கொம்பை வெட்டிக் காலை நடு!

பிறவியிலேயே கண்பார்வை இழந்தவராய் பிறந்திருந்தும்
தமிழ்ப் புலமை நிரம்பியவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார்.
இவருடைய பாடல்கள் சொற்சுவையும் பொருள் நயமும் உடையவை.
ஒருமுறை இவர் சந்திரவாணன் மீது கோவை பாடிக்கொண்டிருந்தார்.

மாலே நிகராகுஞ் சந்திரவாணன் வரையிடத்தே

பாலேரியாயத் தேன்மாரி பெய்யநற்

பாகுகற்கண்டாலே

யெருவிட முப்பழச் சேற்றின அமுதவயன்

மேலே முளைத் தகரும்

போவிம் மங்கைக்கு மெய்யெங்குமே!

இந்தச் செய்யுளை கவிஞர் தன் மாணவனுக்குச் சொல்லி அவரை
ஏட்டில் எழுதப் பணித்தார். அதனைக் கேட்டுக்கொண்டிருந்த
திருப்பனைங்காட்டைச் சேர்ந்த அம்மைச்சி என்னும் மங்கை
“கவிராயருக்குக் கண்தான் கெட்டது – மதியும் கெட்டதோ? கரும்பு
சேற்றில் முளைக்காது என்பது தெரியவில்லையே” எனச் சொன்னார்.

இதனைச் செவிமடுத்த புலவர் அம்மங்கையின் கூற்றை ஆய்ந்து
சரி எனப்படத் தன் மாணவனிடம் “கொம்பை வெட்டி காலை நடு’
என்றார். மாணவரும் அதனைத் தெரிந்து கொண்டு சேற்றின
என்பதனைச் சாற்றின என மாற்றம் செய்து படித்தார்.
கேட்டுக் கொண்டிருந்த புலவர்கள் யாவரும் களிப்பெய்தனர்.

திருமாலுக்கு நிகரான சந்திரவாணன் வாழுமிடத்தே ஏரிகளிலெல்லாம்
பாலாகப் பாய்ந்து செழிக்க மாரி தேனாகப் பொழிகிறது.
கற்கண்டால் வயல்களுக்கு எருவிட்ட அந்நிலத்தில் முப்பழங்களாலான
சாற்றில் விளைந்த கரும்பின் சுவையை ஒத்திருக்கிறது இம்மங்கையின்
மேனியெங்கும் எனச் சுவைபடப் பாடல்
அமைந்ததற்கு புலவர்கள் யாவரும் கவிராயரை வாழ்த்தினர்.

இப்படி ஓர் அருமையான பாடலைப் பாடிய கவிராயர் பாடலைக் கேட்க
வந்த மங்கை சொன்ன திருத்தத்தையும் ஏற்றுச் செயல்பட்டது அவரது
பணிவைக் காட்டுகிறது.

—————————————–
-புலவர் ப.சோமசுந்தரவேலாயுதம்

தமிழ்மணி

Advertisements

மங்கையின் போராட்டம்!

மக்களாட்சி இல்லாத ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னரே
உண்ணாநிலைப் போராட்டத்தின் மூலம் மன்னனின்
கவனத்தைத் திருப்பி வெற்றி கண்டாள் பெண் ஒருத்தி எ
ன்பதை அகநானூறு கூறுகிறது.

பசுமை நிறைந்த அந்தக் காட்டை முதுகோசர்கள் என்னும்
நில உரிமையாளர்கள் எருதுகள் பூட்டி, உழுது, நீர்ப்பாய்ச்சி,
பண்பட்ட நிலமாக்கி, பயிறு விதைகளை விதைத்து சிறந்த
தோட்டமாக்கிப் பாதுகாத்து வந்தனர்.

ஒருநாள் அந்தத் தோட்டத்தில் பசு ஒன்று மேய்ந்து விடுகிறது.
அதுகண்ட முதுகோசர்கள் அப்பசுவிற்குரியவனை அழைத்து
விசாரிக்கின்றனர். அவன் தன்னுடைய கவனக்
குறைவால்தான் இப்படி நேர்ந்தது என்று தன் குற்றத்தை ஒப்புக்
கொள்கிறான். அதற்காக வருந்துகிறான்.

ஆயினும் முதுகோசர்கள் சினம் அடங்கினாரில்லை.
தம் கண்ணிலும் மேலாகக் காத்த அத்தோட்டம் அழிவதற்கு
இவனே காரணம் எனக் கூறி அவன் கண்களைப் பிடுங்கி
விடுகின்றனர். இதைக் கேள்வியுற்ற அவன் மகள் அன்னிமிஞிலி
கொதித்தெழுகிறாள். தன் தந்தைக்கு இழைக்கப்பட்ட
கொடுமைக்கு நியாயம் கிடைப்பதற்காக உண்ணாவிரதப்
போராட்டத்தைத் தொடங்குகிறாள்.

உண்கலத்தில் உணவிட்டு உண்ணாமலும், தன்னை அழகுப்
படுத்திக்கொள்ளாமலும், தூய உடை உடுத்தாமலும்
இருக்கிறாள். இப்போராட்டம் பல நாள்கள் தொடர்கிறது.

போராட்டத்தைக் கைவிடும்படி கேட்கும் ஊராரிடம்
“தன் தந்தையைக் கொடுமை படுத்தியவர்களை மன்னன்
ஒடுக்கும் வரை ஓயாமல் போராடுவேன்’ என்று கூறிப்
போராட்டத்தைத் தொடர்கிறாள். இச்செய்தி நாடெங்கும் பரவி,
மன்னன் திதியனின் செவிக்கும் எட்டுகிறது. போராடும்
அப் பெண்ணை அழைத்து, அவளை உசாவி, உண்மை நிலையை
அறிந்து கொள்கிறான்.

இக்கொடிய செயலைக்கேட்ட மன்னன் கொதிப்படைகிறான்.
தன் குடிக்கீழ் வாழும் ஒருவனுக்கு இக்கொடுஞ்செயல் செய்த
அந்த முதுகோசரைக் கொன்றொழிக்கிறான்.

