புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்

புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம் Erode

புரட்டாசி மாசம் முதல் சனிக்கிழமையையொட்டி
ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவியங்கள்
மூலம் அபிஷேகம் நடைபெற்றது.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பார்கள்.
குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில்
பெருமாளை வழிபட்டால் நல்லது நடக்கும் என்பது ஐதீகம்.

இதைப்போல் ஏழரைச் சனி உள்ளவர்கள் புரட்டாசி மாதம்
சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் வழிபட்டால்
மிகவும் விசேஷம். அதன்படி இன்று புரட்டாசி மாதத்தின் முதல்
சனிக்கிழமை.

இதையடுத்து ஈரோடு மாநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற கோட்டை
பெருமாள் கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு
யாகசாலை நடந்தது. இதன் பின்னர் கோட்டை பெருமாளுக்கு சந்தனம்,
பன்னீர் மூலிகை உள்பட 16 வகையான திரவியங்கள் மூலம் அபிஷேகம்
நடந்தது.

மேலும் தங்கக் கவச அலங்காரத்தில் கோட்டை பெருமாள் பக்தர்களுக்கு
அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை
தரிசித்தனர்.

தினமணி

லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள்! – மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்

லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள். இதன் மூலம் மனம்
ஒருமுகப்படுவதோடு, ஆர்வத்துடன் செயலாற்றவும் முடியும்.

 • ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது. சாஸ்திரங்களைப்
  படிப்பதால் மட்டும் கடவுளை அடைந்து விட முடியாது.
 • கடவுளை அறிவது மட்டுமே வாழ்வின் நோக்கம்.
  அதற்காகவே நாம் மண்ணில் மனிதர்களாகப் பிறந்திருக்கிறோம்.
 • நல்ல உணவு மனதில் நல்ல உணர்வுகளைத் துாண்டுகிறது.
 • அற்ப விஷயத்திற்குக் கூட மனிதர்கள் கோபப்படுகிறார்கள்.
  பொறுமை இருந்தால் வாழ்வில் சாதிக்க முடியும்.
 • சாப்பிடும் முன் பிரார்த்தனை செய்வது அவசியம்.
  இதனால் மனமும், உடலும் புனிதம் பெறுகிறது.
 • யாரிடமும் எதிர்பார்ப்பது கூடாது. தேவையானதை
  சுயமாக தேடிக் கொள்வது சிறந்தது.

*குறை காணும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.
உங்களைச் சுற்றித் தென்படும் நல்லதை மட்டுமே காண்பதில்
அக்கறை காட்டுங்கள்.

 • அமிர்தானந்தமயி

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்


பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Sri_Ramakrishna_as_Sarva_Avataras

பகவான் ராமகிருஷ்ணர் நம் நாட்டில் பிறந்த
பல்லாயிரக்கணக்கான மகான்களில் ஒருவர்.

மிக சமீப காலத்தில் தோன்றிய ஒரு பெரிய மகான்…
சுவாமி விவேகானந்தரை ஆன்மீகப் பாதையில்
செலுத்திய குரு…

அவர் தம் மொழிகளைக் கேட்டலும் படித்தலும்
நம் மனத்திற்கு அமைதியையும், தெளிவையும்
வழங்கும் என்பதில் ஐயமே இல்லை.
—-
1. ஆகாயத்தில் மேகங்கள் தோன்றிச் சூரியனை மறைக்குமானால் அதன் பிரகாசமும் மறைந்து போகும். அது போல மனத்தில் அகங்காரம் இருக்கும் வரையில் அதில் ஈசுவர ஜோதி பிரகாசிக்காது.

2. அகங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கை கூடாது. பிறப்பும் இறப்பும் இருந்தே தீரும்.

3. மழைத் தண்ணீர் மேட்டு நிலத்தில் தங்கி நிற்பதில்லை. பள்ளமான இடத்துக்கு ஒடி வந்து விடுகிறது. அது போல் இறையருள், தற்பெருமையும், கர்வமும் உள்ளவர்களுடைய உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை; பணிவுள்ளவர்களின் உள்ளத்தில் தான் தங்கி நிற்கும்.

