மனதில் ஊறட்டும் உற்சாகம் !


1.சந்தோஷம் என்பது வாங்கும் பொருட்களில் இல்லை . சந்தோஷத்தின் இருப்பிடம் மனம்தான் . எனவே கன்ட்ரோல் நம்மிடம்தான் . எனவே ஆனந்தமாக இருக்க வேண்டுமா , வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் மட்டும் தான் .

2.வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாக கழிக்காதீர்கள். கொஞ்சம் இலகுவாகவும் நகைசுவையாகவும் அணுகுங்கள் அருகில் இருப்பவர்கள் நகைச்சுவை சொன்னால் சிரியுங்கள் . தினமும் இரண்டு , முன்று நபர்களையாவது சிரிக்க வையுங்கள் . சிரிப்பு ஒரு தொற்று நோய். இடம் விட்டு இடம் பெயர்ந்து ஆரோக்கியமாக பரவும் .

3.உடற்பயிட்சியும் ஆரோகியமான உணவும் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் ; உடலின் சக்தி தேவையை நிறைவேற்றும் .உற்சாகமாக உணர்வீர்கள் . உடற்பயிற்சியின்போது உடலில் சுரக்கும் ‘என்டோர்பின்’ களால் மனது புத்துணர்வு பெரும் என்கிறது மருத்துவ உலகம்.

4.வேலை , கடமை இத்யாதிகளுக்கு மத்தியில் புத்தகம் படிப்பது , நன்றாக ஒரு குளியல் போடுவது ,இசை கேட்பது ….இப்படி ஏதாவாது உங்கள் மனதுக்கு பிடித்த ஒரு செயலுக்கு தினமும் சில நிமிடங்கள் ஒதுக்குங்கள் .அதேபோல் , தினமும் கொஞ்ச நேரம் உங்கள் மனதுக்கு மகிழ்ச்சிதரும் பசுமையான நினைவுகளை அசைபோடுங்கள் .

5.ஆனந்தம் என்பது ‘லக்’ அல்ல , நாம் எடுக்கும் முடிவுகளின் விளைவுதான் என்பதில் தெளிவாக இருங்கள் .அன்னப் பறவையாக மாறி நல்லவற்றையும் அதிகம் கவனியுங்கள். உங்களை கடந்து போகும் சம்பவங்களில், சந்தோஷமான விஷயங்களை அதிகம் உள்வாங்குங்கள் .

6.தாழ்வு மனப்பான்மையைத் தூக்கி கடலில் போடுங்கள் . ஏதேனும் தவறு , தோல்வி நடந்தால் அதற்குரிய காரணத்தை ஆராய வேண்டுமே தவிர ,,,,,,,,,,,,, நத்தை ஓட்டுக்குள் முடங்கி விடகூடாது

7.உங்கள் மனதை நீங்கள் தான் உ ற்சாகபடுத்தவேண்டும். குழந்தைகளுடன் செலவிடும் சந்தோஷ தருணகங்கள், நல்ல நகைசுவை திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை உங்களை ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் என்கிறார் ஆராச்சியாளர்கள் .

8.திருத்தமாக உடையணிந்து நேர்த்தியாக இருக்க பழகுங்கள் . மனோரீதியாக அது உங்களை தன்னம்பிக்கையாகவும் ,ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வைக்கும்.

9.புது இடங்களை பார்ப்பது, புது மனிதர்களுடன் பழகுவதெல்லாம் உற்சாகமான வாழ்கையின் வழித்தடங்கள் . எனவே அவ்வப்போது ‘ வெளியே’ செல்லுங்கள். பரிசுத்தமான இயற்கையின் இடங்கள் இதற்கான சிறந்த இடமாக இருக்கும் .

10.ஆன்மிகவாதியாக இருங்கள். ஆனால், மதவாதியாக மாறிவிடாதீர்கள். உங்களுக்கு ஆனந்தமும் நிம்மதியும் தரும் நூல்களை வாசியுங்கள் .

11.கவலைகள் இல்லாத மனிதன் இல்லை. அவற்றையும் வாழ்கையின் ஒரு பாகமாக் ஏற்றுக்கொள்ளுங்கள் . காலம் கவலையை ஆற்றிவிடும்.

