பட்டம் பெற்ற ஷாரூக் கான்!பாலிவுட் சினிமாவில், முன்னணி நடிகர்களில்
ஒருவரான ஷாரூக் கான், 1988ல் டில்லியிலுள்ள
ஹன்ஸ்ராஜ் கல்லூரியில், பி.ஏ., பொருளாதாரம்
படித்துள்ளார்.

அதையடுத்து, நடிப்பில், பிசியாகி விட்ட அவர்,
தான் படித்ததற்கான சான்றிதழை வாங்காமல்
இருந்தார். அதனால், 28 ஆண்டுகளுக்கு பின்,
சமீபத்தில் அக்கல்லூரிக்கு சென்று, தற்போதைய
பிரின்சிபலிடமிருந்து, தனக்கான, பி.ஏ., பட்ட
சான்றிதழை பெற்றுள்ளார்.

—————————–
— சி. பொ.,

அரசியல்வாதியான த்ரிஷா!


எதிர்காலத்தில், த்ரிஷா அரசியலுக்கு வருவார்
என்று முன்பு செய்திகள் வெளியான போது,
அதற்கு மறுப்பு தெரிவித்து, அப்பேச்சுகளுக்கு
முற்றுப்புள்ளி வைத்தார்.

தற்போது, தனுஷ், அண்ணன் மற்றும் தம்பி என,
இரு வேடங்களில் நடித்து வரும், கொடி படத்தில்,
ருத்ரா என்ற முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்வாதி
வேடத்தில் நடிக்கிறார் த்ரிஷா.

அத்துடன், மேடைகளில் அவர் அரசியல் சொற்
பொழிவு ஆற்றுவது போன்ற காட்சிகளும் இடம்
பெற்றுள்ளன.
அட்டமத்து சனியை வட்டிக்கு வாங்கினார் போல்!

———————————
— எலீசா

சென்னை அணியை வாங்கிய சன்னிலியோன்!பாலிவுட் சினிமாவில் கொடி நாட்டியுள்ள
சன்னிலியோன், தமிழில் கால் பதிக்க,
வடகறி படத்தில், ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடினார்;

ஆனால், அது ஒர்க் -அவுட் ஆகவில்லை. அதனால்,
தமிழகத்தில் அழுத்தமாக முத்திரை பதிக்க, தருணம்
பார்த்திருந்தார்.

சினிமாத்துறையினர் விளையாடும், நட்சத்திர
கிரிக்கெட் போன்று, பி.சி.எல்., என்று பெயரிடப்பட்டுள்ள
சின்னத்திரை நடிகர்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டி,
விரைவில் சென்னையில் துவங்க இருப்பதை முன்னிட்டு,
சென்னை சின்னத்திரை கிரிக்கெட் அணியை வாங்கி
விட்டார் சன்னிலியோன்.

அதற்கான விளம்பர வேலைகளை தற்போது முடுக்கி
விட்டுள்ளார்.

——————
— சினிமா பொன்னையா

முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2’

இம்சை அரசன் 23ம் புலிகேசி’ இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு, மோனிகா, தேஜஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’. சபேஷ் – முரளி இசையமைத்த இப்படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்தார். 2006ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘2.0’ படத்தை இயக்கி வரும் ஷங்கர், அந்நிறுவனத்துடன் இணைந்து இரண்டாம் பாகத்தை தயாரிக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். வடிவேலு நடிக்க சிம்புதேவனே இயக்க இருக்கிறார்.

இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

சிக்ஸ்பேக் ஹீரோயின்…

நயன்தாராவாக ஐயா படத்தில் பாவாடை தாவணியுடன் அறிமுகமானபோது இரண்டு படங்களுக்குத்தான் தாங்குவார் என்று கணிக்கப்பட்டார். ஆனால் இன்று பத்து ஆண்டுகளை நிறைவு செய்து தென்னிந்திய சினிமாவின் மகாராணியாக இருக்கிறார்.இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? இந்த சாதனையை அவர் எப்படி படைத்தார்? பெரிய சினிமா பின்னணியோ, அல்லது பெரும் கோடீஸ்வரியாக இருந்து பொழுதுபோக்கிற்காக சினிமாவிற்கு வந்தவரோ அல்ல.

