
யமுனை ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள காட்டின் பெயர்,
காண்டவவனம். இந்திரனின் பாதுகாப்பில் உள்ள
அவ்வனத்தில் உள்ள அரிய மூலிகைகள் செழித்து வளர,
அவ்வப்போது மழை பெய்ய செய்தான், மழையின்
அதிபதியான இந்திரன்.
(இந்திரனுக்கு காண்டவ வனன் என்ற பெயரும் உண்டு)
–
இயற்கை எழிலுடன், மூலிகையின் மணமும் வீச, இதமான
சூழ்நிலையில், யமுனை நதியில், கண்ணன் மற்றும்
அர்ஜுனன் தங்களுடைய தோழர்களுடன் நீராடி மகிழ்ந்தனர்.
பின், அவர்கள் கரையேறும் போது, அங்கு வந்த அந்தணர்
ஒருவர், கண்ணனையும், அர்ஜுனனையும் பார்த்து,
‘உங்களை பார்த்தால், கருணை மிக்கவர்களாக தெரிகிறீர்கள்…
என் பசிக்கு, உங்களால் தான் உதவ முடியும்;
இவ்வனத்தில், என் பசிப்பிணியை தீர்க்கும் மருந்து உள்ளது;
நான், இவ்வனத்திற்குள் பிரவேசிக்க, நீங்கள் உதவி செய்ய
வேண்டும்…’ என்று வேண்டினார்.
அந்தணரை உற்றுப் பார்த்த கண்ணன், ‘அக்னி தேவனே…
ஏன் இந்த வேடம்… நேரிடையாகவே, உன் பசிப்பிணிக்கு
உணவு கேட்கலாமே…’ என்று, சொன்னதும், தன் வேடத்தை
கலைத்த அக்னி தேவன், ‘உலகில் வாழும்
உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே… தங்களுக்கு
தெரியாதது ஒன்றுமில்லை; சுவேதசி என்ற மன்னனுக்காக,
நுாறாண்டுகள், தொடர்ந்து யாகம் நடத்தினார்,
துர்வாச முனிவர். யாகத்தின் விளைவால், அதிகப்படியான
நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு ஆளானேன்;
அதனால், மந்த நோய் என்னை தாக்கி விட்டது. அந்நோய்க்கான
மூலிகைகள் இவ்வனத்தில் உள்ளன. அவற்றை நான் கபளீகரம்
செய்தால் மட்டுமே என் பிணி தீரும்…’ என்றார்.
‘அதற்கு எங்கள் தயவை ஏன் நாடுகிறீர்?’ என்று கேட்டான்,
அர்ஜுனன்.
‘நான், இவ்வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் போதெல்லாம்,
மழை பெய்ய மேகங்களுக்கு உத்தரவிட்டு, என் தீ நாக்குகளை
அணைத்து, என் முயற்சியை தடுத்து விடுகிறான் இந்திரன்…’
என்றார்.
அர்ஜுனனை பார்த்து சிரித்தார், கண்ணன். காரணம், காண்டவ
வனத்தை அழித்து, அங்கே இந்திரப் பிரஸ்தம் கட்ட நினைத்த
பாண்டவர்கள், வனத்தை அழிப்பதற்கு வழி தெரியாது
திகைத்திருந்த வேளையில் அக்னி தேவன் இவ்வாறு கேட்டதே
கண்ணனின் சிரிப்பிற்கு பொருள்.
சிரிப்பை புரிந்து கொண்ட அர்ஜுனன்,
‘அக்னி தேவனே… நாங்கள் உனக்கு உதவுகிறோம்; ஆனால்,
இங்கு நாங்கள் நீராட வந்ததால், எங்களிடம் ஆயுதங்கள் இல்லை.
அதனால், இந்திரன் மழை பெய்வித்தால், தடுப்பதற்கு அம்பறாத்
துாணியும், அம்புகளும், வில்லும், தேவை…’ என்றான்.
