அணில் தேவதை! – (சிறுவர் கதை)

அணில் தேவதை! - (சிறுவர் மலர்) E_1573188969

களத்துார் கிராமத்தில், பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார்;
அவருக்கு, நில புலன்கள் அதிகம். அவரது விளை நிலத்தில் தான்,
அவ்வூர் மக்கள் வேலை செய்து பிழைத்தனர்.

களத்து மேட்டிலிருந்து, கால்நடை பராமரிப்பு வரை,
வேலையாட்கள் நிறைந்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு
கொடுக்கும் கூலியோ மிகக் குறைவு; இதனால், மன வருத்தம்
இருந்தாலும், முதலாளியிடம் முறையிட, துணிச்சல் வரவில்லை.

ஒருநாள் –
அவரது பழ தோட்டத்தில், சில விலங்குகள் புகுந்தன. பழங்களை
தின்றும், மிதித்தும் பாழ்படுத்தின. அவற்றைப் பிடிக்க பொறிகள்
அமைக்கப்பட்டன.

பொறி ஒன்றில், அகப்பட்டது அணில்; மாலையில், காலாற உலாவ
வந்த பண்ணையார், அதைப் பார்த்தார். பின்னங்கால்கள்
பொறியில் சிக்கிய நிலையில், தவித்துக் கொண்டிருந்தது. ஒரு
கட்டையால், அதை அடிக்கப் போனார்.

அப்போது, ‘ஐயா… உங்கள் செய்கை தவறானது; மண்ணின் வளத்தை
நீங்கள் பயன்படுத்துவது போல், உங்கள் தோட்டத்து கனிகளை
நாங்கள் பயன்படுத்துகிறோம்; அனைத்தும் இயற்கை தானே…
என்னைக் கொல்வது, எந்த வகையில் நியாயம்…’ என்று துணிச்சலுடன்
கேட்டது.

பண்ணையார் திகைத்து விட்டார். அணிலின் கேள்விக்கு, அவரால்
பதில் கூற முடியவில்லை; அதை விடுவித்தார்.

அந்த அணில், ஒரு தேவதையாக மாறி, ‘ஐயா… உங்களுக்கு என்றும்
கடமைப்பட்டிருக்கிறேன்…’ என்று கூறியபடி துள்ளிக் குதித்து ஓடியது.

அதை தடுத்து, ‘தேவதையே… உன் உயிரைக் காத்த எனக்கு, எதாவது
வரம் தரலாமே…’ என்று கேட்டார்.

‘வரம் கொடுப்பதில், எந்த சிக்கலும் இல்லை; ஆனால், பெறுவதற்கு,
சில தகுதிகள் வேண்டும்; அப்போது தான், அதை அனுபவிக்க முடியும்…’
‘அப்படியா… வரம் பெற, நான் என்ன செய்ய வேண்டும்…’
‘உங்கள் உடலை, சோம்பல் எனும் பிசாசு பிடித்துள்ளது; அதை விரட்ட
வேண்டும்; ஆறு மாத காலம், வியர்வை சிந்த உடல் உழைத்தால்,
அந்த பிசாசு ஓடி விடும்…’ என்றது தேவதை.

மதிப்பு மிக்க வைரக்கற்களையும், நிலத்தையும் வரமாக கேட்கும்
ஆசையில், இதற்கு சம்மதித்தார்.

வயல்களில் நீர்ப் பாய்ச்சுவது, களையெடுப்பது, அறுவடை செய்வது,
கால்நடைகளை மேய்ப்பது, குளிப்பாட்டுவது, தீவனம் போடுவது,
கோழி முட்டைகளை சேகரிப்பது என, மற்றவர்களுடன் கடுமையாக
உழைத்தார்.

ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. நாளாக நாளாக, உழைப்பின் மீது
அவருக்குப் பற்று ஏற்பட்டது. அது, மகிழ்ச்சியான அனுபவமாக
மாறியது.

உடல், நலம் பெற்று, அவரது கட்டுப்பாட்டுக்குள் வந்தது; களைப்பு
ஏற்பட்டதால், நன்றாக உறங்கினார். பசியை உணர்ந்ததால், உண்ணும்
உணவில் சுவை கூடியதாக பட்டது.

