தூய்மையான பக்தியால் கிடைக்கும்பேறு!

வைணவக் கோவில் சுவர்களில், ஒரு கையில் தம்புராவும்,
மறு கையில் சிப்ளா கட்டைகளுடன், முதுமைக் கோலத்தில்,
கண்களை மூடியபடி ஒருவர் அமர்ந்து இருக்க, கைகளை
கட்டி, தலையில் மயில் பீலியுடன் கண்ணன்
அமர்ந்திருப்பதைப் போன்ற படத்தை பார்த்திருப்போம்;
அந்த ஓவியத்திற்கு பின் மறைந்திருக்கும் வரலாறு இது:-

ஆக்ராவில் உள்ள திருமடம் ஒன்றில் பஜனை நடைபெற்றுக்
கொண்டிருந்தது. அப்போது, ஒரு தம்பதியினர், அங்கிருந்த
மகான் ஒருவர் முன், தங்கள் குழந்தையை கிடத்தி,
‘சுவாமி… நீண்டகாலமாக குழந்தை இல்லாமல் இருந்த
எங்களின் துயர் தீரப் பிறந்த இவனுக்கு, பார்வை இல்லை;
இவன் குறையைத் தீர்த்து, எங்கள் கவலையைப் போக்க
வேண்டும்…’ என வேண்டினர்.

குழந்தையை பார்த்தார் மகான். அது, பொக்கை வாயைக்
காட்டி சிரித்தது.

அச்சமயம், பஜனையில் ஒரு பாடல் முடிந்து, அடுத்த
பாடலுக்காக இடைவெளி ஆரம்பித்ததும், குழந்தை அழத்
துவங்கியது. பாட ஆரம்பித்ததும், அழுகையை நிறுத்தி,
சிரித்தது.

அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த மகான், குழந்தையை
தொட்டார். அடுத்த நொடி, மின்சாரத்தை தொட்டது போல்
அதிர்ந்து, ‘இது, சாதாரண குழந்தை அல்ல; பார்வை இல்லா
விட்டாலும், இக்குழந்தை கண்ணனை தரிசிக்கும்…’ என,
ஆசி கூறி, ‘சூர்தாஸ்’ எனப் பெயர் சூட்டினார்.

தன் அகக் கண்ணாலேயே பகவான் கண்ணனை தரிசித்த
சூர்தாசர், அதை பாடல்களாக பாடினார். அவரது பாடல்கள்
நாடெங்கும் பரவலாயின.

ஒருமுறை, அவந்தி புரத்தை ஆட்சி செய்த சிற்றரசர்,
சூர்தாசரை அரண்மனைக்கு அழைத்து வந்து, ஆண்டவனைப்
பற்றி பாட வேண்டினார்.

சூர்தாசரும் பாட ஆரம்பித்தார். அனைவரும் மெய் மறந்து
கேட்டுக் கொண்டிருந்த வேளையில், கண்ணனே அங்கு வந்து
பாடல்களைக் கேட்டார். இந்த அற்புதக் காட்சியை அனைவரும்
தரிசித்து, மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தபோது,
சூர்தாசரின் பாடல்கள் நிறைவுற்றன; கண்ணனும் மறைந்தார்.

அதன்பின், மற்றொரு சமயம், அரசியின் வேண்டுகோளின்படி,
சூர்தாசரை அழைத்து வந்து, அந்தப்புரத்தில் பாடச் சொன்னார்
அரசர்.

சூர்தாசர் பாடத் துவங்கியதும், அந்தப்புரப் பெண்கள்,
எழுந்து நடனமாடத் துவங்கினர். இச்சமயம், பகவான் கண்ணன்,
ராதையுடன் தோன்றி, சூர்தாசரின் பாடலுக்கு ஏற்ப ஆடினார்.

இதைக் கண்ணுற்ற பெண்கள் ஆச்சரியமடைந்தனர்.
அத்துடன், ராதையையும், கண்ணனையும் தன் இரு விழிகளால்
தரிசித்து, அதற்கேற்ப சூர்தாசர் பாடுவதையும் கண்டனர்.

பாடல் முடிந்ததும், கண்ணனின் வடிவமும், கூடவே,
சூர்தாசரின் பார்வையும் மறைந்தது.

தன் பாடல்களால், பகவானையே ஆட வைத்த சூர்தாசரின்
படம் தான், இன்றும் கோவில் சுவர்களில் ஓவியமாக மிளிர்கின்றன.

அனைத்தையும் ஆட்டிப் படைக்கும் ஆண்டவன்,
தூய்மையான பக்திக்கு தானே ஆடுவான்!

