ஒளிமயமான எதிர்காலம் – சுகிசிவம்

 

images (1).jpg

ஒரு சின்ன கதை. அவர் ஒரு ஞானி.
அவரைப் பல இடங்களில் தேடி அலுத்த ஒருவர் முடிவாக
அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டார்.

அவசர அவசரமாக அவர் தங்கியிருக்கும் வீட்டின் கதவை
அடித்தார். நெடுநாள் தேடிய எரிச்சல் மற்றும் பரபரப்பு
காரணமாக வேகவேகமாக அவர் இருந்த வீட்டுக் கதவை
டமால் என்று நெட்டித் தள்ளினார்.

பரபரப்புடன் வீட்டுக்குள் நுழைந்தவர் செருப்பைக் கழற்றும்
பொறுமைகூட இன்றி இங்கொன்றும் அங்கொன்றுமாகக்
கழற்றி விட்டு எறிந்தார். செருப்புகள், சுவரில் மோதி சரிந்து
விழுந்தன.

தட தட வென்று ஞானி இருந்த அறைக்குள் நுழைந்தவர்
தடாலென அவரது காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுதார்.
தமக்கு வாழ்க்கை பற்றிய ஞானம் தரவல்ல குரு அவரே என்று
கண்டறிந்ததாகப் பெரிதாக அலறினார்.

ஞானியோ அவரைச் சட்டை செய்யாது முகத்தைத் திருப்பிக்
கொண்டார். மிகுந்த மதிப்போடு குருவைத் தேடிவந்த தம்மை
அவமதிப்பது சரியா என்று ஞானியைக் கேட்டார் வந்தவர்.

ஞானி தீர்க்கமாக வந்தவரை உற்று நோக்கினார்.
நீ எங்கு என்னை மதித்தாய்? உன்னை நான் எப்படி மனமார
வரவேற்க முடியும். உன் செய்கைகளை நான் கவனித்துக்
கொண்டேதான் இருக்கிறேன்.

அந்த வாசல் கதவுகளை நீ ஏன் அவமதித்தாய்.
அவை உனக்கு என்ன தீங்கு இழைத்தன? எவ்வளவு காலமாக
இந்த வீட்டை அவை காவல் காத்து வருகின்றன.

கடமையைச் சரியாக ஆற்றும் கதவுகளை நோகும்படி நெட்டித்
தள்ளினாயே அது சரியா?

உன்னை வெப்பத்திலிருந்தும் முள்ளிலிருந்தும் பாதுகாத்த
செருப்புகளை எவ்வளவு அலட்சியமாக விட்டெறிந்தாய்?

பண்பாடற்றவன் நீ! நன்றி இல்லாதவன் நீ! அந்தச் செருப்புகள்
சுவரில் முட்டிய போது அவை எவ்வளவு அவமானப்பட்டிருக்கும்
என்பது உனக்குத் தெரியுமா?

எவ்வளவு வலியை உணர்ந்திருக்கும் தெரியுமா? போ… போய்…
செருப்பிடமும் கதவிடமும் மன்னிப்புக் கேட்டு விட்டு வா…
அதன்பிறகு வேண்டுமானால் உன்னோடு பேசுகிறேன்”
என்றார் ஞானி.

உங்களுக்கென்ன பைத்தியமா? செருப்புக்கும் கதவிற்கும்
உயிருண்டா என்ன? அவற்றிடம் மன்னிப்பு கேட்க… என்றார்
வந்தவர்.

உன் கோபத்தை அவற்றின் மீது காட்டும் போது அவற்றை
உயிருள்ளவை போல நினைத்துத் தானே காட்டினாய்.
அப்போது உயிருள்ளவை போல நடத்தலாம் என்றால்
மன்னிப்பும் கேட்கலாம் தப்பில்லை… போ… போய் உன்
தவறுக்காக செருப்புகளிடமும் கதவுகளிடமும் மன்னிப்பு கேள்”
என்றார் ஞானி.

