ஓ-பக்கம்- ஞாநி கட்டுரை

இந்த வார பக்கத்தில் ஞாநி கட்டுரை


சீனாவில் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவும் சீனாவும் தங்க வேட்டை ஆடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், சீனாவுக்கு எதிராக இந்தியாவின் உதவியுடன் அமெரிக்கா 1960களில் நடத்திய ஆபத்தான உளவு வேலையில் சம்பந்தப்பட்ட அமெரிக்கரின் வாக்குமூலம் வெளியாகியிருக்கிறது.

இமயமலை உச்சியில் நடந்த இந்த உளவு வேலையின் விளைவாக இன்றும் கங்கை ஆற்றில் அணுக் கதிர் வீச்சு அபாயம் ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

1964-ல் சீனா அணுகுண்டு சோதனை நடத்தியது. இது அமெரிக்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து சீனா என்னவெல்லாம் செய்யப்போகிறது என்று உளவு பார்க்க ஒரு திட்டம் வகுத்தது. அப்போது அமெரிக்காவின் செயற்கைக் கோள் திட்டங்கள் ஆரம்ப நிலையில் இருந்தன. சீனாவை வானிலிருந்து வேவு பார்க்கும் வசதி இல்லை.

இமயமலை உச்சியிலிருந்து வேவு பார்க்கலாம் என்று அமெரிக்கர்கள் திட்டம் போட்டார்கள். மலை உச்சியிலிருந்து திபெத்தும், சீனாவின் ஏவுகணை சோதனைகள் நடக்கும் சின்சியாங் மாவட்டமும் தெரியும்.

இதற்கு ஏற்ற இடம் இந்தியப் பகுதியில் இருக்கும் இரண்டாவது உயரமான மலையான நந்தாதேவிதான். 25 ஆயிரம் அடி உயரம். உலகத்தின் மிக உயரமான 25 சிகரங்களில் இது ஒன்று. இந்தப் பனிமலையில் இருந்துதான் ரிஷி கங்கை என்ற ஓடை தொடங்குகிறது இது அடுத்த மலையான நந்தாகோட்டில் ஓடும் தவுளிகங்கையில் சேர்ந்து பிரும்மாண்டமான கங்கை நதியாகிறது.

நந்தாதேவி சிகரத்தின் மீது சீனாவை வேவு பார்ப்பதற்கான கருவியைப் பொருத்துவதுதான் அமெரிக்காவின் திட்டம். இமயமலையில் ஏறுவது சாதாரண விஷயம் அல்ல. கடும் பனிப் புயல்கள் வீசும் பனிப் பொட்டல் அது. 1936 வரை யாருமே நந்தாதேவி மீது ஏறியதே இல்லை.

இதற்கு இந்திய அரசின் உளவுப் பிரிவான .பி.யின் உதவியை சி.. பெற்றுக் கொண்டது. கடற்படை கேப்டனாக இருந்து .பி. அதிகாரியாக இருந்த எம்.எஸ்.கோலி என்பவர் மலையேறுவதில் ஆர்வமுடையவர். இமயமலைப் பகுதியில் பல முறை சிகரங்களுக்குச் சென்றவர். 1965-ல் ஒரே சமயத்தில் ஒன்பது பேரை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வைத்த பெருமைக்குரியவர் கோலி.

இவர் தலைமையில் சில உளவு அதிகாரிகளும், சி... அனுப்பிய சிலருமாகச் சேர்ந்து நந்தாதேவி சிகரத்துக்குச் சென்று உளவுக் கருவியை வைக்கும் வேலையில் ஈடுபட்டார்கள்.

அந்த அமெரிக்கர்களில் முக்கியமானவர் டாக்டர் ராபர்ட் ஸ்காலர். சியாட்டில் பகுதியில் பிரபலமான குழந்தைகள் சர்ஜன் ராபர்ட்.

மலையேறுவதில் பெரு விருப்பம் உடையவர். இவரை சி... ஏஜெண்ட் சந்தித்து தேச நலனுக்காக அவர் இமயமலைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டார். இது தவிர மாதம் ஆயிரம் டாலர்கள் (1965-ல்) பணமும் கிடைக்கும் என்றார்.

