
‘‘இந்த வழியாகப் போனால் இருபத்தேழாவது குறுக்குத் தெரு வருமா?’’ – எதிரில் வந்த ஒருவர் என்னிடம் கேட்டார்.
சாதாரணமாகவே இந்த மாதிரி யாராவது கேள்வி கேட்டால் எனக்குக் கெட்ட கோபம் வரும். இன்றைக்கு ஏற்கனவே ஆபீசுக்கு லேட்டாகக் கிளம்பிய பதற்றத்தில் இருந்தேன்.
அவரை முறைத்துப் பார்த்து, ‘‘இந்தக் கேள்வியை நீங்க தெளிவா நேராவே கேட்டிருக்கலாமே?’’ என்றேன். அவருக்குப் புரியவில்லை.
‘‘உங்களுக்கு வழி தெரியாது. அதனால, ‘இருபத்தேழாவது குறுக்குத் தெருவுக்கு எப்படிப் போறது’ன்னு பளிச்னு கேட்டிருக்கணும். நீங்களாகவே ஒரு வழியைக் காட்டி, ‘இப்படிப் போனால் அது வருமா’ன்னு கேட்கிறது சரியில்லே. நாமாகவே ஒரு முடிவை எடுத்துட்டு, அதற்கேற்றபடி விடையை வரவழைக்கப் பார்க்கிற குணம், ஒரு மனநோய்க்கான அறிகுறி! இது முற்றாமல் ஜாக்கிரதையா இருக்கணும்…’’ என்று அறிவுரை சொல்ல ஆரம்பித்ததும், அவர் கோபத்தோடு என்னைப் பார்த்தார்.
‘‘இப்படி ஜாங்கிரி சுத்தறதை விட்டுட்டு, இருபத்தேழாவது தெருவுக்குப் போகிற வழி தெரியாதுன்னு ஒரே வார்த்தையில் பதில் சொல்லியிருக்கலாமே? முற்றவிடாம இப்பவே டாக்டரைப் போய்ப் பாருங்க’’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
இருபத்தேழாவது தெருவை எங்கே பார்த்தோம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
குங்குமம்