இச்செய்தியைக் கேட்ட அன்னிமிஞிலி தனது உண்ணாவிரதப்
போராட்டத்தைக் கைவிடுகிறாள். மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

மக்களாட்சியில் ஏழையின் குரலுக்கு மதிப்பளிப்பதில்
வியப்பொன்றுமில்லை. ஏழைப் பெண்ணின் உணர்வுகளுக்கும்
முடியாட்சியில் மன்னர்கள் மதிப்பளித்து ஆண்ட தமிழகம் இது
என்பதைக் காட்டும் சங்க இலக்கியப் பாடல் இதுதான்:

“முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயக்கிப்

பகடுபல பூண்ட உழுவுறு செஞ்செய்

இடுமுறை நிரம்பி ஆகுவினைக் கலித்துப்

பாசிலை அமன்ற பயறுஆ புக்கென

வாய்மொழித் தந்தையைக் கண்களைத் தருளாது

ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின்

கலத்தும் உண்ணாள் வாலிது மூடாஅள்

சினத்தில் கொண்ட படிவ மாறாள்

மறங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன்

செருவியல் நன்மான் திதியற் குரைத்தவர்

இன்னுயிர் செகுப்பக் கண்டுசின

– மாறியஅன்னிமிஞிலி போல”

(அகம்.மணி.262,1-12)

——————————————-

-சு.சொக்கலிங்கம்

முத்தான முத்தம்

நவமணிகளில் ஒன்று முத்து.
“துன்னரிய தரளம், நித்திலம், ஆரம், முத்து ஆம்’ என்று முத்தின்
பெயர்களைக் கூறுகிறது ஆசிரிய நிகண்டு.

அபிதான சிந்தாமணி என்னும் கலைக்களஞ்சியம் முத்துச் சனிக்கும்
(பிறக்கும்) இடங்கள் என ஒரு பட்டிலைத் தருகிறது. இதழோடு இதழ்
சேர்த்து இனிக்க இனிக்கத் தருவதும் பெறுவதும் முத்தம்.
என்றாலும், முத்தைக் குறிக்கும் இன்னொரு சொல்தான் முத்தம்.

“முறிமேனி, முத்தம் முறுவல், வெறிநாற்றம்

வேல்உண்கண் வேய்த்தோ ளவட்கு”

(குறள்.1113)

என்று திருக்குறள் தலைவன், தலைவியின் நலம்புனைந்து
உரைக்கிறான். கடவுளரையும் பெரியோரையும் குழந்தையாகப்
பாவித்துப் பாடும் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியத்தில்,
முத்தப்பருவம் என ஒன்றுண்டு.

பகழிக்கூத்தர் என்ற புலவர் இயற்றிய திருச்செந்தூர்ப் பிள்ளைத்
தமிழின் முத்தப்பருவப் பாடல், பல்வேறு இடங்களில் பிறக்கும்
முத்துக்களைப் பற்றிக்கூறி, “அந்த முத்துக்களுக்கு எல்லாம் முருகா!
உன் கனிவாய் முத்தம் ஈடாகுமோ, முத்தம் தருவாய் முதல்வா’ என்று
சொல்கிறது.

“இடைவிடாது எந்நேரமும் ஓசை முழங்கும் பெருங்கடலில்
அடுத்தடுத்துக் கரைமோதும் அலைகள், வலம்புரி சங்குகளை
வாரிக் கடற்கரையில் இறைக்கின்றன. அந்தச் சங்குகளின் சூல்
முற்றி முத்துக்களாக உதிர்கின்றன.

அந்த முத்துக்களுக்கு விலை கூறிவிடலாம். பருத்த யானைகளின்
பிறைநிலா போல் வளைந்த தந்தங்களில் பிறக்கும் தரளத்திற்கு
விலையுண்டு. தழைத்து வளர்ந்து முற்றிச் தலைசாயும் செந்நெல்லில்
பிறக்கும் குளிர்ந்த முத்துக்கும் விலையுண்டு.

கடல் நீரை முகந்து இந்தப் பார் செழிக்கப் பொழியும் கார்மேகத்தில்
தோன்றும் முத்துக்கும் விலையுண்டு. நீலத் திரைகடல் எந்நேரமும்
தன்னில் பிறந்த முத்துக்களை எல்லாம் வாரி வாரிக் கடற்கரையில்
குவிக்கின்ற பெருமைமிகு திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள
செந்திலாதிபனே, உன் செங்கனிவாய் முத்தத்திற்கு விலையுண்டோ?
உன் கொவ்வைச் செவ்வாயின் குமிழ்முத்தம் தந்தருள்வாய்’ என்று
வேண்டும் பகழிக் கூத்தரின் திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்ப் பாடல்
இதுதான்:

“கத்துந் தரங்கம் எடுத்தெறியக்

கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்

கரையில் தவழ்ந்து வாலுகத்திற்

கான்ற மணிக்கு விலையுண்டு;

தத்துங் கரட விகடத் தடத்

தந்திப் பிறைக்கூன் மருப்பில்விளை

தரளந்தனக்கு விலையுண்டு;

தழைத்துக் கழுத்து வளைந்த மணிக்

கொத்துஞ் சுமந்த பசுஞ்சாலிக்

குளிர் முத்தினுக்கு விலையுண்டு;

கொண்டல் தரு நித்திலர் தனக்குக்

கூறுந்தரமுண்டு; உன் கனிவாய்

முத்தந் தனக்கு விலையில்லை

முருகா முத்தந் தருகவே!

முத்தஞ் சொரியும் கடல் அலைவாய்

முதல்வா முத்தந் தருகவே!

———————————-

-கண்ணையன் தட்சிணாமூர்த்தி
நன்றி- தினமணி

தோழியின் ஊடல்…

தமிழில் அன்பின் இணையரிடம் ஏற்படும் சிறு பிணக்கு
ஊடல் எனப்படும். அன்பினருக்குள் ஏற்படும்
இந்த ஊடல் மேலும் அன்பினை மிகுவிக்கக்கூடியது.
சங்ககால களவு வாழ்க்கையில் தலைவன்-தலைவி இருவரும்
சந்திப்பதற்குக் குறியிட்ட இடத்துக்கு காதலி வரத் தவறிய
போது காதலன் ஊடுவான்.