வந்தவருக்கோ ஞானியிடம் காரியம் ஆக வேண்டும்.
ஞானியைத் திருப்தி செய்வதற்காகவாவது மன்னிப்புக்
கேட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழியின்றி வேண்டா
வெறுப்பாகச் செருப்புக்களிடமும் கதவுகளிடமும் மன்னிப்பு
வேண்டினான்.

ஆனால், அப்படி கேட்கும்போதே தன் மனத்தில் இதுவரை இருந்த
க்ரோதம், பாரம் குறைவதை உணர்ந்தான். தான் பாரமான
மண்ணாக இருந்ததில் இருந்து லேசான ஆகாயமாக மாறியதை
அனுபவித்தான். அவனுக்கு ஆனந்தக் கண்ணீர் வரத் தொடங்கியது.

முற்றிலும் வித்தியாசமானவனாக வந்து ஞானியை வணங்கினான்.
ஞானி அன்புடன் மகனே. என்று அழைத்து இறுகத் தழுவினார்.
அவனுக்கு வானம் வசப்பட்டது. ரோஜா கரம் கொடுத்தது.

———————————-
நமது நம்பிக்கை வலைத்தளத்தில் படித்தது

உடல் உழைப்பு கேவலமானது அல்ல. ..

ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக
இருந்த சமயம் நிதானமாகத் தமது ஷூவுக்கு பாலிஷ்
போட்டு அதன் அழகை ரசித்துத் கொண்டிருந்தார்.

அவருடன் வெளியில் போக வேண்டி புகழ்பெற்ற
பதவியாளர் ஒருவர் அங்கு வந்தார். அதிர்ச்சியுடன்,
“என்ன மிஸ்டர் லிங்கன்… உங்கள் ஷூவுக்கு நீங்கள்
பாலிஷ் போடுகிறீர்கள்?” என்று இழுத்தார்

. “”ஏன்… நீங்கள் வேறு யார் ஷூவுக்கு பாலிஷ் போடுவீர்கள்?”
என்று கேலியாகத் திருப்பினார் லிங்கன்.

உடல் உழைப்பு கேவலமானது அல்ல. உழைக்க மறுப்பவர்கள்
சோம்பேறிகள்.

பிறர் உதவியை எப்போதும் எதிர்பார்ப்பவர்கள்
ஒருவகையில் பிச்சைக்காரர்களே!

உழைப்பை நேசிப்பவர்களுக்குப் பொற்காலம் காத்திருக்கிறது.
வெற்றி நிச்சயம்.

———-சுகி சிவம் சொற்பொழிவிலிருந்து

அனுமனிஸம்… இதை நீ புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்!

உடம்பைப் பலப்படுத்தினால் பாதி வெற்றி.
வாழ்வின் இயக்கத்தை விளங்கிக் கொண்டால் மீதி வெற்றி.

இதற்கு மேலும் சோர்வு தாக்காமல் இருக்க அருமையான
யோசனை சொல்கிறேன். குறித்துக் கொள்ளுங்கள்.

ராமாயணத்தில் அனுமனுக்கு “மகா உத்சாகாய’ என்று ஒரு
நாமம் உண்டு. மிகவும் உற்சாகம் – சுறுசுறுப்பு உள்ளவன்
என்று பொருள்.

அவன் சோர்ந்த இடங்கள் இல்லையா? உண்டு.
சீதையைத் தேடிப் போகும்போது கடல் கடக்க வேண்டிய இடம்.

எல்லோரும் நம்மால் முடியாது என்று சோர்ந்து சுருண்டபோது
அனுமனும் சுருண்டு சோர்ந்தான். எவ்வளவு பெரிய மனிதனுக்கும்
டிப்ரஷன் வரும் என்பதற்கு இதுவே அடையாளம்.

அப்போது ஜாம்பவன்தான் அனுமனைத் தட்டி எழுப்பினார்.
“அடேய்… இந்தக் கடலைக் கடப்பது உனக்கு சிறிய வேலை”
என்று சொல்லிச் சோர்வை விரட்டினார்.

