ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் – 15


எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?

சில்லென்றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்

வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்

வல்லீர்கள் நீங்களே நானேதா னாயிடுக

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை?

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக்கொள்!

வல்லானை, கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடலே ரெம்பாவாய்!

விளக்கம்:

“”என்ன, இளங்கிளி போன்ற அழகியே! படுக்கை உனக்குக் கூடா?
கூண்டா? வெளியே பறந்து வா! இதோ வந்துவிடுகிறேன்”
என்று தாமதம் செய்கிறாய். என்னைத் திட்ட வேண்டாம் என்று
கட்டளை வேறு போடுகிறாய்.

மற்ற அனைவரும் வந்துவிட்டார்களா என்று கேட்கிறாய்.
உன் பேச்சு சாமர்த்தியமானதுதான்; நாங்கள் முன்பே அறிவோம்.
சீக்கிரம் கிளம்பிவா! எங்களை “எண்ணிப்’பார்க்க
எண்ணியிருக்கிறாயே, நீ மட்டும் வந்துவிட்டால், எல்லாரும்
சேர்ந்து போகலாம். எல்லாரும் வந்துவிட்டார்கள்

நீயே வந்து எண்ணிப் பார்த்துக்கொள். “வராவிட்டால்தான் என்ன?’
என யார் ஒருவரையும் ஒதுக்கலாகாது. வலிமைமிக்க குவலபீடம்
என்னும் யானையைக் கொன்றவனான மாயக்கண்ணனைப்
பாடிப் புகழ்ந்தபடி கோவிலுக்குச் செல்லலாம் வா!

—————————-

ஜோதிட பழமொழிகள்

பத்தில் குரு பதவிக்கு இடர்
இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே
பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும்
நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை
சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது.

வைத்தியன் கையை பிடிப்பான் ஜோதிடன் காலை பிடிப்பான்
கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்
ராசி இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க
குரு பார்க்க கோடி நன்மை
கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும்

மகத்துப் பெண் – பூரத்துப் புருஷன்
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது,
மேஷ ராகு மேன்மையை கொடுக்கும்
துலா கேது தொல்லை தீர்க்கும்
சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்

சுவாதி சுக்ரன் ஓயா மழை
மறைந்த புதன் நிறைந்த கல்வி
சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்
சித்திரை அப்பன் தெருவிலே
பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும்

விதி போகும் வழியே மதி போகும்.
அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம்
குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின்
எவர் தடுப்பார்?
சனி பார்த்த இடம் பாழ்
சனி நீராடு

விழுப்பு இருக்குமிடத்தில் வேப்பிலைக்காரி தங்க மாட்டாள்.
ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு
பருப்புக்கு போகாவிட்டாலும் நெருப்புக்கு போக வேண்டும்
எட்டில் சனி நீண்ட ஆயுள்
சனிபகவானைப் போன்று கெடுப்பாரும் இல்லை;
கொடுப்பாரும் இல்லை
அகப்பட்டவனுக்கு அஷ்டத்தில் சனி

குரு நின்ற இடம் பாழ்
சனி பார்க்கும் இடம் பாழ்

—————————————————-

http://pookal.blogspot.in/

அம்மனும், ஈஸ்வரியும்

ஆடி மாதம் என்றவுடன் சட்டென்று நினைவுக்கு
வருவது, அம்மன் திருவிழாக்கள்தான். அம்மன் பாடல்கள்
என்றால் நம் கண்முன் வருபவர், திரைப்பட பின்னணிப்
பாடகி எல்.ஆர். ஈஸ்வரி
தான் பாடிய அம்மன் பாடல்களைப் பற்றி மனம் திறக்கிறார்
அவர்.

நான் பாடி, ஒலிப்பதிவு செய்யப்பட்ட முதல் மாரியம்மன்
பாடல், “வரமளித்து உலகயெல்லாம் வாழ்வளிக்க வந்தவளே!’
என்ற பாட்டு, அந்தப் பாடல்களுக்கு இசையமைத்தவர்
வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன்.

