10 கோடி பார்வையாளர்களை கடந்த ஷாருக்கானின் ஜீரோ

10 கோடி பார்வையாளர்களை கடந்த ஷாருக்கானின் ஜீரோ

மும்பை,

அண்மையில் வெளியிடப்பட்ட நடிகர் ஷாருக்கானின்
ஜீரோ பட டிரெய்லர், இதுவரை யூடியூபில் எந்த ஒரு இந்திய
படத்தின் டிரெய்லரும் செய்திராத சாதனையை
படைத்துள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் நடிப்பில்
கிறிஸ்துமஸ் அன்று வெளியாகவுள்ள திரைப்படம் தான்
ஜீரோ.

இதில் கத்ரினா கைஃப், அனுஷ்கா சர்மா, மாதவன்,
அபே தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின்
டீஸர் மற்றும் இரண்டு போஸ்டர்கள் வெளியான நிலையில்
இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியது.

இந்நிலையில் ஷாருக்கானின் பிறந்த தினமான கடந்த
நவம்பர் 2ஆம் தேதியன்று ஜீரோ படத்தின் டிரெய்லர்,
மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில் வெளியிடப்பட்டது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே ரசிகர்களிடம்
ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. டிரெய்லர் வெளியான
24 மணி நேரத்தில் 5.5 கோடி பார்வையாளர்கள்
பார்த்துள்ளனர். இதன் மூலம் வெளியிடப்பட்ட 24 மணி
நேரத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட இந்திய திரைப்படத்தின்
டிரெய்லர் என்ற சாதனை புரிந்துள்ளது.

இரண்டாவது நாளில் 8.5 கோடி பார்வையாளர்கள் அதனை
பார்த்திருந்தனர்.

தற்போது டிரெய்லர் வெளியான 96 மணி நேரங்களுக்குள்
(4 நாட்கள்) அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கை
10 கோடியாக உயர்ந்துள்ளது.
இது மேலும் ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் இதற்கு முன்னதாக படைக்கப்பட்ட அனைத்து
சாதனைகளையும் ஜீரோ டிரெய்லர் முறியடித்து புதிய
சாதனை படைத்துள்ளது.

———————————-
தினத்தந்தி

மும்பை போலீசில் நடிகை அக்‌ஷராஹாசன் புகார்

மும்பை போலீசில் நடிகை அக்‌ஷராஹாசன் புகார்

நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்‌ஷராஹாசன்
‘‌ஷமிதாப்’ என்ற இந்தி படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து
வருகிறார். தமிழில் ‘விவேகம்’ படத்தில் நடித்துள்ளார்.

அக்‌ஷராஹாசனின் கவர்ச்சி படங்கள் இணையதளத்தில்
வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவை சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது.

இதனால் அதிர்ச்சியான அக்‌ஷராஹாசன்,
‘‘சினிமா படப்பிடிப்புக்காக இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.
இது எனது தொழில் ரீதியிலான வி‌ஷயம். இதற்கு ஏன் விமர்சனங்கள் கிளம்புகின்றன என்று புரியவில்லை.

எனது அனுமதி இல்லாமல் இந்த படங்களை வெளியிட்டு உள்ளனர்.
இது குறித்து போலீசில் புகார் செய்வேன்’’ என்றார்.

இந்த நிலையில் மும்பை போலீசில் அக்‌ஷராஹாசன் புகார்
அளித்துள்ளார். அந்த புகாரில், ‘‘எனது அந்தரங்க படங்களை எனக்கு தெரியாமல் யாரோ சட்ட விரோதமாக இணையதளத்தில்
வெளியிட்டு உள்ளனர்.

புகைப்படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

தினத்தந்தி

ஆட்டோ டிரைவராக சாய்பல்லவி

 

 

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி படம்
2015–ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை
பெற்றது.

இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
தற்போது இதன் இரண்டாம் பாகம் ‘மாரி–2’ என்ற
பெயரில் தயாராகி உள்ளது.

இதில் தனுஷ் ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார்.

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக
வருகிறார். வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப்,
ரோபோ சங்கர் ஆகியோரும் உள்ளனர்.

யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அதிரடி மற்றும் நகைச்சுவை படமாக மாரி–2
உருவாகி உள்ளது. தனுசே தயாரித்து உள்ளார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், ரீ ரிக்கார்டிங்,
கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த மாதம்
படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் படத்தில்
சாய்பல்லவி ஆட்டோ டிரைவராக நடிக்கும் அராத்து
ஆனந்தி என்ற கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை
படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி இந்திய
அளவில் டிரென்டிங் ஆகி வருகிறது. சாய் பல்லவியின்
வித்தியாசமான தோற்றத்தை ரசிகர்கள் பாராட்டி
வருகிறார்கள்.

சாய்பல்லவி ஏற்கனவே தியா படத்தில் நடித்துள்ளார்.
சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படத்திலும் நடித்து வருகிறார்.

————————–
தினத்தந்தி

 

 

 

டைரக்டராகும் நடிகர் விஷால்

டைரக்டராகும் நடிகர் விஷால்
விஷால் டைரக்டர் அவதாரம் எடுக்கிறார்.
அதற்கான பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.
அவர் இயக்க உள்ள முதல் படம் விலங்குகளை பற்றியது.

மொழிகளை கடந்து பல நாடுகளில் வெற்றி பெற்ற
ஹாலிவுட் படங்களுக்கு இணையான கதையம்சத்தில்
இந்த படம் இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.

தெருநாய்களும் முக்கிய கதாபாத்திரங்களாக இருக்கும்.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர்
நடிக்க உள்ளார்.

