புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)

சிந்திக்க தெரிந்தவன்
வாழ்க்கையை வெல்கிறான் – நீ
சிந்திக்க தவறும் நொடியில்
வாழ்க்கை உன்னை வெல்கிறது!

கண் கூசும் சூரியன்
மழை தரும் கருமேகம்
மறைந்து முகம் காட்டும் நிலவு
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்
எதையும் விட்டு விடாதே – உன்
சிந்தனைக்குள் அசை போடு!

புத்தகம் எதுவானாலும்
படித்து முடி ஒரு வார்த்தை
உன் தேடலுக்கு
வழி காட்டலாம்!

ஏட்டில் எதையாவது கிறுக்கு
அது கதையா கவிதையா
கவலைப்படாதே படிப்பவர்
முடிவு செய்யட்டும்!

உளியை எடு கல்லை
உடைத்து கொண்டே வா
விழுவது கல் சிதறலா
உருவாகும் சிலையா – அது
பார்ப்பவரின் முடிவு!

தோண்டும் சுரங்கமும்
குவிக்கப்படும் மேடும்
பூமி கலங்குவதில்லை
உடலை குலுக்கி
சுழல்வதை தொடர்கிறது!

இயற்கை உணவை
படைத்த பின்
உயிர்களை படைத்தது
பசியால் உயிர்கள்
படுத்து விடக் கூடாதே
எனும் நல்லெண்ணத்தில்!

புண் பட்ட மனம்
பண் படும் காலம் வரும்
அதுவரை துவளாதே
எதையாவது செய்
பசியை போக்கவாவது உழை!

உறக்கத்தில் தியானித்து
கனவில் விடை தேடி
கண்டுபிடிப்பால் உலகை
அசத்துபவன் விஞ்ஞானி!

தன்னம்பிக்கையும், தைரியமும்
இல்லாதவன் பின்னால்
பேய்கள் பின் தொடர்வது
இயல்பான ஒன்று!

பணம் வேண்டுமா
பட்டம் பதவிகளை
மறந்து விடு…
இறக்கை கட்டி
சோம்பல் எல்லைகளை
உடைத்து துணிவுடன் பற!

இருபது வயதிற்குள் உன்
திறமைகளை தெரிந்து கொள்
நாற்பது வயதிற்குள்
சம்பாதித்து சேர்த்து விடு
அறுபது வயதிற்குள்
ஆன்மிகம் வழி காட்டும்!

எதையும் செய்ய சோம்பலா
சும்மா இரு சுகத்தை அனுபவி
வாழ்க்கை கடலில்
வழி தெரியாமல் தத்தளிக்கும் உன்னை
காலம் ஒருநாள் கரை சேர்க்கும்

பாரதி சேகர், சென்னை.

வாரமலர்

உயிரெழுத்து – கவிதை

குழந்தை தவறவிட்ட மிட்டாய்!

குழந்தை தவறவிட்ட மிட்டாய்! 4


மழையில்
கரைய மறுக்கிறது
குழந்தை தவறவிட்ட
மிட்டாய்!

*கடவுளிடமும்
அடம்பிடிக்கிறார்கள்
குழந்தைகள்

*என் நிழலைக்
கொடுத்து
மரத்தின் நிழலை
வாங்கிக்கொள்கிறேன்.

*தொடர்வண்டியின்
தொடர் கவிதை
தண்டவாளம்

*இறந்த மரத்திற்கு
மௌன அஞ்சலி
செலுத்துகின்றன
தச்சன் வரைந்த
கதவுப் பூக்கள்!

*வீட்டைப் பாதுகாக்க
ஞாபகப்படுத்திக்கொண்டே
இருக்கிறது
கோயிலில் பார்த்த
‘திருடர்கள் ஜாக்கிரதை’
அறிவிப்புப் பலகை.

*காகிதக் கப்பலை
சிறைப் பிடித்தது
மழைநீர் சேகரிப்புத்
தொட்டி

கட்டுமாவடி கவி கண்மணி
நன்றி- குங்குமம்

இதுவே வாழ்க்கை!

சில காயங்கள் மருந்தால் சரியாகும்
சில காயங்கள் மறந்தால் சரியாகும்!

வறுமை வந்தால் வாடக் கூடாது
வசதி வந்தால் ஆடக் கூடாது!

வியர்வை துளிகள் உப்பாக இருக்கலாம்
ஆனால், அவை வாழ்க்கையை
இனிப்பாக மாற்றும்!

வீரன் சாவதில்லை
கோழை வாழ்வதே இல்லை!

உன்னை நீ செதுக்கிக் கொண்டே இரு
வெற்றி பெற்றால் சிலை
தோல்வி அடைந்தால் சிற்பி!

மனிதனுக்கு, ‘ஏபிசிடி’ தெரியும்
ஆனா, ‘கியூ’ல போக தெரியாது
எறும்புகளுக்கு, ‘ஏபிசிடி’ தெரியாது
ஆனா, ‘கியூ’ல போக தெரியும்!

உண்மை எப்போதும்
சுருக்கமாக பேசப்படுகிறது
பொய் எப்போதும்
விரிவாக பேசப்படுகிறது!

பேசிப் பேசியே நம்மை ஏமாற்றுகின்றனர்
என்பதெல்லாம் பொய்!
அவர்கள் பேச்சில்,
நாம் ஏமாந்து விடுகிறோம்
என்பதே உண்மை!

குறைகளை தன்னிடம்
தேடுபவன் தெளிவடைகிறான்
குறைகளை பிறரிடம்
தேடுபவன் களங்கப்படுகிறான்!

கடனாக இருந்தாலும் சரி
அன்பாக இருந்தாலும் சரி
திருப்பி செலுத்தினால் தான் மதிப்பு!

உறவினர்களில் யார் முக்கியம் என்பதை
உயிரற்ற பணமே முடிவு செய்கிறது!

பணம் கொடுத்து பார்
உறவுகள் உன்னை போற்றும்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப் பார்
மண்ணை வாரி துாற்றும்!

அறுந்து போன செருப்புக்கு கூட
வீட்டில் ஒரு இடம் உண்டு
இறந்து போன மனித உடலுக்கு
வீட்டில் ஒரு இடமும் இல்லை!

இது தான் உண்மை

இதுவே வாழ்க்கை!

எம். அசோக்ராஜா, திருச்சி.
வாரமலர்

பூ – கவிதை

சொல்வனம் – கவிதைகள்

அவன் செயல் – கவிதை

நிபந்தனைக்கு உட்பட்டது – கவிதை

அடிபம்பு வாழ்க்கை – கவிதை

பாவனை – கவிதை

« Older entries