கேரளாவிலிருந்து புறப்பட்டு வரும் எல்லா சேச்சிகளைப்போலவும் கனவுகளை மட்டுமே சுமந்து வந்தவர்தான் இவர்.காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.30 மணிக்கு, மேக்கப்போடு காத்திருப்பார். மூன்று லட்சம் சம்பளம் வாங்கும்போதும் அப்படித்தான், மூன்று கோடி சம்பளம் வாங்கும்போதும் அப்படித்தான்.

அவரது மேக்கப் அறைக்குள் அவரைப் பற்றிய கிசுகிசுக்களை வெளியிட்ட நாளிதழ்களும், பத்திரிகைகளும் சிதறிக்கிடக்கும். அவற்றை கைகளால் ஒதுக்கி வைத்துவிட்டு, மேக்கப் போட்டு ஷாட்டுக்கு செல்வதுதான் நயன் ஸபெஷல். தன் தனிப்பட்ட விஷயங்கள் எதுவுமே தன் தொழிலைப் பாதிக்க அனுமதிக்காதவர் அவர்.“ஒரு படத்துக்கு நயனை கமிட் பண்ணுவதுதான் கடினம். கமிட் பண்ணிவிட்டால் லைடபோயை விட அதிகமாக வேலை செய்வார்” என்பதுதான் இண்டஸ்ட்ரி அவருக்கு கொடுக்கும் மதிப்பீடு.

ஒரு கதை பிடித்துவிட்டால், கெரக்டர் பிடித்துவிட்டால், உடன் நடிப்பது யார், திரையுலகில் அவரது ரேஞ்ஜ் என்னவென்றெல்லாம் ஒருபோதும் கவனிக்க மாட்டார்.அவரைப் பொறுத்தவதை ஆரியாவும், ஆரியும் ஒன்றுதான். அதபோல ஒரு கெரக்டருக்கு என்ன தேவையோ அதைச் செய்ய ஒருபோதும் தயங்கியதில்லை. அப்படிச் செய்ய மாட்டேன், இப்படிச் செய்ய மாட்டேன் என்று அவர் ஒருபோதும் நிபந்தனைகள் விதித்ததில்லை.

சிக்ஸ் பேக் வைக்க ஹீரோக்களே திணறிக்கொண்டிருக்க, ‘பில்லா’ படத்தில் சிக்ஸ்பேக் காட்டி வியக்க வைத்தவர். இப்படி அவர் தொழில் பக்தி பற்றி நிறைய பேசலாம்.ஒரு பெண் ஒரு ஆணை நம்பி நேசிப்பதும், அந்த நேசத்தில் குறைபாடு தெரிகிறபோது விலகிக் கொள்வதும் இயல்பானதே. நயன்தாரா வாழ்க்கையிலும் அதுதான் நடந்தது. அவர் மிகப்பெரிய செலிபிரிட்டி என்பதால், மீடியாக்களின் வெளிச்சம் அவர் மீது விழுந்து கொண்டே இருப்பதால் அவர் என்னவோ ‘காதல் பைத்தியம்’ என்பது போன்ற இமேஜ் மீடியாக்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அவர் நினைத்தால் ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரனை தன் காதல் வலையில் சிக்க வைக்க முடியும். ஆனால் இன்று அவர் சில லட்சங்களே சம்பளம் பெறும் ஒரு புதுமுக இயக்குனரைத்தானே காதலிப்பதாக சொல்கிறார்கள். அவர் தேடுவதும், விரும்புவதும் களங்கமற்ற மனதையும், தூய அன்பையும்தான். அது இல்லாதவர்களோடு அவர் வலுக்கட்டாயமாக காதல் கொண்டிருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

நன்றி- தினகரன்.lk

லிப் டூ லிப் – சாந்தினி ஓபன் ஹார்ட்!