4. “என் செயலாவது யாதென்று மில்லை” என்றும் கொள்கை மனத்தில் உறுதியாக நிலைக்குமானால், மனிதனுக்கு இந்தப் பிறவியிலேயே முக்தி உண்டாகும். அதன் பிறகு அவனுக்கு வேறொரு பயமுமில்லை.

5. இனிப்புத் தின்பண்டங்களால் ஏற்படும் தீங்கு கற்கண்டால் விளைவதில்லை. அது போல் ‘நான் இறைவனின் அடிமை, இறைவனின் பக்தன்‘ என்னும் அகங்காரம் இருப்பதில் தீங்கொன்றும் இல்லை. அவை ஒருவனை இறைவனுக்கு அருகில் கொண்டு சேர்க்கும். இது தான் பக்தி யோகம் எனப்படும்.

6. இரவில் வானில் பல விண்மீன்களைக் காண்கிறாய். ஆனால் சூரியன் உதித்ததும் அவை தென்படுவதில்லை. ஆதலால் பகற்பொழுதில் ஆகாயத்தில் நட்சத்திரங்களே இல்லை என்று சொல்லலாமா? மனிதனே! உனது அஞ்ஞான காலத்தில் நீ இறைவனைக் காண முடியாததனால், இறைவனே இல்லை என்று சாதிக்காதே!

7. பெறுதற்கரிய இந்த மானிடப் பிறவியைப் பெற்றவன் இப்பிறவியிலேயே இறைவனை அறிய முயலாது போனால் அவன் வானில் பிறந்தவனே ஆவான்.

8. முதலில் இறைவனைத் தேடு; பிறகு உலகப் பொருளைத் தேடு. இதற்கு மாறாகச் செய்யாதே. ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு நீ உலக வாழ்க்கையில் நுழைந்தால் உனக்கு மனச்சஞ்சலமே இராது.

9.எண்ணெய் இல்லாது போனால் விளக்கு எரியாது, அது போல், இறைவனில்லாமல் போனால் மனிதன் உயிர் வாழ முடியாது.

10. வேக வைத்த நெல்லை, பூமியில் விதைத்தால் அது மறுபடியும் முளைக்காது; வேக வைக்காத நெல் தான் முளை விடும். அதுபோல உண்மை ஞானமாகிய தீயால் வெந்த ஒருவன் பரிபூரணனாக இறப்பானானால் அவனுக்கு மறுபிறவி கிடையாது. அஞ்ஞானத்துடன் மரணமடைந்தால் மீண்டும் பிறக்க வேண்டியது தான்.

ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்
 1. நெருப்புக்கும், அதன் எரிக்கும் சக்திக்கும் உள்ள
  தொடர்பு போன்றது பிரம்மத்துக்கும் சக்திக்குமுள்ள
  தொடர்பு.
 2. தசைத் தட்டில் கனமான பக்கத்தில் தராசு முள்
  மையத்தை விட்டுச் சாய்ந்து விலகியிருக்கும்.
  அது போல் பெண்ணாசை, பொன்னாசைகளில் கனத்த
  மனம் இறைவனை விட்டு விலகித் தடுமாறுகிறது.
 3. இறைவனது சன்னிதானத்தில் தர்க்க புத்தி, படிப்பு
  இவைகளில் எதுவும் பயன்படாது. அங்கே ஊமை பேசும்.
  குருடு காணும். செவிடு கேட்கும்.
 4. சர்வ சக்தி வாய்ந்த கடவுளுடைய அருள் வந்தடையும்
  போது ஒவ்வொருவனும் தன் குற்றத்தைக் காண்பான்.
  இதனை அறிந்து நீ வீணாகத் தர்க்கம் செய்யாதே.
 5. இறைவன் திருநாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் எவனுக்கு
  மயிர்க்கூச்செடுத்து கண்களில் ஆனந்தக் கண்ணீர்
  பெருகுமோ அவனுக்கு அது தான் கடைசிப் பிறவி.
 6. படகு தண்ணீரில் இருக்கலாம். ஆனால் தண்ணீர்
  படகினுள் நுழையக் கூடாது. மனிதன் உலகத்தில் வாழலாம்.
  ஆனால் உலக ஆசை அவனிடத்தில் இருக்கக் கூடாது.
 7. சம்சார வாழ்க்கையில் இருந்தால் என்ன? அனைத்தையும்
  அவனுக்கே அர்ப்பணம் செய்து அவனிடம் சரணமடைந்து
  விடு. அதன் பிறகு உனக்கு எவ்விதக் கஷ்டமும் இருக்காது.
  யாவும் அவனது அருளாலே நடை பெறுகிறது என்பதை
  அறிவாய்.
 8. காந்த ஊசி எப்போதும் வடக்குத் திசையையே
  காட்டுமாதலால், கடலில் செல்லும் கப்பல்கள் திசை தவறிப்
  போவதில்லை. மனிதனுடைய மனம் இறைவனை
  நாடியிருக்கும் வரையில் அவன் உலக வாழ்க்கையாகிய
  கடலில் திசை தப்பிப் போக மாட்டான்.
 9. வீடு கட்டும் போது சாரம் அவசியம். ஆனால் வீடு கட்டி
  முடித்து விட்டால் சாரத்தைத் தேடுபவர் யாருமில்லை.
  அது போல ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக
  இருக்கிறது. பின்னர் அவசியமில்லை.
 10. ஒருவர் சிரமப்பட்டு விறகும், பிறவும் தேடி நெருப்பு
  உண்டாக்குகின்றார். அதன் உதவியால் பலர் குளிர்
  காய்கின்றனர். அது போல மிகவும் சிரமப்பட்டுத் தவம்
  செய்து இறைவனை அடைந்த மகான்களோடு பழகுவதால்
  பலர் இறைவனிடத்தில் சுலபமாக மனத்தை வைக்க

முடிகிறது.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்

முழு விழிப்புணர்வோடு வாழ்ந்து பாருங்கள். – சத்குரு

நரகமாகிய வேலை!

வாழ்வில் முதன்முதலாக நீங்கள் வேலைக்குப் போனபோது,
எந்த நாற்காலி உங்களுக்கு சொர்க்கத்துக்கு நிகராகத்
தோன்றியதோ, இன்று அதே நாற்காலிதான் உங்களுக்கு
ரத்த அழுத்தத்தையும், அல்சரையும், இதய வலியையும்
உற்பத்தி செய்யும் நரகமாகிவிட்டது.

சந்தோஷம் கொடுக்கும் என்றுதானே இந்தப் பணியைத்
தேர்ந்தெடுத்தீர்கள்? பழகிப்போன பின், சந்தோஷத்தைத்
தவிர மற்ற எல்லாவற்றையும் அனுபவித்துக்
கொண்டிருக்கிறீர்களே, ஏன்?

படகில் பயணம் செய்வதற்காகத் துடுப்பை எடுத்தவன்,
படகை விட்டுவிட்டு துடுப்பை மட்டும் கெட்டியாகப்
பிடித்துக் கொண்டிருப்பதுபோல் ஆகிவிட்டீர்களே!

உங்கள் புத்திசாலித்தனத்தையும், விழிப்புணர்வையும்
பயன்படுத்தாமல், செய்ததையே திரும்பத் திரும்பச்
செய்வதற்கு நீங்கள் என்ன எந்திரமா?

ஒரே பக்கத்தைப் பல நூறு ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்து
வைத்துக் கொண்டு, அடுத்தடுத்துப் படித்துக்
கொண்டிருப்பதுபோல் உங்கள் தினங்களை காலண்டரில்
கிழித்துக் கொண்டிருப்பதா வாழ்க்கை?