———————————

பி.என்.பரசுராமன்
வாரமலர்

Advertisements

திசை மாறிய துர்க்கை

மங்கையர் மலர்

கம்பர் வணங்கிய சரஸ்வதி

வீணை இல்லாத சரஸ்வதி

மங்கையர் மலர்

வட்டப்பாறை அம்மன்:


பாண்டியன் அரசவையில் அநீதி இழைக்கப்பெற்ற கண்ணகி,
மதுரையை எரித்துவிட்டு உக்கிரத்துடன் கிளம்பினாள்.

அவள் இத்தலத்திற்கு வந்தபோது சிவனும், அம்பிகையும்
சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர். அவளது உக்கிரத்தைத்
தணிக்க எண்ணிய சிவன், தாயக்கட்டையை உருட்டி
அருகிலிருந்த கிணற்றில் விழச்செய்தார்.

கண்ணகி, தாயக்கட்டையை எடுக்க கிணற்றிற்குள் இறங்கினாள்.

அப்போது சிவன், அங்கிருந்த வட்ட வடிவ பாறையால் கிணற்றை
மூடி விட்டார். பின்பு, கண்ணகி பாறையின் வடிவிலேயே
எழுந்தருளினாள்.

எனவே இவள்,”வட்டப்பாறையம்மன்’ என்று பெயர் பெற்றாள்.
பிற்காலத்தில் இந்த பாறையின் அருகில், தனியே சிலை
வடிக்கப்பட்டது. வட்டப்பாறையம்மனின் உக்கிரம் குறைப்பதற்காக,
இச்சன்னதியில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் ஸ்தாபித்துள்ளார்.

பக்தர்கள் இங்கு மஞ்சள், குங்குமம் போட்டு வேண்டிக்கொள்கிறர்கள்.

நன்றி- முகநூல்/(Thiruvottiyur.Yuvanthi)

நவராத்திரியில் சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம்

மங்கையர் மலர்

திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் ஏற்பாடு

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் வருகை தருவர். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 2 பிரம்மோற்சவங்கள் நடைபெறும்.

நடப்பாண்டில் 2 பிரம்மோற் சவங்கள் நடைபெறுகின்றன.வருடாந்திர பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கி 2-4ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து வரும் 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இவ்விழாவிற்காக தேவஸ் தானம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. தசரா விடுமுறை காலத்தில் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால், அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், போதுமான லட்டு பிரசாதங்கள் இருப்பில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தரிசனம், தங்கும் அறைகள், போக்குவரத்து, குடிநீர், இலவச அன்ன பிரசாதம், முடி காணிக்கை, சுகாதாரம், உள்ளிட்ட ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் துரிதப் படுத்தியுள்ளனர்.

திருப்பதி, திருமலையில் அலங்கார வளைவுகள், மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கு கொடியேற்றம் நடைபெறும். ஆனால் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கு கொடியேற்ற நிகழ்ச்சி கிடையாது. அதேபோன்று, தேரோட்டமும் நடத்தப்பட மாட்டாது. தங்க தேரோட்டம் மட்டும் நடைபெறும்.

-http://tamil.thehindu.com/

நவராத்திரி – சக்தி வடிவம்…சக்தி வடிவம்

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பராசக்தி
ஒவ்வொரு தேவியின் வடிவில் ஒரு வயது முதல் பத்து வயது
கன்னிப்பெண் வடிவில் அவதாரம் செய்வதாக ஐதீகம்.

முதல் நாள் மஹேஸ்வரி பாலா
இரண்டாம் நாள் கௌமாரி குமாரி
மூன்றாம் நாள் வாராஹி கல்யாணி
நான்காம் நாள் மஹாலட்சுமி ரோகிணி
ஐந்தாம் நாள் வைஷ்ணவி சுபத்ரா
ஆறாம் நாள் இந்திராணி காளிகா
ஏழாம் நாள் சாமுண்டி சண்டிகா
எட்டாம் நாள் நரசிம்ஹி தருணி
ஒன்பதாம் நாள் சரஸ்வதி சுமங்கலி

மேற்கண்ட அட்டவணைப்படி கன்னியின் வயதிற்கேற்ப
ஒவ்வொரு நாளும் ஒரு கன்னிகையாக ஒன்பது நாட்களும்
ஒன்பது கன்னிகைகளையும் ஒன்பது சுமங்கலிகளையும்
பூஜை செய்வது அளவிட முடியாத புண்ணியம் ஏற்படும்.

கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக
அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய
அம்சமாகும்.
————————————————–

ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்

குருவா தெய்வமா? – ஆன்மிக குட்டிக் கதை

மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்!

புராணக்காலத்தில் நெடுங்குடியில் வில்வ மரங்கள்,
மண்மலை குன்றுகள் அதிகமாக இருந்தன. இங்கு
பெருஞ்சீவி, சிரஞ்சீவி ஆகிய இரு சகோதரர்கள் வந்தனர்.
அவர்கள் பல்வேறு சிவத்தலங்களைத் தரிசித்து வந்தனர்.
அப்போது அண்ணன் பெருஞ்சீவி தன் தம்பி சிரஞ்சீவியிடம்
வழிபாட்டிற்காக காசியிலிருந்து புனிதலிங்கம் எடுத்து வரச்
சொல்லி அனுப்பினார்.

காசிக்குச் சென்ற தம்பி சரியான நேரத்தில் வராததால்
அன்றைய பூஜைக்கு, தானே ஒரு சிவலிங்கத்தை மண்ணால்
செய்து சிவ வழிபாடு செய்தார்.

அடுத்தநாள், காசிக்கு சென்ற தம்பி திரும்பி வந்துபோது இங்கு
ஒரு சிவலிங்கம் பூஜையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி
அடைந்தான். உடனே தன் சகோதரனிடம் தான் கொண்டு வந்த
சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்யவேண்டும் என்கிறான்.

கோபம் கொண்ட பெருஞ்சீவி, “நீ ஏற்கெனவே தாமதமாகி வந்து
இப்போது அடம்பிடிக்கிறாய்” என்று சொல்ல, வாக்குவாதம் நீளுகிறது.

“”என்னதான் சண்டைப் போட்டாலும் நீ காசியில் இருந்து வாங்கி
வந்த லிங்கத்தை நான் வைக்கமாட்டேன்” என்கிறார் அண்ணன்.

இதனால் கோபம் கொண்ட சிரஞ்சீவி, “நீ மண்ணால் செய்த இந்த
லிங்கத்தையும் இந்த மலையையும் அழிக்கிறேன் பார்” என்று
சபதம் செய்கிறான்.

பின்னர் கைலாயநாதனை நோக்கி தவம் செய்யத் தொடங்கினான்.
கடும் தவத்தில் மூழ்கிய தம்பியைக் கண்ட அண்ணன், சிறிது நேரம்
கலங்கி செய்வதறியாமல் திகைத்து நின்றான்.

தம்பியின் தவத்திற்கு வெற்றி கிடைத்தால் தனது மண் லிங்கத்திற்குப்
பாதிப்பு எதுவும் வந்து விடக்கூடும் என்பதால், தானும் கைலாய
நாதனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தான்.

இந்த அசுர சகோதரர்களுக்கு அருள்புரிய சித்தம் கொண்டார்
திருமால். சின்ன சிரஞ்சீவிக்காக ஆதிசேஷனையும் பெரிய
சிரஞ்சீவிக்காக கருடனையும் அனுப்பிவைத்தார்.

ஆதிசேஷன் மண்லிங்கம் அமைத்த மலையை அசைக்க ஆரம்பித்தது.
கருடனோ அதைத்தடுக்கும் விதமாக மலையைச்சுற்றி வட்டமிட்டது.
கருடனைக் கண்டதும் பாம்பு அங்கிருந்து ஓட, கருடனும் திரும்பியது.

அப்போது அசுர சகோதரர்கள் முன் தோன்றிய திருமால், “உரிய காலத்தில்
சிவபூஜை செய்வதே சிறந்தது. இதைப் புரிந்துகொண்டு சகோதரர்கள்
இருவரும் ஒற்றுமையுடன் இருந்து வழிபடுங்கள். நீங்கள் சிவபூஜை செய்த
இந்தத் தலம் புகழ்ப்பெற்று திகழும் என்று அருள்புரிந்து பெருஞ்சீவி
பூஜை செய்த லிங்கம் “கைலாசநாதர்’ என்று வழங்கப்பெறும்” என
அருளினார்.

காலங்கள் ஓடின… சிவலிங்கம் திடீரென மண்ணுக்குள் மறைந்தது.
பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து இந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர்,
சுயம்புவாக வெளிப்பட்ட சிவலிங்கத் திருமேனியைத் தரிசித்தனர்.
அந்த லிங்கத்துக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபட்டுச் சென்றனர்.