யார் இந்த சாந்தினி?இப்படி பண்றீங்களேம்மா. என்னைத் தெரியாதா?
சாந்தனுகூட பார்த்திருப்பீங்களேம்மா?

சாந்தனுகூட நடிச்சிருப்பாரா, படிச்சிருப்பாரா?
சித்து +2வில் நடிச்சிருக்கேன்.

அந்தக் கால நடிகையோ?
இப்பவும் நடிக்கிறேன்பா, ‘என்னோட விளையாடு,
பல்லாண்டு வாழ்க, டாலர் தேசம், கண்ணுல காச
காட்டப்பா’

நயன்தாராவுக்கே கையில் நாலுபடமில்ல…
என் பின்னாடி சுத்துன பசங்கள எல்லாம் மெட்ராஸ்
தமிழ்ல நாங்களும் கலாய்ப்போம்ல…

ஏதோ வெளிநாட்ல இருந்து வந்தவர் மாதிரி பேசறார்…
தம்பிதான் லண்டன், நான் சென்னை காலேஜ் அல்மினி
பி.எஸ்ஸி. விஸ்காம், அப்பா தமிழரசன் பிஸினஸ் மேன்!

அப்ப, சொந்தப் படம்கூட எடுக்கலாம்…
அதெல்லாம் படிக்கறப்பவே எடுத்தாச்சு! பத்து நிமிஷம்
ஓடுற ஷார்ட் ஃபிலிம்… சாந்தனு ஸிஸ்டர் தான்
அதுல பெயின் ரோல்.

ஃப்ரெண்ட்டோட பிரதரை ஃபிரெண்டாக்கி சான்ஸ்
பிடிச்சிருக்கார்…
பிடிச்ச சான்ஸ் இல்ல, வந்த சான்ஸ்.. படிக்கும் போதே
மிஸ் சென்னை போட்டியில ஜெயிச்சேன். அத டி.வி.யில
பார்த்துட்டுதான் பாக்யராஜ் சாரே சான்ஸ் கொடுத்தார்.

ஸோ, சித்த +2 முடிச்சுட்டு மேல் படிப்புக்கு தெலுங்கு
தேசம் போயிருப்பாங்க… அதனால்தான் த்ரிஷா தமிழுக்கு
திரும்பி வந்திருப்பாங்க…
நான் ஜோதிகா ரசிகை! 36 வயதினிலே பார்த்துட்டு போன்
பண்ணி பாராட்டினேன். தேங்க்யூ சாந்தினின்னு சொன்னாங்க.
ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு.

இவங்க பாராட்டினா அவங்கல்ல சந்தோஷப்படணும்…
அஜித்தே ஆல் தி பெஸ்ட்னு என்னைப் பாராட்டினாரே..
ஹைதராபாத் ஏர்போர்ட்ல அவரைப் பார்த்து கூட நின்னு
ஒரு ஸெல்ஃபிகூட எடுத்துகிட்டேன் தல செம!

ஸெல்ஃபிய ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸா போடலாம்…
சினிமா வாய்ப்பு..?
பேய் படத்துல நடிக்காம கேரியர் ஃபுல்ஃபில் ஆகுமா?
தெலுங்குல பேயா நடிச்சாச்சு. தமிழ்ல நடிக்கப் போறேன்.

மூக்கும் முழியுமா மிரட்டப் போறாங்க…
என் உதடுதான் செம பியூட்டின்னு ஃபிரெண்ட்ஸ் சொல்வாங்க..
உதட்டை சுளித்துக் கடித்து, சிரித்தார் சாந்தினி!
மெரினா பீச் பக்கம் போனால் ஜீன்ஸ், டீ-சர்ட்ல பைக்ல
சுத்திக்கிட்டிருக்கிற சாந்தினியை நீங்களும் பார்க்கலாம்…
லிப் டு லிப் நீங்களும் பேசலாம்.

