ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில்


திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருந்து
25 கி.மீ தூரத்தில் உள்ளது மாம்பாறை கிராமம். 

இங்குள்ள முனியப்பசாமி கோவிலில் பெண்கள் வழிபடவும், 
பூஜைகளில் பங்கேற்கவும் அனுமதியில்லை. 

மேலும் கோவிலில் பலியிடப்படும் விலங்குகள் கூட 
ஆட்டுக்கிடா மற்றும் சேவல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

இக்கோவிலில் அனைத்து வழிபாடுகளிலும் ஆண்கள் மட்டுமே 
பங்கேற்க முடியும். பெண் குழந்தைகளுக்கு கூட அனுமதியில்லை. 
அவ்வளவு சக்தி வாய்ந்த இக்கோவிலின் தல வரலாறு 
மகாபாரதத்துடன் தொடர்புடையது என்கிறார் கோவில் பூசாரி 
சேகர்.

பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது இப்பகுதிக்கு வந்தனர். 
அப்போது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பழம் தரும் மரத்தின் 
அடியில் சைந்தவா முனிவர் தவமிருந்தார். 

அந்த மரத்தின் பழத்தை உண்ண பாஞ்சாலி விரும்பியதால், 
அர்ஜூணன் அம்பு எய்தவுடன் பழம் தரையில் விழுந்ததாம். 
அப்போது அங்கு தோன்றி கிருஷ்ணர் அந்த அற்புதமான
மாம்பழத்தை முனிவர் உண்ண விரும்பினார் என்றும், 
பழம் மரத்தில் இல்லை என்றால் முனிவரின் சாபத்துக்கு ஆளாக
நேரிடும். 

எனவே மாம்பழத்தை பழையபடி மரத்திலேயே ஒட்ட வைத்து 
விடும்படி கூறினார். அதன்பேரில் பாண்டவர்கள் அந்த அற்புத 
பழத்தை மரத்தில் ஒட்ட வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி 
விட்டார்களாம்.

கிருஷ்ணர் மட்டும் இடையர் உருவத்தில் அங்கு மாடுகளை 
மேய்த்துக் கொண்டிருந்தார். தவம் கலைத்த முனிவர் அந்த 
மரத்தில் இருந்த மாம்பழத்தில் காயம் இருப்பதை கண்டார். 

அந்தப்பழம் காயம்பட்டதற்கு மாடு மேய்ப்பவர்தான் காரணம் 
என்று எண்ணி அவரை துரத்த முயன்றார். அப்போது 
கிருஷ்ணரின் தலை முடியை பிடித்த முனிவர், ஞானப்
பார்வையால் நடந்தவற்றை அறிந்து கொண்டார். 

ஒரு பெண்ணால்தான் தனக்கு கிடைக்க வேண்டிய கனி 
மரத்திலிருந்து பறிக்கப்பட்டது. அதனால் பெண்களுக்கு 
என்னுடைய தரிசனம் கிடையாது என்றும் நான் தவிமிருந்த 
காலத்தில் எனக்கு உதவிய முனியப்பசாமிக்கு எனக்கு 
எதிரே கூடாரம் அமைத்து என்னையும், அவரையும் தரிசனம் 
செய்யலாம். 

முனியப்பசாமிக்கு மட்டும் கிடா மற்றும் சேவல் வெட்டி 
படைக்கலாம் என்று கூறிய முனிவர் அப்படியே சிலையாகி 
விட்டார். இதுதான் இக்கோவிலின் தல வரலாறு என்றார் 
பூசாரி சேகர்.

இந்த கோவிலின் சிறப்பு, வசூலாகாத கடன்கள் குறித்து சீட்டில் 
எழுதி கோவிலில் உள்ள வேல்கம்பில் தொங்கவிட்டால் உடனே
அக்கடன் தொகை வசூலாகி விடும் என்பது பக்தர்களின் 
நம்பிக்கையாக உள்ளது. 