அனுமனது நம்பிக்கைத் தீயை ஊதி ஊதி உலை வைத்தார்.
விஸ்வரூபம் எடுத்து விண்ணில் பாய்ந்தான் ஆஞ்சநேயன்.

என்ன பொருள்? நாம் சோர்வடையும்போது நமது பலத்தை
நினைவூட்டும் நல்ல நண்பர்கள் நம்கூட இருந்தால் வெற்றி
நிச்சயம்.

தன்னம்பிக்கை தூண்டப்பட்டால் வெற்றி நிச்சயம்.
அதையும் தாண்டிக் கடலில் பறக்கும்போது அனுமனுக்கு மீண்டும்
சோதனை. சோர்வு. எப்படி?

மைந்நாக மலை. அங்கார தாரை, சுரசை என்ற மூவரால்
தொடர்ந்து தொல்லைகள் வந்தன.

தன்னம்பிக்கை தள்ளாடியதும் கடவுள் நம்பிக்கைக்குத்
தாவுகிறான் அனுமன். ராம நாமத்தை ஜபித்தால் துன்பம் நீங்கும்
என்று “ராம என எல்லாம் மாறும்’ என்று ராம நாமம்
சொல்லுகிறான்.

கவலையைக் கடந்து இலங்கையை மிதிக்கிறான்.
தன்னம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் ஒன்றுக்கொன்று
எதிரி அல்ல. அரிசியும் கோதுமையும் மாதிரி.

ஒன்று இல்லாதபோது மற்றொன்றைப் பயன்படுத்திக்
கொள்ளலாம். காரில் மலைப்பாதையில் போகிறபோது
ஒரே கியரில் வண்டி போகுமா?

போகாது. கியர் மாற்றி கியர் போட்டுக் காரை மலைமீது
ஓட்டவில்லையா? அப்படித்தான்.

வாழ்க்கைப் பாதையும் மலைப் பயணம் மாதிரிதான்.
கியர் மாற்றி கியர் போடுகிற மாதிரி தன்னம்பிக்கையையும்
கடவுள் நம்பிக்கையையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்திப்
பயணத்தை நிகழ்த்தலாம்.

“தன்னம்பிக்கை உடையவன் கடவுளைக் கும்பிடக் கூடாது…
கடவுள் நம்பிக்கை உள்ளவன் சுயமுயற்சி செய்யமாட்டான்…’
என்கிற வெட்டி விஷயங்களை வெளியே வீசிவிட்டு
முன்னேறுகிற வழியைப் பாருங்கள்.

தன்னம்பிகையோடு இரு… அது தளரும்போது தட்டிக்
கொடுத்து முறுக்கேற்றும் நண்பர்களைப் பெறு…

அதற்கும் வழியில்லையா? இறை நம்பிக்கையைப் பயன்படுத்து.
தயக்கம் இன்றி மாறி மாறி இவற்றைப் பயன்படுத்தி
வெற்றியைக் குவிக்கப் பார்.

இதுவே அனுமனிஸம்… நண்பனே…
இதை நீ புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்!

———————————————–
சுகிசிவம்
வெற்றி நிச்சயம் – நூலிலிருந்து

நாமாகச் சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

“சமைத்துப்பார்’ புத்தகத்தை வைத்துக் கொண்டு
ஒரு பெண் பூரி செய்தாள்.
புத்தகத்தில் போட்டிருந்தபடியே நடந்து கொண்டாள்.

“”எண்ணெய்ச் சட்டியை அடுப்பில் வை.” வைத்தாள்.

“”பிசைந்த கோதுமை மாவை உருண்டையாக உருட்டிக் கொள்”.
உருட்டிக் கொண்டாள்.

“”பலகையில் வைத்து வட்ட வட்டமாக இட்டுக் கொள்”.
இட்டுக் கொண்டாள்.

“”ஐந்து நிமிடம் கழித்து, வட்டமாக இட்ட பூரியை எண்ணெயில்
போடு”. போட்டாள்.