கற்பு வாழ்க்கையில் தலைவனின் பரத்தை ஒழுக்கத்தைக்
கண்டிக்கும் விதமாகத் தலைவி ஊடுவாள். தலைவியின்
ஊடலைத் தீர்க்கத் தலைவன் தூது விடுவான். பாங்கன்
தூதாகச் செல்வான். தலைவி ஊடல் நீங்கத் தூது விட்டதாகக்
குறிப்புகள் இல்லை.

இவ்வகை ஊடலை உணர்த்தும் பல பாடல்கள் சங்க அக
இலக்கியங்களில் உள்ளன.

களவு, கற்பு எனும் இரு அக வாழ்க்கை நிலையிலும் தலைவன் –
தலைவி இருவருக்குள் ஏற்படும் ஊடலைத் தோழி பக்குவமாக
எடுத்துரைத்து ஊடல் நீக்குவாள்.

தோழியின் ஊடல் நீக்கமானது களவு வாழ்க்கையில் காதலைத்
தொடரச் செய்யும், கற்பு வாழ்க்கையில் இல்லறத்தைச் சிறக்கச்
செய்யும்.

தலைவன், தலைவிக்குள் ஏற்படும் ஊடலை நீக்கும் தோழிக்கே
ஊடல் ஏற்பட்டதை வெளிப்படுத்தும் கபிலர் பாடிய ஒரு பாடல்
நற்றிணையில் உள்ளது. தலைவனுக்குக் குறைநேர்ந்தபோது
தலைவியிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி, தலைவன்
நிலையை உணரச் செய்யலாம் என்று தோழி எண்ணுகிறாள்.

தலைவி, தோழியின் சொல்லைக் கேட்டும் மனநிலையில்
இல்லாது அவள் சொல்வதை கண்டும் காணாததுபோல்
இருக்கிறாள். தாம் சொல்லும் கருத்தைக் கேட்கும் நிலையில்
இல்லாத தலைவியை நோக்கிப் பலவாறு கூறிவிட்டு ஊடுகிறாள்
தோழி.

“”மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்

வலியோன் அன்ன வயங்குவெள் அருவி

அம்மலை கிழவோன் நம்நயந்து என்றும்

வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய்

நீயும் கண்டு நும்மரோடும் எண்ணி

அறிவறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு

அரிய வாழி தோழி பெரியோர்

நாடி நட்பின் அல்லது

நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே” (நற்-32)

“மாயோனைப் போன்ற கரிய பெரிய மலைப்பக்கம்;
கண்ணனுக்கு முன்னவனாகிய பலதேவன் போன்று
வெண்மையான அருவிகள்; அத்தகு மலைக்குரிய தலைவன்
நாள்தோறும் நம் தினைப் புனத்தின் அருகில் வந்து நம்மை
விரும்பி வருந்தி நிற்கிறான் என்று நான் கூறும்
உண்மையான உரையை நீ ஏற்றுத் தெளிந்து கொள்ளவில்லை.
அவன் கூற்றும் மறுத்தற்குரியது இல்லை.

நான் சொல்வதைக் கேட்கவில்லையென்றாலும் உன்னிடத்து
அன்பு கொண்ட தோழியரிடம் கேட்டாவது ஆராய்ந்து இது
தக்கது, இது தகாதது என்பதை அறிந்து கொள்வாயாக.
அறிவுமிக்க சான்றோர் தம்மொடு நட்புக் கொள்ள
விரும்பியவர்களின் குணங்களை முதலில் ஆராய்ந்து பார்த்த
பின்னரே நட்புக்கொள்வர்.

நட்பு கொண்ட பின்னர் ஆராய்ந்து பார்க்க மாட்டார். நீ அவ்வாறு
தலைவனோடு நட்புக் கொள்ளவில்லை. முதலில் நட்புக் கொண்டு
விட்டு இப்போது வெறுத்தல் தகாது என்பதை அறிக” என்று
தோழி தலைவியிடம் ஊடல் கொண்டுவிட்டுச் செல்கிறாள்.

சங்க இலக்கியங்களில் தோழி, தலைவியோடு ஊடல் கொள்வதாக
இந்த ஒரு பாடல் மட்டுமே உள்ளதாகத் தெரிகிறது.
தோழி ஊடல் கொள்ளும் வகையிலமைந்த இப்பாடல்,
467(எண்ணித் துணிக), 791 (நாடாது நட்டலிற்) ஆகிய இரு
குறட்பாக்களை நினைவுகொள்ளச் செய்கிறது.