கடன் தொகை வசூலான பிறகு நேர்த்திக்கடனாக கிடா வெட்டி 
பிரார்த்தனையும் செய்கின்றனர். இங்கு சாதாரண நாட்களில் 
சுமார் 50 கிடாக்களும், தை, மாசி, ஆடி மாதங்களில் நூற்றுக்
கணக்கான கிடாக்களும் நேர்த்திக்கடனாக வெட்டப்படுகின்றன. 

நேர்த்திக்கடனாக கோழிகள், ஆடுகளில் பெண் இனங்களை 
தவிர்த்து விடுகின்றனர். இங்கு சமைப்பது முதல் சாப்பிடுவது 
வரை ஆண்கள் மட்டுமே. சாப்பாடு, கறி மீதி இருந்தால் வீட்டுக்கு 
கூட எடுத்துச் செல்வதில்லை. அங்கேயே குழி தோண்டி புதைத்து 
விடுகின்றனர். 

இந்த முனியப்பசாமியை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி 
கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட வெளி 
மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.

———————————
மாலைமலர்

Advertisements

கோபுர தரிசனம்

அருள்மிகு,
தியாகராஜ சுவாமி
திருக்கோவில்,

திருவெற்றியூர்

சென்னை.

ஆன்மிக குட்டிக் கதை

கிரகங்களை பூஜிப்பதை விட விநாயகரை பூஜியுங்கள்-

அகத்தகத் தகத்தினிலே உள் நின்றாள்…

நான்கு என்ற எண், விநாயகரை குறிப்பதாக கூறுவது ஏன்?


திதிகளில் வரும் சதுர்த்தி விநாயகருக்கு உரியது.
அத்துடன், 444 மந்திரங்களை கொண்ட,
‘சதுராவ்ருத்தி தர்ப்பணம்’ என்பது விநாயகருக்கு
பிடித்தமானது. எனவே,

நான்கு என்ற எண், விநாயகரை குறிக்கும் என்பர்.

————————————-

சீனர்களின் கருணைக் கடவுள் இவர்..

Guan Yin

சீனர்களின் கருணைக் கடவுள் இவர்..
இந்த பெயரின் அர்த்தம் உலகில் இருக்கும் கண்ணீரின்
ஒலியை கேட்கும் தாய் என்பது…

இவருக்கு 1000 கண்கள் 1000 கைகள் இருந்ததாக அவர்கள்
நம்புகின்றனர்.. இந்த கருணை தாயை போற்றும் விதமாக
சீனர்கள் 1000 கைகள் நடனத்தை ஒரு பாரம்பரியமாக
பின்பற்றி வருகின்றனர்….
>தினேஷ்மாயா
http://dhineshmaya.blogspot.com/2010/04/1000.html

ஆனந்தம் ஆரம்பம்!மனதில் ஆனந்தம் நிறைந்திருந்தால், சிலருக்கு
ஆட்டம், பாட்டு வரும். ஆனந்த சொரூபமான
சிவனும் அப்படித்தான்!

தன் பக்தர்கள் தன்னையே நினைத்திருக்கும்
போது ஆனந்தம் அடைந்து, ஆனந்த தாண்டவம்
நிகழ்த்துவார். அதனால், அவருக்கு நடராஜர் என
பெயர் வந்தது.

இந்நிகழ்ச்சியை மார்கழி மாதம் திருவாதிரை
நட்சத்திரத்தன்று சிவாலயங்களில் தரிசிக்கலாம்.

கணவர் ஆனந்தமாக இருந்தால், மனைவியும்
ஆனந்தமடைந்து, அவரது மகிழ்ச்சியில் பங்கு
கொள்வாள். சிவன், ஆனந்த நடனம் புரிந்த போது,
ஒரு கட்டத்தில் பார்வதியும் தன்னை இணைத்துக்
கொண்டாள். அவ்வாறு அவர்கள் இணைந்து
நடனமிட்ட நன்னாளே தைப்பூசம்.