இன்று ஆடி, தை மாதம் என்றால் மாரியம்மன் கோயில்களில்
மட்டுமல்லாமல், பல்வேறு கோயில்களிலும் ஒலிக்கிற ஒரு
பாட்டு “செல்லாத்தா! செல்ல மாரியாத்தா!’. இந்தப் பாட்டை
எழுதியவர் வீரமணி சோமு. அதேபோல இன்னொரு மிகப்
பிரபலமான பாட்டு “வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதி
பராசக்தியவள்’ என்ற பாட்டு. நான் கிறிஸ்துவ மதத்தைச்
சேர்ந்தவள் என்றாலும், நான் பாடிய அத்தனை அம்மன் மீதான
பாடல்களையும் முழுமையான ஈடுபாட்டோடு, அனுபவித்துதான்
பாடியிருக்கிறேன்.

அதற்குக் கவிஞர் தமிழ் நம்பியின் அற்புதமான தமிழும்,
ஆன்மிக அறிவும் காரணம். அவரை என் வாழ்நாளில் மறக்க
முடியாது.

பண்டிகையோ, திருவிழாவோ… என்னோட பக்தி பாடல்கள்
ஒலிக்காத அம்மன் கோயில்களே இல்லை என்று சொல்லவிடலாம்.
அதிலும், ஆடி மாதம் முழுக்க எங்கும் என் குரல்தான்! அது அந்தத்
தெய்வமா பார்த்து எனக்குக் கொடுத்த வரம்.

குன்னக்குடி வைத்தியநாதன், வீரமணி சோமு, எல்.கிருஷ்ணன்,
இசையமைப்பாளர் தேவா போன்றவர்களின் இசையமைப்பில்
ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களைப் பாடியிருக்கேன்.
ஒவ்வொண்ணும் ஒவ்வொருவிதமா, மாணிக்கமா, மரகதமா,
வைரமா, பவழமா, நவரத்தினமா ஜொலிக்கும்.

குறிப்பாக, “கற்பூர நாயகியே கனகவல்லி’ங்கிற பாடல் சூப்பர்
ஹிட் ஆனது. அதை எழுதியவரோ, இசையமைத்தவரோ யாருன்னு
ரொம்ப பேருக்கு தெரியாது. கவிஞர் அவினாசி மணி என்பவர்
எழுதிய தெய்வீக மணம் கமழும் வார்த்தைகளுக்கு இசையமைத்தவர்
வீரமணி -சோமு.
“பள்ளிக்கட்டு சபரி மலைக்கு’ பாடுவாரே அதே பாடகர் வீரமணிதான்!

தேவாவின் இசையமைப்பில் “மகமாயி… சமயபுரத்தாயே’ பாடலில்
கவிஞர் தமிழ் நம்பி எழுதிய வரிகளை நான் பாடியுள்ளேன்.
அது என்னவோ எனக்காகவே எழுதியது போலத் தோன்றுவதால்
அதைக் கேட்கும்போதெல்லாம் என் கண்கள் கலங்கி விடும். என்
நெஞ்சம் பக்தியில் நெகிழ்ந்துவிடும்.

———————————————————

-அனிதாமூர்த்தி
மங்கையர் மலர்

ஆடி மாதத்தில் சுப காரியங்களைத் தள்ளி வைக்கும் பழக்கம் ஏன்….

ஆடி மாதத்தில் ஆன்மிக ரீதியாக விசேஷங்கள்
கொண்டாட்டங்கள் அதிகமாக நடைபெறுகின்றன.
ஆனால் அதே சமயம் ஆடி மாதத்தில் சுப
காரியங்களைத் தள்ளி வைக்கும் பழக்கமும் இருந்து
வருகிறது. ஏன் இந்த முரண்பாடு?

அதற்கான காரணங்களை சாஸ்திர ரீதியாக விளக்குகிறார்
ஜோதிட பண்டிதர் காழியூர் நாராயணன்.

“பூலோகம் செழிப்பாக இருந்து, இயங்குவதற்குக் காரணமே
சூரியனின் ஒளிக்கதிர்கள்தான். சூரியனின் ஒளிக்கதிர்கள்
பூமியில் விழும் நேரத்திலிருந்துதான் நாள் துவங்குகிறது
என்பதை நாம் கணக்கில் கொண்டுள்ளோம். இந்த ஒரு
நாளிலேயே “உஷக்காலம்’ என்று கூறப்படும் காலைப் பொழுது
ஆரம்பம்.