பூரி உப்பிக் கொண்டுவரும் என்று புத்தகத்தில் போட்டிருந்தது.
ஆனால் அவளுக்குப் பூரி உப்பவேயில்லை.

ஏன்? அடுப்பு பற்றவைக்கவே இல்லை.

ஏன்? அடுப்புப் பற்றவை என்று புத்தகத்தில் போடவேயில்லை.
புத்தகத்தில் போடாவிட்டாலும் அடுப்பைப் பற்ற வைக்காமல்
சமையல் செய்ய முடியுமா?

சமைத்துப்பார் புத்தகத்தில் ஒவ்வொரு ஐட்டங்களின் முன்னாலும்
அடுப்பைப் பற்ற வை என்று போடுவார்களா?

எல்லா விஷயங்களையும் கற்றுத் தரமாட்டார்கள்.
நாமாகச் சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

—————————————————
சுகிசிவம்
வெற்றி நிச்சயம் – நூலிலிருந்து

உள்வாங்கும் திறனை அதிகரித்தால் வெற்றி நிச்சயம்.

images (2).jpg

சீன தேசத்தில் ஒரு அரசர். வித்யாசமான பேர்வழி.
மாமிச உணவின் ரசிகர். அதிலும் மாட்டு மாமிசம் மனிதருக்கு
மிகமிக இஷ்டம். அவரே தினம்தோறும் மாட்டைத்
தேர்ந்தெடுப்பார். அவர் எதிரிலேயே அந்த மாடு வெட்டப்படும்.
அந்த மாட்டை வெட்டுகிறவரும் ஒரே நபர்.

தினம்தோறும் அரண்மனைக்கு வருவார்.
அரசர் தேர்ந்தெடுத்த மாட்டை ஒரே வெட்டில் கோடாரியால்
வெட்டி விடுவார். தலை வேறு, உடல் வேறாகிவிடும்.
எந்த மாட்டையும் அவர் அரைகுறையாக வெட்டி மறுமுறை
வெட்டியதாக வழக்கமே இல்லை.

அரசருக்கு ஒரே ஆச்சரியம்.
“”இந்தக் கோடாரியைத் தினம்தோறும் சாணை பிடிப்பாயா?”
என்று கேட்டார். “”இல்லை… சரியாக வெட்டுகிற பாணியில்
வெட்டினால் கூர் மங்காது” என்றார்.

“”அது என்ன சரியான பாணி?” என்றார் அரசர்.

முதல் நாள் இடது கைப் பக்கமாகச் சரித்துக் கொண்டு
வெட்டுவேன். அடுத்த நாள் வலது கைப் பக்கமாகச் சரித்துக்
கொண்டு வெட்டுவேன். இப்படி மாறிமாறி வெட்டுவதால்
இருபக்கமும் சமமான கூர்மையுடன் இருக்கும்.

அதுமட்டுமல்ல… வெட்டுகிறபோது கொடுக்கிற அழுத்தம்
ஒரே மாதிரியாக இருக்கும். மாறாது.
அதனால் இடது, வலது என்று மாறி மாறி வெட்டினால் கூர்
தீட்டப்பட்ட மாதிரி ஆகிவிடும்” என்றார் மாட்டை வெட்டுபவர்.

“”இந்தக் கலையைக் கற்றுத் தர முடியுமா?” என்று கேட்டார்
அரசர்.

“”மகாராஜா… அதுமட்டும் என்னால் முடியாது.
காரணம் எனக்கு யாரும் இதைக் கற்றுத் தரவில்லை.
என் தாத்தா வெட்டும்போது தள்ளி நின்று பார்த்தேன்.
என் தகப்பனார் வெட்டும்போது அருகில் நின்று கவனித்தேன்.
அவர்கள் யாரும் எனக்கு எதையும் சொல்லித் தரவில்லை.