தாயும், தந்தையும் ஆனந்தமாக இருந்தால்
குழந்தைகளுக்கும் ஆனந்தம் தானே… அதனால் தான்
முருகப்பெருமானும் இவ்விழாவில் தன்னை இணைத்துக்
கொள்கிறார். தெய்வத்தின் ஆனந்தப் பார்வை பக்தன்
மீது பட்டுவிட்டால், அவனையும் ஆனந்தம் தொற்றிக்
கொள்கிறது.

அவன் காவடி ஆட்டத்துடன் கடவுளைத் தரிசிக்க
செல்கிறான். இப்படி ஆனந்தத்தை வெளிப்படுத்தும்
விழாவாக, தைப்பூசம் அமைந்திருக்கிறது. அதனால்
தான் ஞானசம்பந்தர், தைப்பூசம் காணாமல் போகுதியோ
பூம்பாவாய் என்று பாடினார்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்
திருவிழாக்களுக்கென்றே பெயர் பெற்றது. இத்தகைய
மயிலாப்பூரில் பூம்பாவை என்ற பெண் வசித்தாள்.
அவளை, ஞானசம்பந்தருக்கு திருமணம் பேசி
முடித்திருந்தனர் அவள் பெற்றோர்.

இந்நிலையில் அந்தப்பெண் இறந்து விடுகிறாள்.
அவளது அஸ்தியை ஒரு கலசத்தில் வைத்திருந்தனர்
பெண்ணைப் பெற்றவர்கள். அங்கு வந்த சம்பந்தர்
அவளது அஸ்தியை நோக்கி, ‘உன் ஊரில் இருக்கும்
கபாலீஸ்வரர் கோவிலில் பல விழாக்கள் நடக்குமே…
அவற்றையெல்லாம் பார்க்காமல், உன் உயிரை விட
எப்படி மனம் வந்தது…’ என்று கேட்டு பதிகம் பாடி,
பூம்பாவையை உயிர்ப்பித்தார்.

இந்நாளில், மதுரையில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும்
தெப்பத்தில் வலம் வருவர். பழநியில் தைப்பூச விழா
மிகவும் பிரசித்தம். இங்கு முருகப்பெருமான், தன்
தந்தையின் குணாதிசயத்துடன் வீற்றிருக்கிறார்.

சிவன், அபிஷேகப்பிரியர்; அவரைப் போல், முருகனும்
இங்கே அபிஷேகப் பிரியராக இருக்கிறார். இந்த முருகன்
சிலை, நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.

இந்த சிலைக்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தம்,
நோய் போக்கும் சக்தி படைத்தது. பக்தர்கள் பாத
யாத்திரையாக இக்கோவிலுக்கு வருகின்றனர்.

தைப்பூசத்தன்று, சிவபார்வதியின் நடுவில் முருகன்
அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்த மூர்த்தியை வழிபட்டால்,
நம் வேண்டுதல்கள் நிறைவேறும். சோமன் என்றால்,
சந்திரனைச் சூடிய சிவன். ‘ஸ்கந்தன்’ என்றால் முருகன்.
சிவாலயங்களில் இந்த மூர்த்தியைத் தரிசிக்கலாம்.

தைப்பூச நன்னாளில் சிவ குடும்பத்தை வழிபட்டு,
ஆனந்தமான வாழ்வைப் பெறுவோம்.

————————————————
தி.செல்லப்பா
நன்றி-வாரமலர்

சுறுசுறுப்புடன் வாழ்வோம்!பறவை, விலங்கு, ஏன்…மனிதனுக்கும் கூட
இருட்டைக் கண்டால் பயம் வந்து விடுகிறது.
பொழுது புலர்ந்ததும் மகிழ்ச்சியில் பறவையினங்கள்
தங்கள் இனிய குரலில் கூவுகின்றன. இரை தேடக்
கிளம்புகின்றன.

இவ்வகையில் சூரியன் பயம் போக்குபவராகவும்,
உழைப்பின் சின்னமாகவும் திகழ்கிறார்.
சூரிய புராணத்தில் ஒரு கதை இருக்கிறது.