மறுநாள் அந்தப் பாலுக்கு உரிய விலையாக சிவலிங்கம் அருகில்
பொற்காசுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபோன்று
அடுத்தடுத்த நாள்களிலும் இந்த அற்புதம் தொடர்ந்து கொண்டே
இருந்தது. இதைத் தொடர்ந்து அந்த லிங்கத் திருமேனிக்கு
“படிக்காசுநாதர்’ என்னும் திருப்பெயர் சூட்டப்பட்டது.

இத்திருக்கோயிலை பாண்டிய மன்னர்களில் ஓருவரான ஜடாவர்ம
சுந்தரபாண்டியன் எழுப்பினான்.

கால மாற்றத்தில் அம்மன் சந்நிதியும் எழுப்பப்பட்டு 13 ஆம் நூற்றாண்டில்
ஒரு முழுமைப்பெற்ற ஆலயமாக உருவானது. இங்கு வழிப்பட்டால் காசியிலும்,
கயிலையிலும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஜதீகம்!

புதுக்கோட்டை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் இருக்கும் இக்கோயில்,
1984 ஆம் ஆண்டு பக்தர்களின் பெரும் முயற்சியால் திருப்பணி நடைபெற்று
விரிவுப் படுத்தப்பட்டு புது பொலிவுப்பெற்று விளங்குகிறது.

இவ்வாலயத்தில் கோபுரத்தை வணங்கிய பிறகே கருவறையில் வீற்றிருக்கும்
இறைவனை வணங்கவேண்டும்.

ஒவ்வொரு தமிழ்மாத முதல் தேதியன்றும் மாத சங்கரமபூஜை நடைபெறும்.
இந்த பூஜை மாலை 4 மணிமுதல் 6 மணிவரை நடைபெறும். திருமணமாகாத
பெண்கள், சுமங்கலிகள் மற்றும் ஜாதகத்தில் பித்ருதோஷம், புத்திரதோஷம்,
மாங்கல்யதோஷம், சர்ப்பதோஷம், உள்ளவர்கள் அம்மனுக்கும் இறைவனுக்கும்
அர்ச்சனை செய்து, கொடிமரத்தின் முன்பு ஐங்கோணக் கோலமிட்டு
நெய்தீபம் ஏற்றி ஒரு மனதுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வழிப்பட்டு வந்தால்
சகல தோஷங்களும் நீங்கி சுப மங்களம் உண்டாகும் என்கிறது ஆலய வரலாறு.

பெüர்ணமி நாள்களில் இக்கோயிலிலும் கிரிவலம் நடக்கிறது.
அப்போது பக்தர்கள் கோயில் அடிவாரத்தில் உள்ள ஈசான்ய வடகிழக்கு
திசையில் உள்ள பாம்பாறு நதியில் நீராடி சுவாமியை தரிசிப்பது சிறப்பு.

பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினர் இங்கு வந்து ஒரு நாள் தங்கியிருந்து
சர்ப்ப நதியில் நீராடி தேரோடும் வீதிகளில் 5முறை வலம்வந்து பிரசன்ன
நாயகிக்கும் கைலாசநாதருக்கும் அர்ச்சனை செய்தால் மகப்பேறு உண்டாகும்.

அதுப்போல் மனநிலைப் பாதிக்கப்பட்டவர்கள் சந்நிதி முன்பு உள்ள
மண்டபத்தில் தரையில் பதிக்கப்பட்ட பத்மபீடத்தில் அமர்ந்து “ஓம் நமசிவாய’
என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிப்பது நல்ல பலனைத்தரும்.

வைகாசி மாதத்தில் 10 நாள் திருவிழா சுவாதி நட்சத்திரத்தில் தேரோட்டம்,
ஆனிமாதம் முதல் வெள்ளி லட்சார்ச்சனை, நவசக்தி அர்ச்சனை, கார்த்திகை
முதல் சோமவாரம் சங்காபிஷேகம், திருவிளக்கு பூஜை, ஆடிப்புரத் திருவிழா,
மாசி மாதத்தில் மஹா சிவராத்திரி போன்ற விழாக்கள் நடைபெறும்.

புதுக்கோட்டையிலிருந்து அரிமளம் வழியாக 30 கி.மீ. தொலைவில்
கீழாநிலைக்கோட்டை உள்ளது. இங்கிருந்து 3 கி.மீ. தூரம் செல்லவேண்டும்.
கோயிலுக்கு நகரப்பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

தொடர்புக்கு: 98424 84488.

———————————-

– பொ. ஜெயச்சந்திரன்.
வெள்ளிமணி

« Older entries