———————-
– சபீதா ஜோசப்
குமுதம்

சாலக்குடியின் செல்ல மகன்!

கலாபவன் மணி இறந்துவிட்டார் என்ற செய்தியை
இன்னும் கூட மலையாள மண்ணால் நம்ப
முடியவில்லை. ஒரே சமயத்தில் ஹீரோவாகவும்
வில்லனாகவும் காமெடியனாகவும் திரையுலகில்
கோலோச்சிய மகா நடிகன்.

அதையெல்லாம் தாண்டி, அற்புதமான மனிதன்.
‘கலாபவன்’ என்ற கலைக்குழு மல்லுவுட்டில்
பல கலைஞர்களை உருவாக்கியிருக்கிறது.

ஆனால், நன்றியுணர்ச்சியுடன் அந்தப் பெயரை
தன்னோடு நிரந்தரமாக வைத்துக் கொண்டவர் மணி.
அவரின் நற்பண்புக்கு இது நல்ல அடையாளம்!

அவரது மரணத்தைச் சூழ்ந்திருக்கும் மர்மம் ஒரு
பக்கம் பரபரப்பு கிளப்பினாலும், மணியின் நெகிழ்ச்சி
பக்கங்களைத் திருப்பிப் பார்க்க யாரும் தவற
வில்லை.

வறுமை, பசி, இவைதான் மணியை வளர்த்தெடுத்தன.
பாரம் சுமக்கும் கட்டிடத் தொழிலாளியாக, கூலியாக,
தென்னை மரம் ஏறுபவராக, ஆட்டோ டிரைவராக,
எப்படி எப்படியோ இவரை அலைக்கழித்தது வாழ்க்கை.

அங்கிருந்து மேலேறி வந்தவர். ‘‘பத்தாவது
பாஸாகவில்லை… நான் ஹீரோவாக நடித்த படத்தின்
பெயர், ‘உலகநாதன் ஐ.ஏ.எஸ்.’ ’’ – மணி
தன்னைப் பற்றி தானே அடித்துக்கொள்ளும் ‘ஜோக்’
இது.

 

கலாபவன் மணியின் மனைவி நிம்மி,
கால்நடை மருத்துவர். ஒரே மகள், லட்சுமி.
சினிமாவில் எத்தனை உயரம் தொட்டாலும் பழைய
வாழ்வை மறக்காத பண்பு மணியிடம் உண்டு.

2011 ஓணம் பண்டிகையின்போது ஆயிரம் பழங்
குடியினரை அழைத்து தன் வீட்டில் விருந்து கொடுத்தார்.
அதே ஆண்டில், ‘சாலக்குடி மார்க்கெட்டில் குப்பைக்
கூளம்’ என்று பத்திரிகைச் செய்தியைப் பார்த்ததும்
தன் நண்பர்களுடன் சேர்ந்து களத்தில் இறங்கி,
அங்காடி முழுவதையும் சுத்தம் செய்தார்.

நடித்து முடித்து மேக்கப்பைக் கலைக்கும்போதே
தான் ஒரு நடிகர் என்பதையும் மறந்து விடுபவர் மணி.
சாலக்குடியில் சாலையோர டீக்கடையில் அவர்
சாமானியராக டீ குடிப்பதைப் பார்க்க முடியும்.

முன்பு தான் ஓட்டிய ஆட்டோவை இன்றும்
பொக்கிஷமாக வீட்டில் நிறுத்தி வைத்திருக்கிறார்.
ஷூட்டிங் இல்லாத சமயங்களில், தனது நண்பர்களான
ஆட்டோ டிரைவர்களை அழைத்து மணிக்கணக்கில்
பேசி மகிழ்வார். நண்பர்கள் விடைபெறும்போது
ஒரு நாள் ஆட்டோ ஓட்டினால் கிடைக்கும்
வருமானத்தைவிட அதிகமான தொகையைத் தந்து
வழியனுப்பி வைப்பாராம்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் முதியோர் இல்லங்களில்
இருப்பார். ‘‘இந்தப் பெண்களின் முகங்களில் என்
தாயைப் பார்க்கிறேன்…’’ என்பார்.