உழைப்பிலுள்ள சிரமங்களை தெரிந்து கொண்டார். எனவே,
அனைவருக்கும் கூலியை உயர்த்தினார். பணியாளர்கள் மகிழ்ந்து,
மனதார வாழ்த்தினர்.

தேவதையை சந்திக்கும் நாள் வந்தது.

அன்று, ‘தேவதையே… நான் நன்றாக உழைக்கிறேன்; வியர்வையில்
தினமும் நனைகிறேன்; வாழ்நாள் முழுவதும் உழைத்தபடியே இருப்பேன்.
என்னிடம் சோம்பல் அண்டவே அண்டாது. இப்போது எனக்கு வரம்
தரலாம்…’ என்று பணிவாக கேட்டார்.

‘ஐயா… நீங்கள் உழைக்க துவங்கியது மகிழ்ச்சி தருகிறது. ஆனால்,
உங்கள் மனம் இன்னும் தகுதியடையவில்லை. கோபத்தின் போது,
ஒரு கரடியின் மூர்க்கத்தை அடைகிறீர்; அதிலிருந்து, விலக
வேண்டும்…’ என்றது தேவதை.

அதற்கு ஒப்புக் கொண்டு, வீடு திரும்பினார் பண்ணையார்.

திருக்குறள், கொன்றை வேந்தன் போன்ற, அற நுால்களைக் கற்க
துவங்கினார்; அறிவுரைகளை உணர்ந்து நடந்தார். அன்பும், பாசமும்
காட்டியதால், மக்கள் மத்தியில், மதிப்பும், மரியாதையும் கூடியது.

தேவைக்கு அதிகமாக இருந்தவற்றை, ஏழை எளியவர்களுக்கு
கொடுத்தார். மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அப்போது தேவதை, ‘ஐயா… உங்களுக்கு அனைத்து தகுதிகளும்
உள்ளன; என்ன வரம் வேண்டுமானாலும் கேளுங்கள்…’ என்றது.

யோசித்த பண்ணையார், ‘என்னை நல்வழிப்படுத்திய அணில்
தேவதையே… தேவையான அனைத்தும், என்னிடமே இருப்பதாக
உணர்கிறேன். இந்த வாழ்க்கையை, என் ஆயுள் முழுவதும் நீடிக்கச்
செய்…’ என்று வணங்கினார்.

பண்ணையாரை வாழ்த்தி மறைந்தது தேவதை.

செல்லங்களே… அனுபவம் சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல; நிறைந்த
செல்வமும் கூட… கடுமையாக உழைத்து, நல் அனுபவத்தை
பெறுங்கள்.

சிறுவர் மலர்

 யாரும் முட்டாள் இல்லை -சிறுவர் கதை

 யாரும் முட்டாள் இல்லை - சிறுவர் கதை Mq91Juf

முழுவதும் துரத்து! -சிறுவர் கதை

கதை

அந்த மரத்தில் இரண்டு குருவிக்குஞ்சுகளும் ஒரு தாய்க்குருவியும்
இருந்தன. ஒரு நாள் அங்கே வந்த கழுகு ‘‘இந்த இடம் எனக்குத்
தேவை. நீ ஓடிவிடு!” என்றது.

‘‘நான் பல மாதங்களாக இங்கே இருக்கிறேன். என் குஞ்சுகளும்
பறக்க முடியாது. எப்படி அழைத்துச்செல்ல முடியும்?” என்றது
தாய்க்குருவி.

‘‘அதெல்லாம் தெரியாது. தகராறு செய்தால் உன் குஞ்சுகளைத்
தின்றுவிடுவேன். வெளியே சென்று வருகிறேன். அதற்குள்
முடிவெடு” என்று மிரட்டிவிட்டுச் சென்றது கழுகு.

அதே மரத்தில் இருந்த ஓணான், அணில், மரங்கொத்தி, குரங்கு
ஆகியவற்றிடம் ஆலோசித்தது குருவி. கழுகை எதிர்த்து
சண்டையிட முடியாதல்லவா?

