3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு – ஜுலன்கோசுவாமிக்கு இடம்

மும்பை:

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள்
பங்கேற்கும் மகளிர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந்தேதி
முதல் 31-ந்தேதி வரை மும்பையில் நடக்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக ஓய்வில் இருந்த பந்துவீச்சாளர்
ஜூலன் கோசுவாமி அணியில் இடம் பிடித்துள்ளார்.

ஹர்மன்பிரித் கபூர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா
துணை கேப்டனாக வும் உள்ளார். அணி விவரம்:-

ஹர்மன்பிரீத்கபூர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, மிதாலி ராஜ்,
வேதா கிருஷ்ணமூர்த்தி, ஜெமீமா ரோட்ரிகஸ், அனுஜா பட்டீல்,
தீப்தி சர்மா, தன்யா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூனம் யாதவ்,
என்தா பிஸ்ட், ஜூலன் கோசுவாமி, ஹில்கா பாண்டே,
பூஜா வஸ்த் ரகர், ரூமேலிதார், மோனா மேஷ்ரம்.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்தி ரேலியாவை 22-ந்தேதி
சந்திக்கிறது. 25-ந்தேதி இங்கிலாந்துடன் மோதுகிறது.
26-ந்தேதி ஆஸ்திரேலியா வுடனும் 29-ந்தேதி இங்கிலாந்துடனும்
மீண்டும் மோதுகிறது.

————————————–
மாலை மலர்

Advertisements

ஐபிஎல் 2018 சீசனுக்காக அதிகாரப்பூர்வ பாடல் வெளியீடு

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல்
டி20 கிரிக்கெட் தொடர் சர்வதேச அளவில் பிரபலம்
அடைந்துள்ளது.

10 வருடங்களை சிறப்பாக முடித்துள்ள ஐபிஎல், இந்த வருடத்தில்
11-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது.

ஐபிஎல் சீசன் 11 ஏப்ரல் 7-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில்
தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை
இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த சீசனுக்கான அதிகாரப்பூர்வ பாடலை பிசிசிஐ
வெளியிட்டுள்ளது. பிசிசிஐ மற்றும் ஸ்டார் இந்தியா இரண்டும்
இணைந்து இந்த பாடலை உருவாக்கியுள்ளது.

இதற்கு BEST vs BEST என பெயரிடப்பட்டுள்ளது.
டிவி, ரேடியோ மற்றும் டிஜிட்டல் ஆகியவற்று ஏற்றவகையில்
இந்தி, தமிழ், பெங்காலி, கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய
ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்க இயக்குனர் டான் மேஸ் இயக்க, ராஜீவ் வி. பல்லா
இசையமைக்க சித்தார்த் பஸ்ருர் ஐந்து மொழிகளில் பாடியுள்ளார்.

———————————-
மாலைமலர்

ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அருணா ரெட்டிக்கு ரூ.2 கோடி பரிசு

ஐதராபாத்:
உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் வெண்கலப்பதக்கம்
வென்ற அருணா ரெட்டிக்கு ரூ.2 கோடி பரிசு வழங்குவதாக
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பை
தொடரின் மகளிர் வால்ட் பிரிவில், இந்திய வீராங்கனை
அருணா ரெட்டி வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்று சிறப்பு
மிக்க சாதனை நிகழ்த்தினார்.

பதக்கம் வென்ற அருணா ரெட்டி தெலுங்கானா முதல்வர்
சந்திரசேகர ராவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அருணா ரெட்டிக்கு ரூ.2 கோடி பரிசு வழங்குவதாக தெலுங்கானா
முதல்வர் அறிவித்துள்ளார்.

—————————————
தினமலர்

கோலியின் அடுத்த ‘கெட்- அப்’:

மும்பை டாட்டூஸ் பார்லரில் விராட் கோலி – படம்உதவி: இன்ட்டிராகிராம்
——————–

தென் ஆப்பிரிக்கா பயணத்தை வெற்றிகரமாக முடித்து இந்தியா
வந்துள்ள கேப்டன் விராட் கோலி அடுத்ததாக தனது ‘கெட்-அப்’பை
மாற்றத் தொடங்கிவிட்டார். உடலில் பல இடங்களில் பல
வண்ணங்களில் டாட்டூஸ் வரைந்து வருகிறார்.

கேப்டன் விராட் கோலி தலைமையில் தென் ஆப்பிரிக்கா சென்று
இருந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும்,
ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று
சாதனை படைத்தது. அதேபோல டி20 தொடரையும் 2-1 என்று
கணக்கில் கைப்பற்றி கடந்த வாரம் மும்பை திரும்பினர்.