ராபர்ட் ஸ்காலர் ஒப்புக் கொண்டார். அவரை அடிக்கடி ரகசியமான இடங்களுக்குக் கண்ணைக் கட்டி அழைத்துப் போய் கடுமையான பயிற்சிகள் தரப்பட்டன. எங்கே போய் வருகிறார் என்று மருத்துவமனைக்கும் மனைவிக்கும் சொல்லக் கூடாது. இதன் விளைவாக ராபர்ட்டின் மனைவி அவருடன் கசப்படைந்து விவாகரத்தே வாங்கிப் போய்விட்டார்.

மலை உச்சியில் வைக்க வேண்டிய உளவு சாதனம் சீனாவில் சோதனைகள் நடந்தால் பதிவு செய்யும். 40 பவுன்ட் எடையுள்ளது. இதை இயக்கும் அணுசக்தி புளுட்டோனியம் 238,239 கொண்ட செல்களிலிருந்து கிடைக்கும். இதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தில், மலையேறுபவர்கள் இரவு நேரங்களில் குளிர் காய்ந்தார்களாம்.

சிகரத்தை அடைவதற்கு முந்தைய ஓய்விடத்தில் எல்லாரும் இருந்தபோது கடுமையான பனிப் புயல் வீசியது. இனி ஒரு அடி கூட மேலே போக முடியாது என்ற நிலை. கீழே திரும்பியாவது போவோமா என்ற கவலையான நிலை. உளவுக் கருவியை அருகே ஒரு பாறைப் பகுதியில் வீசி எறிந்தார்கள். சில மாதங்கள் கழித்து புயல்கள் வீசாத பருவத்தில் வந்து திரும்ப எடுத்துச் சென்று உச்சியில் வைத்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள்.

ஆனால், சில மாதங்கள் கழித்து அதே இடத்துக்கு வந்து பார்த்தபோது கருவியைக் காணோம். தொடர்ந்து வீசிய பனிப்புயல்களில் மலைக்குள் எங்கேயோ போய் புதைந்துவிட்டது.

சி...வும் .பி.யுமாக அடுத்த இரண்டு வருடங்களில் பல முறை விமானங்களில் ஹெலிகாப்டர்களில் வந்து தேடித் தேடிப் பார்த்தார்கள். கருவி போன இடம் தெரியவில்லை.

இதற்குள் பக்கத்து மலையான நந்தாகோட்டில் இதே போன்ற அணுசக்தியில் இயங்கும் ஒரு கருவியைப் பொருத்தினார்கள். அது சில வருடங்கள் இயங்கி சீனா பற்றிய தகவல்கள் கிடைத்த பிறகு, அமெரிக்கா அதை அகற்றி விட்டது.

ஆனால் நந்தாதேவியில் தொலைந்து போன புளுட்டோனிய சக்தியில் இயங்கும் கருவி என்ன ஆயிற்று? யாருக்கும் தெரியாது. அதிலிருந்த புளுட்டோனியம் கசிந்தால், கங்கைக்கு வரும் ஓடை நீரில் கலந்தால்? மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும், நீரைப் பயன்படுத்துவோருக்கும் பல சிக்கலான விளைவுகள் ஏற்படும்.

புளுட்டோனியத்தின் கதிர் இயக்கம் அடங்குவதற்கு எத்தனை வருடம் ஆகும் தெரியுமா? 24 ஆயிரம் வருடங்கள்!

ராபர்ட் ஸ்கெல்லருக்கு இப்போது 74 வயது. அமெரிக்காவுக்கு அவர் ஆற்றிய தேசத் தொண்டுக்காக அவருக்கு சி...விலிருந்து வீட்டுக்கே வந்து ஒரு மெடல் அணிவித்துப் பாராட்டிவிட்டு, பிறகு அதைக் கழற்றி எடுத்துக் கொண்டும் போய்விட்டார்கள். இப்படி ஒரு விஷயம் நடந்தது வெளியில் தெரியக்கூடாது என்பதே காரணம்.