ஒரு திட்டம் உருவானது. சற்று நேரத்தில் திரும்பிவந்த கழுகு,
‘‘என்ன முடிவு செய்திருக்கிறாய்?” என்று கேட்டது.

‘‘உங்கள் இருவருக்கும் ஒரு போட்டி. அதில் தோற்கிறவர்கள்
இங்கிருந்து சென்றுவிட வேண்டும்” என்றது குரங்கு.

‘‘என்ன போட்டி?” என்று கேட்டது கழுகு.

‘‘என்னை இந்த இடத்தைவிட்டு 5 நிமிடங்களுக்கு முழுமையாக
விரட்ட வேண்டும்’’ என்றது தாய்க்குருவி.

‘‘ப்பூ… இவ்வளவுதானா? கண்ணுக்கு எட்டாத தொலைவில்
விரட்டுகிறேன்” என்று ஆணவமாக சொன்னது கழுகு.

மரங்கொத்தி சீட்டி அடித்ததும், ‘விருட்’ எனப் பறந்த குருவி, மரத்தில்
இருந்த சிறிய பொந்தில் நுழைந்துவிட்டது. கழுகு திகைத்துப்போனது.
அதில், நுழைய முடியவில்லை.

‘‘ம்… யோசிக்காமல் போட்டியை ஒப்புக்கொண்டது தப்புதான்.
பிழைச்சு போ!” எனச் சென்றுவிட்டது கழுகு.

தாய்க்குருவி, குஞ்சுகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தது.

நன்றி-விகடன்

வித்தை காட்டறேன் -சிறுவர் கதை

தன்னம்பிக்கை – சிறுவர் கதை

தினமணி-சிறுவர்மணி

சிறுகதை – சுத்தி சுத்தி வந்தீக

ஏழை நாடோடி முதியவர் ஒருவர் ஒரு பெரிய மாளிகை முன் நின்று, “”வீட்டில் யார்? கதவைத் திறங்கள். இரவு மட்டும் தங்கிச் செல்ல அனுமதியுங்கள்!” என்று கெஞ்சிக் கேட்டார். குரல் கேட்டு வெளியில் வந்தாள் ஒரு பெண். முதியவரைப் பிச்சைக்காரன் என்று நினைத்து, “”அதெல்லாம் முடியாது. இடமில்லை போய்விடு!” என்று விரட்டினாள்.


முதியவர் அங்கிருந்து நடந்து, ஒரு சிறிய குடிசை வீட்டு முன்நின்று கதவைத் தட்டி முன்போலவே தங்குவதற்கு இடம் கேட்டார். ஒரு பெண்மணி வெளியில் வந்து, “”வாருங்கள் ஐயா. இங்கு நீங்கள் தங்கலாம். சிறிய இடம். அதனால் சிரமம் இருக்கும். பொறுத்துக் கொள்ள வேண்டும்,” என்று வரவேற்று உபசரித்தாள். முதியவர் மகிழ்ந்தார். உள்ளே போனார். சுற்றுமுற்றும் பார்த்தார்.

ஏழைக்குடும்பம்; இரண்டு மூன்று குழந்தைகள். நல்ல துணிமணி இல்லை. நைந்து கிழிந்து போனவற்றையே அக்குழந்தைகள் அணிந்திருந்தனர். பிறகு அந்தப் பெண்மணி வீட்டிலிருந்த சொற்ப உணவைக் கொண்டு வந்து வைத்து முதியவரை சாப்பிட அழைத்தாள். “”என்னிடம் கொஞ்சம் உணவு இருக்கிறது. எல்லாரும் சேர்ந்து உண்ணலாம்!” என்றவாறு தான் கொண்டு வந்திருந்த பொட்டலத்தை அவிழ்த்து, எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார் முதியவர்.

குழந்தைகள் உண்டு மகிழ்ந்தனர். மறுநாள் பொழுது விடிந்தது. தன் பயணத்தைத் தொடர்ந்த முதியவர் கிளம்பும்போது, “”அம்மணி! நீ காலையில் முதன் முதலில் செய்யத் தொடங்கும் வேலை மாலையில் இருட்டும் வரை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்!” என்று கூறிவிட்டுச் சென்றார்.