எந்தக் கலையுமே ஒருவர் மனசிலிருந்து அடுத்தவர் மனசுக்கு
வருவது. இதை உள்வாங்கிக் கொள்ளலாமே ஒழிய சொல்லித்
தந்துவிட முடியாது” என்றார் மாட்டை வெட்டுபவர்.

கண்ணையும் காதையும் கருத்தாகத் திறந்து வைத்துக்
கொண்டு உள்வாங்கப் பழகுங்கள்

———————————–
சுகிசிவம்
வெற்றி நிச்சயம் – நூலிலிருந்து

நாள் என்பது ஒரு மளிகைப் பை


சென்னையில் ஒரு பிரபலமான நிறுவனத்தில் பணியாற்றி
வருபவர் அவர். அந்த நிறுவனத்தின் முக்கியமான
பணியாளர்களுள் ஒருவர். 10 ஆண்டுகளுக்கும் மேல்
அனுபவம் கொண்டவர்.

பார்க்கும் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பார்.
அதனால் உயர் அதிகாரிகளுக்கு அவர் மீது மரியாதை
உண்டு. ஆனால், சில நாட்களாக வேலைக்குத் தாமதமாக
வருகிறார்.

தாமதமாக வருவது மட்டுமல்லாமல் ஆடைகளை அயர்ன்
செய்யாமல் உடுத்திவருகிறார். வருகிற அவசரத்தில்
காலை உணவையும் தவிர்த்துவிடுகிறார்.

எல்லோரும் வேலையைத் தொடங்கிய பிறகு பரபரப்பாக
வியர்த்து ஒழுக வந்துசேர்கிறார். அவரது உயர் அதிகாரி
அதுவரையிலான அவரது அர்ப்பணிப்பை மனத்தில்
கொண்டு இந்த நடவடிக்கையைப் பெரிதுபடுத்தவில்லை.

தாமதமாக வருவது ஒருபக்கம் இருந்தாலும், கொடுத்த
வேலைகளையும் ஒழுங்காக முடிக்காமல் இருந்து
விடுகிறார். அது குறித்துக் கேட்டால் மன்னிக்கச் சொல்லி
மட்டும் கோருவாரே தவிர அதைத் திருத்திக்கொள்வதாக
இல்லை.

வேலை செய்யாமல் ஏமாற்றும் ஊழியர் அல்ல அவர்
என்பதால் அவருக்கு மனரீதியாகன ஏதோ பிரச்சினை
என்பதை அவரது உயர் அதிகாரி புரிந்துகொண்டார்.

முதலில் அவரைத் தனியாகத் தனது அறைக்கு அழைத்துப்
பேசிப் பார்த்துள்ளார் உயர் அதிகாரி. அவர் என்ன கேள்வி
கேட்டாலும், “எனக்கு நேரம் இல்லை” என்ற ஒரு பதிலை
மட்டும் அந்த ஊழியர் சொல்லிக்கொண்டே இருந்துள்ளார்.

இது அவருக்கு மட்டுமான பிரச்சினை இல்லை.
நாம் ஒவ்வொருவருக்குமான பிரச்சினைதான்.
நேரமில்லாமல் இல்லை. நம்மால் நேரத்தைக் கையாள
முடியவில்லை என்பதே உண்மை.

செல்போனைத் தூரவைத்துவிட்டு, டிவி, ஆடியோவை
அணைத்துவிட்டு ஒரு நிமிடம் நிதானமாக, நாம் யார்,
எங்கு இருக்கிறோம் என யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு நாளில் நாம் என்னென்ன செய்கிறோம் என்பதைப்
பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும்.
அவற்றை முக்கியமானவை / முக்கியமில்லாதவை என
இரு வகையாகப் பிரித்துக்கொள்ள வேண்டும்.

இவற்றில் எதற்காகவெல்லாம் தேவையில்லாமல்
நேரத்தைச் செலவிடுகிறோம் என்பதைக் கண்டறிந்து
அதைக் களைய வேண்டும்.