இந்நிலையில், அடுத்து இலங்கையில் நடக்க உள்ள நிடாஹாஸ்
கோப்பை டி20 முத்தரப்பு தொடரில் விராட்கோலிக்கு ஓய்வு
அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இடைப்பட்ட நாட்களில்
தனது தோற்றத்தை விராட் கோலி மாற்றும் முயற்சியில்
இறங்கிவிட்டார்.

இந்திய அணியில் மிகவும் உடற்கட்டுடன், சிறந்த உடற்தகுதியுடன்
கேப்டன் விராட் கோலி இருந்து வருகிறார். மேலும்,
விளம்பரங்களில் நடிப்பது போன்றவற்றினால், உடல் அழகை
பராமரிப்பதில் அதிக அக்கறையும் எடுத்துக்கொள்கிறார்.

இந்தசூழலில், நேற்று மும்பையில் உள்ள பிரபர டாட்டூஸ் வரையும்
பார்லருக்கு சென்று தனது இடது பக்க தோள்பட்டையில் பலவண்ண
படங்களை விராட் கோலி வரைந்துள்ளார்.

இந்தப் படம் வரைந்தது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்ட
நிலையில் பார்லரில் இருந்த ரசிகர் ஒருவர் இதை புகைப்படம்
எடுத்து இன்ஸ்ட்டிராகிராமில் வெளியிட்டுவிட்டார்.

விராட் கோலி உடலில் ஏற்கெனவே பல்வேறு டாட்டூ படங்கள்
இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தகுந்தவை, கடவுள் சிவன்,
கைலாய மலையில் தவம் இருப்பது போலவும், பின்புறம் மானசரோவர்
மலை இருப்பது போலவும் வரைந்திருப்பதாகும்.

மேலும், தனது தாய், தந்தையின் பெயரையும், ஒருநாள் டெஸ்ட்
கிரிக்கெட்டில் தனது ஜெர்சி எண் ஆகியவற்றையும் விராட் கோலி
உடலில் எழுதியுள்ளார்.

இந்த முறை சாமுராய் வீரன் தோற்றத்தையும், ஓம் என்ற
வார்த்தையையும் வரைந்துள்ளார்.

———————————————

தி இந்து

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீ ஏர் பிஸ்டலில் மனு பேகர் தங்கப்பதக்கம் வென்றார்

சர்வதேச சூட்டிங் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் சார்பில் நடத்தப்படும்
துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடர் மெக்சிகோவின்
கவுடலஜாரா நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய
வீராங்கனை மனு பேகர் தங்கப் பதக்கம் வென்றார்.
இவர் 237.5 புள்ளிகள் பெற்றார்.

மெக்சிகோவின் அலெஜந்திரா 237.1 புள்ளிகள் பெற்று வெள்ளி
பதக்கம் வென்றார்.

பிரான்சின் செலின் கோபர்வில்லி 217 புள்ளிகள் பெற்று வெண்கல
பதக்கம் வென்றார்.

இந்தியாவின் யாசஷ்வினி சிங் 196.1 புள்ளிகளுடன் 4-வது இடத்தை
பிடித்தார்.

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்
ஷஹ்சார் ரிஸ்வி தங்கப் பதக்கம் வென்றதுடன் உலக சாதனையும்
படைத்தார்.

இதே போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர் ஜித்து ராய்
219 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் வென்றார்

————————————-
மாலைமலர்

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்

 

11-வது ஐ.பி.எல் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளில் விளையாடும்
வீரர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது.

தமிழகத்தைச் சேர்ந்தவரும் இந்திய அணியில் விளையாடி வரும்
விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்தில் கொல்கத்தா அணியில் ஏலம்
எடுக்கப்பட்டார்.

இந்நிலையில், அந்த அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக்
நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது, இலங்கையில் நடக்க
உள்ள முத்தரப்பு டி20 தொடரில் விக்கெட் கீப்பராக விளையாட
உள்ளார்.

கடந்த ஐ.பி.எல் தொடர்களில் தினேஷ் கார்த்திக் பெங்களூர்,
டெல்லி, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளில் விளையாடியுள்ளார்.

ஏற்கனவே, இந்த ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியில்
தமிழகத்தின் அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.