முழுமையாக வாழ்வது என்றால் என்ன என்று நீங்கள்
எப்போதேனும் யோசித்தது உண்டா? காலையில் பறவைகள்
சந்தோஷமாகக் குரல் கொடுப்பதைக் கேட்டு என்றைக்காவது
உற்சாகமாகி இருக்கிறீர்களா?

தினம் தினம் தான் குளிக்கிறீர்கள். ஆனால் எத்தனை
நாட்கள் உடலின் ஒவ்வொரு இடத்தையும் தண்ணீர் நனைத்து
இறங்குவதை ரசித்திருக்கிறீர்கள்?

எங்கு சென்றாலும் வண்டியில் தான் செல்கிறீர்கள். அந்த
வண்டியை ஓட்டும்போது, சிந்தனையை வேறெங்கோ
வைக்காமல், எத்தனை நாட்கள் அனுபவித்து
ஓட்டியிருக்கிறீர்கள்?

மிக ருசியான உணவாக இருந்தாலும் முதல் கவளத்தைத்தான்
அனுபவித்துச் சாப்பிடுவீர்கள். அடுத்தடுத்த கவளங்களை,
கை தன் பழக்கப்படி வாயில் கொண்டு போடும். வாய் தன்
பழக்கப்படி அதை அரைத்து உள்ளே தள்ளும். வாயில் போட்ட
உணவு எப்படி மெல்லப்பட்டு உணவுக் குழாயின் வழியே
இறங்கி, வயிற்றுக்குப் போகிறது என்பதை ஒரு தடவையாவது
முழுமையாகக் கவனித்திருக்கிறீர்களா?

ஆனந்தமாக இருக்க வேண்டும் என்ற உங்கள் ஆசையை
மறந்துவிட்டு, வேலையில் சிக்கிக் கொண்டுவிட்டீர்கள்.
இப்போது இதையெல்லாம் உங்களிடம் கேட்டால்,
‘இதற்கெல்லாமா நேரத்தை வீணடிப்பார்கள்’ என்றுதான்
உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறது.

மூச்சு விட்டுக் கொண்டு இவ்வுலகில் சும்மா இருப்பதற்காகவா
இங்கு வந்தீர்கள்? அது, உயிரை உடலில் இருத்தி வைத்துக்
கொள்வதற்குத்தான் பயன்படும். உயிரோடு இருப்பது வேறு,
வாழ்வது என்பது வேறு. ஒரு கணம்…

ஒரே ஒரு கணத்தையாவது முழு விழிப்புணர்வோடு வாழ்ந்து
பாருங்கள். வாழ்க்கையின் போக்கே மாறிவிடும்.

சத்குரு:

எலியா? ஆணா? – சத்குரு

சங்கரன்பிள்ளை ஒருமுறை குடித்துவிட்டு ‘
பாரை’ விட்டுப் புறப்பட வெகு நேரமாகிவிட்டது. ‘எட்டு
மணிக்குள் வீட்டில் இருந்தாக வேண்டும் என்ற உன்
மனைவியின் நிபந்தனை என்னவாயிற்று?’ என்று
நண்பர்கள் கிண்டலடித்தார்கள்.

சங்கரன்பிள்ளை ஜம்பமாக ‘நோ, நோ! என் வீட்டில்
எனக்கு முழு சுதந்திரம் இருக்கிறது’ என்று தலை
நிமிர்த்திச் சொல்லிவிட்டு, கம்பீரமாக வீட்டிற்கு நடை
போட்டார்.

வாசலிலேயே அவர் மனைவி காத்துக் கொண்டிருந்ததை
பார்த்தவுடன், தனக்கு நிகழவிருக்கும் ஆபத்தை அவர்
புரிந்து கொண்டார். மனைவியின் பலவீனம் அவருக்குத்
தெரியும்.

சரேலென அவரைக் கடந்து உள்ளே ஓடினார். பருமனாக
இருந்த மனைவியால் அவருடைய வேகத்துக்கு ஈடு
கொடுத்துத் துரத்த முடியவில்லை. என்றாலும் மனைவி
அவரை விட்டபாடில்லை.