————————————
-முனைவர் இரா. வெங்கடேசன்
நன்றி- தினமணி

காவிய இன்பம் – காதலும் கற்பும் – ரா.பி.சேதுப்பிள்ளை

   (* சென்னை வானொலி நிலையத்திலே பேசியது; நிலையத்தார் இசைவு பெற்றுச் சேர்க்கப்பட்டது.)
   -காதல் என்பது காதுக் கினிய சொல்; கருத்துக் கினிய பொருள். காதல் உண்டாயின் இவ்வுலகில் எல்லாம் உண்டு; காதல் இல்லையேல் ஒன்றும் இல்லை. “காதல், காதல், காதல் – இன்றேல் சாதல், சாதல், சாதல்” என்று பாடினார் பாரதியார். ஆயினும், அச்சொல்லை எல்லோரும் கூசாமல் பேசுவதில்லை. சின்னஞ் சிறியவர் காதில் அது விழலாகாதாம். கன்னியர் வாயில் அது வரலாகாதாம். இப்படி ஏன் அச்சொல் ஒதுக்கப்படுகின்றது? தமிழ்க் கவிகள் காதல் என்ற சொல்லை எடுத்தாளவில்லையா? திருப்பாடல்களில் அஃது இடம் பெறவில்லையா? காவியங்களிலும், நீதி நூல்களிலும் திருப்பாசுரங்களிலும் பயின்ற அழகிய தமிழ்ச் சொல்லை ஏன் கூசிக் கூசிப் பேச வேண்டும்? தேவாரத்தில் அடியாரது காதல் பேசப்படுகின்றது.
   “காதலாலே கருதும் தொண்டர்
   காரணத்தர் ஆகி”
   நின்ற சிவபெருமானைச் சுந்தரர் பாடுகின்றார். இன்னொரு பெரியார் – திருஞானசம்பந்தர் – இறைவன் திருநாமத்தை ஓதும் காதலடியார் பெருமையைக் கூறுகின்றார்.
   “காத லாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
   ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
   வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
   நாதன் நாமம் நமச்சி வாயவே”
   என்பது அவர் திருப்பாட்டு. இவ்வாறு தேவாரம் முதலிய தெய்வப் பாடல்களில் பயின்ற காதல் என்ற சொல்லைக் கடி சொல்லாகக் கருதலாமோ?
   காதல் என்ற சொல்லின் பொருள்தான் என்ன? அன்பு என்றாலும் காதல் என்றாலும் பொருள் ஒன்றே. பெற்றோர்க்குப் பிள்ளையிடம் உள்ள அன்பு மேல் காதல்தான். ‘கடந்த பேர்களும் கடப்பரோ மக்கள் மேல் காதல்’ என்று கவிஞர் பாடவில்லையா? பெற்ற பிள்ளையைக் காதலன் என்று கூறுவதுண்டு. வாலியின் மைந்தனாகிய அங்கதனை ‘வாலி காதலன்’ என்று குறிக்கின்றார் கம்பர். இவ்வாறே நண்பனையும் காதலன் என்று கவியரசர் கூறுவர். கங்கைக் கரையிலே இராமனுடைய நண்பனாயினான் குகன்; அவன் அன்பிற்குக் கங்கை கரையில்லை. அது கண்ட இராமன்,
   “சீதையை நோக்கித் தம்பி திருமுகம் நோக்கித் தீராக்
   காதல னாகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன்
   யாதினும் இனிய நண்ப இருத்தி ஈண்டு எம்மொடு என்றான்”
   எனவே பக்தியும் காதல்; பிள்ளைப் பாசமும் காதல்; நேசமும் காதல்; சுருங்கச் சொல்லின் தலைசிறந்த அன்பே காதல்.
   இவ்வளவு விரிந்த பொருளில் வழங்கிய காதல் என்ற சொல், இப்பொழுது ஆண் பெண் என்னும் இரு பாலாரிடையே உள்ள அன்பையே பெரும்பாலும் குறிக்கின்றது. காதலன் என்றால் கணவன்; காதலி என்றால் மனைவி. இவ்விருவரையும் இல்வாழ்க்கையில் இழுப்பது காதல், பின்பு இல்வாழ்க்கையை நல்வாழ்க்கையாக நடைபெறச் செய்வதும் காதல். கண்ணிரண்டும் ஒன்றையே காண்பதுபோல இல்வாழ்க்கையில் ஈடுபட்ட இருவரையும் ஒரு நெறிப்படுத்துவது காதல். “காதல் மனையாளும் காதலனும் மாறின்றித் தீதில் ஒரு கருமம் செய்பவே” என்றார் ஒரு கவிஞர்.
   ஆதியில், காதல் மணமே தமிழ் நாட்டில் சிறந்து விளங்கிற்று. ‘காதல் இல்லாத வாழ்க்கை உயிரில்லாத உடல் போன்றது’ என்பது தமிழர் கொள்கை. காதலுற்ற கன்னியர், தம் கருத்து நிறைவேறும் வண்ணம் காமனை வேண்டிக்கொள்ளும் வழக்கமும் முற்காலத்தில் இருந்ததாகத் தெரிகின்றது. காதல் விளைக்கும் தேவனைக் ‘காமன்’ என்றும், ‘காமவேள்’ என்றும் தமிழர் அழைத்தனர். தாம் கருதிய காதலனைக் கணவனாகப் பெறுவதற்கும், பிரிந்த கணவனை மீண்டும் அடைவதற்கும், காமன் கோயிலிற் சென்று மங்கையர் வழிபடும் வழக்கம் அந் நாளில் இருந்தது. கோவலன், மாதவி என்னும் நடிகையின் மையலிலே முழ்கித் தன் மனைவியாகிய கண்ணகியைப் பிரிந்திருந்தபோது, ‘காமவேள் கோயிலிற் சென்று தொழுதால் கணவன் மீண்டும் வந்து சேர்வான்’ என்று அக் கற்பரசியிடம் அவள் உயிர்த்தோழி எடுத்துரைத்தாள்.
   “கடலொடு காவிரி சென்றலைக்கும் முன்றில்
   காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
   தாமின் புறுவர் உலகத்துத் தையலார்”
   என்று கூறினாள் தோழி. இதனால், காவிரிப்பூம்பட்டினத்தில் அந்த நாளிலே காமன் கோயில் இருந்ததென்றும், குலமாதர் அங்குச் சென்று வழிபடும் முறை இருந்ததென்றும் நன்றாக விளங்குகின்றன. இன்றும், தமிழ் நாட்டின் பல பாகங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. ‘ஈசனுடைய நெற்றிக் கண்ணால் காமன் எரிந்துபோனான்’ என்று வாதிப்பாரும், ‘அப்படியில்லை’ என்று சாதிப்பாரும் இக்காலத்தும் தமிழ் நாட்டிலுண்டு.
   காமம் என்ற சொல்லும், காமன் என்ற பெயரும் தமிழ் நூல்களிலே எடுத்தாளப்-பட்டாலும் இன்று அவை இழிந்த பதங்களாகவே எண்ணப் படுகின்றன. காமம் என்பது வடசொல்; இன்பம் என்னும் பொருள் அதற்குண்டு. உறுதிப் பொருள்களைத் “தர்மார்த்த காம மோட்சம்” என்று வடமொழியாளர் கூறுவர். இவ் வடமொழித் தொடருக்கு நேரான தமிழ்,