‘‘மிமிக்ரி கலைஞர்கள் எல்லோரும் நடிகர்கள் ஆகி
முன்னேறுவதில்லை.

அதனால் நலிந்த மிமிக்ரி கலைஞர்களுக்கு நிதி உதவி
செய்ய கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என
கலாபவன் மணி அழுத்தம் கொடுத்தார். அதன்படி ஒரு
கோடி ரூபாய் வரை நிதி திரட்டப்பட்டது!’’ என்கிறார்
இயக்குநர் சித்திக்.

தனது சொந்த ஊரான சாலக்குடியில் பலருக்கும் பண
உதவி செய்திருக்கும் மணி, மருத்துவமனை, காவல்
நிலையம், பள்ளிகளுக்கு கட்டிட உதவி செய்திருக்கிறார்.

இவரது செல்வாக்கைப் பார்த்து இடது கம்யூனிஸ்ட்
கட்சி 2016 சட்டசபைத் தேர்தலில் சீட் தர முன்
வந்திருந்தது. அதை ஏற்றுக்கொள்ள சாலக்குடியின்
செல்ல மகன் எங்கே..?

மணியின் வீட்டில் கூட்டம் இருந்தால், ‘மணி
ஷூட்டிங் போகவில்லை… வீட்டில் இருக்கிறார்’
என்று அர்த்தம். அவர் வீட்டில் இருக்கிறார் என்று
தெரிந்தால், அவரைப் பார்க்க, பேச, உதவி கேட்க
சாலக்குடி வாசிகள் வந்து குவிவார்கள்.

மார்ச் ஏழு அன்று, மணியின் சாலக்குடி வீட்டில்
திரளான மக்கள் கூட்டம்.

உதவி கேட்பதற்காக அல்ல…தங்கள் மனம் கவர்ந்த
‘சகலகலா’மணிக்கு இறுதி மரியாதை
செலுத்துவதற்காக!

நடிகர்கள் இப்படியும் பெயர் சொல்ல வாழலாம்
என்பதற்கு கலாபவன் மணி ஒரு முன்னுதாரணம்!-
——————-

– பிஸ்மி பரிணாமன்
குங்குமம்

கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.

சிறுவயதிலேயே நாடக மேடையில் ஏறிய கே.வி.மகாதேவன், பிறகு துணை இசை அமைப்பாளராகப் பணிபுரிந்து, இசை அமைப்பாளராக உயர்ந்தார்.

கே.வி.மகாதேவனின் சொந்த ஊர் நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணன்கோவில் ஆகும். தந்தை – வெங்கடாசலம். தாயார்- லட்சுமி அம்மாள்.

மகாதேவனின் தந்தை வெங்கடாசலம், இசைஞானம் உடையவர். அதனால் சிறு வயதிலேயே மகாதேவன் தந்தையிடம் பாடக்கற்றுக் கொண்டார். பின்னர் திருச்சியில், விஸ்வநாத பாகவதரிடம் பயிற்சி பெற்று, மேடை கச்சேரிகளில் பாடினார். அந்த காலத்தில் பார்க்க அழகாக இருந்து, பாடவும் தெரிந்த சிறுவர்களை பாய்ஸ் நாடகக் கம்பெனிகளில் சேர்த்துக் கொள்வார்கள்.