வீட்டின் மூலை முடுக்கெல்லாம் மனைவியின் கையில்
சிக்காமல் ஓடி, கடைசியாக கட்டிலுக்கு அடியில் போய்ப்
படுத்துக் கொண்டார் சங்கரன்பிள்ளை.

மனைவியால் கட்டிலுக்குக் கீழே இருந்த இடைவெளிக்குள்
நுழைய முடியவில்லை. “நீ என்ன எலியா? ஆண்மகனா?
வெளியே வா!” என்று அவள் கத்தினாள்.

சங்கரன்பிள்ளை ஹாயாக பதில் சொன்னார்..
“நான்தான் இந்த வீட்டின் ராஜா. எங்கே படுத்துக் கொள்ள
வேண்டும் என்று முடிவு செய்யும் முழு சுதந்திரம் எனக்கு
இருக்கிறது” என்று.

கட்டிலுக்கு அடியில் இருக்கும் வரை தான் அவருக்கு
நல்லநேரம். வேறெங்கும் அவருக்குப் பாதுகாப்பு கிடையாது.
ஆனால் இதையே அவர் தன் சுதந்திரம் என்று அறிவித்துக்
கொள்கிறார்.

சங்கரன் பிள்ளையைப் போல்தானே உங்களில் பலரும்
சுதந்திரத்துடன் வாழ்வதாக நினைத்துக் கொண்டு,
உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்?

——————————-

ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

* அம்மன் கோயிலில் மாவிளக்கு ஏற்றுவது ஏன்?
ஏ.கே. பத்மநாதன், திருச்செந்தூர்.

மாவிளக்கு பொதுவாக குலதெய்வத்திற்கும்,
மற்ற தெய்வங்களுக்கும் நோய்தீர நேர்ந்து கொண்டு
ஏற்றுவது வழக்கம். மாவு நமது உடலாகவும், தீபம் நம்
உயிராகவும் எண்ணி நம்மை முழுமையாக
தெய்வத்தின் திருவடிகளில் அர்ப்பணிப்பதே
மாவிளக்கு ஏற்றுவதாகும்.

* பிரார்த்தனைக்காக எடைக்கு எடை சில்லரைக்காசு
கொடுப்பது எதனால்?
எம். சண்முகம் வனிதா, குமரி.

இதற்கு ‘துலாபாரம் காணிக்கை’ என்று பெயர்.
துலா என்றால் தராசு என்று பொருள். புத்ர பாக்கியம்
கிடைக்க, நோய்தீர என நேர்ந்து கொண்டு
செய்வார்கள். சில்லரைக்காசு மட்டும் இல்லை. பழம்
தானியம் என விருப்பமான ஏதாவது ஒன்றை துலாபார
காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொண்டால்,
கண்டிப்பாக நிறைவேறும்.

நேர்ந்து கொண்டது நிறைவேறியவுடன் இதைக்
காலத்தில் செய்வதும் அவசியம்.

* வீட்டிலேயே அனுமனுக்கு வடைமாலை சாத்தி
வழிபடலாமா?
க. தண்டபாணி, கடையநல்லூர்.

செய்யலாம். தவறில்லை. கோயிலில் செய்து
எல்லோருக்கும் விநியோகமும் செய்தால்தான் சிறப்பு.

* சிலர் வில்வக்காயை பூஜையறையில் வைத்து
வழிபடுகிறார்களே…ஏன்?
ஆர். நாகவள்ளி, முறப்பநாடு.

வில்வக்காயை{பழம்} மகாலட்சுமியாக எண்ணி
வழிபட்டு வந்தால் கடன், வறுமை போன்றவை நீங்கி
செல்வ வளம் பெருகும்

—————————-
நன்றி-தினமலர் (நெல்லை)

ஸ்ரீரங்கம் கோயிலில் விசித்திர மீன் சிற்பம்

2-4-img_20200915_075719_1509chn_15

ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கம் கோயில் கல்வெட்டில் விசித்திரமான மீன் சிற்பம்
இருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது.