   “அறம் பொருள் இன்பம் வீடு” என்பது. எனவே, காமம் என்பது இன்பம் என்ற பொருளைத் தருகின்றது. திருவள்ளுவர் காலத்தில் காமம் இழிந்த சொல்லாகக் கருதப்படவில்லை என்று தெரிகின்றது. அறம் பொருள் இன்பம் என்ற முப்பாலைப் பற்றி எழுதிய திருவள்ளுவர் இன்பப் பகுதிக்குக் காமத்துப் பால் எனப் பெயரிட்டார் என்றால், அவர் காலத்தில் காமம் இழிந்த சொல்லாகக் கருதப்படவில்லை என்பது தெரிகின்றதல்லவா?
   ஆயினும், கால கதியில் காமம் என்பது துன்மார்க்கத்திற் பெறும் இன்பத்தைக் குறிப்பதாயிற்று. காமி, காமுகன் முதலிய சொற்கள் தூர்த்தன் என்ற பொருளிலே வழங்குகின்றன. காமுகன், கல்வி கற்பதற்கும் தகுதியற்றவன் என்று நன்னூல் கூறுகின்றது.
   இனி, காதலுக்கும் கற்புக்கும் உள்ள தொடர்பைச் சிறிது பார்ப்போம்; காதல் என்பது உணர்ச்சி; கற்பு என்பது ஒழுக்கம். உணர்ச்சியால் ஒன்றுபட்ட நம்பியும் நங்கையும் (தலைமகனும் தலைமகளும்) ஒருவரை யொருவர் தமக்கே உரியவராகக் கொண்ட நிலையிலே தோன்றும் ஒழுக்கமே கற்பு என்பர்.
   சீதையின் காதலில் வைத்து இந்த உண்மையைக் காட்டுகின்றார் கம்பர். மிதிலை மாநகரத்தில் கன்னி மாடத்தின் மேடையிலே நின்ற சீதையும் விதியின் வழியாகச் சென்ற இராமனும் தற்செயலாக ஒருவரை யொருவர் நோக்கினர். இருவர் கண்ணோக்கும் ஒத்தது; காதல் பிறந்தது. காதலர் இருவரும் ஒருவர் இதயத்தில் ஒருவர் புகுந்து உறவாடினர்.
   இந்த நிலையில் இராமன் தன்னுடன் வந்த தம்பியோடும் முனிவரோடும் வீதியிற் சென்று மறைந்துவிடுகின்றான். அவன் இன்னான் என்று அறியாள் சீதை. அவன் எங்கே சென்றான் என்பதும் உணராள்; ஆயினும், அவனையே கருத்தில் அமைத்துக் கரைந்து உருகுகின்றாள். அந்த வேளையில் ஓடி வருகின்றாள் அவள் தோழியாகிய நீலமாலை; ஆனந்தமுற்று ஆடுகின்றாள்; பாடுகின்றாள். “தோழீ! என்ன செய்தி?” என்று கேட்கின்றாள் சீதை. அப்போது தோழி சொல்கின்றாள்: “அயோத்தி அரசனுடைய மைந்தன்; அஞ்சன வண்ணன்; செந்தாமரைக் கண்ணன்; அவன், தம்பியோடும் முனிவரோடும் நம் மாளிகைக்கு வந்தான்; உன் திருமணத்திற்காக வைத்திருந்த வில்லைக் கண்டான்; எடுத்தான்; வளைத்தான்; ஒடித்தான்” என்று கூறி முடிக்கின்றாள்.
   அப்பொழுது சீதையின் மனம் ஊசலாடத் தொடங்கிற்று; கவலையும் உண்டாயிற்று. வில்லை எடுத்து வளைத்து ஒடித்த வீரன், தான் கன்னி மாடத்திலிருந்து கண்ட ஆடவனோ? அல்லனோ? என்ற ஐயம் பிறந்தது. அவனாகத்தான் இருக்க வேண்டு மென்று ஒருவாறு மனத்தைத் தேற்றிக்கொண்டு, தோழி சொல்லிய அடையாளங்களை மீளவும் நினைத்துப் பார்த்தாள்.
   “கோமுனி யுடன்வரு கொண்டல் என்றபின்
   தாமரைக் கண்ணினான் என்ற தன்மையினால்
   ஆம்அவ னேகொல்என்று ஐயம் நீங்கினாள்.”
   ஆனால், நொடிப்பொழுதில் மற்றொரு கருத்து அவள் மனத்தில் புகுந்தது. “என் தோழி சொல்லிய அடையாளங்கள் எல்லாம் உடைய மற்றொருவன் வில்லை வளைத்து ஒடித்திருந்தால் நான் என்ன செய்வேன்?” என்று அவள் எண்ணினாள்; ஏங்கினாள்.
   அந்த ஏக்கத்தினிடையே ஓர் ஊக்கம் பிறந்தது; உணர்ச்சியினிடையே ஒழுக்கம் எழுந்தது. காதல் கற்பாக உருவெடுத்தது. “அவன் அல்லனேல் இறப்பேன்” என்று சீதை முடிவு செய்தாள். கண்ணாற் கண்ட காதலனும் வில்லை ஒடித்த வீரனும் ஒருவனேயாயின் அவனை மணம் புரிந்து வாழ்வேன்; இல்லாவிட்டால் இறந்து படுவேன்” என்று உறுதி கொண்டாள் சீதை. கற்பு நெறி என்பது இதுதான். காதலனையன்றி மற்றோர் ஆடவனை மனத்திலும் கருத ஒருப்படாத உறுதியே கற்பு எனப்படும். இதையே திருவள்ளுவர் வியந்து பாடினார்.
   “பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
   திண்மைஉண் டாகப் பெறின்”
   என்பது அவர் திருவாக்கு.
   கற்புடைய மாதரிடம் மென்மையும் உண்டு; மனத்திண்மையும் உண்டு. பொறுக்கும் திறமும் உண்டு; மாறுபட்டோரை ஒறுக்கும் திறமும் உண்டு. சிலப்பதிகாரத்தின் கதாநாயகியாகிய கண்ணகியிடம் இவ்விரு தன்மைகளையும் பார்க்கின்றோம். கொண்ட கணவன் அவளுக்குக் கொடுமை செய்தான்; செல்வத்தையெல்லாம் செலவழித்தான். அல்லும் பகலும் அயலார் அறியாமல் கண்ணீர் வடித்தாள் கண்ணகி; மங்கல அணியைத் தவிர மற்றைய நகைகளை யெல்லாம் மறந்தாள்; தன்னை அழகு செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை அறவே துறந்தாள்.
   “அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய
   செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப
   பவள வாள்நுதல் திலகம் இழப்ப
   மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்
   கையறு நெஞ்சத்துக் கண்ணகி”
   என்று கூறுகின்றது சிலப்பதிகாரம். அடக்கமும் பொறுமையும், கற்பும் கண்ணீரும் கண்ணகியின் வடிவம். “கண்டார் வெறுப்பனவே காதலன்தான் செய்திடினும் கொண்டானை யல்லால் அறியாக் குலமகள்” என்று ஆழ்வார் பாடிய திருப்பாட்டுக்கு ஓர் எடுத்துக் காட்டாக அமைந்தாள் கண்ணகி.