விஷால் ஏற்கனவே விலங்குகளுக்கு ஆதரவாக பேசி
வருகிறார். விலங்குகளை சுட்டுகொல்வதற்கு எதிராகவும்
குரல் கொடுத்துள்ளார்.

நீண்டகாலமாக யோசித்து வைத்திருந்த விலங்குகள்
சம்பந்தமான கதை இப்போது இறுதி வடிவத்துக்கு
வந்துள்ளது என்றும் இன்னும் சில மாதங்களில் படத்தின்
தலைப்பு நடிகர்கள் விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும்
கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் அர்ஜூன் இயக்கிய படங்களில்
விஷால் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
இப்போது, அயோக்கியா படத்தில் நடித்து வருகிறார்.

———————————–
தினத்தந்தி

ரஜினி என் சீனியர்… சிரஞ்சீவி என் கிளாஸ்மேட்! – சுஜாதா விஜயகுமார்

வெள்ளித்திரையில் டாப் ஹீரோயின்களாக ஜொலித்துக்
கொண்டிருந்த குஷ்பு, மீனா, பூர்ணிமா பாக்யராஜ் என
பலரையும் சின்னத்திரைக்குள் அழைத்து வந்த பெருமை
தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரையே சேரும்.

இவரது ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ சார்பில் தயாரித்த
‘ஜனனி’, ‘குங்குமம்’, ‘மனைவி’, ‘சிவசக்தி’,
‘லட்சுமி’, ‘மாதவி’, ‘உதிரிப்பூக்கள்’, ‘பாசமலர்’,
‘கங்கா’, இப்போது ஒளிபரப்பாகி வரும் ‘கண்மணி’
வரை அனைத்து மெகா தொடர்களும் குடும்ப உறவுகளின்
உன்னதத்தை உணர்த்தியவை. பாராட்டுகளை அள்ளியவை!

பெரியதிரையில் சுந்தர்.சி.யை வைத்து ‘வீராப்பு’ படத்தை
தயாரித்த சுஜாதா, இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின்
தன் மருமகன் ஜெயம் ரவியை வைத்து ‘அடங்கமறு’ படத்தை
தயாரித்து வருகிறார்.

‘‘சின்னத்திரைல இது எனக்கு 19வது வருஷம்!
ஒரு தயாரிப்பாளரா தொடர்ந்து வெற்றிகரமா பயணிக்க
சன் டிவி சப்போர்ட்தான் காரணம்.

சன் குடும்ப விருதுகள்ல தங்களோட எட்டு தூண்கள்ல
ஒருத்தரா என்னையும் தேர்வு செஞ்சு கவுரவப்படுத்தினாங்க.
இப்ப அதை நினைச்சாலும் சிலிர்ப்பா இருக்கு!

அதே மாதிரி நாங்க தயாரிச்ச ‘லட்சுமி’ தொடருக்கு
தமிழக அரசின் சிறந்த சீரியலுக்கான விருது கிடைச்சது.

அன்றைய முதல்வர் கலைஞர் ஐயா கையால அதை
வாங்கினேன்…’’ நெகிழும் சுஜாதா விஜயகுமாரின் வீட்டுக்கும்
ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கிறது!

‘‘இந்த வீட்டுக்கு ‘கல்பனா ஹவுஸ்’னு பேரு. ஒருகாலத்துல
முக்கியமான ஷூட்டிங் ஹவுஸ். எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதால
இருந்து மணிரத்னம் வரை இங்க ஷூட்டிங் நடத்தியிருக்காங்க;
நடிச்சிருக்காங்க.

‘நாயகன்’ல கமல் வீடு, ‘இருவர்’ல மோகன்லால் வீடுனு
காட்டப்பட்டது எல்லாம் இதுதான்! அப்ப தெலுங்கு, கன்னடம்,
இந்திப் படங்களோட ஷூட்டும் சென்னைல நடக்கும்.
அப்ப தயாரிக்கப்பட்ட படங்கள்ல எல்லாம் இந்த வீடும்
இடம்பெற்றிருக்கு!

இப்ப சில வருஷங்களா இதை படப்பிடிப்புக்கு விடறதில்ல.
எங்க தயாரிப்புல உருவாகற ‘அடங்கமறு’ படத்துக்கும்
‘கண்மணி’ சீரியலுக்கும் கூட வெளியேதான் ஷூட்
பண்ணினோம்…’’ புன்னகைக்கும் சுஜாதா,

தயாரிப்பில் இறங்குவதற்கு முன் ஹீரோயினாக
நடித்திருக்கிறார்!‘‘சென்னைல உள்ள தென்னிந்திய
ஃபிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ்ல இருந்த திரைப்படக்
கல்லூரில ஆக்ட்டிங் அண்ட் டெக்னிகல் கோர்ஸ் படிச்சேன்.

ரஜினிகாந்த் என் சீனியர்! சீரஞ்சீவி, ராஜேந்திரபிரசாத்
எல்லாம் என் கிளாஸ்மேட்ஸ்! படிச்சு முடிச்சதும் தெலுங்குப்
படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன்.

தெலுங்கில் நடிச்ச 17 படங்கள்ல எட்டு படங்கள்ல சிரஞ்சீவிக்கு
ஜோடி! சிவாஜி சாரோட ‘விஸ்வரூபம்’, ராதிகாவோட
‘இளமைக்கோலம்’னு சில தமிழ்ப் படங்கள்ல நடிச்சிருக்கேன்.

ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுல படிக்கிறப்ப இருந்து நானும் என்
கணவரான விஜயகுமாரும் ஃப்ரெண்ட்ஸ். மூணு வருஷங்கள்
நடிச்சபிறகு கல்யாணம் செஞ்சுகிட்டேன்.