மிகவும் பழமையான திருத்தலமான ஸ்ரீரங்கம் கோயில்
கல்வெட்டுகளில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் அனைத்தும்
உயிரோட்டமானவை.

அந்த வகையில் ஸ்ரீசக்கரத்தாழ்வாா் சன்னதி நுழைவு வாயில்
மேல் புறத்தில் உள்ள கல்வெட்டில் புடைப்புச் சிற்பமாக
ஒரு மீன் செதுக்கப்பட்டுள்ளது. அந்த மீனுக்கு இருபுறமும்
செதில்கள் இல்லை.

அதன் மூக்கு கொக்கி வடிவில் உள்ளது. மேலும் அதன் வாயில்
உள்ள பற்கள் பெரிதாக உள்ளன. இந்த வகை மீன் முற்காலத்தில்
இருந்து அழிந்திருக்கலாம் என கோயிலுக்கு வந்தோா் தெரிவித்தனா்.
இந்த சிற்பத்தை ஏராளமானோா் பாா்த்து வியந்து வருகின்றனா்.

தினமணி

கன்யா மாச (புரட்டாசி மாத) பண்டிகை மற்றும் விரத நாட்கள்

17.09.2020 – வியாழக்கிழமை – புரட்டாசி மாஸப்பிறப்பு,
ஸர்வ மஹாளய அமாவாஸ்யை

19.09.2020 – சனிக்கிழமை – சித்திரை

20.09.2020 – ஞாயிற்றுக்கிழமை – ஸ்வாதீ

23.09.2020 – புதன்கிழமை – கேட்டை –
ஸ்ரீமதாதிவண்சடகோப யதீந்திர மஹா தேசிகன் திருநக்ஷத்ரம்

25.09.2020 – வெள்ளிக்கிழமை – பூராடம் ஸ்ரீ திருக்குடந்தை தேசிகன்
ஸ்ரீ கோபாலார்ய மஹாதேஸிகன் திருநக்ஷத்திரம்.

27.09.2020 – ஞாயிற்றுக்கிழமை – ச்ரவண விரதம் – சர்வ ஏகாதசி,
ஸ்வாமி ஸ்ரீவேதாந்த தேசிகர் திருநக்ஷததிரம

28.09.2020 – திங்கள்கிழமை – துவாதசி – பாரணை

29/09/2020 – செவ்வாய்க்கிழமை – பிரதோஷம்

07.10.2020 – புதன்கிழமை – ரோஹிணி – பறவாக்கோட்டை ஸ்
ரீமத் ஆண்டவன் – ஸதமான வருஷம் – மாஸ திருநக்ஷத்திரம்

09.10.2020 – வெள்ளிக்கிழமை – திருவாதிரை – வேளியநல்லூர்
ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ நாராயண மஹாதேஸிகன் திருநக்ஷத்திரம்.

13.10.2020 – செவ்வாய்க்கிழமை – ஸர்வ ஏகாதசி

14.10.2020 – புதன்கிழமை – துவாதசி பாரணை – பிரதோஷம்

16.10.2020 – வெள்ளிக்கிழமை – அமாவாஸ்யை
————————————————————-

-: ஸுபமஸ்து :-

கி.மு., 599ல் அவதரித்த, வர்த்தமான மகாவீரர் வாழ்வில் நடந்த நிகழ்வு இது…

நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால், ஏதோ இன்று நடப்பதை
அன்றே சொன்னது போல இருக்கும். கி.மு., 599ல் அவதரித்த,
வர்த்தமான மகாவீரர் வாழ்வில் நடந்த நிகழ்வு இது…

கவுசாம்பி நகரில் இருந்த பெரும் செல்வந்தரின் மகனான,
தனதேவன் என்பவர், ஊர் ஊராகப்போய் வியாபாரம் செய்து
வந்தார். வர்த்தமானபுரம் எனும் ஊரை அடைந்த போது,
அவருடைய வண்டியை இழுக்கும் காளை மாடு, மோசமான
நிலையை அடைந்தது.

