வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்.
அதிலும் நேர்மறையான விஷயங்களின் மீது மட்டுமே
கவனம் செலுத்துங்கள்’ என்று குறிப்பிடுகிறார்
அமெரிக்க ராக் பேண்ட் இசைக்கலைஞர் மாத் கேமரூன்
(Matt Cameron).
பாசிடிவ்வான அணுகுமுறைக்கு ஒரு சக்தி உண்டு.
அது தொடர்புடையவருக்கு மட்டுமல்ல… அடுத்தவருக்கும்
நன்மை செய்யும். நேர்மறைச் சிந்தனையுள்ளவர்கள்,
வாழ்க்கையை அதன் அர்த்தம் உணர்ந்து வாழ்கிறவர்கள்.
அவர்களைச் சுற்றியிருக்கும் பாசிட்டிவ் அதிர்வலைகள்
பிறரையும் தொற்றிக்கொள்ளும்.
இவர்கள் எங்கு வேண்டுமானாலும் இருப்பார்கள்;
எந்தத் தொழில் வேண்டுமானாலும் செய்பவர்களாக
இருப்பார்கள். யாரோ ஒருவர் செய்யும் ஒரு சின்ன
பாசிட்டிவ் செயல்பாடு, எதிர்கால சந்ததியினருக்கு
பலத்தையும், வாழ்வின் மீது பிடிப்பையும், மற்றவர்களின்
மேல் நம்பிக்கையையும், எதையும் சாதிக்கும்
தன்னம்பிக்கையையும் தருமா?
நிச்சயம் தரும். அதை உணர்த்துகிறது இந்தக் கதை.
`கார்மெல் பை தி ஸீ’ (Carmel by the sea)…
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலிருக்கும்
ஒரு சிறு கடற்கரை நகரம்.
அது ஒரு மாலை நேரம். அன்று விடுமுறை நாள்.
ஓர் ஆறு வயதுள்ள சிறுவனும், அவனுடைய தங்கையும்
மதியம் நான்கு மணிக்கே கடற்கரைக்கு வந்துவிட்டார்கள்.
அவர்களுக்கு அங்கே முக்கியமான வேலையிருந்தது.
கடற்கரையோரமாகச் சேரும் கிளிஞ்சல்களைப்
பொறுக்கிச் சேகரிக்கும் வேலை. அண்ணன், தங்கையை
ஓரிடத்தில் உட்காரச் சொல்லிவிட்டு கிளிஞ்சல்களைச்
சேகரிக்க ஆரம்பித்தான்.
பார்த்துப் பார்த்து எடுத்தான். அவனுக்கு நல்லதாக,
சிறந்ததாகத் தோன்றிய கிளிஞ்சல்களை மட்டும் எடுத்து
தன் கால்சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டான்.
ஒரு மணி நேரம் ஆனது. `இன்றைக்கு இது போதும்’
என்று தோன்றிய பிறகு, அவன் தங்கையை அழைத்துக்
கொண்டான். இருவரும் கடற்கரையைத் தாண்டி
கடைவீதி வழியாக நடந்தார்கள்.
கொஞ்ச தூரம் நடந்த பிறகுதான் சிறுவ்ன், தன் தங்கை
உடன் வராததை கவனித்தான். திரும்பிப் பார்த்தான்.
அவள், ஒரு கடையின் முன்னால் நின்று எதையோ
பார்த்துக்கொண்டிருந்தாள்.
சிறுவன் தங்கையின் அருகே போனான். அவள் அந்தக்
கடையில் காட்சிக்குவைக்கப்பட்டிருந்த
ஒரு பொம்மையையே ஆசையோடு பார்த்துக்
கொண்டிருந்தாள்.
சிறுவனும் பார்த்தான். மிக அழகான பொம்மை அது.
“உனக்கு இந்த பொம்மை வேணுமா?’’
அவள் `ஆமாம்’ என்பதுபோலத் தலையசைத்தாள்.
சிறுவன் யோசிக்கவேயில்லை. ஒரு பெரிய மனிதனைப்
போல அவள் கைகளைப் பற்றிக்கொண்டான்.
அவளை அழைத்துக்கொண்டு அந்த பொம்மைக்
கடைக்குள் நுழைந்தான். இதையெல்லாம் கடையின்
கண்ணாடி வழியாக அதன் உரிமையாளர் பார்த்துக்
கொண்டேயிருந்தார்.