   இத்தகைய மென்மையும் பொறுமையும் வாய்ந்த கண்ணகி, மதுரை மாநகரில் தன் கணவனை இழந்த போது வன்மையின் வடிவம் கொண்டாள்; கற்பெனும் திண்மை அவ்வடிவத்திலே களிநடம் புரிந்தது. அத்திண்மையைக் கண்டு திடுக்கிட்டான் அரசன்; அப்பால் அவள் பேசிய திடமொழியைக் கேட்டபோது மயங்கிவிழுந்து மாண்டான். தவறு செய்த அரசனைக் கற்பின் திண்மையால் ஒறுத்த கண்ணகி, வீரபத்தினியாகத் தமிழ் நாட்டிலே போற்றப்பட்டாள். அன்று முதல் இன்றளவும் கண்ணகி, மாதர்குல மணி விளக்காய், வீரக்கற்பின் விழுமிய கொழுந்தாய் விளங்குகின்றாள்.—————

தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு)
(சாகித்ய அகாதமி விருது பெற்ற கட்டுரைத் தொகுப்பு)
ரா.பி.சேதுப்பிள்ளை எழுதியது.

நன்றி

புலவி நுணுக்கம்

-புலவி நுணுக்கம் பற்றி முதன்முதல் புலப்படுத்தியவர் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.

“உப்பு அமைந்தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்”
(குறள்:1302)

கறி காயின் அளவறிந்து உப்பிட்டுச் சமைத்ததற்கு ஒக்கும்; புலவியும் கலவியும் மிகாமலும் குறையாமலும் இருக்கவேண்டும் என்று உரைக்கிறார் பரிதியார் என்ற உரைகாரர். இப்புலவி இன்ப நுகர்ச்சிக்குத் துணை நின்று அதனை மிகுவிப்பதென்பது தமிழ் அக நூல்களில் பேசப்படும் உண்மை. அக வாழ்க்கையின் அன்பு தோய்ந்த உணர்வுகளை அவை அழகாகப் பட்டியலிட்டன.

“குறள் என்ற இலக்கணத்தை விளக்க பெரிய புராணம் இலக்கியமாகத் திகழ்கிறது” என்பார் பெரியபுராண ஆராய்ச்சியாளர் சி.கே.எஸ். எளிய சொற்போக்கும் உயர்ந்த நோக்கும் கொண்டு படிப்போர் மனத்தை உயர்விலேயே கொண்டு போய் வைப்பது சேக்கிழாரின் பெரியபுராணம். அதில், வள்ளுவரின் வழி, சேக்கிழாரும் புலவி நுணுக்கம் பற்றி, (பரந்த அந்த இன்ப நிலையை) வர்ணிக்கும் காட்சியைக் காண்போம்.

“யாழின்மொழி எழில்முறுவல் இருகுழைமேல் கடைபிறழும்
மாழைவிழி வனமுலையார் மணிஅல்குல் துறைபடிந்து
வீழும்அவர்கு இடைதோன்றி மிகும்புலவி புணர்ச்சிக்கண்
ஊழியாம்ஒரு கணம்தான் அவ்வூழி ஒருகணம் ஆம்”

யாழினுமினிய மொழியினையும், அழகிய பல் வரிசையினையும், இரு காதுகளிலும் அணிந்த மகரக்குழைகளின் மேலே கடைப்பார்வை பிறழ்ந்து செல்லும் மாவடுவைப் போன்ற கண்களையும், சந்தனக்கோலமெழுதிய தனங்களையும் உடைய, சங்கிலியாரது அழகிய கடிதடத்தின் துறையிலே ஒழுகி விழும் நம்பிகள் (சுந்தரர்) சங்கிலியார் என்ற இருவருக்கும் இடையே உண்டாகி மிகுகின்ற புலவி (ஊடல்)நிற்கும் காலம் ஒரு கணமேயாயினும், அது ஊழிபோல நீடித்ததாம். புணர்ச்சியிலோ, அது நிகழும் காலம் நீண்டதாயினும் ஒரு கணமே போல் விரைந்து கழியுமாம்.

ஏனைய உலக இன்பங்கள் கூட அப்படித்தானே! ஆவலோடு அடைய விரும்பும்போது, காலம் விரைந்து செல்லுவதையும், விரும்பாத நிகழ்ச்சிகள் நேரும்போது, காலம் மெல்லச் செல்வதுபோலத் தோன்றுவதும் இயல்பல்லவா?

–மா.உலகநாதன்

(தினமணி)

கலித்தொகையில் விடுகதை

நம் தமிழர்களாய மூதாதையர்கள் தத்தம் அறிவையும்

புலமையையும் சோதித்துக்கொள்ள விளையாட்டுகளை

அதற்கேற்ப அமைத்துக் கொண்டனர்.

அவ்வகையில் ஒன்றான விடுகதையைக் கூறலாம்.

இன்றைக்கு நாம் கையாளும் விடுகதையைத் தொல்காப்பியர்

காலத்து மக்கள் “பிசி’ என்றனர்.

இதனைத் தொல்காப்பியர் (தொல்) செய்யுளியலில் (நூ.75) குறித்துள்ளார்.

எடுத்துக்காட்டாக ஓர் விடுகதையினைக் கூறலாம்.

“”கையுண்டு காலில்லை; கழுத்துண்டு தலையில்லை; உடலுண்டு உயிரில்லை – அது என்ன?” என்பது விடுகதைக்கான வினா. இதற்கு விடை தெரிந்தோர் “சட்டை’ (மேலாடை) என்று கூறிவிடுவர். இதே போல், கலித்தொகையில்,

“”ஐ தேய்ந்தன்று பிறையுமன்று

மை தீர்ந்தன்று மதியுமன்று

வேயம் அன்றன்று சுனையுமன்று

மெல்ல வியலும் மயிலுமன்று

சொல்லித் தளரும் கிளியுமன்று” (கலி.55)

என்று விடுகதைப் பாடல் ஒன்று வருகிறது.