வேறு வழியற்ற நிலையில், அவ்வூர் முக்கியஸ்தர்களிடம்
ஏராளமான பொன்னை அளித்து, ‘இந்த காளையை பத்திரமாக
காப்பாற்றி பார்த்துக் கொள்ளுங்கள்…’ என்றார், தனதேவன்.

பொன்னைப் வாங்கிய அவர்கள், காளையை காப்பாற்றுவதில்
அக்கறை காட்டாததால், காளை இறந்தது.

இறந்த காளை மறு பிறவியில், அதே கிராமத்தில், ஒரு யட்சனாக
பிறந்தது.

தவம் செய்து, விவரம் அறிந்த யட்சன், ‘என்னைக்
காப்பாற்றுவதற்காக தந்த பொன்னை பெற்றுக் கொண்டு, என்
மரணத்திற்குக் காரணமான, இந்த ஊர் மக்களை விட்டு வைக்க
மாட்டேன். கொள்ளை நோயாக பரவி, இவர்களை அழிப்பேன்…’
என்று, சபதம் போட்டார்.

ஊரில் உள்ள அனைவரும், பெயர் சொல்லத் தெரியாத, கொடிய
கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டு துடித்தனர்; திறந்தவெளி
பொது இடத்தில் கூடி கதறினர்.

அப்போது அசரீரியாக, ‘தீயவர்களே… பேராசை வசப்பட்ட நீங்கள்,
பெரியவர்களை மதிக்கவில்லை. ஒரு காளை மாட்டை
பராமரிக்காமல், பொன்னை முழுவதுமாக உரிமை கொண்டாடிய
நீங்கள், அதற்கு உண்டான பலனை அனுபவித்துத் தான் ஆக
வேண்டும்…’ என்றார், யட்சன்.

நடுங்கிய ஊர் மக்கள், பரிகாரம் கூறும்படி வேண்டினர்.

மனம் இரங்கி, ‘இறந்துபோன அந்த காளை மாட்டின் எலும்புகளை
குவித்து, அதன்மேல் ஒரு கோவில் கட்டுங்கள்… யட்சன் வடிவம்
ஒன்றையும், காளை ஒன்றின் வடிவத்தையும் அங்கு பிரதிஷ்டை
செய்து வழிபாடு செய்யுங்கள்…’ என்றார், யட்சன்.

அதன்படியே கோவில் கட்டினர்.

இருப்பினும், யட்சனின் கோபம் முழுமையாக தணியவில்லை.
அக்கோவிலில் வந்து இளைப்பாறுபவர்களுக்கு, தொல்லை
கொடுத்து, கொல்லவும் செய்தார்.

அந்த நேரத்தில் தான், வர்த்தமான மகாவீரர் அக்கோவிலுக்கு
வந்து தங்கினார். இரவில், கோரமான வடிவத்துடன் பெருங்குரலில்
கத்தி, மகாவீரரை மிரட்டினார், யட்சன்.

மகாவீரர் அஞ்சவில்லை; பெரும் பாம்பு வடிவம் கொண்டு,
மகாவீரரை கடித்தார், யட்சன்.

அதுவும் செல்லுபடியாகவில்லை. கடைசியில் தன் ஆற்றலை இழந்த,
யட்சன், மகாவீரரின் திருவடிகளை வணங்கி, அன்றுடன் அங்கிருந்து
மறைந்தார். ஊர் மக்களும் துயரங்களிலிருந்து விடுதலை
அடைந்தனர்.

ஏராளமான மகான்களும், ஞானிகளும் அவதரித்த பூமி,
நம் பாரத பூமி. காரண காரியம் தெரியாமல், ஒரு கொடிய நோய்,
நம் அனைவரையும் மிரட்டி, விரட்டிக் கொண்டிருக்கிறது.

அந்நோயை விரட்டி, நம்மை காக்குமாறு, அந்த தவ சீலர்களையே

வேண்டுவோம்!

பி. என். பரசுராமன்
வாரமலர்

« Older entries