‘கல்பனா ஹவுஸ்’ அவரோடதுதான். நடிப்பை விட்டு
ஒதுங்கினேனே தவிர சினிமா இண்டஸ்ட்ரியை விட்டு
விலகலை. எங்க வீட்ல தினமும் படப்பிடிப்பு நடக்கும்.
பிரேக்குல நடிகர்களும் டெக்னீஷியன்களும் எங்க வீட்டுக்கு
வருவாங்க.

பேசிட்டு இருப்போம்…’’ என்ற சுஜாதா சின்னத்திரையில்
என்ட்ரி ஆனது சுவாரஸ்யமான விஷயம். ‘‘சன் டிவில
முதன்முதல்ல ‘கிளியோபாட்ரா’ டெலிஃபிலிம்
பண்ணினேன்.

சுந்தர்.சி. இயக்கியிருந்தார். இதுக்கு அப்புறம் வரிசையா
‘ஜனனி’, ‘குங்குமம்’, ‘மனைவி’, ‘லட்சுமி’,
‘சிவசக்தி’, ‘மாதவி’, ‘உதிரிப்பூக்கள்’, ‘பாசமலர்’,
‘கங்கா’னு தயாரிச்சேன்.

எல்லாமே வலுவான, வெரைட்டியான கதைகள். தொடக்கத்துல
நானும் எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட் குஷ்புவும் சேர்ந்துதான்
சீரியல் தயாரிச்சோம்.

இப்ப இரண்டு பேருமே தனித்தனி கம்பெனி நடத்தறோம்.
என் மூணு சீரியல்கள்ல குஷ்பு நடிச்சிருக்காங்க.

அதைப் பார்த்து மத்த ஆர்ட்டிஸ்ட்களுக்கும் என் மேல
நம்பிக்கை வந்தது. மீனா, ஷமிதா, பூஜா, மானஸா,
லட்சுமி கோபாலசாமினு பெரியதிரைல மின்னின பலரும்
தைரியமா டிவி சீரியலுக்கு வந்தாங்க…’’ என்ற
சுஜாதாவுக்கு சீரியல் தயாரிப்பில் இன்ஸ்பிரேஷன்
ராதிகாதானாம்.

அழுத்தமாக இதைக் குறிப்பிட்டவர், இப்போது டெலிகாஸ்ட்
ஆகும் ‘கண்மணி’ சீரியல் பற்றி விவரித்தார்.
‘‘இது சந்தோஷமான கூட்டுக்குடும்பக் கதை.

‘ஃபாரீன்ல படிச்ச பெண் படிக்காத கிராமத்துப் பையனை
கட்டிக்கிட்டா அவ வாழ்க்கை என்ன ஆகும்..?’ இதுதான்
ஒன்லைன்.

——————————————-

இந்த சீரியல் வழியா முதன்முறையா பூர்ணிமா பாக்யராஜ்
சின்னத்திரைக்கு வந்திருக்காங்க. ‘கண்மணி’யோட ஒரு
போர்ஷனை ரஷ்ய நாட்ல இருக்கிற ஜார்ஜியாலயும்
இன்னொரு போர்ஷனை பூலாம்பட்டி என்கிற
குக்கிராமத்துலயும் ஷூட் பண்ணியிருக்கோம்.

இது ஆரம்பம்தான். இன்னும் நிறைய நாடுகள்ல ஷூட் நடக்கப்
போகுது. சினிமா மாதிரியே ‘கண்மணி’யை ரெட் கேமரால
ஷூட் பண்றோம். ‘ஃபைவ் பாயின்ட் ஒன்’ சவுண்ட்
குவாலிட்டில தயாரிக்கறோம்…’’ என்ற சுஜாதா, தன்
நெருங்கிய சிநேகிதியான குஷ்பு பற்றி பேசும்போது
நெகிழ்கிறார்.

‘‘நாங்க ஆத்மார்த்தமான தோழிகள். 20 வருஷங்களுக்கு
முன்னாடி ‘பிரிட்டி உமன்’னு ஒரு துணிக்கடை ஆரம்பிச்சேன்.
திறப்பு விழாவுக்கு யாராவது நடிகை வந்தா நல்லா இருக்கும்னு
தோணிச்சு. என் நண்பரும் தெலுங்கு நடிகருமான
ராஜேந்திர பிரசாத்கிட்ட பேசினேன். அவர் என் சார்பா
குஷ்புகிட்ட பேசினார். அவங்களும் வந்து கடையைத் திறந்து
வைச்சாங்க.

முதல் சந்திப்புலயே நாங்க நெருக்கமாகிட்டோம்.
ஒரு ஃபெஸ்டிவலுக்கு குஷ்பு எனக்கு ஒரு சேலை எடுத்துக்
கொடுத்து ‘நீங்க எங்க வீட்டு பெரிய அண்ணி’னு
நெகிழ்ந்தாங்க. அதுக்கு அப்புறம் நாங்க ஃபேமிலி
ஃப்ரெண்ட்ஸானோம்.

என் முழுப்பெயரையும் சொல்லி அவங்க குழந்தைகளுக்கு
கூப்பிட வராது. அதனால சின்ன வயசுல ‘தா’னு
கூப்பிடுவாங்க. அதுவே இப்ப வரை நிலைச்சுடுச்சு!

என் பேரக் குழந்தைகளுக்கும் ‘குஷ்பு’ வாய்ல நுழையலை.
அதனால ‘பூ பாட்டி’னுதான் கூப்பிடறாங்க! ஒளிவுமறைவு
இல்லாம எதையும் வெளிப்படையா குஷ்பு பேசுவாங்க.