அதன்படி டி.வி.சாரி என்பவர் மகாதேவனை சென்னைக்கு அழைத்து வந்து, பாலகந்தர்வகானசபா’வில் சேர்த்து விட்டார். அப்போது மகாதேவனுக்கு 13 வயது. ‘சந்திராவளி’ என்ற நாடகத்தில் பெண் வேடம் போட்டு நடித்தார். பின்னர், மற்ற கம்பெனி நாடகங்களிலும் நடித்தார். பெங்களூரில் நாடகம் நடிக்கச் சென்றபோது, உடன் வந்த நடிகர்கள் மகாதேவனை விட்டு விட்டு சென்று விட்டனர். அங்கிருந்து டிக்கெட் வாங்காமல் சென்னைக்கு வந்தார், மகாதேவன்.

இந்த நிலையில் நாடக ஆசிரியரான சந்தானகிருஷ்ணநாயுடு சிபாரிசின் பேரில், சென்னை கிண்டியில் இருந்த வேல்பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் மகாதேவனுக்கு வேலை கிடைத்தது. அப்பொழுது ‘திருமங்கை ஆழ்வார்’ என்ற படத்தை அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்தனர். அதில் கதாநாயகனாக நடித்த கொத்தமங்கலம் சீனு சொந்தக்குரலில் பாடினார்.

இந்தப் படத்தின் இசை அமைப்பாளரான டி.ஏ.கல்யாணம், அக்காலத்தில் பிரபல இசையமைப்பாளராக இருந்தார். கே.வி.மகாதேவனுக்கு நல்ல இசை ஞானம் இருப்பதை அறிந்து கொண்ட அவர், மகாதேவனை தனது உதவியாளராக சேர்த்துக் கொண்டார்.

‘ஆனந்தன் அல்லது அக்கினி புராண மகிமை’ என்ற படத்திற்கு, டி.ஏ.கல்யாணத்துடன் சேர்ந்து கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். 1940-ம் ஆண்டு, டி.ஏ.கல்யாணமும், மகாதேவனும் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் நிரந்தர இசை அமைப்பாளராகச் சேர்ந்தனர்.

அங்கு தயாரான சிவலிங்கசாட்சி, மனோன்மணி, திவான் பகதூர், ராஜராஜேஸ்வரி, அருந்ததி, பர்மாராணி, சுபத்ரா, சித்ரா முதலான படங்களுக்கு டி.ஏ.கல்யாணத்திற்கு உதவியாளராக இசை அமைத்து பாராட்டு பெற்றார், மகாதேவன்.

1950-ம் ஆண்டு, தனியாக இசை அமைக்கும் வாய்ப்பு மகாதேவனுக்குக் கிடைத்தது. எம்.ஜி.ஆர். நடித்த ‘குமாரி’ என்ற படத்துக்கு அவர் இசை அமைத்தார். 1954-ல் எம்.ஏ.வி.பிக்சர்ஸ் முதன் முதலாகத் தயாரித்த ‘மாங்கல்யம்’ படத்துக்கு இசை அமைத்தார். அந்தப் படம் வெற்றிப்படமாகியது.

‘மாங்கல்யம்’ படத்தின் கதாநாயகனாக நடித்தவர் ஏ.பி.நாகராஜன். அவருக்கும் கே.வி.மகாதேவனுக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டது. தொடர்ந்து எம்.ஏ.வி.பிக்சர்ஸ் படங்களுக்கும், ஏ.பி.நாகராஜன் தொடர்புடைய படங்களுக்கும் இசை அமைத்தார்.

‘டவுன்பஸ்’, ‘முதலாளி’, ‘சம்பூர்ணராமாயணம்’, ‘மக்களைப் பெற்ற மகராசி’ முதலிய படங்களில், பல சிறந்த ‘ஹிட்’ பாடல்களைக் கொடுத்தார். எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் நடித்த பல வெற்றிப் படங்களுக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். அவற்றில் சில முக்கிய படங்கள் வருமாறு:-

எம்.ஜி.ஆர்:- குடும்பத்தலைவன், தாயைக்காத்த தனயன், நல்லநேரம், அடிமைப்பெண், காஞ்சித்தலைவன், வேட்டைக்காரன், தர்மம் தலைகாக்கும், நீதிக்குப்பின்பாசம், பரிசு, பல்லாண்டு வாழ்க.