அவருக்கு விடை கொடுத்துவிட்டு உள்ளே சென்ற பெண்மணி குழந்தைகளுக்குப் புதுச்சட்டைகள் தைக்க விரும்பினாள். அவளிடம் கொஞ்சம் புதுத்துணி இருந்தது. எல்லாருக்கும் போதுமா என்பது தெரியவில்லை. எனவே, அளந்து பார்க்கத் தொடங்கினாள். அவ்வளவுதான்!  அளக்க அளக்க புதுத்துணி வளர்ந்து கொண்டே போயிற்று. அவளும் சளைக்கவில்லை. மாலைக்குள் துணி  மலைபோல் குவிந்துவிட்டது. தேவையான துணியை மட்டும் வைத்துக் கொண்டு மிச்சத்தை விற்று, பொருள் ஈட்டி அதைக் கொண்டு நிம்மதியாக குழந்தைகளை வளர்க்க நினைத்தாள்.

அப்பெண்மணி துணியை அளக்கப் பயன்படுத்திய கோல், பக்கத்துவீட்டுப் பணக்காரியுடையது. மாலையில் அவளிடம் அதைக் கொண்டு போய் திரும்பக் கொடுத்தாள். கூடவே தன் வீட்டில் நடந்த அற்புதங்களைப் பெருமையாகக் கூறினாள். அப்போதுதான், அந்த முதியவரைத் தான் விரட்டியடித்தது அந்தப் பணக்காரிக்கு நினைவுக்கு வந்தது. அவரைத் தன் வீட்டில் தங்க அனுமதிக்காமல் போனோமே என்று வருந்தினாள்.

இப்போதுதான் என்ன மோசம் போய்விட்டது என்று எண்ணிய அவள் தன் குதிரை வண்டிக்காரனை அழைத்தாள். “ஓடு ஓடு! உடனே போய், அந்த கிழப்பிச்சைக்காரன் எங்கேயாவது நடந்து போய்க் கொண்டிருப்பான். அவனை மறித்து வண்டியில் ஏற்றி நம் வீட்டுக்கு உடனே அழைத்து வா!” என்று அவனை விரட்டியடித்தாள்.


அதற்குள் கிழவர் நீண்ட தூரம் போய்விட்டார். அவரை அணுகிய வண்டிக்காரன், “”ஐயா, என் எஜமானி உங்களைக் கையோடு அழைத்துவரச் சொல்லி வண்டி அனுப்பியிருக்கிறார்!” என்றான். முதியவருக்குத் திரும்பிச் செல்ல விருப்பமில்லை; வர மறுத்தார். ஆனால், வண்டிக்காரனோ விடுவதாக இல்லை. “”ஐயா! என் எஜமானி  மிகவும் கோபக்காரி. நான் மட்டும் தனியாகத் திரும்பிச் சென்றால் என்னை வேலையை விட்டே நிறுத்தி விடுவாள். எனவே தயவு செய்து என்னுடன் வாருங்கள்!” என்று கெஞ்சினான்.

முதியவருக்குப் பாவமாக இருந்தது.  வண்டியில் ஏறிக் கொண்டார்.  பணக்காரி அவரை வணங்கி வரவேற்றாள். உள்ளே அழைத்துப் போனாள். சிறப்பான அறுசுவை உணவுகளை வழங்கினாள். மிருதுவான பஞ்சுமெத்தை ஒன்றை விரித்துப் போட்டு,  “”முதியவரே, நிம்மதியாக இதில் படுத்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்!” என்று கேட்டுக் கொண்டாள்.

அதிகாலையில் துயிலெழுந்த முதியவர் தனது பயணத்துக்கு ஆயத்தமானார். அதற்குள் பணக்காரிக்கு அவசரம்.


“”சொல்லுங்கள் முதியவரே! இன்று நான் என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டாள். அதற்கு அந்த முதியவர்,  முதல் நாள் அந்தப் பெண்ணிடம் கூறியது போலவே, “”அம்மணி! நீ காலையில் முதன் முதலில் செய்யத்  தொடங்கும் செயல், நிற்காமல் மாலையில் இருட்டும் வரையில் தொடர்ந்து கொண்டே இருக்கும்!” என்றார்.