12.விருப்பமிருந்தால் ஒரு செல்லப்பிராணியை வளருங்கள் . அதனுடன் தினமும் நேரம் செலவிடுங்கள் . எதிர்பார்ப்பில்லாத அன்பு , அதனிடம் நிறையவே கிடைக்கும் !

13.தினமும் காலையில் ஒரு ஆனந்தமான நாள் உங்களுக்காக காத்திருக்கிறது என்று விழித்து கொள்ளுங்கள் .இரவு படுக்கைக்கு செல்லும் முன் அன்றைய நாளின் சந்தோஷங்களை அசைபோடுங்கள் . யாரையாவது காயபடுத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முடிவெடுங்கள்.

 –
படங்கள்- இணையம்
subhaananthi.blogspot.in

கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்?

ஆன்மிக, நாத்திக வாதங்கள், சைவ – அசைவ விவாதங்கள், உலகம் உள்ளளவும் இருக்கும். ஆழ்ந்த நம்பிக்கை உள்ளோருக்கும், நம்பிக்கை அற்றோருக்கும் இடையே கடுமையான வாதங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது என்பதே உண்மை!

இக்கட்டுரை, கடவுளை நம்புவோரை மட்டுமே இலக்காகக் கொண்டது.

கடவுளை அளவுக்கதிகமாக நம்பும் ஒருவர், தம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு சம்பவமும், அவரால் எழுதப்பட்டது என்ற தீர்மானத்திற்கு போய் விடுகிறார்.

என்ன ஆபத்து வந்தாலும், ‘அதை அவன் பாத்துக் கொள்வான்…’ என்று சரணாகதி அடைவாரே தவிர, மனித முயற்சி என்ற ஒன்றை, இவர் நம்ப தயாரில்லை.

ஒருமுறை, இவரது உயிருக்கு ஆபத்து வரும்படியான செயல் ஒன்று அறிகுறி காட்ட, இவரோ தன்னை கடவுளிடம் ஒப்படைத்து விட்டார். கடைசியில், எதற்காக எச்சரிக்கப்பட்டாரோ, அது நிகழ்ந்து விட்டது.

இதேபோன்ற குட்டிக்கதை ஒன்றை, ‘ராமகிருஷ்ணர் உபதேசம்’ எனும் நூலில், என் பள்ளி நாட்களில் படித்ததாக நினைவு.அதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய விளக்கம் வெகு அருமை.

‘உயிருக்கு ஆபத்து வரப்போகிறது என எச்சரித்தவனை, ஒரு சாதாரண மனிதனாக அந்த பக்தன் கருதினான் அல்லவா… அப்படி எச்சரித்தவன் மனித வடிவில் வந்த கடவுளாக ஏன் இருக்கக் கூடாது…’ என முடித்திருப்பார் ராமகிருஷ்ணர்.

அநியாயமாய் அல்பாயுசில் இறந்தோரும், மருத்துவ தவறினால் கொல்லப்பட்டவர்களும், விபத்தினால் சிதைக்கப்பட்டவர்களும் நிறைய பேர். இவர்களை இழந்த உறவுகளில் பலர், ‘கடவுளே… உன்னை எவ்வளவு நம்பினேன்; எவ்வளவு கும்பிட்டேன். என்னை அநியாயமா கைவிட்டுட்டியே…’ என்று புலம்பி, அத்துடன், கடவுளை வழிபடுவதற்கு முற்றுப் புள்ளி வைத்து, பாதை மாறியோரும் உண்டு.

இயற்கையாக, தர்க்க ரீதியாக, இயற்பியல் ரீதியாக, ரசாயன ரீதியாக நிகழ்பவை, நிகழ்ந்து கொண்டே இருக்கும். இவற்றிற்கும், ஆன்மிகத்திற்கும் சம்பந்தமே இல்லை.

குடித்து விட்டு வாகனம் ஓட்டுகிற ஓட்டுனர், பக்தர்களை சபரி மலையில் கொண்டு போய் சேர்ப்பாரா என்றால், அது ஐயம்தான். ஓட்டுனர் தூங்கிவிட்டாலும் இதே கதிதான். இதன்மீது, இறைமையை கற்பிப்பது சரியல்ல!

