வீச வேண்டும் காற்று!

sm13

வந்து வந்து வீசவேண்டும் 
வாசம் உள்ள தென்றலே!
சிந்து சிந்தும் குயிலின் பாட்டைத் 
தந்து செவியில் ஊட்டுக!

சாமரம் நீ வீச வேண்டும் 
பூமரங்கள் மூலமாய்!
மா மரங்கள் கனியும் இள
வேனில் தந்த தென்றலே!

குட்டித் தம்பி விட்ட பட்டம் 
எட்டி எட்டிப் பறக்கவே
தொட்டு நீயும் உயரே ஏற்ற 
தோழன் போல உதவு நீ!

இலைகள் யாவும் குலுங்க வைத்து 
இசையை வழங்கு தென்றலே!
அலைகள் யாவும் ஊஞ்சலாக்கி 
ஓடம் ஆட வருக நீ!

வளைவில் லாத காட்டு மூங்கில் 
துளையில் நுழையும் பொழுதிலே 
விளையும் நாதம் கேட்பதற்கு 
வீச வேண்டும் தென்றலே!

அங்கும் இங்கும் எங்கும் தங்கி 
ஆண்டவன் போல் வாழ்கின்றாய்!
எங்கள் மூச்சில் கலந்ததாலே
இயக்கும் மகா சக்தி நீ!

By சி.விநாயகமூர்த்தி

நன்றி-சிறுவர்மணி

பொங்கல் விழா!

By தளவை இளங்குமரன்- சிறுவர் மணி

sm13


வெள்ளைநிறச் சுண்ணாம்போ 
விரும்பும் பிற வண்ணங்களோ 
இல்லங்களில் தீட்டி மிக 
எழில் துலங்கப் படுத்தும் விழா! 

பள்ளியுடன் கல்லூரி 
பல்கலைக் கழகங்களும் 
உள்ளபடி விடுப்பளித்துத் 
உயர்மதிப்புக் கொடுக்கும் விழா!

அரிசி, வெல்லம், பருப்புடனே 
ஆயிரம் ரூபாய்களையும் 
அரசினரும் அரும்பரிசாய் 
ஆர்வமுடன் அளிக்கும் விழா!

தொடர்வண்டிப் பேருந்தில் 
தொத்தக் கூட இடம்கிடையா 
இடர்களையும் சிறப்புந்து 
ஏற்பாட்டால் துடைக்கும் விழா!

வார, மாத நாளிதழ்கள் 
வைத்தழகாய் நடத்திடுவோர் 
ஓரிதழைச் சிறப்பிதழாய் 
உலவவிட்டுக் களிக்கும் விழா!

ஏடுகளில் எழுதிவரும் 
எழுத்தாளர் கவிஞர் பலர் 
பாடல் கதை கட்டுரைகள் 
படைத்துயர்த்திப் பிடிக்கும் விழா!

அலையலையாய்க் கலைநிகழ்ச்சி 
அடுக்கடுக்காய் அடுத்தடுத்து 
தொலைக்காட்சி வானொலியில் 
தொடர்ச்சியாக நடத்தும் விழா!

காட்டிலுள்ள இஞ்சி, மஞ்சள்
கரும்பு வாழை இவற்றையெல்லாம் 
கூட்டியொன்றாய்ச் சந்தைகளில் 
கொண்டு வந்து குவிக்கும் விழா!

வீட்டிலுள்ள புழக்கத்திற்கு 
வேண்டாத பொருளையெல்லாம் 
போட்டுத் தெரு ஓரங்களில் 
போகியிலே கொளுத்தும் விழா!

மாவிலையின் தோரணங்கள் 
மாதரிடும் கோலங்களால் 
“வா’ எனவே தைத் தாயை 
வரவேற்று அழைக்கும் விழா!

வாசலிலே அடுப்புமிட்டு
வாசமுள்ள பொங்கலிட்டு 
ஆசையுடன் உதித்துவரும் 
ஆதவன் முன் படைக்கும் விழா!

துள்ளிவரும் காளைகளைத் 
தோள்வலியால் வாலிபர்கள் 
வெள்ளம் அணை தடுப்பதுபோல் 
வீரத்துடன் அடக்கும் விழா!

பழந்தமிழர் மரபினையும் 
பறை சாற்றும் “கபடி’ யெனும் 
விளையாட்டில் மின்னொளியில் 
விடியும்வரை திளைக்கும் விழா!

தெள்ளுதமிழ்ப் பொதுமறையாம் 
திருக்குறளைப் புனைந்து தந்த 
வள்ளுவரின் புகழையிந்த 
வையெமெங்கும் பரப்பும் விழா!

எறும்புக் கூட்டம் சொல்லும் பாடம்

சிற்றெறும்பு ஒன்று வீட்டைச்
சுற்றி வந்தது
சிதறிக் கிடந்த ரொட்டித் துண்டைக்
கண்டு கொண்டது

பற்றியதை இழுத்துச் செல்ல
முயற்சி செய்தது
பலிக்கவில்லை, வந்த வழி
பயணம் செய்தது

சற்று நேரம் கழித்து மீண்டும்
திரும்பி வந்தது
சங்கிலி போல் எறும்புக் கூட்டம் 
தொடர்ந்து வந்தது

ஒற்றுமையாய் இரையைக் கவ்வி
இழுத்துச் சென்றது
ஒன்று பட்டால் உண்டு வலிமை
உணர்த்திச் சொன்னது!

————————–
-கவிஞர் தளவை இளங்குமரன்
பிஞ்சு நிலா- கவிதைத் தொகுப்பிலிருந்து

தங்க நிலா ஓடிவா..!! – சிறுவர் பாடல்

கூண்டுக்கிளி – சிறுவர் பாடல்

சிறுவன்

பாலைக் கொண்டு தருகின்றேன்,
பழமும் தின்னத் தருகின்றேன்;
சோலைக் கோடிப் போகவழி
சுற்றிப் பார்ப்ப தேன்கிளியே?

காட்டி லென்றும் இரைதேடிக்
களைத்தி டாயோ? உனக்கிந்தக்
கூட்டில் வாழும் வாழ்வினிலே
குறைகளேதும் உண்டோ சொல்?

கிளி
—-
சிறையில் வாழும் வாழ்வுக்குச்
சிறகும் படைத்து விடுவானோ?
இறைவன் அறியாப் பாலகனோ?
எண்ணி வினைகள் செய்யானோ?

பாலும் எனக்குத் தேவையில்லை,
பழமும் எனக்குத் தேவையில்லை;
சோலை எங்கும் கூவிநிதம்
சுற்றித் திரிதல் போதுமப்பா!
————————–
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

முக்கனி – சிறுவர் பாடல்

பள்ளி சீருடை – சிறுவர் பாடல்

தென்னை மரம் – சிறுவர் பாடல்

மழை நீர் சேகரிப்பு – சிறுவர் பாடல்

குரங்கு – சிறுவர் பாடல்

« Older entries