அவ்வளவுதான்! அடுத்தகணம், அந்த பணக்காரி முதியவருக்கு விடை கொடுப்பதைக் கூட மறந்து விட்டாள். வீட்டுக்குள் ஓடினாள். புதுத்துணி ஒன்றை அளப்பதற்கு அளவுகோலை எடுத்துக் கொண்டாள். புதிய லினன் துணி அடுத்த அறையில் இருந்தது. அதைக் கொண்டு வர ஓடலானாள். அந்த நேரம் பார்த்து அவள் கால்களில்  ஒரு கோழி சிக்கிக் கொண்டது. அவள் தடுமாறினாள்.

துணியை அளக்க வேண்டியதை மறந்தாள். சினத்துடன்  கோழியை அடிக்க அளவுகோலை ஓங்கிக் கொண்டு ஓடினாள். அவள் செய்த அந்த முதல் செயல், அவளைத் தொற்றிக் கொண்டுவிட்டது. பாவம்! மாலை வரையில் கன்னாபின்னா என்று திட்டிக் கொண்டே, அளவுகோலை ஓங்கியவாறு கோழியைத் துரத்தித் தடுமாறிக் கீழே விழுந்து புரண்டு, எழுந்து, மீண்டும் விழுந்து, மீண்டும் எழுந்து ஓடிக் கொண்டே இருந்தாள். அந்தப் பேராசை பிடித்த பணக்காரிக்குச் சரியான தண்டனை கிடைத்துவிட்டது.

நன்றி-சிறுவர்மலர்

கயிறு விற்ற பணம்! – சிறுவர் கதை

அரசருடன் நகர்வலம் சென்றார் அமைச்சர் அப்பாஜி.
சற்று காலதாமதமாக திரும்பினர்.
அரண்மனை அலுவல் அறையில் அமர்ந்தார் அரசர்.
அந்தப்புறக் கதவு சாத்தப்பட்டிருந்தது.
அரசி துாங்கியிருக்கலாம் என எண்ணி,
‘தேவி… கதவை திற…’ என்றார் அரசர்.
‘திறக்க மாட்டேன்…’
உள்ளிருந்து, அரசியின் கோபக் குரல் வந்தது.

‘சிறு குழந்தை போல அடம்பிடிக்காதே…’
‘என் தம்பியை அமைச்சராக்க உறுதி அளித்தால்
திறக்கிறேன்…’
கடுமையை காட்டினாள் அரசி.
விஜயநகர சாம்ராஜ்யத்துக்கு பேரரசர் என்றாலும்,
மனைவி சொல்லுக்கு கட்டுப்பட்டுத்தானே ஆக வேண்டும்.

‘மடையன் என்று தெரிந்தும் பதவி கேட்கிறாயே. நியாயமா…’
‘மடையனோ என்னவோ… மந்திரி பதவி அளித்தால் தான்,
கதவை திறப்பேன்…’
மேலும் குரலை கடுமையாக்கினாள்.
‘மூன்று முறை வாய்ப்பு கொடுத்தும், வெல்லாதவன் அவன்…’
‘அப்பாஜி பெரிய அறிவாளியோ…’
‘அவரின் அறிவு, தேசம் கடந்தது…’
‘எது எப்படியோ… என் தம்பி மந்திரியாக வேண்டும்…’

‘சரி… நாளையே ஆக்கி விடுகிறேன்…’
அந்தப்புரத்தின் கதவு திறந்தது.
‘பல அரசுகள் நாசமாய் போனதற்கு காரணம், அவையில்,
சொந்த பந்தங்களை சேர்த்ததால் தான். எப்படியோ
போகட்டும்…’
சற்று கோபத்துடன் சொன்னார் அரசர்.
மறுநாள் காலை –
அப்பாஜியை அழைத்து வர உத்தரவிட்டார்.
‘வணக்கம் அரசே…’
‘ஒரு வாரத்திற்கு அரண்மனை பக்கம் வராதீர்; வீட்டிலேயே
ஓய்வு எடுங்கள்…’
அரசரின் மனக்குறிப்பை உணர்ந்தார் அப்பாஜி.
‘அப்படியே செய்கிறேன்…’
வணங்கியபடி இல்லம் நோக்கி நடந்தார்.