அதாவது சூரிய உதயம் முதல் பகல் பன்னிரண்டு மணி வரை
“பூர்வாங்கம்’ எனப்படும். பன்னிரண்டு மணிக்கு மேல்
(உச்சிப் பொழுது முதல்) சூரியன் மறையும் கணக்கு. “பூர்வாங்கம்’
என்பது ஏற்றத்தைக் குறிக்கும். “அபராணம்’ என்பது இறக்கத்தைக்
குறிக்கும்.

இதேபோலத்தான், ஒரு வருடத்தில், தை மாதப் பிறப்பு முதல் ஆனி
மாத முடிவு வரை “உத்தராயணம்’ என்றும், ஆடிமாதப் பிறப்பு
முதல் மார்கழி மாத முடிவு வரை “தட்சிணாயனம்’ என்றும் கூறப்
படுகிறது.

சூரியனின் சக்தியானது உத்தராயணத்தில் “பாசிடிவ் சார்ஜ்’ஜினைத்
தருகிறது. தாமதகுணமான “நெகடிவ் சார்ஜி’ னை தட்சிணாயனத்தில்
கொடுக்கிறது. இது ஆடி மாதப் பிறப்பிலிருந்து தொடங்குகிறது.

ஆடி மாதம் அந்தக் காலத்தில் மிக முக்கியமான மாதமாகக் கருதப்
பட்டது. ஏனென்றால் அந்நாட்களில் விவசாயத்தை நம்பித்தான்
ஜீவனம் நடந்து கொண்டிருந்தது. “ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று
பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல்,
துணி நெய்தல், குடிசைத் தொழில் செய்தல், போன்ற வருமானத்திற்கு
வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியமான ஆதார வேலைகளில்
ஈடுபடுவார்கள்.

ஆடியில் பூர்வாங்க வேலைகளைச் செய்தால் தான் ஒருவருக்கு,
பயிர் அறுவடை கார்த்திகை மற்றும் தை மாதத்தில் உண்டாகும்.
அந்தச் சமயத்தில்தான் கையில் பணமும் வர வாய்ப்பு இருக்கும்.
அதனால் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளான தீபாவளி,
பொங்கல் மற்றும் திருமண வைபவங்களுக்குப் பணத்தட்டுப்பாடு
இல்லாமல் இருந்து வந்தது.

ஆடி மாதம் விவசாயத்திற்காக செலவு செய்யும் காலமாக இருந்ததால்
அந்தச் சமயத்தில் வேறு செலவுகள் செய்யப் பணம் இருக்காது.
அதனால்தான் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெறாமல் இருந்ததே
ஒழிய, ஆடியில் திருமணங்கள் செய்யக் கூடாது என்று எந்த
சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை.

ஆடி மாதம் முழுவதுமே விசேஷம் தான். ஒரு வருடத்தை போக
சம்பிரதாயம், யோக சம்பிரதாயம் என இரண்டாகப் பிரிப்பர்.
போக சம்பிரதாயம் என்பது தை மாதம் முதல் ஆனி வரை உள்ள
காலம். யோக சம்பிரதாயம் என்பது ஆடி முதல் மார்கழி வரை.

போக சம்பிரதாயக் காலத்தில் கல்யாணம், விருந்து, விசேஷங்கள்
என்று மகிழ்ச்சியாக இருக்கும் காலம். யோக சம்பிரதாயம் என்பது
தபஸ், யாகம், யக்ஞம், பூஜைகள், பிரார்த்தனைகள் செய்யக்கூடிய
காலம்.

யோக காலத்தில் முதல் மாதம் ஆடி என்பதால் தெய்வீகப்
பண்டிகைகள் அதிகம். ஆடி பிறப்பு, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி,
ஆடி அமாவாசை, ஆடிப் பவுர்ணமி, ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு,
ஆடிப்பூரம் என்று மாதம் முழுவதுமே விசேஷமாக உள்ளது.

ஆடி மாதத்தில் சந்திரன் சொந்ந வீட்டில் இருக்கிறார்.
அந்த சொந்த ÷க்ஷத்திரத்தில், சூரியனுடன் சம்பந்தம் ஏற்படும் பொழுது,
அதற்கு விசேஷம் அதிகம் உண்டு. இந்த ஆடி மாதத்தில் பகவத்
தியானம் மிகவும் முக்கியமானது. ஆடி மாதம் முழுவதும் ஒரு பொழுது
விரதம் இருந்து பகவானை பூஜித்து தியானித்து வந்தால் சகல
சம்பத்துகளும் சேரும்.

