இப்படி இருக்கலாம் – கவிதை

வானவில்லுக்குள்
வண்ணம் தெரிந்தது
யாரைதை அள்ளித் தெளித்தது?

பூவுக்குள்ளே ஒரு
புதுமணம் இருந்தது
புகும்வரை எங்கே இருந்தது?

உடலுக்குள் காற்று
உட்சென்று வந்தது
வந்தது, யாரதைத் தந்தது?

சிப்பிக்குள் ஒரு
வெண்முத்து இருந்தது
வயிற்றில் யாரதைத் தந்தது?

உயிருக்குள்ளே ஓர்
உயிராய் நுழைந்தது
உள்வர யாரதை அழைத்தது?

ஒன்றாய் இணைந்த
உயிரும் உடலும்
ஒன்றென எப்படி ஆனது?

ஏனென்று தெரியாமல்
எத்தனை விந்தைகள்
இத்தரைமீது நிகழ்வது?

இயற்கை என்றிதை
நாத்திகர் சொல்லியும்
இறைவனின் நெஞ்சம் மகிழ்ந்தது!

இல்லை இறையெனச்
சொல்லியும் ஏனில்லை
இறைவனுக்குள் ஒரு வருத்தம்?

இயற்கை என்பதே
இறைவனுக்கின்னொரு
பெயர்தான் என்பதால் இருக்கும்!

—————————-
ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன்
நன்றி- அமுதசுரபி

பிள்ளையாருக்கு லட்டு ஊட்டிய அனன்யா…! – கவிதை

IMG_20181108_172022.jpg

வாழ்கைக்கு எத்தனை மாத்திரைகள்

IMG_1899.jpg

சோ.சுப்புராஜ்
தாமரை- செப்-2018

வாழ்கைக்கு எத்தனை மாத்திரைகள்

தெருக்குறள்—வெள்ளத்துப்பால்

தமிழில் ஒன்றேமுக்கால் அடியில் டிவிட்டரை அந்த காலத்துலேயே தட்டிவிட்ட
வள்ளுவர் இன்று இருந்து சென்னையை உலுக்கிய மழைவெள்ளத்தை
அனுபவித்திருந்தால் எந்த மாதிரி குறள் எழுதியிருப்பார்…ஒரு கற்பனை
————————————————————————————————–


> மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
> ‘போட்’டினில் பின் செல்பவர்
> ———-
> வெள்ளப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
> வேளச்சேரியில் வீடு கட்டியோர்
> ———————
> மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார்…இளைத்தார்
> கீழ்போர்ஷனில் குடி இருப்ப்வர்.
> ————————-
> நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக.
> ஜலம் உள்ளே வருமாவென !
> —————————–
> சம்சாரம் தந்திடுமே துன்பம் புயல்மழையால்
> மின்சாரம் போயினும் அஃதே !
> ————————-
> வெள்ளத்தால் வந்திடும் துயரம் – நல்ல
> உள்ளத்தோர் உதவா விடின்
> —————————-
> நீர்மட்டம் ஏறி வீட்டினில் புகுந்திடின்
> ஊர்வனவால் பெருந்தொல்லை காண்.
> ———————————
> ஏரிப் படுகையில் வீட்டைக் கட்டினால்
> நாறிடும் பிழைப்பு என்றறி.
> ———————————————-
> தண்ணீராய் செலவழித்து கட்டிய வீடுதனில்
> தண்ணீரே நுழைந்தது பார்,
> ———————————————-
> ஆஸ்தியென ஆசையாய் கட்டின வீடெல்லாம்
> நாஸ்தி ஆனதே சோகம்
> ————————————————————
> இருளில் தவிப்பது துன்பமதனினும் துயரம்
> பொருள்கள் பாழாகும் நிலை
> =========================================

-படித்ததில் பிடித்தது
>

கற்பதெப்போ? – கவிதை

கற்பதெப்போ?

