பணம்…பணம்

ஒருமுறை-
கீழாநெல்லி என்ற ஊரில் இருந்த ஆற்றில்,
ஓடக்காரர் ஓடத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.
அந்த ஓடத்தில் கருமியும், எண்ணெய் வியாபாரி
ஒருவரும் அமர்ந்திருந்தனர்.

ஓடம் நதியின் நடுவே சென்ற நேரத்தில், முதலை ஒன்று
ஓடத்தை வழி மறித்தது. தன் வாயை, “ஆ’வென பிளந்து
காட்டியது.

முதலையைக் கண்டதும் மூவரும் திடுக்கிட்டனர்.
வாயைப் பிளந்த முதலை மூவரையும் நோக்கியது.

“நான் மிகவும் பசியோடு இருக்கிறேன். எனவே, உங்கள்
மூவரில் ஒருவர் எனக்கு இரையாகிட வேண்டும்.
மூவரில் யார் இரையாகப் போகிறீர்கள் என்பதை நீங்களே
தீர்மானம் செய்து கொள்ளுங்கள்,” என்றது.

உடனே ஓடக்காரர் அழ ஆரம்பித்தார்.

“ஐயோ! நான் என்ன செய்வேன்! என்னை நம்பி என்
குடும்பத்தார்கள் இருக்கிறார்கள். என்னை முதலை விழுங்கி
விட்டால், அவர்களின் கதி அதோகதியாகிவிடும்,” என்றார்.

இதனைக் கேட்ட எண்ணெய் வியாபாரியோ, “என் பெண்ணுக்கு
திருமண ஏற்பாடு செய்துள்ளேன். நான் முதலைக்குப் பலியாகி
விட்டால், அவளது திருமணம் நின்றுவிடும். அவள் வாழ்க்கையே
கேள்விக் குறியாகிவிடும்,” என்றார்.

உடனே கருமி, “”ஐயோ… அம்மா…” என்று தன் வாயிலும், வயிற்றிலும்
அடித்துக் கொண்டார்.
“என் பணமெல்லாம் யார் அனுபவிப்பார்கள்! இப்போது கூட என்
மடி நிறைய பணம் இருக்கிறது. முதலை என்னை விழுங்கினால்
இந்தப் பணமும் முதலையின் வாயில் சென்று விடுமே!
நான் இறக்க மாட்டேன். இங்கிருந்து தப்பித்துச் சென்றிடுவேன்.
நீங்கள் இருவரில் ஒருவர் முதலைக்கு இரையாகுங்கள்,” என்றார்.

அந்நேரம் முதலையானது ஓடத்தின் மீது பாய்ந்து கருமியை
விழுங்கிய பின்னர் மற்ற இருவரையும் பார்த்தது.

“வியாபாரியே! நீ உன் மகளுக்காக வாழ்கிறாய்!
ஓடக்காரர், மனைவி, மக்களுக்காக வாழ்கின்றார்.
நீங்கள் இருவரும் மற்றவர்களுக்காக வாழ்வதால்
உங்களை விட்டு வைத்தேன்.

இந்தக் கருமி பணத்திற்காக வாழ்ந்ததால் அவரை விழுங்கினேன்,”
என்றது முதலை.

—————————————————-
முதலையின் பதிலைக் கேட்டு உறைந்து போயினர்.
***

Advertisements

கொய்யாப்பழம் வேணும்…!

நன்றி- சிறுவர் மலர்