—————————————–

– மாலதி சந்திரசேகரன்
மங்கையர் மலர்

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை

-ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை
செய்வதைப் பல பெண்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்தப் பூஜை என்ன மாதிரியான பலனை தருகிறது
என்பதைத் தெரிந்தோ, தெரியாமலோ செய்து வருகிறார்கள்.

ஆடி வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை செய்தால்,
ஒரு கோடி சுமங்கலிப் பிரார்த்தனைகள் செய்த பலன் உண்டு.
மேலும் கணவரின் தீர்க்காயுளுக்காகவும், பிரிந்த குடும்பம்
ஒன்று சேர்வதற்காகவும், பிரிந்த தம்பதிகள் கூடுவதற்காகவும்,
குடும்ப சுபிட்சத்திற்காகவும் விளக்கு பூஜை செய்தல் நல்லது.

ஆடி மாதத்தில் மலையில் இருக்கும் தெய்வங்களை வழிபடுதல்
நல்லது. (முருகன், அம்பாள் போன்ற தெய்வங்கள்). ஏனென்றால்
மலைமேல் இருக்கும் தெய்வங்களுக்கு சக்தி அதிகம். காளியை
உபாசனை செய்பவர்கள் ஆடி மாதத்தில் தான் காளி
உபாசனையை ஆரம்பிக்க வேண்டும். மந்திர சாஸ்திரங்களில்
சித்து, அசித்து, சம்ரக்ஷணம், சம்ஹாரம், அபிசாரம் போன்றவை
உண்டு. இவற்றை உபாசனை பெறவும். உபதேசிக்கப் படவும்,
சங்கல்பம் சொல்லி ஆரம்பிக்கவும் ஆடி அமாவாசையில்தான்
துவங்க வேண்டும்.

ஆடியில் ÷க்ஷத்திராடனங்கள் செல்வது மிகுந்த பலனைக்
கொடுக்கும். அந்தக் காலத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்,
காசி ராமேஸ்வரம் செல்வதற்கு இந்த மாதத்தைத் தான்
தேர்ந்தெடுப்பார்கள். பூமி வாங்க, பத்திரப்பதிவு செய்ய, ஆடு மாடு
வாங்க, பசு வாங்கி, வீட்டில் கட்ட ஆடி மாதம் மிகவும் விசேஷமான
மாதமாகும்.

சிலர் ஆடி மாதத்தில் வீடு மாறக் கூட இக்காலத்தில் செலவிற்கு
பணம் பற்றாக்குறை இருந்ததுதான் காரணமேயன்றி வேறெதுவும்
இல்லை.

ஆடி மாதத்தில் மூன்று நதிகள் கூடும் இடத்தில் ஸ்நானம் செய்வது
நல்லது. ஏனென்றால் அநேக கனிமப் பொருட்கள் சங்கமிக்கும்
இடமாக இது அமைவதால் தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ஆடி மாதத்தில், முந்தைய நாட்களில் உழுவது, விதை விதைப்பது
என்று விவசாயத்தில் படு பிசியாக இருப்பார்கள்.

அந்த நேரத்தில் பொருட்களை வாங்க பணமும் இருக்காது.
மாடுகளுக்கும் வேலை இருக்கும். வண்டி கட்டிக் கொண்டு
பொருட்கள் வாங்க வெளியூர் போக முடியாத நிலை. இந்த
சமயத்தில் வியாபாரம் குறைந்ததால், வியாபாரிகள் குறைந்த
விலைக்கு பொருட்களை விற்க ஆரம்பித்தார்கள்.
அதுவே வழிவழியாக இன்றைக்கும் தொடரும் ஆடித் தள்ளுபடி
விற்பனை.

“கால தேச வர்த்தமானம்’ என்று ஒரு சொல் உண்டு.
அதாவது நாம் இருக்கும் காலம், நாம் இருக்கும் நேசம், நாம்
ஈடுபட்டிருக்கும் தொழில் இவற்றை மனதில் கொண்டு
காலத்திற்கேற்றவாறும், சமுதாயத்திற்கு ஏற்றவாறும் மாற்றிக்
கொள்வதில் எந்தவிதத் தவறும் இல்லை என்று சாஸ்திரத்தில்
கூறப்பட்டிருக்கிறது. ஆகையால் எக்காலத்திலும்,
எந்த ஒர காரியத்தையும் இறையுணர்வோடு செய்தல் நல்லது.’