சிவாஜிகணேசன்:- திருவிளையாடல், நவராத்திரி, ரத்தத்திலகம், தில்லானா மோகனாம்பாள், சரஸ்வதி சபதம், கந்தன்கருணை, திருமால் பெருமை, வசந்தமாளிகை.

எம்.ஜி.ஆர். சொந்தமாகத் தயாரித்த ‘அடிமைப்பெண்’ படத்தில், ஒரு பாடலை படத்தின் கதாநாயகியாக நடித்த ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடினார். ‘அம்மா என்றால் அன்பு; அப்பா என்றால் அறிவு; ஆசான் என்றால் கல்வி. அதுவே உலகின் தெய்வம்’ என்று தொடங்கும் அந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் கே.வி.மகாதேவன்.

தமிழ்ப்படங்களுடன், தெலுங்குப் படங்களுக்கும் மகாதேவன் இசை அமைத்தார். அவற்றில் மகத்தான இசைக் காவியமாக அமைந்தது ‘சங்கராபரணம்.’ இசையை உயிரினும் மேலாக மதிக்கும் இசை மேதையாக இதில் சோமயாஜுலு நடித்தார். இவருக்காக, கர்நாடக சங்கீதத்தில் கே.வி.மகாதேவன் இசை அமைத்த பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அற்புதமாகப் பாடினார்.

ஆந்திராவில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் இசைக்காகவே ஓடிய மிகச்சிறந்த படம் ‘சங்கராபரணம்.’ தமிழிலும், தெலுங்கிலும் சுமார் 500 படங்களுக்கு இசை அமைத்தவர், கே.வி.மகாதேவன். மேல் நாட்டு இசையைத் தழுவாமல், முழுக்க முழுக்க கர்நாடக இசையில், நெஞ்சைத் தொடும் விதத்தில் இசை அமைத்து சாதனை படைத்தார். அவருடைய பெரும்பாலான பாடல்கள், காலத்தை வென்று, காற்றுள்ள வரை வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியவை.
————-
நன்றி மாலை மலர்.

நாவலை திரைக்காவியமாக மாற்றமுடியும் …

 

037528BC-902A-4696-8822-A6EA844476F2_L_styvpf.gif

-ஒரு நாவலை திரைக்காவியமாக மாற்றமுடியும்

என்பதற்கு உதாரணமாக திகழ்கிறது
‘தில்லானா மோகனாம்பாள்’.

ஆனந்த விகடனில், ‘கலைமாமணி’ என்ற புனைப்பெயரில்
கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கதை இது. அதை தனது
திரைக்கதை வசனத்தினாலும், இயக்கத்தினாலும் திரைக்
காவியம் ஆக்கியவர் ஓ.பி.நாகராஜன்.

தமிழின் சிறந்த பத்து படங்களை எந்தக் காலகட்டத்தில்
தேர்வு செய்தாலும் அதில் தில்லானா மோகனாம்பாளுக்கு
நிச்சயம் இடம் கிடைக்கும்.

கதைச்சுருக்கம்

சிக்கல் சண்முகசுந்தரம் (சிவாஜி கணேசன்) புகழ்பெற்ற
நாதஸ்வர வித்வான். அற்புதமான ஆடல் அழகி
மோகனாம்பாள் (பத்மினி). இருவரும் காதலிக்கிறார்கள்.

பத்மினியின் தாயார் (சி.கே.சரஸ்வதி) பேராசை பிடித்து
அவர்கள் இருவரையும் பிரிக்க முயல்கிறார்.
நடராஜர் சன்னிதியில் சிவாஜியின் நாதஸ்வர வாசிப்புக்கும்
பத்மினியின் பரத நாட்டியத்திற்கும் போட்டி வைக்கப்பட்டு
வெற்றி தோல்வியின்றி முடிகிறது.