தீவிரவாதிகளால் கூண்டோடு சுட்டு வீழ்த்தப்பட்ட மலேஷிய விமானத்தின் கதிக்கும், ஒரு ஆண்டுக்கு மேலாகியும் விஞ்ஞானத்திற்கே விளங்காத மலேஷியன் ஏர்லைன்ஸ் (259 பயணிகளோடு) மறைவிற்கும் கடவுள் காரணமாக மாட்டார்.

மனித முயற்சிகள் தோற்பதற்கும், கேலி செய்யப்படுவதற்கும் வேறு காரணங்களை கற்பிக்க முயற்சி செய்யாமல், அதில், எங்கே கோட்டை விட்டோம் என்று தோல்வியின் காரணங்களை ஆய்வு செய்தால், மீண்டும் இத்தகைய தவறுகள் நிகழ்வதை தவிர்க்க முடியும்.

எந்த முயற்சியும் செய்யாமல், கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும் என எதிர்பார்ப்பவன், வறுமையின் பிடியிலிருந்து மீளவே முடியாது.

இறைமையை எடுத்துச் சொல்லி வழிகாட்டும் மத குருமார்கள் கூட, மனித முயற்சி வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றனர்.

எதையும் சரிவர திட்டமிட்டு, தவறுகளை மதிப்பீடு செய்து, ஓட்டைகளையும், கசிவுகளையும் அடைத்து, நன்கு உழைத்தால், இவர்கள் நம்பும் சக்திகளும், இவர்களுக்கு துணை வரலாம்.
வாழைப்பழம் வீட்டு வாயில் வரை தான் வரும்; வாயில் தள்ள வேண்டியது மனிதனே!

லேனா தமிழ்வாணன்

உங்கள் தூக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதா..?

உங்கள் தூக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதா என்று
கேட்டால், இல்லை என்பதே, பெரும்பாலானவர்களின்
பதிலாக இருக்கும்.

ஒருவரது தூக்க நேரம் என்பது, உடலுக்கும், மனதிற்கும்
இடையே நடக்கும், கபடி கபடி போராட்டத்தின் விளைவே!

இப்போராட்டத்தில், உடல் வெற்றி பெறும் போது நீண்ட
தூக்கமும், மனம் வெல்லும் போது தூக்கக் குறைவும்
ஏற்படுகிறது.

மனதிடம், ‘ஒரே களைப்பா இருக்கு தூங்குகிறேன்…
ப்ளீஸ்…’ என்று, உடல் கெஞ்சுகிறது; ‘முடியாது… படிக்க
வேண்டியதும், முடிக்க வேண்டியதும் ஏகப்பட்டது இருக்க,
தூக்கம் உனக்கு கேடா…’ என, மனது, உடலை கண்டிக்கிறது.

கரைக்கு இழுக்குமாம் யானை; நீருக்குள் இழுக்குமாம்
முதலை. இக்கதைதான் பலரது தூக்க விஷயத்திலும்
நடக்கிறது. இப்போராட்டத்தில், உடலை வெற்றி பெறவே
அனுமதிக்கக் கூடாது.

‘என்ன இப்படிச் சொல்றீங்க… இந்த அவசர உலகத்துல
வேகம் மிகுந்த வாழ்க்கைக்கு, நம்மால ஈடு கொடுக்க
முடியுமா? நமக்கு இருக்கிற ஒரே தீர்வு(!) தூக்கம் தான்.
இதையும் குறைச்சா மனுஷன் அழிய(!) வேண்டியது தான்…’
என்று, யாரேனும் வசனம் பேசினால், அவர்களுக்கெதிராக,
இரு வலிமையான உதாரண மனிதர்களை, முன்னிறுத்த
விரும்புகிறேன்.

நம் பிரதமர் மோடி, தினமும், ஐந்து மணி நேரம் மட்டுமே
தூங்குவதாக, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் பேசுகின்றன.
முன்னாள் பிரதமர் இந்திராவோ, தினமும், நான்கு மணி
நேரம் மட்டுமே தூங்கினார்.