அரசவைக் கூடியது.
அரசியின் தம்பி தேவதேவன், அமைச்சராக பொறுப்பேற்றான்.
இரண்டு நாட்கள் கடந்தன.
தேவதேவனை அழைத்தார் அரசர்.
‘அதோ இருக்கிறதே கிணற்றுக் கயிறு; அதை வைத்து,
ஆயிரம் பணத்தை, ஒரே வாரத்தில் சம்பாதித்து தர வேண்டும்…’
உத்தரவைக் கேட்டு அதிர்ந்தான்.

‘கயிற்றால் நீர் இறைக்கலாம்; பாதையை அளக்கலாம்;
ஆட்டை, மாட்டைக் கட்டலாம். பணம் சம்பாதிக்க முடியுமா…
அரசருக்கு பித்துப் பிடித்து விட்டதா’ என புலம்பியபடி
சகோதரியை பார்க்க புறப்பட்டான்.
‘வாப்பா… அமைச்சராகி விட்டாய், மகிழ்ச்சி தானே…’

‘மகிழ்ச்சியா… என் தோளில் பாருங்கள்… கிணற்றுக் கயிறு.
இதை வைத்து, ஒரே வாரத்தில் ஆயிரம் பணம் சம்பாதிக்க
வேண்டுமாம். நடக்கிற காரியமா… விற்றால், சல்லியும்
கிடைக்காதே…’

தலைமேல் கைவைத்து சோகமாய் அமர்ந்தான்.
‘அரசர் சொன்னால் அர்த்தம் இருக்கும்… யோசித்துப் பார்…’
‘யோசிக்க என்ன இருக்கு…’ கோபமாய் கேட்டான்.
அரசிக்கு ஒன்றும் புரியவில்லை.
‘சரி… அரசரிடம் பேசுகிறேன்…’

தம்பியை அனுப்பியபின், மூளையை கிண்டினாள்.
ஒன்றும் தோன்றவில்லை.
அன்றிரவு –
‘என் தம்பியை பிடிக்காததால் தான், கிணற்றுக் கயிறை
கொடுத்து, பணம் சம்பாதிக்க கூறியிருக்கிறீர்…’ கோபத்துடன்
கேட்டாள் அரசி.

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். ஒரு விஷயத்தை,
பல கோணங்களில் யோசித்தால் விடை வரும். அப்பாஜியிடம்,
இதே கயிறை கொடுக்கிறேன். சம்பாதித்து தரவில்லை எனில்
பதவியை பறித்து விடுகிறேன்…’ தீர்க்கமாக சொன்னார் அரசர்.

ஒரு வாரத்திற்குப் பின் அரசரை சந்தித்தான் தேவதேவன்.
‘என்னால் முடியவில்லை… வேறு ஏதாவது செய்கிறேன்…’
சலிப்புடன் கிணற்றுக் கயிறை திருப்பிக் கொடுத்தான்.
அரசர் உத்தரவுப்படி அப்பாஜியை அழைத்து வந்தனர்.

‘கிணற்று கயிற்றால், ஒரு வாரத்தில், ஆயிரம் பணம் சம்பாதிக்க
முடியுமா…’
‘நிச்சயம் முடியும் அரசே…’
கயிற்றுடன் அரண்மனையை விட்டு வெளியேறினார் அப்பாஜி.

மாட்டு வண்டியில், முரசு அறைவோனுடன் அமர்ந்தார்.
வீதி வீதியாக சென்றது வண்டி.

‘பொதுமக்களுக்கோர் செய்தி… இதோ, இந்த கிணற்று கயிறின்
அளவுக்கு மேல் கட்டிய வீட்டை இடிக்க உத்தரவிட்டுள்ளார்
அரசர். எல்லா வீட்டையும் இந்த கயிற்றால் அளக்க வேண்டும்.
உயரமாக இருந்தால், ஒரு அடிக்கு, 10 பணம் தண்டமாக ஒரே
வாரத்துக்குள் செலுத்த வேண்டும்…’

  • பறை சாற்றிக்கொண்டிருந்தான் முரசு அறைவோன்.