வானவில் வளைவில் எழும்ஏழ் நிறங்களை
வாகாய்க் குழைப்பவன் நீயா?
கூனல் இளம்பிறைச் சில்லில் அழகினைக்
கூட்டும் சிற்பியும் நீயா?

வண்ணத்துப் பூச்சியின் றெக்கையைப் பிடித்தே
வர்ணம் தீட்டுவோன் நீயா?
சுண்ணமே தீட்டாது புறாவினில் வெண்மையைச்
சுடரவே விட்டவன் நீயா?

என்னஓர் விந்தையும் இஃதுபோல் செய்யாமல்
எத்தனாய்ப் பீற்றல்கள் நெய்பவனே!
சின்னதோர் வேலைக்கும் ஊழல் பெரிதாகச்
செய்திடும் தன்னல மானிடனே!

மேகம் கறுக்கையில் மயில்நடம் ஆடியே
மெலிதாய் மகிழ்வினை ஊட்டுதல்போல்
தாகம்கொள் ஏழைக்கு நீரேனும் தந்துநீ
தளர்ச்சி குறைத்துக் களித்ததுண்டா?

பாதையில் போகையில் வாகனம் மோதினால்
பார்த்துநீ ‘அவரை’யே காத்ததுண்டா?
சோதனைச் சிக்கலில் மாட்டிய ஏழைக்குச்
சுணங்காது உதவிகள் செய்ததுண்டா?

பாம்பினைக் கண்டதும் ஓயாமல் கத்தும்
பருத்த குரங்கதன் செய்கையைப்போல்,
தேம்பிப் புலம்பிடும் பாட்டிபோல் பேசும்நீ
‘தேவனாய்’ உயர்–வழி என்று கற்பாய்?

——————————-
by ChandarSubramanian
http://kaviyogi-vedham.blogspot.com/

ராட்டினம் சுற்றுகிறது எறும்பு…!

IMG_2029.jpg

போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்

IMG_2027.jpg

எரிக்க மனமில்லை
வரட்டியில் ஒட்டியிருந்தது
அம்மாவின் விரல்கள்..!

——————————–
IMG_2028.jpg

தேர்வில் தோல்வியுறும்
போதெல்லாம்
நினைவில் தோன்றி
மறைகிறான்
வரலாற்று கஜினி!

———————————-
கபிஸ்தலம் கே.அருள்சாமி

பழுது – கவிதை

நெடுநாளாய் நீர்
ஒழுகிக்கொண்டிருந்த
தெருக்குழாயொன்றை
சரிசெய்து திருப்தி
கொள்கிறேன்.
ஏமாற்றத்தோடு
திரும்பிச் செல்கிறது
ஒழுகும் நீரில்
தாகம் தணித்துவந்த
குருவிக் கூட்டம்

———————–

– சாமி கிரிஷ்
குங்குமம்

இறைச்சி கோழிகள் பற்றிய குறிப்புகள்

16.jpg

இறைச்சிக் கடைக்காரனின்
சைக்கிளில் தலைகீழாகத்
தொங்கியபடி
கோழிகளின் பயணம்.

கோழியின் கண்களில்
வழியாது தேங்கி நிற்கும் பயம்.
நான் இறைச்சிக்காகக்
கொல்பவன் கண்களை
ஒருபோதும் நோக்குவதில்லை.

நான் இறைச்சியை விற்பவன்
என் வரையில்
கண்களுக்கு எடையில்லை.
நான் புசிப்பவன்
எனக்கு கண்களே
தேவையில்லை.

நான் கவிதை எழுதுபவன்
எனக்கு கோழியோ
கண்களோ பொருட்டில்லை
அவை உள்ளதான
பாவனை போதும்.

மெய்யில்
சிறகுகள் விரிக்காத
கோழிகளுக்கென யாருமில்லை

————————-

– ஷோபனா நாராயணன்
குங்குமம்

« Older entries Newer entries »