‘இல்லையில்லை… எட்டு மணி நேரம் தூங்கியே ஆகணும்ன்னு
மருத்துவர்கள் சொல்றாங்க; இதை மறுத்துப் பேசாம தூங்குங்க…’
என்று, தலைமைப் பொறுப்பில் இருப்போரை கட்டாயப்
படுத்த முடியுமா?

உங்களை, உங்கள் பொறுப்பும், சூழலும் அனுமதிக்கின்றனவா?
நன்றாக எட்டு மணி நேரம் உறங்குங்கள்; வேண்டாம் என்று
சொல்லவில்லை.

ஆனால், கோப்புகளில் தூசி படிகிற போதும், ஒரு மனிதரைச்
சுற்றி நூலாம்படைகள் தொங்குகிற போதும், கடமைகள்
காத்திருக்கிற போதும், தூக்க நேரம் பற்றிய மறுபரிசீலனை
அவசியமாகிறது.

என்னோடு கல்லூரியில் படித்த ஒருவர், டில்லியில் இருக்கிறார்.
சென்னை வந்தால், ஓய்வெடுக்காமல் தொடர்ந்து, 32 மணி
நேரமும் உழைப்பார். வேலை முடிந்து டில்லி திரும்ப, சென்னை
சென்ட்ரலில், கிரான்ட் டிரங்க் ரயிலில் ஏறிப்படுத்தால்,
டில்லியில் தான் (பயண நேரம் மொத்தம், 34.30 மணி நேரம்)
எழுந்திருப்பார்; இடையில் சாப்பிடக் கூட மாட்டார்.

இவரைப் பின்பற்றச் சொல்லவில்லை; அவசியமான நேரங்களில்
கடமைகள் முக்கியம். சாவகாசம் என்றால் தூக்கம் பரவாயில்லை.
கடும் பனிக்காலம் முழுவதும் குகைக்குள் படுத்துக் கிடக்கும்
பனிக்கரடிகள் போலவும், ஆறு மாதம் உறங்கும் ஆர்விமெலோஸ்
என்ற உயிரினம் போலவும், தூக்க வாழ்க்கையை மேற்கொள்வோர்,
துன்ப வாழ்க்கைக்கு தயாராக வேண்டியது தான்.

தூக்கம் கண்களை அழுத்துகிற போது, கடமைகளை தள்ளிப்
போடுவதால் ஏற்படக் கூடிய நஷ்டங்களை எண்ணிப் பார்த்து,
துள்ளி எழுந்து, நடமாட வேண்டும். கண்களை குளிர்ந்த நீரால்
கழுவ வேண்டும். கண்களைத் தூக்கம் அசத்தும் நேரம் சிறு
கணமே! அதைக் கடினப்பட்டுக் கடந்து விட்டால், எங்கே போனது
உறக்கம் என்று கேட்பீர்கள்.

தூக்கத்திற்கு கண்கள் சொருகுகிற போது, பிடிக்காத, போரடிக்கிற
விஷயங்களை ஒதுக்கி வைத்து, பிடித்த செயல்களை மேற்கொள்ள
வேண்டும். கடுமையான, சுமையான, சுவாரசியமற்ற பணிகளே
தூக்கத்திற்குத் தூண்டுகோல்களாக அமைந்து விடுகின்றன
.
பொருளாதாரம், பணம் சார்ந்த விஷயங்களை கையாளத்
துவங்கினால், தூக்கம் ஓடியே போய் விடும்.
தியானம் பயின்று, தினமும் பயிற்சி செய்ய ஆரம்பித்தால்,
தூக்கமின்மையால் ஏற்படும் களைப்பும், அசதியும் பறந்து விடும்.
20 நிமிட தியானம், இரண்டு மணி நேரத் தூக்கத்திற்குச் சமம்
என்கின்றனர் தியான ஆசிரியர்கள்.

ஒரு மடங்கு முதலீடு செய்து, ஆறு மடங்குத் திரும்பப் பெறும்
இந்த உத்தியை, நாம் ஏன் கையாளக் கூடாது?
கட்டுப்பாடற்ற தூக்கம், தட்டுப்பாடான வாழ்க்கைக்கு வழி
வகுத்துவிடும் என்பதால் கவனம் தேவை!

