கஜா புயல் தீவிரம் அடைந்தது – 13 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

சென்னை:

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த
காற்றழுத்த மண்டலமானது நேற்று காலை வலுப்பெற்று
புயலாக மாறியது. இதற்கு கஜா (யானை) என
பெயரிடப்பட்டுள்ளது.

அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் வட தமிழகம்
நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை 8.15 மணி
நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு வடகிழக்கு திசையில்
740 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு கிழக்கு
வடகிழக்கில் 840 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இந்த புயலானது மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் மேற்கு மற்றும்
தென் மேற்கு திசையில் வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து
இன்று மதியம் தீவிர புயலாக உருவெடுத்தது.

இதனால் தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் கடுமையான
கடல் கொந்தளிப்பு நிலவுகிறது. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில்
கடல் காற்று விசுகிறது.

12 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பி ஆக்ரோ‌ஷமாக
காணப்படுகிறது.

எனவே இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க
செல்ல வேண்டாம் என்றும் ஏற்கனவே மீன் பிடிக்க சென்ற
மீனவர்கள் இன்றே கரைக்கு திரும்பு மாறும் எச்சரிக்கை
விடுக்கப்பட்டது.

கஜா புயல் முதலில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா
நோக்கி செல்லும் என்றும் கடலூருக்கும்
ஸ்ரீஹரி கோட்டாவுக்கும் இடையே 15-ந்தேதி கரையை கடக்கும்
என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது காற்று வீசும் திசையை வைத்து கணிக்கும்
போது தெற்கு திசையில் வடதமிழகத்தை தாக்கும் என்று
தெரிய வந்துள்ளது.

——————————————–

15-ந்தேதி அதிகாலையில் இருந்து புயல் கரையை நெருங்கத்
தொடங்கும். பகல் 12 மணி அளவில் புதுவைக்கும் நாகைக்கும்
இடையே கரையை கடக்கும்.

தொடர்ந்து தமிழகத்தின் உள்மாவட்டங்கள் வழியாக வலு
இழந்த புயலாகவே செல்லும், தமிழகத்தின் பெரும்பாலான
மாவட்டங்களுக்கும் பரவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

புயல் நெருங்கும் போது 14-ந்தேதி இரவு முதல் வட தமிழகத்தின்
கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யத் தொடங்கும்.
ஒருசில இடங்களில் கன மழை பெய்யும்.

15-ந்தேதி அதிகாலை முதல் கன மழை மற்றும்
மிக கன மழை பெய்யும். மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலமான
காற்றும் வீசக்கூடும்.

காற்று மழையுடன் கொட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது தீவிர புயலாக மாறிய ‘கஜா புயல்’ மேலும்
தீவிரம் அடைந்து அதி தீவிர புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
புயல் கரையை நெருங்க நெருங்கத்தான் அதன் வேகத்தை
கணிக்க முடியும் என்றும் இப்போதைக்கு புயல் தாக்கும்
அபாயம் நீடிப்பதாகவே வானிலை ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர்.

வலு இழந்த புயலாக உள் மாவட்டங்கள் வழியாகவும்,
தென் மாவட்டங்கள் வழியாகவும் அரபிக் கடலுக்கு செல்லும்
எனவே 15-ந்தேதி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும்
தென் மாவட்டங்களிலும் பலத்த மழையை எதிர்பார்க்கலாம்
என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

15-ந்தேதி காலை 8.30 மணி முதல் 16-ந்தேதி காலை 8.30 மணி
முடிய வட தமிழகத்தில் மித மிஞ்சிய வகையில் மழை பெய்யும்
என்று வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

இதே போல் தென் மாவட்டங்களுக்கும் பலத்த மற்றும் மிக பலத்த
மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மித மிஞ்சிய மழை என்பது சில இடங்களில் குறைந்த நேரத்தில்
20 செ.மீ. மழை கொட்டும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சை,
திருவாரூர், நாகை, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, அரியலூர்,
பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.

———————————-
மாலைமலர்

ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு!