தைரியசாலி. எதிரிகள்கிட்ட கூட வெறுப்பைக் காட்ட
மாடாங்க. அன்பாதான் பேசுவாங்க. எங்க நெருங்கிய நட்பு
வட்டத்துல பிருந்தா மாஸ்டர், அனு பார்த்தசாரதினு பலரும்
இருக்காங்க. எயிட்டீஸ் நட்சத்திரங்கள் குருப்ல நானும்
இருக்கேன்!

போன வருஷம் நாங்க எல்லாரும் சைனா போயிட்டு வந்தோம்…’’
குழந்தையைப் போல் குதூகலிப்பவர் நீண்ட இடைவெளிக்குப்
பின் ‘அடங்கமறு’ படத்தை தயாரித்திருக்கிறார்.

‘‘சுந்தர்.சி. நடிச்ச ‘வீராப்பு’ படத்தை 2007ல தயாரிச்சேன்.
நல்ல படம்னு பெயர் கிடைச்சும் தொடர்ந்து படத் தயாரிப்புல
ஈடுபடல. சீரியல்ல மட்டும் கவனம் செலுத்தினேன்.

ஏன்னா சீரியல்ல கதை கேட்பதில் தொடங்கி, கேரக்டர்கள்,
நடிகர்கள், டெக்னீஷியன்கள்னு சகலத்தையும் தயாரிப்பாளர்
தீர்மானிக்க முடியும்.
ஆனா, சினிமால பணத்தை முதலீடு செஞ்சா போதும்னு
ஆகிடுச்சு.

பத்தாண்டுகளுக்குப் பிறகு படம் தயாரிக்கலாம்னு கதை கேட்க
ஆரம்பிச்சேன். அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் சொன்ன
கதை ரொம்ப பிடிச்சிருந்தது. இந்தக் காலத்துக்கான கதை.
அதுவும் வலுவான லைன்.

உடனே ரவியை கதை கேட்கச் சொன்னேன். அவருக்கும்
பிடிச்சிருந்தது.‘கதை டிஸ்கஷன்ல இருந்து ஒவ்வொரு
கட்டத்துலயும் நீங்களும் கலந்துக்குங்க அத்தை’னு சொல்லி
எனக்கும் வேலை கொடுத்தார்.

—————————————–

படம் நல்லா வந்திருக்கு. இனி தொடர்ந்து படங்கள் தயாரிக்கிற
ஐடியால இருக்கேன்…’’ என்ற சுஜாதா விஜயகுமாரின் கணவர்
விஜயகுமார், கோல்ட் அண்ட் டைமண்ட் ஆன்டிக் கலக்‌ஷன்ஸ்
பிசினஸ் செய்கிறார்.

இந்தத் தம்பதிகளுக்கு ஆர்த்தி, அனுஷா என இரண்டு மகள்கள்.
இதில் ஆர்த்தி, நடிகர் ஜெயம் ரவியை மணந்திருக்கிறார்.
சுஜாதாவின் தயாரிப்புப் பணிகளில் அவரது நாத்தனாரின்
மகன் ஆனந்தும், இரண்டாவது மகள் அனுஷாவும் உதவி
வருகிறார்கள்.

——————————————–

– மை.பாரதிராஜா
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்
குங்குமம்

என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா

காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களைப் பயன்படுத்தியதாக
எக்கோ நிறுவனம் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார்
இசையமைப்பாளர் இளையராஜா.

இந்தப் புகாரின் மீது காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு
சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதை எதிர்த்து எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது ஒரு சிவில்
பிரச்னை. எங்கள் மீது குற்றவியல் புகார் அளிக்க எந்த
முகாந்திரமும் இல்லை. அதை ரத்து செய்யவேண்டும் என்று
வழக்கு தொடர்ந்தார்கள்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது ஒரு சிவில் பிரச்னை.
இதன் அடிப்படையில் குற்றவியல் புகார் அளிக்கமுடியாது
என்று தீர்ப்பளித்தது.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பு தொடர்பாக இளையராஜா
ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

நான் 2014-ம் ஆண்டு தொடர்ந்த எனது பாடல்களைப்
பயன்படுத்தத் தடை கோரிய வழக்கின்படி, இன்றளவும்
எனது பாடல்களைப் பயன்படுத்த நீதிமன்றத்தால்
பிறப்பிக்கப்பட்ட தடை செல்லும்.

அந்தத் தீர்ப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. அதை மீறுவோர்
மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு கூடிய விரைவில் வெளிவரும்.

நான் 2010-ம் ஆண்டு எக்கோ நிறுவனத்தின் மீதும் அதன்
உரிமையாளர் மீதும் காவல் துறையினரிடம் புகார் அளித்தேன்.

சட்டத்துக்குப் புறம்பாக என் பாடல்களை விற்பனை
செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை
சிடிக்களைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தது.

அந்தக் குற்றவியல் வழக்கை ரத்து செய்யக்கோரி அவர்கள்
தொடுத்த வழக்கின் தீர்ப்பே நேற்று வெளிவந்தது.
அதில் நீதியரசர் எக்கோ நிறுவனத்தின் மீதான குற்றவியல்
நடவடிக்கையை மட்டுமே ரத்து செய்துள்ளார்.