——————————————

லேனா தமிழ்வாணன்
நன்றி – வாரமலர்

நல்ல நண்பன் – கவியரசு கண்ணதாசன்

நல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது போலவே, நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும்.
ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் தெரியுமே தவிர, சாதாரண அறிவினால் கண்டுகொள்ள முடியாது.

முகத்துக்கு நேரே சிரிப்பவன்,
முகஸ்துதி செய்பவன்,
கூனிக் குழைபவன்,
கூழைக் கும்பிடு போடுபவன்,
இவனெல்லாம் நல்ல நண்பன் மாதிரியே தோற்றமளிப்பான்.


ஆனால் எந்த நேரத்தில் அவன் உன்னைக் கவிழ்ப்பான் என்பது அவனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்!
ஆகவே ஒருவனை நண்பனாக்கிக் கொள்ளுமுன், அவனைப்பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
சரியாகத் தெரிந்த பின்புதான், அவனிடம் ரகசியங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
நன்றாக ஆராய்ந்து, `இவன் நல்லவன்தான்’ என்று கண்டபின், ஒருவனை நண்பனாக்கிக் கொண்டு விட்டால், பிறகு அவன்மேல் சந்தேகப்படக்கூடாது.

“அவசரத்தில் ஒருவனை நம்பிவிடுவதும், நம்பிக்கைக்கு உரியவன் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனைச் சந்தேகிப்பதும், தீராத துயரத்தைத் தரும்” என்றான் வள்ளுவன்.
தேரான் தெளிவும் தெளிந் தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.


சரி, நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
யாரோடு நீ பழக ஆரம்பிக்கின்றாயோ, அவனோடு நீ இனிமையாகப் பழகவேண்டும்.
கொஞ்ச காலத்திற்கு அதை, நீ நட்பாகக் கருதக்கூடாது.
வெறும் பழக்கமாகத்தான் கருதவேண்டும்.
உனக்குக் கஷ்டம் வந்தபோது அவன் கைகொடுத்தால், உன்னைப்பற்றி நல்லவிதமாக, நீ இல்லாத இடத்தில் அவன் பேசுவதைக் கேள்விப்பட்டால்,
பிறர் உன்னைப்பற்றித் தவறாகப் பேசும்போது, அவன் தடுத்துப் பேசியதாக அறிந்தால்,
அவனை நீ நம்பத் தொடங்கலாம்.

தொடர்ந்து இது போன்ற பல செய்திகளைக் கேள்விப்பட்ட பிறகுதான், அவனை நண்பனாக நீ வரித்துக் கொள்ளவேண்டும்.
பல இடங்களில் ஒரே மாதிரி ஒருவன் நடிக்க முடியாது. ஆகவே, உன்மீது அவன் வைக்கும் அன்பும் உண்மையாகத்தான் இருக்க முடியும்.


நட்பு என்பது வெறும் முகஸ்துதி அல்ல.
ஆபத்தில் உதவுவது ஒன்றே நட்பு.
நீ அழும்போது உண்மையிலேயே அவனுக்கும் அழுகை வருகிறது என்றால், அதுதான் நட்பு.
“முகநக நட்பது நட்பன்று; நெஞ்சத்து
அகநக நட்பதே நட்பு.”
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.”
என்றான் வள்ளுவன்.


நண்பர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறது ஒரு பழம்பாடல்.
பாடல் மறந்துபோய் விட்டது. விளக்கம் இதுதான்:
ஒன்று, பனைமரம் போன்ற நண்பர்கள்; இரண்டு, தென்னைமரம் போன்றவர்கள்; மூன்று, வாழைமரம் போன்றவர்கள்.


பனைமரம் யாராலும் நட்டுவைக்கப்பட்டதல்ல.
பனம்பழத்தைத் தேடி எடுத்து யாரும் புதைப்பதில்லை.
அது தானாகவே முளைக்கிறது.
தனக்குக் கிடைத்த தண்ணீரைக் குடித்துத் தானாகவே வளர்கிறது.
தனது உடம்பையும், ஓலையையும், நுங்கையும் அது உலகத்திற்குத் தருகிறது.
நம்மிடம் எந்த உதவியையும் எதிர்பாராமல், நமக்கு உதவுகிறவன், பனைமரம் போன்ற நண்பன்.