——————————————————–

– மாலதி சந்திரசேகரன்
மங்கையர் மலர்

உழைப்பு உயர்வைத் தரும்;


ஆனால், உழைத்து பெற்ற உயர்வாக இருந்தால் கூட,
அது தங்கமாட்டேன் என்கிறதே… அதற்கு என்ன
காரணம்?

இதற்கான விளக்கத்தை, ராவண சம்ஹாரத்திற்கு
பின் நடந்த ஒரு நிகழ்ச்சி விவரிக்கிறது…

கும்பகர்ணனின் மகன் மூலகன்; இவன் பிரம்மாவை
நோக்கி கடுந்தவம் செய்தான். அவனது தவத்தில்
மகிழ்ந்த பிரம்மா, அவன் முன் தோன்றினார். அவரை
வணங்கிய மூலகன், ‘என் முடிவு ஒரு பெண்ணால்
தான் வர வேண்டும்; மற்றபடி தேவாதி தேவர்களாக
இருந்தாலும், அவர்களால் இறப்பு வரக் கூடாது…’ என்று
வேண்டியதுடன், பல அபூர்வ வரங்களையும் பெற்றான்.

இதனால், தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது
என்ற தைரியத்தில், அதர்மங்களை செய்தான்.

ஒருசமயம், தன் ராட்சச சைனியங்களுடன் அட்டூழியம்
செய்தபடி வந்தவன், ‘என்னை எதிர்க்க இவ்வுலகில்
யாருமில்லை. இப்படிப்பட்ட என் ராட்சச வம்சம், அந்த
சண்டியான சீதையால் அல்லவா அழிந்தது…’ என்று
கோபத்துடன் கத்தினான். அப்போது, அங்கிருந்த
ரிஷி ஒருவர், அவனைப் பார்த்து, ‘யாரை சண்டி என்று
இகழ்ந்தாயோ, அச்சீதையாலே உன் உயிர் போகக்
கடவது…’ என்று சாபம் கொடுத்தார்.

இந்நிலையில், ராட்சச சைனியத்துடன் சென்று,
விபீஷணரை வென்று, சிறையில் அடைத்தான் மூலகன்.
சிறையில் இருந்து தந்திரமாக தப்பிய விபீஷணர்,
ஸ்ரீராமரிடம் சென்று முறையிட்டார்.

உடனே, ஸ்ரீராமர் தன் படைகளுடன் சென்று மூலகனுடன்
போரிட்டு, அவனை கொல்ல முயலும் போது, பிரம்மா
தோன்றி, ‘ரகு நந்தனா… இவனுக்கு, பெண்ணால் தான்
மரணம் என்று வரம் தந்துள்ளேன். அதை உறுதி
படுத்துவது போல, சீதையால் தான் இவனுக்கு மரணம்
என்று ரிஷி ஒருவரும் சாபம் இட்டுள்ளார்.

ஆகையால், தாங்கள் இவனைக் கொன்றால், எங்கள்
வார்த்தை பொய்யாகும்…’ எனக் கூறினார்.

அதை ஏற்ற ஸ்ரீராமர், அயோத்தியில் இருந்து சீதையை
வரவழைத்து, அவளிடம் நடந்ததை விவரித்து, சீதை
கையாலேயே மூலகன் கதையை முடித்தார்.

அவதார புருஷரான ஸ்ரீராமரே முறை மீறவில்லை.
ஆனால், கடுந்தவம் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்ற
மூலகனோ, தவப்பலனை அதர்ம வழியில் உபயோகித்து,
முடிவை அடைந்தான்.

கடுமையாக உழைப்பதில் மட்டுமல்ல, உழைப்பின்
பலனை உபயோகப் படுத்துவதிலும் வாழ்க்கையின்
ரகசியம் அடங்கி உள்ளது.

—————————————

பி.என்.பரசுராமன்

அயப்பாக்கத்தில் அருளும் பாபா!

பட்டடப் பொறியாளர் ஒருவர், சென்னை, அம்பத்தூருக்கு அருகேயுள்ள அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் தனக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணியை மேற்கொண்டிருந்தார்.