ஒரு சமயம் துர்வாச முனிவர், பாண்டவர்களின்
தாய்வழி தாத்தாவான குந்திபோஜனின் அரண்மனைக்கு
வந்திருந்தார். சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்ள இருந்த
அவருக்கு பணிவிடை செய்ய, தன் மகள் குந்தியை
அனுப்பி வைத்தான் குந்திபோஜன்.

இளவரசி குந்தியும் முனிவருக்கு பணிவிடைகளை
முறையாகச் செய்து, அவரது ஆசியைப் பெற்றாள்.

முக்காலமும் உணர்ந்த முனிவரான துர்வாசர், வருங்
காலத்தில் குந்திக்கு, அமையவிருக்கும் அவளது கணவன்
பாண்டுவின் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்காது
என்பதை ஞானதிருஷ்டியால் அறிந்தார். அதனால், மகப்
பேறு அளிக்கும், ‘புத்திரலாபம்’ என்னும் மந்திரத்தை
அவளுக்கு உபதேசித்தார்.

குந்தி அந்த மந்திரத்தின் தன்மையை சோதித்துப் பார்க்க
விரும்பினாள். கண்கண்ட தெய்வமான சூரியதேவனை
மனதில் எண்ணி அந்த மந்திரத்தை ஜெபித்தாள்.
அவள் முன் சூரியன் நேரில் தோன்றி, அவருடைய
அம்சமாக ஆண்குழந்தையை அளித்து திரும்பினார்.
அந்தப் பிள்ளையே கர்ணன்.

சூரியனின் மகனாகிய இப்பிள்ளையே, தன் தந்தையைப்
போல, வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாதபடி
தானம் செய்தவன். கொடைவள்ளல் என்று போற்றப்
பட்டவன். சூரியனும், நல்லவர் கெட்டவர் என்ற வேறு
பாடின்றி எல்லாருக்கும் ஒளி தருபவர். தானியங்கள்
விளைய காரணமாக இருப்பவர். அவர் இல்லாவிட்டால்,
உலகில் உணவே கிடைக்காது.

சூரிய ஒளியிலிருந்து தான் தாவரங்கள் கூட,
தங்களுக்குரிய உணவைத் தயாரிக்கின்றன என்பது
அறிவியல் உண்மை.

சூரியனுக்குரிய வாகனம் குதிரை. ஏழு குதிரைகள்
சூரியனின் தேரை இழுத்துச் செல்கின்றன. மாதம் ஒரு
ராசியில் சஞ்சாரம் செய்வது அவரது தொழில்.

சூரியனின் ஒரு ராசியில் நுழையும் நாளையே தமிழ்
மாத பிறப்பாகக் கொள்கிறோம். மாதம் ஒரு ராசிக்கு
மாற வேண்டும் என்பதால், ஆற்றலுடன் ஓடும்
குதிரைகளை வாகனமாகக் கொண்டிருக்கிறார்.

சூரியலோகத்தில் தண்டி, பிங்கலன் என்னும் இரு
துவார பாலகர்கள் காவல் புரிகின்றனர். இதில்,
சூரியனுக்குரிய நித்ய கர்மாக்களை (தினமும் நடக்க
வேண்டிய பணிகள்) வகுத்துக் கொடுப்பவர் தண்டி.

காலையில் ஒளியையும், மாலையில் இருளையும்
பிரித்தளிக்கும் செயலைச் செய்கிறார் பிங்கலன்.

சூரியனுக்குரிய விழா பொங்கல்.
இது, சுறுசுறுப்பைக் குறிப்பது, அதிகாலையில் எழ
வேண்டும். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
சூரியன் எப்படி, தன் பணியைச் செய்ய தவறுவதில்லையோ,
அதேபோல, நாமும் நம் பணிகளில் ஒன்றைக் கூட ஒத்தி
வைக்காமல் உடனடியாக முடித்து விட வேண்டும்.

இந்த சுறுசுறுப்பு நம்மோடு என்றும் ஒட்டியிருக்க,
பொங்கல் நன்னாளில் சூரிய பகவானை வேண்டுவோம்.