இதற்கு விடை “பெண்’ எனக் கொள்ளப்படும்.

அதாவது, வியக்கும்படியாகத் தேய்ந்துள்ள பிறை இல்லை

என்பதால் (நெற்றி) நுதல் என்றும்;

மாசுமரு இல்லாது களங்கம் நீங்கியுள்ளது,

ஆனால் திங்கள் இல்லை முகம் என்றும்;

மூங்கிலன்று என்பதால், மூங்கிலையொத்த தோள்கள் என்றும்;

பூக்கள் மலர்ந்துள்ள ஆனால் பூக்களில்லை என்பதால் கண்கள் என்றும்;

அக்கண்களே சுனை இல்லை என்றும்;

மெதுவாக நடக்கின்றதால் மயில் இல்லை ஆனால்,

மயில் போலும் சாயல் என்றும்;

பேசுவதால் கிளி இல்லை என்பதால் அவளே “பெண்’ என்றும்

விடை கூறலாம்

========================

முனைவர் கா.காளிதாஸ் –

நன்றி: தமிழ்மணி (தினமணி)

களிற்றின் நாணம் – -பாவலர் கருமலைத்தமிழாழன்

சங்க காலத்தில் தமிழர்களிடம் மட்டுமன்றி அவர்கள் வளர்த்த விலங்குகளிடமும் மறமாண்பும், மான உணர்வும், நாணமும் இருந்தன என்பதற்கு முத்தொள்ளாயிரப் பாடல் (72) சான்றாக விளங்குகிறது.

சோழ மன்னன் பகை நாட்டின் மீது படையெடுத்து வாகை சூடினான். பகை வென்று திரும்பும் தம் கணவர்மார்களை வரவேற்க மனைவிமார்கள் தங்கள் வீட்டு வாயிற்படியிலேயே ஆவலும், ஆசையும் ததும்பக் காத்திருக்கின்றனர். அன்றிரவு, இன்பப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.

போருக்குச் சென்ற மறவர்களில் காலிழந்தும், கையிழந்தும் திரும்பிய வீரர்களும் தம் மனைவிமார்களுடன் கூடிக் குலாவுகையில், வெற்றிக்கு மூலமாய் நின்று, வீர விழுப்புண்கள் பல ஏற்றுத் தம் மன்னனைக் காத்த ஐந்தறிவு படைத்த களிறு மட்டும் அந்த வேளையில், தன் அன்புக் காதலியைக் காணமுடியாமல் ஓரத்தில் ஒதுங்கி, தனித்து நிற்கிறது.

ஆம், அந்தக் களிறு போர்க்களத்தில் மறவர்களாலும் இடிக்க முடியாத மதில்களைத் தம் கிம்புரிக் கொம்புகளால் இடித்துத் தள்ளியது. அவ்வாறு இடிக்கும் போது கிம்புரியொடு கொம்பும் ஒடிந்தது. அத்துடன் விட்டதா? மதிலை அழித்து உள்ளே சென்று பகை மன்னரைப் பாய்ந்து தள்ளிக் காலால் இடறிக்கொண்டே போகிறது. அப்படிப் போனதால் கால் நகமும் தேய்ந்துபோயின. கால் நகத்தையும், கொம்பையும் இழந்த பின்பும் தம் மன்னரைத் தாங்கி எதிர்வந்த பகையினைத் தம் கையால் தடுத்து வெற்றியைத் தந்தது.

போர் முடிந்து அனைவரும் வீடு திரும்பினர். ஆனால் அந்தக் களிறோ கொம்பும், நகமும் இழந்த கோலத்தில் பிடி முன்பு செல்ல நாணியது. “கொம்பும், நகமும் இழந்த இக்கோலத்தைக் கண்டு தம் பிடி எள்ளி நகையாடுமே! மதிலைவிடத் தம் கொம்புகள் உரமற்றவை எனக் கேலி பேசுமே!’ என்ற வெட்கத்தால் தன் பிடியினைக் காணாமல் ஒதுங்கி நின்றதாம்! அப்பாடல் இதுதான்:

கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்

முடியிடறித் தேய்ந்த நகமும் – பிடிமுன்பு

பொல்லாமை நாணி புறங்கடை நின்றதே

கல்லார்தோட் கிள்ளி களிறு.

====================

-நன்றி: தமிழ்மணி (தினமணி)

தமிழிலக்கிய வினா – விடை

 1. செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு – 1903
 2. செந்தாமரை நாவல் ஆசிரியர் –  மு.வரதராசன்
 3. செம்பியன் தேவி நாவலாசிரியர் –  கோவி.மணிசேகரன்
 4. செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார்
 5. செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு
 6. சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர்
 7. சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராகவையங்கார்
 8. சேயோன் – முருகன்
 9. சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து
 10. சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து
 11. சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார்
 12. சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான்
 13. சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை
 14. சைவசமயக் குரவர்கள்  – நால்வர்
 15. சைவத் திறவுகோல்  நூலாசிரியர் – திரு.வி.க
 16. சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க
 17. சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை
 18. சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர்
 19. சொல்லின் செல்வர் – ரா.பி.சேதுபிள்ள
 20. சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
 21. சோமசுந்தரக் களஞ்சியாக்கம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
 22. சோம்பலே சுகம் – பூர்ணம் விசுவநாதன்
 23. சோமு என அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம்
 24. சோழ நிலா நாவலாசிரியர் – மு.மேத்தா
 25. ஞாநசாகரம் இதழாசிரியர் – மறைமலையடிகள்
 26. ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி
 27. ஞானக் குறள் ஆசிரியர் –  ஔவையார்
 28. ஞானபோதினி ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
 29. ஞானவெண்பாப் புலிப்பாவலர் –   அப்துல் காதீர்
 30. டாக்டருக்கு மருந்து நாடக ஆசிரியர் – பி.எஸ்.ராமையா
 31. -=============================================
 32. முனைவர் நா.சிவாஜிகபிலன்
 33. http://thoorigaikabilan.blogspot.sg/2013/05/1000_2151.html
 34.  