ஒரு நாளை நமது மளிகைப் பொருள் வாங்கும் பையாகக்
கற்பனைசெய்துகொண்டால், அதில் எல்லாவற்றுக்கும்
இடம் தருவது சரிதான்.

ஆனால், எதை முதலில் வைக்க வேண்டும்,
எதைக் கடைசியாக வைக்க வேண்டும் என முறை
இருக்கிறது.

முட்டையை முதலில் வைத்துப் பிற பொருட்களை
அதற்கு மேல் வைத்தால் நமக்குத்தான் நஷ்டம்.

————————————
தி இந்து

மயிலே! மயிலே!

நம்நாட்டின் தேசியப் பறவை மயில் என்று எல்லாருக்கும்
தெரிந்திருக்கும்

எத்தனையோ பறவைகள் இருக்க தேசியப்பறவையாக
மயிலை ஏன் தேர்ந்தெடுத்தனர் என்று
யோசித்தால் அதற்கு காரணம் தெரியவரும்.
மனித குலமே தெரிந்து கொள்ளவேண்டிய அளவுக்கு ஓர்
ஆச்சர்யமான அபூர்வமானஒழுங்குமுறை மயில்களிடம்
உள்ளன.!*

மனுவம்சத்தின் வழி வழியாக வந்தவர்கள் சூரிய குல
மன்னர்கள். இவர்கள் மயில் போன்று முறை
தவறாதவர்களாம் அதென்ன மயில்முறை?

*ராமனுக்கு பட்டம் சூட்ட அரச சபை ஆயத்தமாகி விட்டது

..அயோத்திநகரம்.கோலாகலமாய் இருக்கிறது.
அப்போது கூனி வருகிறாள்.

கைகேயியைப்பார்த்து,” ராமனுக்கு பதிலாய் உன்மகன்
பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்யச்சொல்லு” என்றதும்
முதலில் கைகேயி இப்படித்தான் சீறினாளாம்.

(பிறகு மனம் மாறிய கதை யாவரும் அறிந்ததே)

*” மயில் முறைக் குலத்துரிமையை மனுமுதல் மரபை*
*செயிர் உறபுலச் சிந்தையால் என் சொனாய் தீயோய்*…”

(செயிர் உறபுலச்சிந்தை எனில் குற்றம்காணும் எண்ணம்
என நினைக்கிறேன்…தமிழ்
வல்லுனர்கள் விளக்கலாம் தயவு செய்து)

கம்பன் குறிப்பிடும் இந்த மயில்முறைதான் என்ன
என்கிறீர்களா?

மேலை நாட்டில் மயில்பண்ணைவைத்து ஆராய்ச்சி செய்தார்,
ஒருவர்*

மயிலின் இயல்புகளை அவர் கூர்மையாககவனித்து
வந்தாராம்.*

மயில்முட்டையிலிருந்து வந்த அதன் முதல் குஞ்சுக்கு
அதன் காலில் பச்சைவண்ண நூலைக்கட்டினார்.
அடுத்த குஞ்சுக்கு சிவப்பு நூல் அதற்கடுத்ததற்கு மஞ்சள்
நூல் என்று,

*அந்தவிபரங்களை தன் பதிவேட்டில்குறித்துக்கொண்டார்.

மயில்குஞ்சுகள் வளர்ச்சியடைந்து தோகை*
*விரித்தாடிய* சந்தர்ப்பத்தில் அந்த பச்சைக்கயிறுகட்டிய
குஞ்சுதான் முதலில் தோகை விரிக்கத் தொடங்கியதை
அவர்கவனித்தார்.