————————————
தி.செல்லப்பா
வாரமலர்

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! – வேளுக்குடி கிருஷ்ணன்

கவான் எந்த பிராட்டியாரின் கண் அசைவைப் பார்த்து இந்தப் பிரபஞ்சத்தையும் நம்மையும் சிருஷ்டிக்கிறாரோ… அந்த மஹாலக்ஷ்மி பிராட்டியாரின் கடாக்ஷமானது நமக்குக் கிடைத்துவிட்டால், எல்லாவிதமான செல்வங்களும் கிடைக்கப் பெறுவதுடன் பகவானின் திருவடிகளை அடைந்து நித்தியானந்தத்தில் திளைக்கும் பாக்கியமும் நமக்குக் கிடைக்குமாம்.

பிராட்டியார் இரண்டு வகைகளில் பகவானைப் பார்ப்பதாகச் சொன்னோம் அல்லவா? அதில் ஒன்று பகவானை அவருடைய சிருஷ்டிக்காக அங்கீகரிக்கும் பார்வை; மற்றது அன்பான பார்வை! இந்த அன்பான பார்வை எதற்குத் தெரியுமோ? பிராட்டியாருக்கு பகவானிடத்தில் உள்ள பிரியம் மட்டுமே காரணம் அல்ல. நாம் கடைத்தேறவேண்டும் என்பதும் ஒரு காரணம்தான்.

நம்மை அன்புடன் கடாக்ஷித்து, தன் பார்வையாலே சகல செளபாக்கியங்களையும் அருளும் பிராட்டியார், நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பாவங்களைப் பகவான் கவனிக்காமல் விட்டுவிட வேண்டும் என்பதற்காகத்தான் பகவானையும் அப்படி அன்பாகப் பார்க்கிறாராம். ஆக, பிராட்டி யாரின் பார்வையின் காரணமாகத்தான் பகவான் நம்மை ஏற்றுக்கொள்கிறாராம்.

இது எப்படி இருக்கிறது தெரியுமோ?

திருமலையில் திருவேங்கடவனுடன் அருளும் நீளாதேவி நாச்சியார் பற்றி வேதாந்த தேசிகன் சாதிக்கும்போது இப்படிச் சொல்கிறார்:

‘யாருடைய கண்பார்வையானது பகவானை மயங்கிக் கிறக்கமுறச் செய்கிறதோ, அந்த நீளாதேவியாரை நான் நமஸ்கரிக்கிறேன்.’

நீளாதேவி தன்னுடைய அன்பான பார்வையினால் திருவேங்கடப் பெருமானைப் பார்த்தாளாம். அந்தப் பார்வையில் பெருமாள் கிறங்கிப் போய்விட்டாராம். நாம் கள் அருந்தினால் கண்கள் கிறங்கிப்போய் ‘மசமச’வென்று தெரியுமே அப்படி நீளாதேவி பெருமானைப் பார்க்கும்போது, பெருமாளின் கண்கள் இரண்டும் கிறங்கிப்போய்விடுமாம். அது நமக்கு நல்லதாகப் போய்விட்டது. காரணம், பகவானுக்குக் கண்கள் கிறங்கிப்போன அந்த நிலையில், பகவானுக்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பாவங்கள் எல்லாம் தெரியாமலேயே போய்விடுமாம்! இதில் இருந்து என்ன தெரிகிறது? மஹாலக்ஷ்மி பிராட்டியாரின் அன்பான அந்தப் பார்வைக்கு மயங்கிக் கிறங்கித்தான் நம்முடைய எல்லா பாவங்களையும் பகவான் மறந்துவிடுகிறாராம்! அப்படி நடக்கவில்லை என்றால், பகவான் நம்முடைய ஒவ்வொரு பாவத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டுவிடுவாரே!