போரைத் தடுத்த கவிதை!

அதிவீரராம பாண்டியன், நிடத நாட்டு மன்னன் நளனுடைய வரலாற்றை “நைடதம்’ என்ற பெயரில் விருத்தப் பாக்களில் அதைப்படிக்க, அவைப் புலவர்கள், “”நைடதம் புலவர்க்கு ஒüடதம்” என்று பாராட்டினர். கரிவலம்வந்த நல்லூரில் ஆட்சி செய்துவரும் தன் அண்ணனும் சிறந்த தமிழறிஞனும் கவிஞனுமான வரகுணராம பாண்டியனிடம் நைடதத்தைக் கொடுத்தனுப்பி, அக்காவியத்தைப் பற்றி அவன் கருத்தைக்கேட்டு வருமாறு அனுப்பினான்.

வரகுண பாண்டியனின் மனைவியும் சிறந்த தமிழறிவுள்ளவள். அவளிடம் தம்பியின் நூலைக்காட்டி, அவள் கருத்தைக் கேட்டான். அவள் அந்நூலைப் படித்துப் பார்த்து, “”உங்கள் தம்பி எழுதியுள்ள நைடதம், நளன் சுயம்வரத்தில் தமயந்தியை மணந்தது, தங்கள் நாடு சென்று இல்லற வாழ்வில் இன்பம் அடைந்தது வரை கவிஞர்கள் பாராட்டும் அளவிற்குப் பாடியுள்ளார். ஆனால், கலி தொடர்ந்த பின் கலிநீங்கும் வரை நளனும் தமயந்தியும் துயரமடைந்த அவலச் சுவையை, கவிதைகள் நன்றாக விளக்கவில்லை” என்று கூறினாள்.

வரகுணராம பாண்டியன், தன் மனைவியிடம், “”என் தம்பி அழகும் அறிவும் உள்ள பெண்ணை மணந்து இல்லற வாழ்வில் இன்பத்தின் எல்லை கண்ட காலத்தில் நளன் -தமயந்தியின் இல்லற வாழ்வைப் பற்றிப் பாடும்போது இன்பச் சுவையை அழகாகப் பாடியுள்ளான். இளைஞனான அவன், கலியினால் அவர்கள் துன்பம் அடைந்ததைப் பாடும்போது அவலச்சுவை குறைந்திருப்பது இயல்பே. நீயே உன் கருத்தை எழுதியனுப்பு” என்று கூறினான்.

“”நைடதத்தில் உள்ள கவிதைகளில் அழகும் சுவையும் முதற்பகுதியில் இருந்ததுபோல் இல்லாமல் போகப் போகக் குறைந்துகொண்டே போயுள்ளது. ஆதலால், வேட்டை நாய் முதலில் வேகமாக ஓடி, போகப்போக இளைத்தது போன்றும்; கரும்பை வேரிலிருந்து தின்னும்போது முதலில் சுவையாகவும் போகப்போகச் சுவை குறைந்துகொண்டே உள்ளது போன்றும் நைடதத்தின் கவிதைகள் உள்ளன” என்று அவள் எழுதி அனுப்பினாள்.

இந்த ஓலையைக் கண்ட அதிவீரராம பாண்டியன், “”அண்ணா, வரகுணராம பாண்டியா, நீ என்னைப் பழித்தால் நான் பொறுத்துக் கொள்வேன். ஆனால், நீ என் கவிதைகளை – என் தமிழைப் பழித்தாய்! ஆதலால் உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் போருக்கு வரவேண்டும்” என்று ஓலை எழுதி அனுப்பினான்.

தம்பியின் ஓலையைக் கண்ட வரகுணராம பாண்டியன், தம்பியிடம் மன்னிப்புக் கேட்டாலும் போர் தொடுத்தாலும் பழி உண்டாகும். இதற்கு என்ன பதில் எழுதுவது என்று யோசித்தான். அதைக்கண்ட அவன் மனைவி, “”ஒரு கவிதையினால் உங்கள் தம்பியின் கோபத்தைத் தணிக்கிறேன்” என்று கூறினாள்.

“”இராமாயணத்தில் சூரியன் மகனாகிய சுக்ரீவன். ராமனிடம் தன் அண்ணனான வாலியின் குற்றங்களைக்கூறி அண்ணனைக் கொல்லச் செய்தான்.

தென்னிலங்கை வேந்தனாகிய விபீஷணன் தன் அண்ணனான இராவணன் மார்பில் அம்பெய்தால்தான் அவன் உயிர் போகும் என்ற உண்மையை ராமனிடம் கூறி அவனைக் கொல்லச் செய்தான். மகாபாரதத்தில் அருச்சுனன் தன் அண்ணனாகிய கர்ணனைக் கொன்றான்.

அண்ணன்-தம்பிகளின் பாசத்திற்கு இந்த மூன்று தம்பிகளையும் பாராதே. அண்ணனின் பாதுகைகளை அரியணையில் ஏற்றி, “அண்ணன் ராமர் வரும் வரையிலும் அயோத்திக்குள் நுழையமாட்டேன்’ என்ற விரதத்துடன் தவக்கோலம் பூண்டு, நாட்டை ஆண்ட தம்பி பரதனையும் ராமனையும் பார்” என்ற பொருளில்,

“”செஞ்சுடரோன்  மைந்தனையும்  தென்னிலங்கை

வேந்தனையும்

பஞ்சவரில்  பார்த்தனையும்  பாராதே – மிஞ்சு

விரதமே பூண்டு மேதினி யாண்ட

பரதனையும் இராமனையும் பார்”

என்ற கவிதையை எழுதி அனுப்பினாள். ஓலையில் உள்ளதைப் படித்த அதிவீரராம பாண்டியன் தன் தவறை உணர்ந்து அண்ணனிடம் மன்னிப்புக் கேட்டான்.

அண்ணன்-தம்பிகளுக்குள் நடக்க இருந்த போரை ஒரு தமிழ்க் கவிதை தடுத்து நிறுத்திவிட்டது என்ற வரலாறு இக் கவிதையின் பெருமையை உணர்த்துகிறது.

============

புலவர் கி. கிருஷ்ணசாமி

நன்றி: தமிழ்மணி

« Older entries