தமிழில் கம்பீரம் படத்தில் நடித்தவர் ராக்கி சாவந்த்.
என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம்
ஆடி உள்ளார். இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கும் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய
தனுஸ்ரீதத்தாவுக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர்
குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் சண்டிகாரில் உள்ள பஞ்சபுலா என்ற இடத்தில்
நடந்த பெண்கள் மல்யுத்த போட்டியை காண ராக்கிசாவந்த்
சென்று இருந்தார்.
ஸ்டேடியத்தின் முன்பகுதியில் உட்கார்ந்து போட்டியை ரசித்தார்.
மல்யுத்தத்தில் எல்லோரையும் வென்ற ரொபல் என்ற வீராங்கனை
பார்வையாளர்களை நோக்கி என்னுடன் மோத தைரியம் உள்ள
பெண் யாராவது இருக்கிறீர்களா? என்று சவால் விடுத்தார்.
உடனே ராக்கி சாவந்த் மல்யுத்த வளையத்துக்குள் குதித்து
மோதுவதற்கு நான் தயார் ஆனால் என்னைபோல் உன்னால் நடனம்
ஆட முடியுமா? என்று எதிர் சவால் விடுத்தார்.
அதை ரொபல் ஏற்றதும் இருவரும் மோதினார்கள்.
சில நொடிகளிலேயே ராக்கி சாவந்தை ரொபல் தனது தலைக்கு
மேலே தூக்கி வேகமாக தரையில் அடித்தார். இதில் ராக்கி
சாவந்துக்கு காயம் ஏற்பட்டு மயக்கமானார். நிகழ்ச்சியை ஏற்பாடு
செய்தவர்கள் பதறியபடி ஓடிப்போய் முதல் உதவி சிகிச்சை
அளித்தனர்.
கைத்தாங்கலாக அழைத்துச் சென்று தனியார் ஆஸ்பத்திரியில்
சேர்த்தனர். ராக்கி சாவந்துக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக
கூறப்படுகிறது.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு
சவால் விட்டபடி ரொபல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி விட்டு
ஸ்டேடியத்தில் இருந்து வெளியேறினார். இது பரபரப்பை
ஏற்படுத்தியது.
–
——————————-
தினத்தந்தி