ஒருநாள், பணியாளர்கள் மதிய சாப்பாட்டிற்குச் சென்றிருந்த நேரம்… கடுமையான வெய்யில். அச்சமயம் பொறியாளர் அருகேயுள்ள மரத்தின் அடியில் நின்றுகொண்டிருந்தார். அந்த வேளையில் பெரியவர் ஒருவர் வந்து “தாகமாக இருப்பதாகவும் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும்’ என்று கேட்டார். தண்ணீரை கொடுத்தபின்னர், தண்ணீர் அருந்திவிட்டு “”இங்கு பாபா கோயில் கட்டு” என்று கூறியுள்ளார்.

அந்த பொறியாளருக்கு ஒன்றும் புரியவில்லை. அவரது உடல் சிலிர்த்துவிட்டதாம்! பின்னர் சுதாகரித்துக்கொண்டு பார்த்தபோது பெரியவரை அங்கு காணவில்லை. அதன் பின்னர், வீடு கட்டும் பணியை நிறுத்திவிட்டு அங்கு பாபாவிற்கு கோயில் கட்டியுள்ளார். அதோடு தனது பணியை விட்டுவிட்டு 13 வருடங்களாக ஆன்மிக பணியாற்றி வருகிறார் பொறியாளரான அந்த அன்பர்!

அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பிற்கு நடுவில் சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். அதோடு பக்தர்கள் தாங்களாகவே முன்வந்து தினமும் அன்னதானமும் செய்கிறார்கள். வியாழக்கிழமைகளில் காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்களால் இவ்வாலயம் நிரம்பி வழிகிறது என்றே சொல்லாம். பாபா கோயில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே இந்த “பாபா கோயில்’ அமைந்துள்ளது.

– அம்பத்தூர் ம. தமிழன்.

வெள்ளிமணி

நட்பை வளர்ப்போம்!

ஜூலை 9, கலிக்காமர் குருபூஜை

மனிதர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது
சகஜம். அத்தகைய மன வேறுபாடுகளை மறந்து,
உறவை தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தும்
விதமாக சிவபெருமான் ஒரு லீலையை நிகழ்த்தினார்.

தேவாரம் பாடிய சுந்தரர் முற்பிறப்பில்,
ஆலாலசுந்தரராக கைலாயத்தில் சிவ தொண்டு
புரிந்து வந்த போது, பார்வதி தேவிக்கு பணிவிடை
செய்து வந்த கமலினி, அநிந்திதை என்ற சேடிப்
பெண்கள் மீது காதல் கொண்டார்.
அந்தப் பெண்களும் சுந்தரரை விரும்பினர்.

சிவலோகம் என்பது வழிபாட்டுக்குரியது; அங்கே
காதலுக்கு இடமில்லை என்பதால், அவர்கள்
பூலோகத்தில் பிறந்து, உலக வாழ்வை அனுபவித்த
பின், கைலாயம் வரும்படி அருள்புரிந்தார் சிவன்.

அப்பெண்களே பரவை மற்றும் சங்கிலி என்ற
பெயருடன் பூலோகத்தில் பிறந்தனர்.
ஆலால சுந்தரரும், திருநாவலூரில் பிறந்தார்.

பரவையை திருமணம் செய்த சுந்தரர்,
சிவ தலங்களுக்கு யாத்திரை செல்வதாக கூறிக்
கிளம்பினார். வழியில், திருவொற்றியூரில்
சங்கிலியாரைக் கண்டார். விதிப்பயனால்,
அவரைத் திருமணம் செய்யும் எண்ணம் அவருக்கு
தோன்றி, திருமணமும் முடிந்தது.

இந்த தகவல் பரவைக்கு தெரியவே, அவர் சுந்தரருடன்
வாழ மறுத்து விட்டார்.

பக்தியில் பலவகை உண்டு. சுந்தரர், இறைவனை
தன் நண்பனாகக் கருதி, தன் பாடல்கள் மூலம்
சிவனின் அன்பைப் பெற்றிருந்தார். அதனால்,
தனக்காக, முதல் மனைவியிடம் தூது சென்று
சமாதானம் செய்யும்படி இறைவனை வேண்டினார்.
சிவனும், அவர்களைச் சமாதானம் செய்து சேர்த்து
வைத்தார்.