* அதுதான் முட்டையிலிருந்து வெளிப்பட்டமுதல்குஞ்சு.*

கம்பர் குறிப்பிட்ட மயில்முறைக்கு இப்போது விளக்கம்
கிடைத்துவிட்டதா?*

வாரிசு உரிமை தலைமகனுக்குத்தான். இதை பலகாலம்
முன்பே தமிழ் இலக்கியம் சொல்லிவிட்டது.*

ஆமாம் அந்த மயில் பண்ணை நடத்திய மேலை
நாட்டவருக்கு எத்தனையோ காலம் முன்னேயே
தணிகைப்புராணம் எனும் நூலும் சொல்கிறது*

‘பலாவம் பொழிலின் ஒரு தாய்உயிர்த்த பல மயிற்கும்*
கலாபம் புனைந்த களிமயில் மூத்தது…’*

*செய்யுளில் அமையப்பெற்றதனால் இது யாவருக்கும்
தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
இதையெல்லாம் அண்மையில் ஒரு தமிழ்பெரியவர்
மூலம் நான் அறிந்து அதை இங்கு இடுகிறேன்…

குயில்கூவும் ;மயில் அகவும் என்று சொல்ல வேண்டுமாம்!!!
மயில்கூவினால் கேட்க சகிக்காது!!*

*திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் நிறைய
மயில்களைக்காணலாம்.விராலிமலையிலும் ரொம்பவே
உண்டு. *

*பெண்களை மயிலோடு இலக்கியகாலம் முதல்
ஒப்பிடுகிறார்கள்..ஆண்மயில்தான் தோகைவிரித்தாடும்.

எனினும் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு ‘என்று பாடல்
வேறு!!!

சிக்குபுக்குசிக்குபுக்கு ரயிலே சிக்குவாளா சிக்குவாளா
மயிலே என்ற பாட்டு
வந்தபுதுசுல என்ன போடு போட்டது?:)

அசைந்தாடும் மயில் ஒன்று என்ற பாடலை சுதாரகுநாதன்
பாடிக்கேட்கவேண்டும்.*

வேறென்ன புகழ்பெற்ற மயில்பாடல்கள்?

முருகன் மயில்வாகனன். *

மயில் ராவணன் என்று ஒரு பெயர் அது எதனால்
எப்படிவந்தது?*

*மயிலாப்பூருக்கும் மயிலுக்கும் சம்பந்தம் உண்டா?*
*மயிலாடுதுறை ஊருக்கு கதை இருக்கு..*
* *
*மயில்துத்தம் என்று ஒரு மருத்துவப்பொருள் உண்டோ?*
* *
*மயூர் என்றால் சம்ஸ்க்ருததில் மயில்..
மயூராசனம் கூட இருக்கிறது.*

*மயிலிறகில் விசிறி உண்டு..
மயிலிறகுகளை புத்தக நடுவில் சின்னவயசில் சேர்த்து
ஒளித்துவைத்திருக்கிறோம் அல்லவா?

*க்ருஷ்ணர் தலையில் மயிற்பீலி இருக்கும்.*

*மயிலாட்டம் நாட்டிய நிகழ்ச்சியில் சிலர் இன்னமும்
ஆடறாங்க..*

மயில் செய்திகள் இன்னும் நிறைய இருக்கும்
மற்றவர்களும் பகிர்ந்து கொள்ளலாமே?

*(பதினாறுவயதினிலே படத்து மயிலு இதுல வரலாமா?:)) *

——————————–

கவிஞர் ஷைலஜா

தோல்விகளுக்கு நன்றி

மரணம் நிகழ்ந்த வீட்டிலும் காபி குடிக்கிறார்கள்.
விபத்து நடந்த இடத்தில் சில நிமிடங்களில்
போக்குவரத்து சகஜமாகிறது.

இயற்கை சீற்றம் நிகழ்ந்த இடம் சுற்றுலா மையம்
ஆகிறது. எல்லா இழப்புகளும் ஏதோ ஒரு விதத்தில்
ஈடு செய்யப்படுகின்றன.

உங்களுக்கு முன்பாக மலையேறுபவர் தடுக்கி
விழும் போது, “அங்கு வழுக்கல் அதிகம். பார்த்துப் போ!”
என்று சொல்லாமல் சொல்கிறார்.
உங்கள் விபத்தைத் தடுக்கிறார்.