அதில் எனது காப்புரிமை செல்லாது என அறிவிக்கவில்லை.
இந்த வழக்குக்கும் எனது பாடல்களின் உரிமை மீதான
வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

நான்கு ஆண்டுகள் வழக்கு நடத்தி இறுதித் தீர்ப்புக்காகக்
காத்திருக்கும் நிலையில் உண்மைக்குப் புறம்பான
செய்திகளை வெளியிடவேண்டாம் எனக் கேட்டுக்
கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

——————————–
தினமணி

விஜய்யின்- சர்கார் திரை விமர்சனம்

sarkar

By -சுரேஷ் கண்ணன் ,தினமணி

—-

முருகதாஸின் பாணியில் வந்திருக்கும் இன்னொரு
விஜய் திரைப்படம் இது. ஆனால் நடிகரின் படமாகவும்
இல்லாமல் இயக்குநரின் படைப்பாகவும் அல்லாமல்
இரண்டிற்கும் இடையில் தத்தளிப்பதினாலேயே
சோர்வூட்டுகிறது.

தேர்தலில் வாக்கு அளிப்பதின் முக்கியத்துவத்தை
அழுத்தமாக உணர வைக்கும் முயலும் வெகுசன
திரைப்படம். தேர்தல் கமிஷன் இதற்காக படத்தயாரிப்பு
நிறுவனத்திற்கு நன்றி கூறலாம்.

இந்த திரைப்படம் உரையாடும் சில ஆதாரமான
விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. ஆனால்
நம்பகத்தன்மையற்ற திருப்பங்கள், கோர்வையற்ற
திரைக்கதை, இடையூறு ஏற்படுத்தும் வணிக
அம்சங்கள் போன்றவற்றால் இந்த திரைப்படம் ஒரு
சலிப்பான அனுபவமாக மாறியிருக்கிறது.

ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் CEO-வாக இருப்பவர் விஜய்.
(சுந்தர் ராமசாமி). தமிழ்நாட்டில் நிகழும் சட்டமன்றத்
தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து
வருகிறார். ஆனால் அவரது வாக்கை எவரோ கள்ள ஓட்டு
போட்டிருப்பதால் அவரால் வாக்களிக்க முடியாமல்
போகிறது.

இதனால் வெகுண்டு எழும் அவர் சட்ட உதவியை நாடுகிறார்.
குறிப்பிட்ட தொகுதியின் வெற்றி தாமதம் ஆவதால்
ஆளுங்கட்சி எரிச்சல் அடைகிறது. இதனால் விஜய்க்கும்
ஆளும் கட்சிக்கும் இடையே மோதல் உருவாகிறது.

தன்னுடைய ‘கார்ப்பரேட்’ மூளையைக் கொண்டு ஒட்டு
மொத்த தேர்தலையே மீண்டும் நடத்துவதற்கான சூழலை
விஜய் உருவாக்குகிறார்.

இதனால் இருதரப்பிற்குமான மோதல் கடுமையாகிறது.
இதில் விஜய் எப்படி மீண்டு வருகிறார், நல்லாட்சிக்கான
அடையாளத்தை சுட்டிக்காட்டுகிறார் என்பதை மீதமுள்ள
காட்சிகள் விவரிக்கின்றன.

இந்த திரைப்படம் உரையாடும் முக்கியமான இரு விஷயங்கள்
இருக்கின்றன. ஒன்று, கள்ள ஓட்டு மற்றும் வாக்கின் சதவீதம்
குறைவாக இருப்பது போன்றவை ஒரு தேர்தலின் வெற்றி,
தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக
இருக்கின்றன.

வாக்கின் சதவீதம் பெருகுவதுதான் மக்களின் விருப்பத்தை
பிரதிபலிக்கும் வழியாக இருக்கும்.

கள்ள ஓட்டின் மூலம் தம்முடைய ஓட்டை பறிகொடுத்த ஒருவர்,
தேர்தல் ஆணைய விதிகளின் மூலம் தம் உரிமையைக் கோர
முடியும். இதனால் வெற்றி, தோல்வியின் தன்மையே மாற
முடியும்.

இரண்டு, தமிழ்நாட்டில் தொடர்ந்து இரண்டு பெரும்
பான்மையான கட்சிகளே மாறி மாறி ஆள்கின்றன.
ஒரு மாநிலம் முழுவதற்குமான பரவலான கட்டமைப்பும்,
செல்வாக்கும் அவற்றிற்குத்தான் இருப்பதாக பொதுசமூகம்
நம்புகிறது.

இதனாலேயே இதர அரசியல் கட்சிகளையோ அல்லது
நம்பகத்தன்மையுள்ள, சமூக நோக்கமுள்ள தனிநபர்
சுயேட்சைகளையோ அது கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

‘எப்படி இருந்தாலும் மெஜாரிட்டியா ரெண்டு பேர்ல
ஒருத்தர்தானே வரப்போறாங்க!’ என்பதை நடைமுறை
உண்மையாக கருதிக் கொள்வதாலேயே அரசியலில்
மாற்றத்தை நிகழ்த்த விரும்புபவர்களுக்கான வாய்ப்பு
அடைபடுகிறது.

——————————–

ஆனால் – ஒவ்வொரு தொகுதியிலும் அரசியல்
பின்னணியல்லாத, சார்பில்லாத தகுதியுள்ள தனிநபர்களை
தேர்வு செய்வதின் மூலம் ஒரு நல்லாட்சியை உருவாக்க
முடியும் என்கிற நேர்மறையான விஷயத்தை சுட்டிக்
காட்டுவதை இந்த திரைப்படத்தின் ஆதாரமான அம்சம்
என்று எடுத்துக் கொள்ளலாம்.

விஜய்யின் வழக்கமான வணிக அம்சங்கள் சற்று கட்டுப்
படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் அவருடைய ரசிகர்கள்
ஒருவேளை ஏமாற்றமடையக்கூடும் என்றாலும் ஒருவகையில்
இது நல்ல மாற்றம்.