இந்நிகழ்வு, சோழ நாட்டிலுள்ள பெருமங்கலம்
கிராமத்தில் வசித்த சிவபக்தரான கலிக்காமருக்கு
தெரிய வந்தது. இவர் மானக்கஞ்சாற நாயனாரின்
மகளைத் திருமணம் செய்தவர்.

‘இரண்டாவது மனைவிக்காக, முதல் மனைவியிடம்
இறைவனையே தூது போகச் செய்து விட்டாரே சுந்தரர்…
அவரைப் பழி வாங்க வேண்டும்…’ என்று நினைத்தார்
கலிக்காமர்.

சிவபக்தர்களான அவர்களை, நண்பர்கள் ஆக்குவதற்காக,
திருவிளையாடல் புரிந்தார் சிவன்.

கலிக்காமருக்கு கடுமையான வயிற்று வலியைக்
கொடுத்தார். வலியால் துடித்த கலிக்காமரின் கனவில்
தோன்றி, ‘இந்நோயை சுந்தரரால் மட்டுமே தீர்க்க முடியும்;
அவரை வரவழை…’ என்று சொல்லி மறைந்தார்.

அதுபோல், சுந்தரர் கனவில் தோன்றிய சிவன், கலிக்காமரின்
மன வருத்தங்களை கூறினார். இதனால், ‘சிவபக்தரின்
மனதை புண்படுத்திய பாவத்திற்கு ஆளானோமே…
அவரிடம் மன்னிப்பு கேட்பதுடன், அவரது நோயையும்
குணப்படுத்த வேண்டும்…’ என நினைத்து, பெருமங்கலம்
புறப்பட்டார் சுந்தரர்.

காதலுக்காக, தன் அன்பிற்குரிய இறைவனையே தூது
செல்ல வைத்தவரின் உதவி, தனக்கு தேவையில்லை
என்று நினைத்த கலிக்காமர், கத்தியால் வயிற்றில் குத்தி
இறந்து போனார்.

கலிக்காமர் வீட்டுக்கு வந்த சுந்தரர், நடந்ததை எண்ணி
வருந்தினார். அப்போது, அங்கே தோன்றிய சிவன்,
கலிக்காமருக்கு உயிர் கொடுத்து, முன்வினையை
எல்லாருமே அனுபவித்தாக வேண்டும் என்பதை விளக்கி,
இருவரும் நட்புடன் திகழ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சுந்தரரால், சிவதரிசனத்தை நேரடியாகப் பெற்ற கலிக்காமர்
மகிழ்ந்தார். தவறு செய்வது மனித இயற்கை; அதை,
பெரிதுபடுத்தாமல் நட்பு கொள்வதே உயர்ந்த பண்பு
என்பதற்கு உதாரணம் கலிக்காமரின் வாழ்க்கை.

இவரது குருபூஜை, ஆனி ரேவதி நட்சத்திரத்தில் நடக்கிறது.

————————————————–

தி.செல்லப்பா
வாரமலர்

உப்பிலியப்பன்

உப்பிலியப்பன்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான உப்பிலியப்பன் கோவில்
தஞ்சை மாவட்டத்திலுள்ள திருநாகேஸ்வரத்திற்கு அருகில்
அமைந்துள்ளது.

திருவிண்ணகர் உப்பிலியப்பன் கோவில் என்று அழைக்கப்
படுகின்றது. கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில்
இக்கோவில் அமைந்துள்ளது. தென்திருப்பதி என இக்கோயில்
கருதப்படுகின்றது.

மிருகண்டு மகரிஷியின் மகன் மார்க்கண்டேயன் இலக்குமி
தனக்கு மகளாகவும், ஸ்ரீவிஷ்ணு தனக்கு மருமகனாகவும்
தோன்ற வேண்டும் என இறைவனிடம் வேண்டினார்.

எனவே க்ஷேத்ராடனம் செய்தார். அவ்வாறு செய்து வரும்
பொழுது இவ்வூரை அடைந்த அவர் தான் வரம் பெறத் தகுதி
வாய்ந்த இடம் இதுவே என முடிவு செய்தார். இறைவியின்
அருள் வேண்டி ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவம் செய்தார்.
அவ்வேளையில் துளசிச் செடிக்குக் கீழ் ஒரு சிறுமியின்
வடிவில் இலக்குமி தோன்ற, அக்குழந்தையைத் தூக்கிச்
சென்று வளர்க்கத் தொடங்கினார்.