நீளாதேவி பெருமானை எப்படிக் கிறங்கச் செய்கிறாள் தெரியுமோ? வில் போன்று வளைந்து தோன்றும் தன் புருவ அசைப்பினாலும், தன் புருவ நெரிப்பாலும், திருக்கண் பார்வையாலும், தோளால் அணைத்தலாலும் பிராட்டி பெருமாளைக் குளிரக் குளிர கடாக்ஷிக்கும்போது, பெருமான் அதற்கு மயங்கி இருக்கிறாரோ இல்லையோ, அந்த நேரம் பார்த்து பிராட்டி நமக்காக பகவானிடம் ஒன்றைப் பிரார்த்திக்கிறாள். நாமாக இருந்தால் என்ன பிரார்த்திப்போம்? நமக்கு அது வேண்டும்… இது வேண்டும் என்று பிரார்த்திப்போம். ஏதோ கொஞ்சம் நல்ல மனம் இருந்தால் நமக்கு வேண்டியவர்களுக்காக அதைக் கொடுங்கள்… இதைக் கொடுங்கள் என்று பிரார்த்திப்போம். ஆனால், தாயார் அப்படி இல்லை. நம்முடைய அனைத்துத் தேவைகளுக்கும் அவளே ஆதாரமாக இருக்கும்போது, அவளுக்குத் தேவை என்பது இருக்காதுதானே? அப்படி இருக்கும்போது பிராட்டி எதை வேண்டி பகவானிடம் பிரார்த்திப்பாள்? நம்முடைய நன்மையை வேண்டித்தான் பிரார்த்திப்பாள்.  இங்கே நம்முடைய நன்மை என்பது பகவானுடைய திருவடிகளில் நம்மை சேர்ப்பித்துவிடுவதுதான்!

பிராட்டி, தன்னுடைய அன்பான பார்வைக்குக் கிறங்கிப்போய் இருக்கும் பகவானைப் பார்த்து, ”ஸ்வாமி, இவனைக் கொஞ்சம் பாருங்கள். இவனைத் தாங்கள்தான் அனுக்கிரஹித்து தங்களுடைய திருவடிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவன் மாயையில் சிக்கி எத்தனையோ பாவங்கள் பண்ணியிருக்கிறான் என்பது வாஸ்தவம்தான். நான் இல்லை என்று சொல்லவில்லை… ஆனால், இவனுடைய பாவங்களையே பார்த்துக் கொண்டிருந்தால், உம்முடைய தயைக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடுமே. எனவே, நீங்கள் தயைகூர்ந்து இவனுடைய பாவங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், இவனை அன்புடன் கடாக்ஷித்து இவனை உம்முடைய திருவடிகளில் சேர்ப்பித்துக்கொள்ள வேண்டும்” என்றுதான் பகவானிடம் மன்றாடி வேண்டுகிறாள்.

திருமால் பார்த்தார். பிராட்டியாரின் புருவ நெரிப்பைப் பார்த்துதானே பகவான் சிருஷ்டிக்கவே தொடங்கினார்! அந்தப் பார்வைக்காக எது வேண்டுமானாலும் செய்யலாமே. ‘வேறு யார் கேட்டுச் செய்கிறோமோ இல்லையோ, தேவியின் இந்த அன்புப் பார்வைக்காக எது வேண்டுமானாலும் செய்யலாமே’ என்று நினைத்தவராக, நம்முடைய பாவங்களை எல்லாம் மறந்தவராக, நம்மை அவருடைய திருவடிகளில் சேர்த்துக் கொள்கிறாராம்!

இப்படி பகவானின் கிறங்கிய நிலையைப் பார்த்த மாத்திரத்தில் இதுதான் சமயம் என்று நமக்காகப் பிரார்த்திக்கிறாள் என்பதால்தான் அவள் ‘மனோக்ஞே’  மனநிலையை நன்கு அறிந்து வைத்திருப்பவள் என்று போற்றப்படு கிறாள். அவள் தன்னுடைய அன்பான பார்வை யினால் பகவான் நம்மிடம் கொண்டுள்ள கோபத்தை மட்டும் மாற்றவில்லை… நம்மையும் திருத்தி நல்லவர்களாக மாற்றுகிறாள்.