ஆனால் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் CEO,
பாதுகாவலர்களை அனுப்பி விட்டு இறங்கி அதிரடியாக
சண்டை போடுவதெல்லாம் வழக்கமான சினிமாத்தனம்.

சர்வதேச நிறுவனங்களை வளைத்துப் போடும், லாபவெறியுள்ள,
முதலாளித்துவ நோக்குள்ள ஓர் ஆசாமி, சமூக மாற்றத்தை
நிகழ்த்துபவராக உருமாற்றம் அடைவதில் அழுத்தம் ஏதுமில்லை.

கீர்த்தி சுரேஷ் ஓரமாக வந்து போகிறார். இவர் எதனால்
விஜய்யுடன் பெரும்பான்மையான காட்சிகளில் ஒட்டிக்
கொண்டு வருகிறார் என்பதற்கான தர்க்கம் எதுவுமில்லை.

பழ. கருப்பைய்யா, ராதாரவி ஆகிய இருவரும் நடைமுறை
அரசியல்வாதிகளின் குணாதிசயத்தை சிறப்பாக பிரதி
பலிக்கின்றனர்.

அதிக பில்டப் தரப்பட்ட வரலட்சுமி சரத்குமாரின் பாத்திரம்
சாதாரணமாக முடிந்து போகிறது. இலவச மிக்ஸியை
தெருவில் தூக்கிப் போடுகிற பொது ஜனமாக ஒரு காட்சியில்
வந்து போகிறார் இயக்குநர் முருகதாஸ்.

இந்த திரைப்படத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின்
பங்களிப்பு இருப்பதை சில காட்சிகளில் வெளிப்படும்
அழுத்தமான வசனங்களின் மூலம் உணர முடிகிறது.

———————————-

“எங்க தலைவனின் முகத்தை திரும்பத் திரும்ப காட்டி
அதை ஒரு வலுவான பிராண்டா மாத்திட்டோம். ஈஸியா
அதை அழிச்சிட முடியாது” என்று ராதாரவி சொல்லும்
இடம் மற்றும் “மக்களின் பிரச்சினைகளை அப்படியே
இருக்க வைத்து வறுமையில் நீடிக்க விட்டால்தான்
தேர்தலின் போது அவர்களின் வாக்குகளை விலை
கொடுத்து வாங்க முடியும்” என்று பழ.கருப்பைய்யா
சொல்லும் இடம் போன்றவை முக்கியமான வசனங்கள்.

ஒரு வாக்கின் முக்கியத்துவத்தை விளக்கும் இடமும் நன்று.
‘எதிர்ப்பில்லாத ஜனநாயகம் ஆபத்தானது’ என்பதும்
வலியுறுத்தப்படுகிறது.

ஏ,ஆர். ரஹ்மானின் இசையில் பாடல்கள் பெரிதாக
கவரவில்லை. ‘ஒருவிரல் புரட்சி’ பாடல் மட்டும் சூழலுடன்
பொருந்திப் போகிறது. பரபரப்பான பின்னணி இசையின்
இடையே வரும் வீணையின் நாதம் போன்றவை
ரஹ்மானின் தனித்துவத்தைக் காட்டுகின்றன.

கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு அவசியமான
பங்களிப்பைத் தந்திருக்கிறது. ராம் மற்றும் லஷ்மணின்
சண்டை வடிவமைப்பில் அமைந்த காட்சிகள் மிரட்டலாக
அமைந்திருக்கின்றன.

ஒரு சமூகப் பிரச்சினையை பிரம்மாண்டமான காட்சிகளின்
பின்னணியில் உரையாடுபவர் என்கிற வகையில்
ஏ.ஆர். முருகதாஸை, ஷங்கரின் நகல் எனலாம். ஆனால்
முருகதாஸ் ஏன் இன்னமும் நகலாகவே இருக்கிறார்
என்பதற்கான உதாரணம், சர்கார்.

பதவிப்பிரமாண நிகழ்ச்சியை கடைசி நிமிடத்தில்
நிறுத்துவது, மறு தேர்தலை மிக எளிதாக நிகழ்த்துவது,
ஒரு மாநிலத்தின் தேர்தல் நிலவரத்தை சில மணி நேரங்களில்
மாற்றுவது போன்றவை நம்பகத்தன்மையற்றும்
கோர்வையில்லாமலும் இருக்கின்றன.

இந்த திரைப்படம் முன்வைக்கும் ஆதாரமான அம்சத்திற்காக,
இதர வணிக விஷயங்களையும், சலிப்பூட்டும் காட்சிகளையும்
பொறுத்துக் கொள்ளலாம்.

——————————
தினமணி

உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்… #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி?

உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி?

எப்போதும் குழந்தைகளைக் கவர்ந்திழுத்துவிடும்
ரோவன் அட்கின்சன் இந்தப் படத்தில் நமக்கு என்ன
வைத்திருக்கிறார்? #JohnnyEnglishStrikesAgain
படம் எப்படி?

`மிஸ்டர் பீன்’ புகழ் ரோவன் அட்கின்சனிற்கு மற்றுமொரு
மணிமகுடமாக இருக்கும் என்று ஆரம்பித்த படத்தொடர்
ஜானி இங்கிலீஷ். படத்தின் கதை இதுதான் என்று
பிரத்தியேகமாக எதையும் கூறிவிட முடியாது.

காட்சிக்குக் காட்சி ஜேம்ஸ் பான்ட் ரக ஸ்பை படங்களைக்
கலாய்ப்பதுதான் இதன் வேலை. கிட்டத்தட்ட ஸ்பூஃப் பட
ரேஞ்சுக்கு இறங்கி அடிப்பதுதான் ஜானி இங்கிலீஷ் ஸ்டைல்.
விமர்சகர்களிடம் திட்டு வாங்கினாலும் வசூலில் ஜானி
இதுவரை டாப்பில்தான் வந்துள்ளார்.