இலக்குமி பருவ வயது அடைந்த பொழுது அங்கு வயோதிக
உருவில் தோன்றிய மஹா விஷ்ணு அப்பெண்ணைத் தனக்கு
மணம் முடித்துக் கொடுக்கும்படி வேண்டினார்.

இதனால் திடுக்குற்ற மார்க்கண்டேயர். ”நீரோ வயதானவர்;
என் மகளோ மிகவும் இளையவள். உப்பிட்டு உணவு சமைக்கக்
கூடத் தெரியாது. அதனால் நீவிர் கோபப்படலாம்; சாபம்
இடலாம்; இது நல்லதல்ல. நீவீர் தோற்றத்தில் வயோதிகர்.
ஆனால் மனதால் இளைஞர்; என்னை மன்னித்தருள வேண்டும்.
என்னால் மணம் செய்து கொடுக்கமுடியாது” என்று கூறினார்.

அதற்கு, அந்த முதியவர், ”தங்கள் மகள் உப்பில்லாது
சமைத்தாலும் நான் அதை விரும்பிச் சாப்பிடுவேன்;
ஆனால் அவளை மணம் முடிக்காது இங்கிருந்து செல்ல
மாட்டேன்” என்றார். வந்திருப்பவர் மஹாவிஷ்ணு என்பதனை
அறியாத மார்க்கண்டேயர் பெருமாள்தான் தன்னைக் காக்க
வேண்டும் என வேண்டினார்.

பின்னர் தன் தவ வலிமையால் வந்திருப்பவர் மஹாவிஷ்ணு
என உணர்ந்து கண்ணைத் திறந்து பார்த்த பொழுது சங்கு
சக்கரத்தாரியாக பெருமாள் வைகுந்தத்திலிருந்து
பான்மையோடு தன் முன்னர் தோன்றக் கண்டார்.

தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். தன் மகளை
கன்னிகாதானம் செய்து கொடுத்தார். உப்பில்லாத உணவை
விருப்பமுடன் எடுத்துக்கொள்வேன் என்று சொன்னதால்
இன்றும் அக்கோவிலில் நைவேத்யம் உப்பிடாமலேயே
சமைக்கப்படுகின்றது;

உப்பிட்ட உணவை இங்கு கொண்டுவருபவர்கள் நரகத்தில்
தள்ளப்படுவார்கள் என புராணம் கூறுகின்றது.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் இவ் இறைவன் என
நம்மாழ்வார் ‘ஒப்பாரில்லா அப்பன்’ என அழைக்கிறார்.

——————————————
http://www.appusami.com

ஹரிஹர சுதன் என்பதன் பொருள்….

1. ஹரிஹர சுதன் என்பதன் பொருள்….
சிவ, விஷ்ணுவின் மகன்

2. ஐயப்பனை…. கிரக தோஷ பரிகாரமாக வழிபடுவர்.
சனிகிரகம்

3. திருவிதாங்கூர் ராஜா, ஐயப்பனுக்கு வழங்கிய தங்கி அங்கியின் எடை…
450 பவுன்

4.தர்மசாஸ்தாவுடன் போரிட்ட அரக்கி….
மகிஷி

5. ஐயப்பனின் ஜென்ம நட்சத்திரம்….
(பங்குனி) உத்திரம்

6. எருமேலியில் பக்தர்கள் வண்ணம் பூசியபடி ஆடுவது…
பேட்டை துள்ளல்

7. பேட்டை துள்ளலில் சொல்லும் சரணகோஷம்…..
சாமி திந்தக்கதோம்! ஐயப்ப திந்தக்கதோம்!

8. ஐயப்பனின் அன்புக்காக காத்திருக்கும் அம்மன்…
மாளிகைபுறத்தம்மன்

9. ஐயப்பனுக்கு விருப்பமான பிரசாதம்….
அரவணை என்னும் கட்டிப்பாயாசம்

10. சபரிமலையில் இரவு பூஜையின் போது பாடப்படும் பாடல்….
ஹரிவராஸனம்.

=

நன்றி- ஆன்மிக மலர்

« Older entries