இரண்டே நாளில், திட்டமிட்டதற்கு அதிகமாக பல மடங்கு பணம்
சேர்ந்தது!

அப்பாஜியின் அறிவைப் பாராட்டிய அரசர், கணிசமாக
அன்பளிப்பும் வழங்கினார்.

அன்று இரவு, ‘தேவி… கயிறு என்று அலட்சியமாக பேசினாயே…
அதை வைத்து, எவ்வளவு பணம் சம்பாதித்து கொடுத்துள்ளார்
அப்பாஜி… அவருக்கு இணையாக உன் முட்டாள் தம்பியை
பேசுகிறாயே…’ என்றார் அரசர்.

‘இன்னொரு சோதனை வையுங்கள்… நிச்சயம், என் தம்பி
வெல்வான்…’

‘மேலும் மேலும், முட்டாள் என அறிய ஆசைப்படுகிறாய் போலும்…’
சிரித்தபடியே கூறினார் அரசர்.

குட்டீஸ்… வகுப்பில் அறிவாளி மாணவர்களைப் பார்த்து
பொறாமை படக்கூடாது அவர்களைப் போல் அறிவை வளர்க்க

முயல வேண்டும்.

சிறுவர் மலர்


முட்டாள் யார்?

கானகத்தில், புலியும், கழுதையும் நட்பாய் இருந்தன.
ஒரு நாள், ‘இந்த நீல நிற புற்கள் தான் எவ்வளவு அழகு…’ என்று ஆச்சரியத்துடன் கூறியது கழுதை.


‘நண்பா… புல்லின் நிறம் நீலமல்ல; பச்சை…’ என்றது புலி.
அதை ஏற்க மறுத்து, ‘புல்லின் நிறம் கூட தெரியாதா மக்கு நீ…’ என்று கிண்டலடித்தது கழுதை.
‘சிங்கராஜாவிடம் போய், யார் மக்கு என கேட்கலாம், முட்டாள் கழுதையே…’ என்று அழைத்தது புலி.
சிங்கத்தின் முன் அவை நின்றன.
‘மகாராஜா… புல்லின் நிறம், நீலம் என்று புலிக்கு புரியவேயில்லை; அசடாகவே உள்ளது; இந்த முட்டாளை, ஓர் ஆண்டு சிறையில் அடையுங்கள்…’ என்றது கழுதை.


அது கூறியபடி தண்டனையை நிறைவேற்ற தீர்ப்பளித்தது சிங்கம்.
மகிழ்ச்சியை தாங்க முடியாமல், கொடூரமாய் பாடியவாறு வெளியேறியது கழுதை.
நடந்ததை நம்ப முடியாமல் மிகவும் பரிதாபத்துடன், ‘மகாராஜா… புல்லின் நிறம் என்ன…’ என்றது புலி.


‘பச்சை…’
‘அதை தானே, நானும் சொன்னேன்…’
‘சரியாகத்தான் சொல்லியிருக்கிறாய்…’
‘பின் ஏன் எனக்கு தண்டனை தந்தீர்… நான் செய்த தவறு என்ன…’


‘அருமைப்புலியே… உன் வீரம் என்ன… அறிவு கூர்மை என்ன… கழுதை போன்ற பொதி சுமக்கும் விலங்குடன் நட்பு பூணலாமா நீ… அதனுடன் சண்டை போட்டு, என் முடிவை தெரிந்து கொள்ள வந்திருக்கிறாய்… சிந்திக்கும் திறனற்றவரோடு பழகி, முட்டாளாகி இருக்கிறாய். அதற்காகவே இந்த தண்டனை…’ என்றது சிங்கம்.
குட்டீஸ்! தகுதியறிந்து நட்பு பாராட்ட வேண்டும். நல்ல தகுதியுள்ளவர்களிடம் தான் அறிவைப் பெற முடியும்.

மல்லிகா குரு

சிறுவர் மலர்

புத்திசாலி பிழைப்பான்

பாதை எங்கு போகிறது – சிறுவர் கதை

« Older entries Newer entries »