எலுரு:
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள
தொக்கலபள்ளி கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பகல் நேரத்தில் நைட்டியைப் போட்டுக் கொண்டு
பொதுவிடங்களுக்கு வருவதற்கு தடை விதித்திருக்கும்
கிராம நிர்வாகம், மீறி பகல் நேரத்தில் நைட்டியோடு
வெளியே வரும் பெண்களுக்கு ரூ.2000 அபராதம்
விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்ல, இந்த விதியை மீறுபவர்கள் பற்றி தகவல்
அளித்தால் அவர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை
வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

——————————–
தினமணி

வங்கக் கடலில் உருவாக உள்ள புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது

nov10
சென்னை:
வங்கக் கடலில் உருவாக உள்ள புயலுக்கு கஜா என்று
பெயரிடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் உருவாக உள்ள
புயலுக்கு தாய்லாந்து சார்பில் வழங்கப்பட்ட கஜா என்ற
பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வர்தா புயல் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய புயல்
என கஜா புயல் எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள
பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி
அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்
வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வடக்கு அந்தமான்
கடற்கரை பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி
உருவாகியுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று தாழ்வு
மண்டலமாக மாறும். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில்
மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறும்.

மேலும், குமரி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில்
மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவுகிறது.
எனவே, அந்தமான் மற்றும் மத்திய தென் கிழக்கு வங்கக்
கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், நவம்பர் 13ம்
தேதி வரை இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்
என்றும் தெரிவித்துள்ளது.

—————————————
தினமணி

சுற்றுலா அஞ்சலி!

நியூசிலாந்தின் வெலிங்டனிலுள்ள புக்கியாகு
தேசிய நினைவக போர் நினைவிடத்தில் இங்கிலாந்து
போர் நினைவிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் இளவரசர் ஹாரி மற்றும் அவரது
மனைவி மேகன் போர் நினைவகத்தை பார்வையிட்ட
காட்சி.

ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு பசிஃபிக்
நாடுகளுக்கு தன் மனைவி சகிதமாக பதினாறு நாட்கள்
சுற்றுப்பயணம் செய்து வருகின்றார் இளவரசர் ஹாரி.

———————
நன்றி-முத்தாரம்

நவ.14 ரசகுல்லா தினம்: மேற்கு வங்க அரசு முடிவு

“பெங்கால் ரசகுல்லா’ என்று புவிசார் குறியீடு பெற்றதன்
ஓராண்டு நிறைவையொட்டி, வரும் 14-ஆம் தேதியை
ரசகுல்லா தினமாகக் கொண்டாட மேற்கு வங்க அரசு
முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த மாநில அரசு அதிகாரி ஒருவர்
கூறியதாவது:

கொல்கத்தாவில் நியூ டவுன் பகுதியில் அமைக்கப்படும்
இனிப்பு அரங்கில், விதவிதமான ரசகுல்லா வகைகள்
14-ஆம் தேதி காட்சிக்கு வைக்கப்படும்.

ரசகுல்லா இனிப்புக்கு புவிசார் குறியீடு பெற்று ஓராண்டு
ஆகியதை கொண்டாடும் வகையில் இனிப்பு
தயாரிப்பாளர்களுடன் இணைந்து இந்த அரங்கம்
அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி, ரசகுல்லா இனிப்புக்கு
மேற்கு வங்க அரசு புவிசார் குறியீடு பெற்றது.

ஒடிஸாவும் ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு கோரியிருந்தது
நினைவுகூரத்தக்கது.

———————————–
தினமலர்

தீபாவளியன்று உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

chennai rain

சென்னை:
தீபாவளி நாளன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக
வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்
என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்
செய்தியாளர்களுக்கு ஞாயிறன்று பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நவம்பர் 6-ந்தேதி
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகக் கூடும்.
எனவே அன்று துவங்கி 8-ஆம் தேதி வரை வடகிழக்கு
பருவமழை தமிழகத்தில் வலுப்பெறும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் சென்னையில் அடுத்த
24 மணிநேரத்தில் மிதமான மழையும், சென்னையில் மிதமான
மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதனால் நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தென்மேற்கு
வங்க கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம்.
நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா,
குமரி கடல்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல
வேண்டாம்.