ஜானி இங்கிலீஷ், ஜானி இங்கிலீஷ் ரீபார்ன் ஆகிய இரண்டு
படங்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது பாகமாக
வெளியாகி இருக்கிறது ஜானி இங்கிலீஷ்
ஸ்ட்ரைக்ஸ் அகெய்ன். எப்போதும் குழந்தைகளைக்
கவர்ந்திழுத்துவிடும் ரோவன் அட்கின்சன் இந்தப் படத்தில்
நமக்கு என்ன வைத்திருக்கிறார்?
#JohnnyEnglishStrikesAgain படம் எப்படி?

ரோவன் அட்கின்சன்

ரோவன் அட்கின்சன்

பிரிட்டனில் நிகழும் ஒரு சைபர் அட்டாக், அப்போது அன்டர்கவர்
சீக்ரட் ஆபரேஷனில் இருக்கும் ஏஜன்ட்களின் முழு விவரங்களைப்
பகிரங்கமாக உலகுக்குத் தெரியப்படுத்துகிறது.

இதை நிகழ்த்திய ஹேக்கரை கண்டுபிடிக்க ஓய்வுபெற்ற
ஏஜன்ட் ஒருவனின் உதவியை பிரதமர் (எம்மா தாம்ப்ஸன்) நாட
வேண்டிய நிலை. தன் ஓய்வு வாழ்க்கையில் ஒரு பள்ளியில்
புவியியல் ஆசிரியராக இருக்கும் முன்னாள் ஏஜென்ட்
ஜானி இங்கிலீஷிடம் (ரோவன் அட்கின்சன்) இந்தப் பொறுப்பு
ஒப்படைக்கப்படுகிறது.

டிஜிட்டல் உலகில் ஜித்தனாக இருக்கும் அந்த ஹேக்கரை நெருங்க,
முழுக்க முழுக்க டிஜிட்டல் கேட்ஜெட்ஸ் எதுவுமின்றி, பழங்கால
டெக்னிக்கல் சமாசாரங்கள் கொண்டு, தன் பழைய உதவியாளர்
பஃப் (பென் மில்லர்) உதவியுடன் களமிறங்குகிறார்
ஜானி இங்கிலீஷ். மிஷனில் வெற்றி பெற்றாரா?

படத்தின் மிகப்பெரிய பலம் ரோவன் அட்கின்சன்.
தட்டுத் தடுமாறும் உடல்மொழி, அப்பாவியாகச் செய்யும்
குறும்புத்தனங்கள், அறியாமலே பல செயல்கள் புரிந்து சிக்கலில்
மாட்டிக்கொள்வது, இறுதியில் அது சரியான ஒன்றாகவும் முடிவது
என ஜானி இங்கிலீஷ் தொடரின் முந்தைய படங்களின்
அதே டெம்ப்ளேட்தான் இங்கேயும்.

இருந்தும் அதில் கொஞ்சம்கூட தளர்ச்சி இல்லை. குறிப்பாக
அதீத ஆற்றல் தரும் மருந்தை உட்கொண்டு, மீண்டும் பழைய
மிஸ்டர் பீன் நடனத்தை ஆடும் அந்தக் காட்சி, தியேட்டரையே
கலகலக்க வைக்கிறது.

முன்னர், தனக்கு வயதாகிவிட்டதால் குழந்தைகளின் சூப்பர்
ஸ்டாரான மிஸ்டர் பீனாக இனி நடிக்கப் போவதில்லை என்று
தடாலடியாக அறிவித்து அனைவரையும் சோகக்கடலில்
ஆழ்த்தினார்.

ஆனால், இந்த மிஸ்டர் பீன் நடனத்தை மீண்டும் திரையில்
பார்ப்பவர்கள், மனிதர் ஏன் மிஸ்டர்.பீனிற்கு பை-பை சொன்னார்
என்று யோசிப்பார்கள். உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்!

Johnny English Strikes Again

Johnny English Strikes Again

செல்போன் திருடுவதற்காக ஹோட்டலில் அதகளம் செய்வது,
கப்பலில் காந்த ஷூக்கள் மாட்டிக்கொண்டு திரிந்து
வகையாகச் சிக்கிக்கொள்வது, விர்ச்சுவல் ரியாலிட்டி (VR)
ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு ஒரே இடத்தில் நிற்பதாக
நினைத்துக்கொண்டு தெருதெருவாகத் திரிவது,

இறுதிக்காட்சியில் பழங்கால போர் உடையை அணிந்து
கொண்டு திண்டாடுவது எனக் குறிப்பிட்டு சொல்லும்
படியான நகைச்சுவை காட்சிகள் நிறையவே உண்டு.

ஜானி இங்கிலீஷின் உதவியாளராக வரும் பஃப்
கதாபாத்திரத்துக்கு மற்ற இரண்டு படங்களில் என்ன
வேலையோ, அதேதான் இந்தப் படத்திலும்.

ஜானி இங்கிலீஷ் முட்டாள்தனமாகச் செய்யும்
விஷயங்களுக்கு நடுவே ஓர் சாதாரண அதிகாரியாக இவர்
செய்யும் விஷயங்கள்தாம் துப்புத் துலங்க உதவும். இறுதியில்
ஜானியின் கிறுக்குத்தனங்கள் அதனோடு இணைந்து
பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும்.

அதில் சிறிதும் மாற்றம் செய்யாமல் இந்தப் படத்தையும்
கடத்துகிறார்கள்.