நந்தா தேவிக்கு ராபர்ட் சென்றபோது எடுத்த படங்கள், டயரிக்குறிப்புகள் எல்லாம் சி...விடம் உள்ளன. அவற்றைத் திருப்பித் தரக் கோரி 40 வருடமாக மன்றாடி வருகிறார் ராபர்ட். நந்தாதேவியில் தன்னந்தனியே ஏறிய முதல் அமெரிக்கர் என்ற அவருடைய சாதனைக்கு அவரிடம் எந்த ரிக்கார்டும் இல்லை. எல்லாம் சி...விடம் உள்ளன. அவர்களோ தர மறுக்கிறார்கள்.

இமயமலைக்கு பல முறை சென்று வந்த பின், புகழ் பெற்ற குழந்தை மருத்துவராக 40 வருடங்கள் செயல்பட்ட ராபர்ட் இப்போது மனக் கசப்புடன் எல்லா உண்மைகளையும் பகிரங்கமாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார். ஆனால், அமெரிக்க அரசு இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததாக இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை.

1978-ல் பிரதமர் மொரார்ஜி தேசாய் மக்களவையில் இனி இப்படிப்பட்ட ஆபத்தான சோதனைகளில் இந்தியா ஒத்துழைக்காது என்று அறிவித்தார். எம்.எஸ்.கோலி ஓய்வு பெற்ற பின் எல்லா உண்மைகளையும் தன் சாகச அனுபவப் புத்தகமாக எழுதிவிட்டார்.

இமயமலையில் கங்கை தோன்றும் இடத்தில் காணாமற்போன புளுட்டோனியக் கருவி பற்றி இப்போது மறுபடியும் ஒரு தகவல் வந்திருக்கிறது. மலையேறும் வீரரான தகேதா என்பவர் 2005-ல் நந்தாதேவிக்கு அதே இடத்துக்குச் செல்ல முயற்சித்தார். இப்போது இந்திய அரசு யாரையும் அங்கே செல்ல அனுமதிப்பதில்லை. அருகில் உள்ள நந்தாகோட்டுக்குச் சென்ற தகேதா, அங்கே ரிஷி கங்கை நதிக்கருகிலிருந்து மண் சேம்பிளை எடுத்து வந்து பரிசோதனைக்கு அனுப்பினார்.

பாஸ்டனில் ஓர் ஆய்வுக்கூடம், அதைச் சோதித்து முடிவுகளைத் தெரிவித்தது. மண்ணில் புளுட்டோனியம் கலந்திருப்பதாக உறுதிப்படுத்தியிருக்கிறது! இமயமலையில் மண் எடுக்கப்பட்ட ஆற்றுப் பகுதியில் புளுட்டோனியம் கலப்பதற்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை, 1965-ல் காணாமல் போன அமெரிக்க உளவுக் கருவி உடைந்து போயிருக்கலாம் என்பதைத் தவிர.

1965-ல் இந்தியா அணி சேரா கொள்கையைப் பின்பற்றியதாக சொல்லிக் கொண்ட காலத்தில், அமெரிக்காவுடன் சீனாவுக்கெதிராக ரகசிய உளவு வேலையில் ஈடுபட்டிருக்கிறது. இப்போது மன்மோகன் ஆட்சியில் அமெரிக்காவுடன் இந்திய ராணுவம் பகிரங்கமாகவே கூட்டுப் பயிற்சிகளுக்கு உடன்பாடுகள் போடப்பட்டுள்ளன.

அமெரிக்காவுடன் அணுசக்தி முதல் ராணுவ ஒப்பந்தம் வரை எல்லாமே எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு நந்தாதேவியில் தொலைந்து போன புளுட்டோனியம் மட்டும் சாட்சியம் அல்ல. ஆஸ்திரேலியாவின் சாட்சியமும் இருக்கிறது. 90_களில் ஆஸ்திரேலிய கடற்படைக்கு அமெரிக்கா சில கணினி மென்பொருட்களை அளித்தது. அந்த மென்பொருட்களைப் பயன்படுத்தும் போதெல்லாம் கடற்படையின் தகவல்கள், அமெரிக்காவுக்கும் ஒரு பிரதி போய்ச் சேருவது போல மென்பொருட்களில் திட்டம் எழுதி வைக்கப்பட்டிருந்ததை ஆஸ்திரேலியா கண்டுபிடித்தது. நன்றி என்று சொல்லி மென்பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டது!