தென்னைமரம் நம்மால் நடப்படுகிறது.
அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்த்தால்தான் அது நமக்குப் பலன் தருகிறது.
அதுபோல், நம்மிடம் அவ்வப்போது உதவி பெற்றுக் கொண்டு நண்பனாக இருக்கிறவன், தென்னைமரத்துக்கு இணையான நண்பன்.
வாழைமரமோ, நாம் தினமும் தண்ணீர் ஊற்றிக் கவனித்தால்தான் நமக்குப் பலன் தருகிறது.
அதுபோல் தினமும் நம்மிடம் உதவி பெற்றுக் கொள்கிறவன் வாழைமரம் போன்ற நண்பன்.


இந்த மூவரில், பனைமரம் போன்ற நண்பனே நீ தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய நண்பன்.
எனக்கு அப்படிப்பட்ட நண்பர்கள் சிலர் கிடைத்தார்கள்.
எனக்குக் கிடைத்த நண்பர்களில் நூற்றுக்கு ஒருவர் இருவரே அப்படிப்பட்ட நண்பர்களாக இருந்தார்கள் என்பது பொருத்தம்.
மற்றவர்கள் எல்லோரும் என்னிடம் பணம் பறிப்பதற்காகவே நண்பர்களாக இருந்தார்கள்.

அதிலே நான் ஏமாளியாக இருந்தேன் என்பதை ஒப்புக் கொள்வதில் வெட்கமில்லை.
ஆனால், என்னை ஏமாற்றிய நண்பர்கள் எல்லாம் இன்று செல்வாக்கிழந்து `கோழி மேய்க்கிறார்கள்’ என்பதை எண்ணும்போது, சிநேகிதத் துரோகிகளுக்கு இறைவன் அளிக்கும் தண்டனையைக் கண்டு, நான் மகிழ்ச்சியடைகிறேன்.


மற்றவர்களுக்கு அந்த அனுபவம் வரக்கூடாது என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.
இந்துக்களின் இதிகாசங்கள், நல்ல நண்பன் எப்படி இருப்பான் என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.
ஸ்ரீராமனுக்குக் கிடைத்த நண்பர்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்தால், துன்பங்களே இல்லாமல் போய்விடும். ஸ்ரீராமனின் துன்பங்களை யார் யார் பங்கு போட்டுக் கொண்டார்கள்?


அதை ரகுநாதனின் வாய்மொழியாகக் கம்பன் சொல்கிறான்.

“குகனொடும் ஐவரானோம்
முன்பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவ ரானோம்
எம்முறை அன்பின் வந்த
அகமலர் காதல் ஐய
நின்னொடும் எழுவ ரானோம்!”


வீடணன் நண்பனானபோது, வீடணனைப் பார்த்து ஸ்ரீ ராமன் சொன்ன வார்த்தைகள் இவை.
“வீடணா! நானும் இலக்குவனும், பரதனும், சத்துருக்கனனும் நான்கு சகோதரர்களாகப் பிறந்தோம்.
கங்கை இரு கரையுடையான், கணக்கிறந்த நாவாயான் குகனைச் சந்தித்தபோது, நாங்கள் ஐவரானோம்.
சுக்ரீவன் எங்களோடு சேர்ந்தபோது நாங்கள் அறுவரானோம்.
உன்னைச் சேர்த்து இப்போது எழுவராகி விட்டோம்.”

ஆம்! ராமனுக்கு அவர்கள் செலுத்திய அன்புக் காணிக்கை ராமனுடைய சகோதரர்களாகவே அவர்களை ஆக்கிவிட்டது.
நல்ல நட்புக்கு என்னென்ன இலக்கணங்கள் உண்டோ அவை எல்லாம் கூடிவாய்க்கப் பெற்ற ஒருவன் நண்பனாக மட்டுமின்றிச் சகோதரனாகவும் ஆகிவிடுகிறான்.
நண்பர்கள் தனக்கு உதவி செய்தார்கள் என்பதற்காகத் தன் சொந்த சகோதரர்களையே விரோதித்துக் கொண்டு செஞ்சோற்றுக் கடன் கழித்து, ஒருவன் மகாபாரதத்தில் காட்சியளிக்கிறான்.


