கெம்புக்கு 30 வயது ஆக இன்னும் இரண்டு நாள் தான் இருந்தன. அவருக்கு கவலை வந்துவிட்டது.தம்முடைய பொன்னான இளமைக் காலம் போய் விட்டது அதன் இன்பமும் அழகும் போய்விட்டன என்று வருந்த தொடங்கிவிட்டார்.
அவர் தினந்தோறும் காலையில் உடற்பயிற்சி எடுக்கப் போகும் பொழுது நிக்கோலஸ் என்ற அவரது நண்பரை சந்திப்பார்.அவருக்கு வயது 75 ஆனால் அவர் உடல் நலத்தோடும், மகிழ்ச்சியோடும் எப்போதும் உற்சாகமாக இருப்பார்.
கெம்பின் முகம் வாடி இருப்பதே கண்ட நிகோலஸ் என்ன ஏதாவது பிரச்சினையா என்று கேட்டார்.கெம்ப் கவலையை கூறி அவரிடம் கேட்டார் ,”நீங்கள் இந்த வயதிலும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் எந்த பருவத்தை மகிழ்ச்சியான காலமாக நினைக்கிறீர்கள்”.
அதற்கு நிக்கொலஸ் பதில் சொன்னார்.
‘நான் சிறு குழந்தையாக ஆஸ்ட்ரியாவில் இருந்த பொழுது எனக்கு வேண்டிய எல்லாவற்றையும் என் பெற்றோர் கவனித்துக் கொண்டார்கள் அதுதான் என் வாழ்க்கையில் சிறந்த காலம்.
‘நான் பள்ளிக்கூடம் சென்று பிற்காலத்தில் என் உயர்வுக்கு காரணமான கல்வியை கற்றேனே… அதுதான் என் வாழ்க்கையில் பொன்னான காலம்
‘எனக்கு முதன் முதலாக வேலை கிடைத்து அதற்கான சம்பளம் வாங்கினேனே…அதுதான் என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலம்.
‘என் மனைவிய முதல் முதலாக சந்தித்த அவளை காதலித்தேனே.. அதுதான் என் வாழ்க்கையின் பொன்னான காலம்
‘இரண்டாம் உலகப்போர் மூண்டது .எங்கள் உயிரைக் காப்பாற்ற நாங்கள் ஆஸ்ட்ரியாவை விட்டு ஓட வேண்டியிருந்தது. வட அமெரிக்காவிற்கு செல்லும் கப்பலில் நானும் என் மனைவியும் இடம் பிடித்தோம். ஒரு பேராபத்தில் இருந்து தப்பித்த மகிழ்ச்சியில் இருந்தோம். அதுதான் என் வாழ்க்கையில் சந்தோஷமான காலம்.
‘கனடா வந்து வாழ்க்கையை புதிதாக தொடங்கி, எங்களுக்கு குழந்தை பிறந்து, அவன் எங்கள் கண்முன் வளர்வதை பார்த்தபோது ஆனந்தமாக இருந்தது.. இதுவே என் வாழ்க்கையில் பொன்னான காலம்.
இப்போது எனக்கு 75 வயது ஆகிறது. நான் இப்போதும் உடல்நலத்தோடு இருக்கிறேன் .மன நிறைவோடு இருக்கிறேன். முதன் முதலாக சந்தித்த போது என் மனைவி எப்படி நேசித்தேனோ அதேபோல் இப்போதும் நேசிக்கிறேன் இதுதான் என் வாழ்க்கையில் சந்தோஷமான காலம்.
இந்தக் கதையில் உலகப் போர் மூண்டபோது அவர் ஊரை விட்டு ஓடியதோ அல்லது புது நாட்டில் புது வாழ்க்கை ஆரம்பிப்பதோ எளிதான மகிழ்ச்சிக்குரிய விஷயம் இல்லை. ஆனால் நிக்கொலஸ் அதை நினைத்து வருத்தப்படவில்லை.கப்பலில் இடம் கிடைத்தது நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்.
ஒரு குறிப்பிட்ட காலக்கட்டம் என்று இல்லாமல் வாழ்க்கை முழுவதும் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்பதற்கான ரகசியம் இந்த கதையில் நமக்கு படிப்பினையாக உள்ளது.
Reference : book “ இது சிறகுகளின் நேரம்” – கவிக்கோ அப்துல் ரகுமான்
பதிவிட்டவர்:
ப்ரீதி வெங்கடசுப்ரமணியம் (தமிழ் கோரா)