நந்தாகோட் சிகரத்தில் வைக்கப்பட்டிருந்த உளவுக் கருவிகள் சீனாவை மட்டுமல்ல, இந்தியாவையும் உளவு பார்த்திருக்கக்கூடியவைதான்!
நமக்கு அறிவு வருவது எப்போது?.

( நன்றி: குமுதம் )
Thanks:idlyvadai.blogspot.com

இரண்டையும் சொல்லி வைப்போம் !

இரண்டையும் சொல்லி வைப்போம்!

 

பிறர் செயல்பாடுகளில் குறை காண்கிறோம். அதைச் சுட்டிக்காட்டவும் செய்கிறோம். ஆனால் இந்த உலகில் தங்களை நோக்கிச் சுட்டுவிரல் காட்டப்படுவதைப் பெரும்பாலானோர் விரும்புவதில்லை. இதனால்நீங்க மட்டும் என்ன ரொம்ப ஒழுங்கா?” என்று நம்மையே திருப்பிக் கேட்கிறார்கள்.

 

இப்படி நம்மைப் பார்த்துக் கேட்க முடியாதவர்களோ, நமக்குத் தெரிந்த வட்டத்தில் புலம்பிவிட்டுப் போகிறார்கள். அல்லது மனதிற்குள் மட்டும் சொல்லிக்கொண்டு தங்களைத் தேற்றிக் (?) கொள்கிறார்கள்.

 

ஆக நாம் என்ன நல்ல நோக்கத்தோடு சொன்னோமோ, அது நிறைவேறுவது இல்லை. இவர்கள் எப்படியோ போகட்டும் என்கிற இரகத்தவர்களாக இருந்தால் பரவாயில்லை. இவர்களே நம் அன்புக்குரிய இரத்தச் சொந்தங்களாக இருந்தாலோ, மிக வேண்டியவர்கள் என்கிற வட்டத்திற்குள் இருந்தாலோ நம் நோக்கம் வீணடிக்கப்பட்டதற்காகவும் திசைமாறிப் போனதற்காகவும் நாம் நிச்சயம் வருந்த வேண்டிவரும்.

 

இத்தகைய சூழ்நிலையில்தான் இரண்டையும் சொல்லி வைப்போம் என்கிற உத்தியைக் கையாள்வது நல்ல பலனைத் தரப்போகிறது.

 

என்ன வியாபாரம் செய்கிறீங்கன்னே தெரியலை. கடையின் விளம்பரப் பலகையைப் படிக்கவே முடியலை.

 

துருப்பிடிச்சு வார்த்தையெல்லாம் அழிஞ்சு போயிருக்குல்ல!” சிறு இடைவெளிவிட்டு, ”உங்களுக்கென்ன! வழக்கமான வாடிக்கையாளர்களே நிறையப் பேர்! அவுங்கள்லாம் பலகையைப் பார்த்தா வரப் போறாங்க? உங்க சேவையைப் பார்த்துத்தான் வர்றாங்க. அதனால் பெரிசா ஒண்ணும் பாதிப்பு இராது.”

 

குடும்பத்தை நல்லாக் கவனிங்க மச்சான்! அத்தனை பேருக்கும் உங்கமேல வருத்தமும் எதிர்பார்ப்பும் நிறைய இருக்குல்ல?” சிறு இடைவெளிவிட்டு, ”நீங்களும் என்ன பண்ணுவீங்க? தொழில் உங்களை விடுவனாங்குது? குடும்பத்துக்கு குறை வைக்கக் கூடாதுன்னுதான் பார்க்குறீங்க! வீட்ல இருக்கறவங்களும் உங்ககிட்ட மனசுவிட்டுப் பேசினாதானே?”

 

என்ன இது? இரண்டையும் நாமே சொல்வது முரண்பாடாக இருக்கிறதே என்கிறீர்களா? ‘இருபுறமும் உணர்ந்துதான் இருக்கிறேன். இருந்தாலும் நான் சொன்னதில் நல்லதை எடுத்துக்கோஎன்கிற இந்த அணுகுமுறைதான் இன்றையச் சூழ்நிலைக்குச் சரிப்பட்டு வரும்!

 

லேனா- ஒரு பக்க கட்டுரை

 

courtesy:http://www.tamilvanan.com/content/2008/08/22/20080822-lena-katturai/