Johnny English Strikes Again

 

டிஜிட்டல் மயமாகிவிட்ட உலகில் ஏதோ ஒரு மெமரியில்
அடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரின்
டேட்டாக்களும் விலைமதிப்பானவை.

அதை வைத்துப் பணம் பண்ணும் சிலிக்கன் வேலி
நிறுவனங்கள், பவருக்கும் (அதிகாரத்துக்கும்) ஆசைப்
பட்டால் என்ன நடக்கும் என்ற சிரீயஸான ஒன்லைன்
கொண்ட படம் இது.

ஆனால், ரோவன் அட்கின்ஸனின் ஜானி இங்கிலீஷ்
கதாபாத்திரத்தாலும், முடிந்தவரை நகைச்சுவை சேர்த்து
ஜனரஞ்சகமான படமாகத் தர வேண்டும் என்ற
முனைப்பாலும் காமெடி கதையாக திரையில் விரிகிறது
ஜானி இங்கிலீஷ் ஸ்ட்ரைக்ஸ் அகெய்ன்.

அதிலும் எந்நேரமும் தன்னுடைய செயற்கை நுண்ணறிவுடன்
பேசிக்கொண்டு, எல்லாவற்றையும் நொடியில் முடித்துவிடும்
அந்த வில்லன் கதாபத்திரத்தை ஃபேஸ்புக் நிறுவனர்
மார்க் சக்கர்பெர்க் போன்றே வடிவமைத்து இருக்கிறார்கள்.

அனலாக் (டிஜிட்டலல்லாத பழங்கால டெக்னாலஜி முறை)
டெக்னாலஜி முறையால் யாருக்கும் எந்தப் பாதிப்புமில்லை.
அதை வைத்து டிஜிட்டல் சக்தி படைத்த வில்லனை தவிடு
பொடியாக்கலாம் என்பதெல்லாம் சரிதான்.

ஆனால், அதற்காக எல்லா டிஜிட்டல் கேட்ஜட்ஸும்
குற்றங்களுக்குத்தான் உதவுகிறது, அதை கன்ட்ரோல் செய்யும்
பலம் மற்றும் பணம் படைத்தவர்கள் அனைவரும்
தீவிரவாதிகள்தான் என்பது போன்ற தொனியைத்
தவிர்த்திருக்கலாமே?

Johnny English Strikes Again

ஜேம்ஸ் பாண்ட் பாணி இசை காமெடிக்கு என்றாலும்,
ஜானி இங்கிலீஷுக்கு அது ஒரு மாஸ் விஷயமாக
நன்றாகவே க்ளிக்காகி இருக்கிறது.

ஸ்பை படங்களில் பறந்து பறந்து சுழல வேண்டிய கேமரா,
இதில் காமெடி என்பதால் சற்று அடக்கியே வாசித்திருக்கிறது.
கிளைமாக்ஸில் உலக நாடுகள் மாநாடு நடக்கும் இடத்துக்கு
அப்படி ஓர் இடத்தை செட் போட்டதையெல்லாம் காமெடி
படம் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் கடந்து போக
வேண்டியிருக்கிறது.

ஜேம்ஸ் பாண்ட்டை கலாய்த்து படம் எடுப்பது எல்லாம்
ஓகேதான். ஆனால் அதற்காக ஜானி இங்கிலீஷ் பயன்
படுத்தும் அத்தனை விஷயங்களில் ஒன்றில்கூட லாஜிக்
இல்லாமல் இருப்பது ஏனோ? ஸ்பூஃப் படம்தான்,

அதற்காக ஒரு நாட்டின் பிரதமர், சந்தேகத்தின் வலையில்
இருக்கும் டிஜிட்டல் வில்லனிடம் நாட்டின் சாவியையே
கொடுக்க முன் வருவதெல்லாம், குழந்தைகள்கூட ஏற்றுக்
கொள்ள மாட்டார்கள் பாஸ்!

எது எப்படியோ குழந்தைகளை மட்டுமல்லாமல் நம்மையும்
வெடித்துச் சிரிக்க வைத்து வீட்டுக்கு அனுப்புகிறார்
இந்த ஜானி இங்கிலீஷ். அதற்காக இவரின் சாகசங்களை
திரையரங்கில் தாராளமாகப் பார்க்கலாம்.

——————————–
ர.சீனிவாசன் – விகடன்
——————-

நகைச்சுவை நடிகர் சார்லிக்கு முனைவர் பட்டம்..!

IMG_2058.jpg

திரைத்துளிகள்

மியா ஜார்ஜ் மலையாள படங்களில் நடித்துக்
கொண்டிருக்கிறார்.
அவர் கைவசம் புதிய தமிழ் படங்கள் எதுவும் இல்லை!

————————————-

அமலாபாலுக்கு திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்த
படங்கள்

விஜய் நடித்த ‘தலைவா,’ விக்ரம் நடித்த ‘தெய்வ திருமகள்!’

—————————————-

அசைவ உணவுகளையே விரும்பி சாப்பிட்டு வந்த தமன்னா,
இப்போது சைவத்துக்கு மாறிவிட்டார்.
அசைவ உணவுகள் பக்கம் அவர் திரும்புவதே இல்லையாம்!

——————————————-

‘வட சென்னை’ படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயமாக
தயாராகும்…
அதில், தனுஷ் கதாநாயகனாக நடிப்பார் என்று படக்குழுவினர்
கூறுகிறார்கள்!

——————————————-

‘நான் ஈ’ பட நாயகன் நானி கதாநாயகனாக நடிக்கும்
ஒரு புதிய தெலுங்கு படத்தில், சத்யராஜ் நடித்து வருகிறார்!

———————————————
-தினத்தந்தி

« Older entries Newer entries »