அவனே கர்ணன்.
கர்ணன் குந்தியின் மகன்; பாண்டவர்களின் சகோதரன்.
கௌரவர்கள் அவனிடம் பாராட்டிய நட்புக்காக, அவர்கள் செய்த உதவிக்காக, போர்க்களத்தில் தன் சகோதரர்களையே எதிர்த்தான் கர்ணன்.
நட்பு என்பதும், செஞ்சோற்றுக் கடன் கழித்து நன்றி செலுத்துவது என்பதும் இந்துக்களின் மரபு.
அந்த மரபின், நட்பின் மேன்மையை வற்புறுத்தும் புராணக் கதைகள் பலவுண்டு.


நல்ல மனைவியை எப்படி இறைவன் அருளுகிறானோ, அப்படியே நல்ல நண்பர்களை அருளுமாறு இறைவனைப் பிரார்த்திப்பது நல்லது.

–MURUGESAN.S
 நன்றி– http://sriselvavinayaga.blogspot.sg/2010/10/blog-post_3897.html

சுயமாக இயங்குக !

சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

அவருக்காக எதையும் செய்துகொள்ளத் தெரியாது. எல்லாத்துக்கும் நான் வந்து நிக்கனும்என்று ஒரு திருமண இல்லத்தின் முதல் நாளன்று உறவினர் பலரும் அரட்டை அடித்த வேளையில் கணவரின் காலை வாரிவிட்ட ஒரு மனைவியின் வாக்குமூலம் என்னை வெகுவாகச் சிந்திக்க வைத்தது.

அந்தக் கணவரை எனக்கு நன்கு தெரியும். ”ஏய்! ஜா… (பூர்த்தி செய்து கொள்க) இங்க வா. இதை (?) எடுத்துக் குடு. நான் இப்ப என்னென்ன (!) மாத்திரை சாப்பிடணும்? நம்ம கணக்குல பணம் இருக்கா இல்லையா? புது செக் புத்தகம் வாங்கச் சொன்னேன். வாங்கினியா? ஊருக்குப் போக என் பெட்டியில் எல்லாம் எடுத்து வைக்கச் சொன்னேனே வச்சிட்டியா?” பாணியில் அத்தனை அடிப்படைகளிலும் மனைவி வேண்டும் இவருக்கு. இவர் மனைவி ஊருக்குப் போய்விட்டாலோ, ஒருவேளை இறந்துவிட்டாலோ (சாரி) என்ன பாடுபடுவார் என்று எண்ணிப்பாருங்கள்.

இப்போதெல்லாம் மின்வெட்டு சகஜமாகிவிட்டது. ஒரு கடையில் ஜெனரேட்டர் உள்ளது. இதை வேலை செய்யும் பையன்தான் இயக்கி ஆரம்பித்து வைப்பான். ”முதலாளி, இதை எப்படி இயக்கணும்னா…” என்று ஆரம்பித்தவனைக் கையமர்த்தி, ”அது இல்ல முதலாளி இதுல ஒரு சின்ன சூட்சுமம் இருக்கு முதலாளிஎன்றவனை, ”அதெல்லாம் எனக்குத் தெரியணும்கிற அவசியமில்லைஎன்று காது கொடுக்க மறுத்துவிட்டு, அவன் வேலைக்கு வராத ஒரு நாளில் ரொம்பவே அவதிப்பட்டுவிட்டார். ஒரு பார்வையாளனாககூடத் தெரிந்து வைத்துக் கொண்டால் என்னவாம்?

ஒரு பிரபல மனிதருக்குக் கார் ஓட்டத் தெரியாது. இதனால், அவரது தெரியக்கூடாத சில அசைவுகள் ஓட்டுநர் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டன. நெளிகிறார் இப்போது. கார் ஓட்டுவது, ராக்கெட் செலுத்தும் வித்தையா என்ன?

