
பார்வைக்கு பெயரென்ன…{கவிதை}
நவம்பர் 13, 2018 இல் 9:05 முப (கவிதை)
* தொலை தூரத்திலும்
நெருக்கத்திலும்
என்னை கடந்து
செல்கையிலும்…
* எனக்குள் ஆழமாய்
ஊடுருவும்
அந்த பார்வையால்
எடை குறைகிறது
என் இதயத்தின்
இன்னொரு பகுதி…
* எந்த புத்தகத்தை
புரட்டுவது…
உன் விழிகள் பேசும்
மொழிகளுக்கு
அர்த்தம் தேட…
* உன் கண்களுக்குள்
நடக்கும்
என்னைப் பற்றிய
ஆராய்ச்சியால்…
குழம்பி கிடக்கிறது மனசு…
தேர்வு எழுதும்
மாணவன் போல…
* உன்னைப் பார்க்காமலே
என்னால் உணர முடிகிறது…
நீ, என்னை
பார்த்துக் கொண்டிருக்கிறாய்
என்பதை…
* உடலிலுள்ள நரம்புகளை
உருவி…
ரத்தத்தை உறிஞ்சும்…
அந்த பார்வைக்கு
பெயரென்ன?
— அ.கென்னடி, லால்குடி.
வாரமலர்
அடுத்த தலைமுறைக்கு…கவிதை
நவம்பர் 11, 2018 இல் 6:57 முப (கவிதை)
நமக்குப் பின்
நம் வாரிசுக்கென
எதையெல்லாமோ
சேர்த்து வைக்கிற
நம் வாழ்வில்…
–
வாரிசுகளுக்கு
எதையெல்லாம் அவர்கள்
எடுத்துச் செல்ல வேண்டுமென
சொல்லிக் கொடுக்கிறோமா…
–
அதையும் இதையும்
செய்யாதே என
எதிர் மறையாய்
சொல்வதை விட்டு
அன்பாய் இரு
அடுத்தவரிடம்
மனம் விட்டுப் பேசி
மகிழ்ந்து
இதயம் விரி…
என விவரித்து
சொல்லியிருக்கிறோமா…
–
தாத்தா – பாட்டி
என நம் முன்
தலைமுறையினருக்கு
வணக்கம் சொல்லி
அவர்களை
மரியாதை செய்திட
மனதில் பதித்திருப்போமா…
–
அங்கே போகாதே
இங்கே போகாதே என
விரட்டும் நாம்
கோவிலுக்கு போ
நல்ல நண்பர்களுடன்
விளையாடு…
அதிகாலை கண் விழித்து
ஆதவனின் ஆதிக்கத்தை
காண் என
அருமையான செய்திகளை
அவர்களிடம் கடத்திச்
சென்றிருப்போமா…
–
அந்த நற்செயல்களை
அவர்களின் சந்ததிக்கு
எடுத்துச் செல்லும் கடமையை
அவர்களுக்கு புகட்டியிருப்போமா…
–
இயற்கை செல்வங்களை
இனிய வயல்வெளி
விவசாயத்தை…
இங்கேயுள்ள கனிம வளங்களை
சுகாதரத்தையும்
துாய்மையையும்
மழை நீரையும்
காடுகளையும் அதன்
உயிரினங்களையும்!
–
நாம் உணர்ந்து
வாழ்ந்தது போக அவர்கள்
தங்கள் தலைமுறைக்கு
கடத்திச் சென்றிட
மனிதப் பிறவியின்
பெருமையை
மாண்பு படுத்தி எடுத்தியம்பி
மகிழ்ந்திடுவோமா!
–
————————–
ரஜகை நிலவன்,
மும்பை.
நன்றி-வாரமலர்