——————————————–
மாலைமலர்

 

பல்கேரியா குத்துச்சண்டை போட்டியில் சிறந்த வீரர் விருது வென்று விகாஸ் கிரிஷண் அசத்தல்

சோபியா:

காயம் காரணமாக சில மாதங்களாக விளையாடாமல் இருந்த
விகாஸ் கிரிஷண், பல்கேரியா குத்துச்சண்டை போட்டியில்
தங்கம் வென்றதுடன், போட்டியின் சிறந்த வீரர் விருதையும்
வென்று அசத்தினார்.

ஐரோப்பிய குத்துச்சண்டை போட்டியான, 69-வது ஸ்டார்ன்ட்ஜா
நினைவு குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவின் சோபியா
நகரில் நடந்தது.

ஆண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவு இறுதிப்போட்டியில்
இந்திய வீரர் விகாஸ் கிரிஷண், உலக சாம்பியன்ஷிப் போட்டியில்
வெண்கலம் வென்ற அமெரிக்காவின் டிராய் இஸ்லேவை வென்று,
தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்
போட்டிக்குப் பிறகு விகாஸ் பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.
அத்துடன், பல்கேரியப் போட்டியின் சிறந்த வீரராகவும் அவர்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த சிறப்பை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும்
அவர் பெற்றார்.

அவரைத் தவிர, அமித் பங்கல், 49 கிலோ எடைப் பிரிவில் தங்கம்
வென்றார். ஆண்கள் பிரிவில் கவுரவ் சோலங்கி, 52 கிலோ
எடைப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

முகமது ஹூசாமுதீன் (56 கிலோ), சதீஷ்குமார் (91+ கிலோ)
ஆகியோர் வெண்கலம் வென்றன

——————————————-
மாலைமலர்

சர்வதேச கிரிக்கெட்டில் இளம் கேப்டன்: 19 வயது ரஷித் கான் அபார சாதனைஹராரே:
சர்வதேச கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் கேப்டனான வீரர்
என்ற பெருமை, ஆப்கானிஸ்தான் சுழல் நட்சத்திரம் ரஷித் கானுக்கு
கிடைத்துள்ளது. ஐசிசி உலக கோப்பை போட்டித் தொடருக்கான
தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் மார்ச்
4ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன்
அஸ்கர் ஸ்டானிக்சாய்க்கு திடீர் என வயிற்று வலி ஏற்பட்டதால்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடல்வால்
தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானதை அடுத்து அவசர அறுவை
சிகிச்சை செய்யப்பட உள்ளது.

இதனால் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு ஓய்வெடுக்க வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, உலக கோப்பை
தகுதிச் சுற்று ஆட்டங்களில் ரஷித் கான் கேப்டனாக செயல்படுவார்
என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

கடந்த வாரம் ஐசிசி பந்துவீச்சு தரவரிசையில் மிக இளம் வயதில்
நம்பர் 1 வீரர் அந்தஸ்தை பெற்று சாதனை படைத்திருந்த ரஷித்,
தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் கேப்டனான
வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மார்ச் 4ம் தேதி புலவாயோவில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக
உலக கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்
அணிக்கு கேப்டனாக ரஷித் கான் களமிறங்க உள்ளார்.

—————————————–
தினகரன்

ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் போட்டி தொடர்: இந்திய மகளிர் அணிக்கு கேப்டனாக நீடிக்கிறார் மித்தாலி

மும்பை:
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியுடன் ஒருநாள்
போட்டித் தொடரில் விளையாட உள்ள இந்திய அணிக்கு
மித்தாலி ராஜ் கேப்டனாக நீடிப்பார் என கிரிக்கெட் வாரியம்
அறிவித்துள்ளது.

மார்ச் மாதம் 2வது வாரத்தில் இந்தியா வரும் ஆஸ்திரேலிய
மகளிர் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்
தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி வீராங்கனைகள் தேர்வு
நேற்று நடைபெற்றது. தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக
சமீபத்தில் நடந்த ஒருநாள் போட்டித் தொடரில், இந்திய
அணியை சிறப்பாக வழிநடத்தி 2-1 என்ற கணக்கில் தொடரை
கைப்பற்றிய மித்தாலி ராஜ் கேப்டனாக நீடிக்கிறார்.

மித்தாலி உட்பட மொத்தம் 15 வீராங்கனைகள் அடங்கிய
அணியை பிசிசிஐ செயலர் அமிதாப் சவுதாரி அறிவித்தார்.
இந்த தொடர் ஐசிசி மகளிர் ஒருநாள் சாம்பியன்ஷிப்பின்
அங்கமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் முதல்
ஒருநாள் போட்டி, வதோதராவில் மார்ச் 12ம் தேதி நடக்கிறது.
அடுத்த 2 போட்டிகள் மார்ச் 15 மற்றும் 18ம் தேதி அதே
மைதானத்தில் நடக்க உள்ளன.