மகாராஜா சமஸ்தானத்தில் இருவருக்கும் அழைப்பு
வருகிறது. அங்கு மகாராஜாவுக்கு (எம்.என்.நம்பியார்)
பத்மினியின் அழகில் சபலம் தட்டுகிறது. இதற்கு தூபம்
போடுகிறான் வைத்தி (நாகேஷ்).

நாதஸ்வர வித்வான் சிவாஜிக்கு பத்மினி மீது சந்தேகம்
ஏற்படுகிறது. ஆனால், ஆடல் அரசி மோகனாம்பாள் தன்
உயர்ந்த குணத்தால் எல்லோரையும் திருத்துகிறாள்.
காதலர்கள் ஒன்று சேருகிறார்கள்.

இப்படத்தில் பத்மினியின் பரத நாட்டியம் பட்டொளி
வீசியது. மதுரை சகோதரர்கள் சேதுராமன்-பொன்னுசாமி
ஆகியோரின் நாதஸ்வரம் தேவகானமாய் இருந்தது.
கே.வி.மகாதேவன் இசையமைப்பில் ‘மறைந்திருந்து
பார்க்கும் மர்மம் என்ன’, ‘நலந்தானா’ ஆகிய பாடல்கள்
அற்புதமாக அமைந்தன.

ஓ.பி.நாகராஜனின் திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகியவை
உயர்வாக இருந்தன. பத்மினியும் சிவாஜிகணேசனும் கதா
பாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டினர்.

தவில் வித்வானாக நடிக்க பிரத்தியோக பயிற்சி பெற்று,
தவிலில் எல்லாவித பிரயோகங்களையும் பயன்
படுத்தியிருந்தார். டி.எஸ்.பாலைய்யா.

வைத்தியாக நடித்த நாகேஷ் பாத்திரம் முக்கியத்துவத்தில்
தனித்து நின்றது. அவர் தோன்றும் காட்சிகள் அனைத்தும்
ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

தமிழகத்தின் பழம்பெரும் கலைகளான நாதஸ்வர இசை,
நாட்டியக்கலை இவை இரண்டையும் அடிப்படையாக
கொண்ட வெற்றிச் சித்திரம் இது.

————————-
நன்றி- தினத்தந்தி

வெளியானது ‘அம்மா கணக்கு’ ஃபர்ஸ்ட் லுக்;தனுஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘அம்மா கணக்கு’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஏப்ரல் 22ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறது.

இந்தியில் ‘நில் பேட்டே சனாட்டா’ என்ற படத்தை இயக்கியவர் அஸ்வினி ஐயர். அம்மா – மகள் இருவருக்கும் இடையே நடைபெறும் பாசப் போராட்டத்தை கதைக்களமாக கொண்ட படம்.

சீனாவில் நடைபெற்ற சில்க் ரோடு திரைப்பட விழாவில் இப்படத்தில் நடித்த சுவாரா பாஸ்கருக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. விமர்சகர்கள் மத்தியில் இப்படத்துக்கு பெரும் பாராட்டு கிடைத்தது.

‘நில் பேட்டே சனாட்டா’ படத்தின் தமிழ் ரீமேக்கை கைப்பற்றி தனுஷ் தயாரித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6ம் தேதி தொடங்கியது. தமிழ் ரீமேக்கிற்கு ‘அம்மா கணக்கு’ என்று பெயரிடப்பட்டு, இந்தி படத்தை இயக்கிய அஸ்வினி ஐயர் இப்படத்தை இயக்கினார்.இப்படத்தில் அமலாபால், சமுத்திரக்கனி, ரேவதி ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றி வருகிறார்.

ஜனவரி 6-ம் தேதி தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 23 முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் துவங்கப்பட்டன. தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார் தனுஷ்.

மேலும், ஏப்ரல் 22ம் தேதி வெளியாக இருக்கும் ‘நில் பேட்டே சனாட்டா’ படத்துடன் ‘அம்மா கணக்கு’ படத்தையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

தமிழ் தி இந்து காம்

« Older entries Newer entries »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 98 other followers