பிரளய காலத்தின்போது எல்லாமே நஷ்டப்பட்டுவிட்டன. மூன்று லோகங்களும் எதுவும் இல்லாமல் இருந்தன. ஆனால், அந்த மூன்று உலகங்களும் எப்போது பிராட்டியாரின் கண் பார்வையாகிற அமுதத்துளியில் நனைக்கப் பெற்றதோ… அப்போதே அந்த மூன்று உலகங்களுக்கும் ஜீவனும் ஐஸ்வர்யமும் ஏற்பட்டு வளர ஆரம்பித்துவிட்டன.

உதாரணமாக ஒன்றைப் பார்ப்போம். ஒரு பெண்மணி காலையில் புஷ்பம் விற்க ஆரம்பிப்பாள். இல்லையென்றால் மதியம் வந்திருக்கும் புஷ்பத்தை மாலையில் விற்கத் தொடங்குவாள். எட்டு மணி சுமாருக்கு விற்றது போக, கொஞ்சம் புஷ்பம் வாடிய நிலையில் மிச்சம் இருக்கும். அப்போது அவள் என்ன செய்வாள் தெரியுமா? கொஞ்சம் பன்னீரையோ அல்லது கொஞ்சம் தண்ணீரையோ அதன்மேல் லேசாகத் தெளித்துவிடுவாளாம். உடனே வாடிக்கிடந்த அந்த புஷ்பங்கள் பளிச்சென்று ஆகிவிடும். அதை எப்படியும் இரவு பத்து மணிக்குள் விற்றுவிடுவாள்.

அதைப் போல பிரளய காலத்தில் இந்த ஜகமெல்லாம் பிராட்டியினுடைய கடாக்ஷ பார்வை என்ற அமுதத் துளி படமால் ஜீவன் இல்லாமல் இருந்த நிலையில், மீண்டும் சிருஷ்டிக்கான நேரம் வந்தபோது, தேவியின் கடாக்ஷ பார்வை என்னும் அமுதத் துளியின் ஸ்பரிசம் பட்டுத்தான் இந்தப் பிரபஞ்சம் மீண்டும் உயிர்த் துடிப்புடன் இயங்கத் தொடங்குகிறது. அதன்பிறகே பகவான் பிராட்டியாரின் புருவ அசைப்பைப் பார்த்து நம்மையெல்லாம் சிருஷ்டிக்கிறார்.

அவளுடைய கடாக்ஷம் மட்டும் இல்லை என்றால், பிரபஞ்சமும் உயிர்த்திருக்காது; பகவான் நம்மையும் சிருஷ்டித்து இருக்கமாட்டார். நாமும் பிறந்திருக்கவே மாட்டோம்.

நாம் கேட்கலாம், ‘பிறக்காமல் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே… பிறந்து படாதபாடு படுகிறோமே’ என்று. அப்படி நாம் பிறக்காமல் போய்விட்டால், நாம் பகவானிடம் எப்படி பக்தி செலுத்துவது? பகவானின் திருவடிகளில் சரணாகதி அடைவது எப்படி? மேலும் நாம் அதுவரை செய்திருக்கக்கூடிய கர்மாக்களைப் போக்கிக்கொள்ள வேண்டுமே, அதற்கு வழி இல்லாமல் போய்விடுமே. எனவே, நம்முடைய கர்மவினைகளைப் போக்கிக்கொள்ளுவதற்காக நாம் பிறக்கும்போது, நமக்கு மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் இருந்தால்தானே நாம் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றுச் சிறக்க வாழவும்,  பெருமாளிடம் சரணடைந்து நாம் பேரின்பநிலையை அடையவும் முடியும்..?

கடாக்ஷம் பெருகும்…

தொகுப்பு: க.புவனேஸ்வரி

–நன்றி அவள் விகடன்

https://balhanuman.wordpress.com/2015/01/06/8-ஸ்ரீமஹாலக்ஷ்மி-கடாக்ஷம/

« Older entries