சட்டையை அயர்ன் செய்வது அசாத்தியக் கலையா? இதை முதல்முறையாகச் செய்ய நேர்ந்து 800 ரூபாய்ச் சட்டையைப் பொசுக்கிக் கருக்கிவிட்டார் என் நண்பர்.

நாமே சுயமாக இயங்க வேண்டும். எதையும் சற்றேனும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சுதந்திரமாக இயக்குவதில் தனி சுகம் இருக்கிறது. இதை அனுபவிக்க முன்வர வேண்டும்.

பிறர் உதவி என்பது கூடுதல் சுகமே தவிர, அடிப்படைச் சுகமாகிவிடக்கூடாது.

லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகள்

நன்றி;

http://www.tamilvanan.com/content/2008/09/12/20080912-lena-katturai/

 

சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

 

தெரியாத்தனமாக நண்பரின் காரில் லிப்ட் கேட்டேன். ஏன்தான் பயணம் செய்தேன் என்று ஆகிவிட்டது” – நண்பர்.

 

ஏன்?” என்றேன்.

 

அவர் காரில் ஏற்கெனவே ஏகப்பட்ட பேர். ரொம்பவும் அசெளகரியமான பயணம்என்று மிகவும் அலுத்துக் கொண்டார்.

 

காரில் வந்ததன் மூலம் பேருந்து கிடைக்காத அந்தப் பகுதியிலிருந்து தப்பித்து வந்ததும், காசை மிச்சம் பிடித்தும், காலத்தைச் சேமித்தும், நீங்கள் அனைவரும் காரில் அடித்த அந்த ஆனந்தமான அரட்டையும் உங்களுக்கு செளகரியமாகத் தெரியவில்லையா? ஒரு சிறு அசெளகரியத்தை மட்டும் சகித்துக் கொண்டிருந்தால் மற்ற செளகரியங்கள் உங்களுக்குப் பெரிதாகப்பட்டிருக்கும். அந்த ஓர் அசெளகரியம் பெரிதாகப்பட்டிருக்கிறதுஎன்றேன். நண்பர் திகைத்துப் போனார்.

 

நாம் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கப்போகும் வரை பல அசெளகரியங்களைச் சந்திக்க நேரிடுகிறது. அவ்வளவையும் வெறுக்கக் கற்றுக் கொண்டால் நம் மகிழ்ச்சி ஒவ்வொரு மணிநேரமும் அடுத்தடுத்த அசெளகரியங்களால் பறிக்கப்பட்டுவிடும்.

 

வாழ்வின் இனிமைகளைத் தேடிப் பிடித்து, அவற்றை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கக் கற்றுக் கொண்டால் அன்றாட அசெளகரியங்கள் பெரிதாகத் தெரியா.

 

அசெளகரியங்களைத் திரும்பத் திரும்பத் பேசிக் கொண்டிருக்கும் அல்லது நினைவுப்படுத்திக் கொண்டிருக்கும் இயல்பு வாழ்க்கையின் பிடிப்பை அகற்றி, சலிப்பை அதிகப்படுத்தும்.

 

இந்தச் சலிப்புணர்வு மேலும் பல அசெளகரியங்களைச் சேமிக்க ஆரம்பித்துவிடும். சற்றுச் சிந்தித்துப் பார்த்தால் நம் திட்டமிடாக் குறைபாடும், முன்னேற்பாடுகள் இல்லாத தன்மையுமே நம் பல அசெளகரியங்களுக்கு மூலகாரணங்கள் என்பது தெரியவரும்.

 

முன்பதிவு செய்யாமல் இரயிலில் பொது வகுப்பில் இரவு முழுக்க நின்றுகொண்டு பயணம் செய்பவரின் நிலை போன்றது இது.

 

அசெளகரியத்திலும் மனதளவில் அதில் உள்ள செளகரியங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பண்பும், சகிப்புத் தன்மையையும் வளர்த்துக் கொள்வதே மகிழ்ச்சியை மீட்கும் வழி என்பதை உணரும் இயல்புமே இதிலிருந்து மீளும் நிரந்தர வழி.

 

************************************************************************************

 

லேனாவின்  ஒரு பக்கக் கட்டுரைகள்

source:http://www.tamilvanan.com/content/2008/09/05/20080905-lena-katturai/