சிறுவன் நேராக அந்த பொம்மையிருக்கும் இடத்துக்குப்
போனான். அதை எடுத்தான். அவளிடம் கொடுத்தான்.
சிறுமியின் முகம் முழுக்கப் பரவசம்.
அவள் அந்த பொம்மையை ஆவலோடு அணைத்துப்
பிடித்துக்கொண்டாள். கடை உரிமையாளர் ஒரு பெரிய
மனிதனைபோல் நடந்துகொள்ளும் அந்தச் சிறுவனையே
வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
சிறுவன் இப்போது கவுன்ட்டரின் அருகே வந்தான்.
“சார், இந்த பொம்மையோட விலை என்ன?’’ என்று
கேட்டான்.
கடைக்காரர் புன்னகையோடு கேட்டார்…
“உன்னால எவ்வளவு கொடுக்க முடியும்?’’
சிறுவன், கடற்கரையில் ஓடி ஓடி சேகரித்த கிளிஞ்சல்கள்
அத்தனையையும் தன் கால்சட்டைப் பையிலிருந்து எடுத்து
கவுன்ட்டர் மேஜையின் மேல் வைத்தான்.
அந்தக் கடைக்காரர், அந்த கிளிஞ்சல்களை எடுத்து கரன்ஸி
நோட்டுகளை எண்ணுவதுபோல ஒவ்வொன்றாக எண்ண
ஆரம்பித்தார்.
“ரொம்பக் குறைவா இருக்கா?’’ – சிறுவன் கேட்டான்.
“இல்லை, இல்லை… அந்த பொம்மையோட விலையைவிட
ரொம்ப அதிகமா இருக்கு. மிச்சத்தை உன்கிட்டயே
குடுத்துடுறேம்ப்பா…’’ என்றவர், நான்கே நான்கு
கிளிஞ்சல்களை மட்டும் எடுத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை
அவனிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்.
சிறுவன், மகிழ்ச்சியோடு கிளிஞ்சல்களை வாங்கி தன்
கால்சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டான்.
தங்கையை அழைத்துக்கொண்டு கடையைவிட்டு வெளியே
போனான்.
இதையெல்லாம் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்
ஒருவரும் ஆச்சர்யத்தோடு கவனித்துக்கொண்டிருந்தார்.
அவர் கடை உரிமையாளரின் அருகே வந்தார்.
“சார்… விலை அதிகமுள்ள அந்த பொம்மையை வெறும்
நாலு கிளிஞ்சலுக்கு வித்திருக்கீங்களே…’’ என்றார்.
கடை உரிமையாளர் சிரித்தபடி சொன்னார்..
. “ஆமா, நமக்கு இது வெறும் கிளிஞ்சல்கள்.
ஆனா, இந்த வயசுல அந்தப் பையனுக்கு பணம்னா என்னனு
புரிஞ்சுக்க முடியாது. ஆனா, வளர்றப்போ புரிஞ்சுக்குவான்.
பணத்துக்கு பதிலா கிளிஞ்சலைக் கொடுத்து
ஒரு பொம்மையை வாங்கினது அவன் ஞாபகத்துக்கு
வர்றப்போ, நானும் அவன் நினைவுக்கு வருவேன்.
அப்போ அவனுக்கு இந்த உலகம் முழுக்க நல்ல மனுசங்க
இருக்காங்கனு தோணும்.
அவனும் பாசிட்டிவ் எண்ணத்தை வளர்த்துக்குவான்.
அவ்வளவுதான்…’’
–
———————————-பாலு சத்யா
பாலு சத்யா
எழுத்தாளர், பத்திரிகையாளர்.
இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு சிறுவர் நாவல்,
ஒரு மொழிபெயர்ப்பு நூல் மற்றும் வாழ்க்கை வரலாறு
புத்தகங்கள் 10க்கும் மேற்பட்டவை வெளி வந்துள்ளன.
`பந்தயக் குதிரைகள்’ சிறார் நாவலுக்கு விகடன் விருது
பெற்றிருக்கிறார்.
இது தவிர, காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது,
பாரத ஸ்டேட் பாங்க் விருது,
இலக்கிய வீதியின் `அன்னம் விருது’,
திருப்பூர் முத்தமிழ்ச் சங்க விருது,
இலக்கிய சிந்தனை பரிசு…
உள்பட பல விருதுகள் பெற்றவர்.
இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப்
பணியாற்றியவர்
–
———————–
நன்றி-விகடன்