பொதுவாக ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் 6-ஆம்
தேதிக்குள் கரைக்கு திரும்பும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

————————————
தினமணி

தேதி சொல்லும் சேதி

IMG_20181029_140008590_2.jpg

திருப்பதியில் பிளாஸ்டிக் தடை

IMG_20181029_132635191_2.jpg

மேரி கோமுடன் குத்துச்சண்டை போட்ட விளையாட்டுத் துறை மந்திரி ரத்தோர்- வீடியோ

புதுடெல்லி:

சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் சார்பில் டெல்லியில்
வரும் 15-ம்தேதி முதல் 24-ம் தேதி வரை பெண்களுக்கான
உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி நடைபெற
உள்ளது.

இதில் 70 நாடுகளில் இருந்து சுமார் 300 வீராங்கனைகள்
பங்கேற்க உள்ளனர். ஒலிம்பிக் பதக்கம் வென்ற
வீராங்கனைகள், உலக மற்றும் ஐரோப்பிய சாம்பியன்கள்
என முன்னணி விராங்கனைகள் 10 பிரிவுகளில் மோத
உள்ளனர்.

இப்போட்டியில் இந்தியா சார்பில் மேரிகோம் (48 கிலோ),
சரிதா தேவி (60 கிலோ), பிங்கி ஜங்ரா (51 கிலோ),
சீமா பூனியா (81+ கிலோ) உள்ளிட்ட 10 வீராங்கனைகள்
பங்கேற்கின்றனர்.

இவர்கள் டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் தீவிர
பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய விளையாட்டுத்துறை மந்திரி
ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இன்று இந்திரா காந்தி
ஸ்டேடியத்திற்கு சென்று பயிற்சி பெறும் குத்துச்சண்டை
வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார்.

மேலும், குத்துச்சண்டை சாம்பியன் மேரி கோமுடன்
குத்துச்சண்டை போட்டார்.
நட்புரீதியான இந்த போட்டி சிறிது நேரம் நடந்தது.

ரத்தோரை நோக்கி மேரி கோம் குத்து விடுவதும்,
ஆலோசனை வழங்குவதும் என போட்டி சுவாரஸ்யமாக
சென்றது.

ரத்தோரும், மேரி கோமின் தாக்குதலை தடுத்து,
கைத்தட்டல் பெறுகிறார். ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல்
பிரிவில் பதக்கம் வென்ற முன்னாள் வீரரான ரத்தோர்,
ஸ்டேடியத்திற்கு வந்து கலந்துரையாடியது,
வீராங்கனைகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

விளையாட்டுத்துறை மந்திரி தன்னுடன் குத்துச்சண்டை
போடும்போடு எடுத்த வீடியோவை மேரி கோம் டுவிட்டரில்
வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது

—————————-
மாலைமலர்

தினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு புதிய
சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தீபாவளி
தமாகா ஆஃபர் விலை ரூ.1,699 மற்றும் ரூ.2,099 என
நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய சலுகை இந்தியா முழுக்க வழங்கப்படுகிறது.
ரூ.1,699 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்,
தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பிரத்யேக ரிங்பேக் டோன்
உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

இத்துடன் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது,
நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம்
நொடிக்கு 80 கே.பி.யாக குறைக்கப்படுகிறது.

ரூ.2,099 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்,
தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பிரத்யேக ரிங் பேக் டோன்,
தினமும் 4 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவை 365 நாட்களுக்கு
வழங்கப்படுகிறது.

நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம்
நொடிக்கு 80 கே.பி.யாக குறைக்கப்படுகிறது.

இத்துடன் பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட்
பயனர்களுக்கு இலவச சிம் சலுகைகள் எஸ்.டி.வி.399 உடன்
வழங்கப்படுகிறது.

புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் போர்ட்-இன்
செய்வோருக்கு ரூ.100 என கட்டணம் நிர்ணயம் செய்யப்
பட்டுள்ள நிலையில், எல்.பி.ஜி. பில்களில் அச்சிடப்பட்டு
இருக்கும் பி.எஸ்.என்.எல். கூப்பன்களை வழங்கும் போது
பெற முடியும்.

——————————
மாலை மலர்

« Older entries