உடனே, அர்ஜுனனுக்காக, சக்தி மிக்க காண்டீப வில், அம்புகள்
மற்றும் அம்பறாத் துாணி என, எல்லாவற்றையும் தந்தார்,
அக்னி பகவான்.
அப்போது, ‘அக்னி தேவனே… உன் பசி பிணியை தீர்த்து
கொள்வதற்காக, 21 நாட்கள் மட்டும், இக்காட்டிற்குள் பிரவேசிக்கலாம்;
அச்சமயத்தில், இந்திரன், மழை பொழியாமல் பார்த்துக்
கொள்கிறோம்…’ என்றார் கண்ணன்.
அக்னி தேவன் வனத்திற்குள் பிரவேசித்து, வனத்தை எரிக்கத்
துவங்கினான். இதைக் கண்ட இந்திரன், மழை பெய்விக்க,
காளமேகத்திற்கு உத்திரவிட்டான்.
வானில், மேகங்கள் கூட்டம் கூட்டமாக வருவதை கண்ட
அர்ஜுனன், அவ்வனத்தில் மழை பொழியாமலிருக்க, தன்னிடம்
உள்ள அம்புகளால், சரக்கூடு ஒன்றை கட்டி, தடுத்தான்.
அக்னியும், முதல் ஏழு நாட்கள், வனத்தில் உள்ள மூலிகை
பகுதிக்குள் நுழைந்து, கபளீகரம் செய்தார்; அடுத்த வந்த
ஏழு நாட்கள், சுற்றியிருக்கும் அரிய மரங்களை, உணவாக
கொண்டார்; அடுத்த வந்த ஏழு நாட்கள், மிதமாக உண்டு,
இறுதியில், இருவரிடமும் விடைபெற்றார்.
அக்னி தேவன், காண்டவ வனத்தை எரித்த நாட்களே,
அக்னி நட்சத்திரம் என்று கூறுகிறது, புராணம்.
அக்னி நட்சத்திர நாட்களில், செடி, கொடி மற்றும் மரங்களை
வெட்டவோ, விதை விதைக்கவோ கூடாது; கிணறு, குளம்
தோண்டவோ, நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்பு பணி
செய்யவோ கூடாது;
வாகனங்களில் நெடுந்துாரம் பயணம் செய்ய கூடாது என்றும்,
மாறாக கோவிலுக்கு சென்று இறைவனுக்கும், இறைவிக்கும்
அபிஷேக ஆராதனைகள் செய்வது, நல்ல பலனை தரும்;
தான, தர்மங்கள் செய்யலாம்; தண்ணீர் பந்தல் அமைத்து,
நீர் மோர் வழங்கலாம்; நோயாளிகளுக்கு, இளநீர் தரலாம்;
உடல் ஊனமுற்றோருக்கு காலணி மற்றும் குடைகள்
வழங்கலாம்; ஏழை, எளியவர்களுக்கு தயிர் சாதம்
அளிக்கலாம்.
மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வணங்கி, அபிஷேக
ஆராதனைகள் முடிந்ததும், பானகம் வழங்குவது நல்ல பலன்களை
தரும். பரணி நட்சத்திரத்திற்கு உரிய துர்க்கையையும், ரோகிணி
நட்சத்திரத்திற்கு உரிய பிரம்மாவையும், சந்தன அபிஷேகம் செய்து
வழிபட, வாழ்வில் வசந்தம் வீசும் என்று,
அக்னி நட்சத்திர காலங்களில் செய்யக் கூடாதன, செய்யக் கூடியன,
பற்றி சாஸ்திரம் விளக்குகிறது.
அக்னி நட்சத்திரக் காலகட்டத்தில், நம் உடல்நிலை பாதிக்காமலிருக்க,
காலையில், பூஜையறையில் சூரியனுக்குரிய மாக்கோலத்தை,
பூஜை பலகையில் போட்டு, சூரிய காயத்திரி மந்திரத்தை,
21 முறை ஜெபிக்கலாம்.
–
————————————-
புஷ்பலத
வாரமலர்