இதைத் தொடர்ந்து முத்தரப்பு டி20 தொடர் நடக்க உள்ளது.
இத்தொடருக்கான இந்திய அணி பின்னர் அறிவிக்கப்படும்.
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக நடந்த டி20 தொடரில்,
ஹர்மான்பிரீத் கவுர் தலைமையில் களமிறங்கிய இந்திய
அணி 3-1 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியா:
மித்தாலி ராஜ் (கேப்டன்), ஹர்மான்பிரீத் கவுர் (துணை கேப்டன்),
ஸ்மிரிதி மந்தனா, பூனம் ராவுத், ஜெமிமா ரோட்ரிகியூஸ்,
வேதா கிருஷ்ணமூர்த்தி, மோனா மேஷ்ராம், சுஷ்மா வர்மா
(விக்கெட் கீப்பர்), ஏக்தா பிஷ்ட், பூனம் யாதவ்,
ராஜேஷ்வரி கெயிக்வாட், ஷிகா பாண்டே, சுகன்யா பரிதா,
பூஜா வஸ்த்ராகர், தீப்தி ஷர்மா.

—————————————
தினகரன்

இந்திய அணி வரலாற்று வெற்றி; தொடரை வென்று சாதனை

போர்ட் எலிசபெத்:
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில்
ரோகித் சதம் விளாச, இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.

தவிர, தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு நாள்
தொடரை வென்று வரலாறு படைத்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி ஆறு போட்டிகள்
கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டிகள்
முடிவில், இந்திய அணி 3-1 என முன்னிலையில் இருந்தது.

ஐந்தாவது போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்தது.
‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் மார்க்ரம் ‘பவுலிங்’
தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் கிறிஸ் மோரி
நீக்கப்பட்டு ஷாம்சி இடம்பிடித்தார்.
இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

ரோகித் சதம்:

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி
‘சூப்பர்’ துவக்கம் தந்தது. ரபாடா பந்துவீச்சில் தவான் இரண்டு
பவுண்டரி விளாசினார். மார்கல் பந்தை ரோகித் பவுண்டரிக்கு
விரட்டினார். தவான் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் கோஹ்லி (36) ரன்-அவுட்டானார்.
ரகானே 8 ரன்களில் திரும்பினார். அபார ஆட்டத்தை தொடர்ந்த
ரோகித், ஒரு நாள் அரங்கில் 17வது சதம் விளாசினார்.
இவர் 115 ரன்களில் அவுட்டானார்.

நிகிடி ‘வேகத்தில்’ பாண்ட்யா (0), ஸ்ரேயாஸ் ஐயர் (30) சிக்கினர்.
தோனி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவரில்
7 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர் (19),
குல்தீப் (2) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில்
அதிகபட்சமாக நிகிடி 4 விக்கெட் வீழ்த்தினார்.

குல்தீப் கலக்கல்:

பின், களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம்,
ஆம்லா ஜோடி சிறப்பாக விளையாடினார். மார்க்ரம் 32 ரன்களில்
ஆட்டமிழந்தார். டுமினி (1), டிவிலியர்ஸ் (6) ஏமாற்றினர்.
ஆம்லா (71) அரை சதம் அடித்து ஆறுதல் தந்தார். மில்லர் 36,
கிளாசன் 39 போராடியபோதும் தோல்வியை தவிர்க்க
முடியவில்லை.

முடிவில், தென் ஆப்ரிக்க அணி 42.2 ஓவரில் 201 ரன்களுக்கு
ஆல்-அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப்
4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை சதம் விளாசிய
ரோஹித் சர்மா தட்டி சென்றார்.

முதல் முறை:

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில்
வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 4-1 எனக் கைப்பற்றியது.
இதன்மூலம் தென் ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக
ஒருநாள் தொடரை வென்று புதிய வரலாறு படைத்தது.

இதற்கு முன், 4 முறை (1992-93ல் 2-5, 2006-07 ல் 0-4, 2010-11ல்
2-3, 2013-14ல் 0-2) இங்கு ஒருநாள் தொடரில் விளையாடிய
இந்திய அணி, ஒருமுறை கூட தொடரை வென்றதில்லை.

————————————-
தினமலர்

 

 

 

 

 

 

« Older entries