சலுகை காலத்தில்
மேற்கொள்ளப்படும் முதலீடு, எந்த நிதிஆண்டில் கணக்கில் எ
டுத்துக் கொள்ளப்படும் எனும் சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

வரி தாக்கல் செய்பவரே இதை தீர்மானித்துக் கொள்ளலாம்.
வழக்கமாக, மார்ச் மாதத்துடன் நிதியாண்டு முடிவடையும்.
நிதியாண்டிற்கான வரிச்சலுகை முதலீட்டை அதற்கு முன்
மேற்கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பு காரணமாக,
வரிச்சலுகை மேற்கொள்வதற்கான அவகாசம் இரு முறை
நீட்டிக்கப்பட்டு, ஜூலை மாத இறுதி வரை காலம்
அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜூலை மாதம் என்பது அடுத்த நிதியாண்டில்
வருவதால், இந்த காலத்தில் மேற்கொள்ளும் முதலீடு, கடந்த
நிதியாண்டில் பொருந்துமா? அல்லது அடுத்த நிதியாண்டிற்கு
உரியதா? எனும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

முதலீட்டை எந்த நிதியாண்டிற்கு வேண்டுமானால்
மேற்கொள்ளலாம் என்றும், வரித் தாக்கல் செய்யும் போது,
கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டை அல்லது அதற்கு
அடுத்த நிதியாண்டை வரித் தாக்கல் செய்பவர்கள் தேர்வு செய்து
கொள்ளலாம் என, வல்லுனர்கள் கூறுகின்றனர்.

முதலீடு பொருந்தும் ஆண்டை தேர்வு செய்து கொள்ளலாம்
என்றாலும், ஏதேனும் ஒரு நிதியாண்டிற்கே இது பொருந்தும்
என்றும் விளக்கம் அளிக்கின்றனர்.

தினமலர்

« Older entries