உங்களுக்குக் கிடைத்த அனைத்துத் தோல்விகளுக்கும்
நன்றி செலுத்துங்கள். உங்கள் தோல்விக்குக் காரணமான
அனைவரையும் மனதாரப் பாராட்டி நன்றி சொல்லுங்கள்.

நீங்கள் செல்லும் பாதையில் உங்களுக்கு முன்பாக
சென்று தோற்றவர்கள் அனைவரையும் நினைவு கூறுங்கள்.

வெற்றியைத் தலைக்கு மேலே எடுத்துக் கொள்ள வேண்டாம்.
தோல்வியை மனதுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இரவும் பகலும் போல வெற்றியும் தோல்வியும் மாறி மாறி
வரும் வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக்கொள்வோம்!

————————-
டாக்டர். ஆர். கார்த்திகேயன்
நன்றி- தி இந்து

நாமாகச் சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

“சமைத்துப்பார்’ புத்தகத்தை வைத்துக் கொண்டு
ஒரு பெண் பூரி செய்தாள். புத்தகத்தில்
போட்டிருந்தபடியே நடந்து கொண்டாள்.

“”எண்ணெய்ச் சட்டியை அடுப்பில் வை.” வைத்தாள்.

“”பிசைந்த கோதுமை மாவை உருண்டையாக
உருட்டிக் கொள்”. உருட்டிக் கொண்டாள்.

“”பலகையில் வைத்து வட்ட வட்டமாக இட்டுக் கொள்”.
இட்டுக் கொண்டாள்.

“”ஐந்து நிமிடம் கழித்து, வட்டமாக இட்ட
பூரியை எண்ணெயில் போடு”. போட்டாள்.

பூரி உப்பிக் கொண்டுவரும் என்று புத்தகத்தில்
போட்டிருந்தது. ஆனால் அவளுக்குப் பூரி உப்பவேயில்லை.

ஏன்? அடுப்பு பற்றவைக்கவே இல்லை.

ஏன்? அடுப்புப் பற்றவை என்று புத்தகத்தில்
போடவேயில்லை. புத்தகத்தில் போடாவிட்டாலும்
அடுப்பைப் பற்ற வைக்காமல் சமையல் செய்ய முடியுமா?
சமைத்துப்பார் புத்தகத்தில் ஒவ்வொரு ஐட்டங்களின்
முன்னாலும் அடுப்பைப் பற்ற வை என்று
போடுவார்களா?

எல்லா விஷயங்களையும் கற்றுத் தரமாட்டார்கள்.
நாமாகச் சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நீங்களாகக் கற்றுக் கொள்ளுங்கள்.
இதுதான் முன்னேற்றத்தின் மூலமந்திரம்

———————————
சுகி சிவம் –
( வெற்றி நிச்சயம் கட்டுரையிலிருந்து)

தோல்வி வெற்றிக்கு வித்திடும்!

 

தோல்விகள் நிலையென நினைத்தால், மனிதர்கள் வாழ்ந்திட
முடியாது. ஒவ்வொரு தோல்வியும் மனிதர்களுக்கு ஏதாவது
படிப்பினையோ அல்லது வாழ்க்கை அனுபவத்தையோ
அளிக்கும்.

அதை வெறுத்து ஒதுக்கிவிடாமல் துணிவுடன் எதிர்
கொள்வதினால் மனிதர்களின் தனிப்பட்ட முழு ஆளுமை
வெளிப்படும்.

தோல்வி அடைந்துவிடுவோமே என்ற பயத்தினால், பலரும்
செயலற்ற அளவில் வாழ்க்கையை கடத்துகின்றனர்.
தோல்வி தரும் பயத்திற்கு, என்றுமே மனிதன் அடிபணியக்
கூடாது;

மாறாக தோல்வியினால் ஏற்படும் அனுபவங்களை நமது
வாழ்க்கையின் முன்னேற்றப்பாதைக்கு பயன்படுத்தி
கொள்ள ஆயத்தமாக இருக்கவேண்டும்.

வாழ்க்கையில் அனுபவங்கள் கற்றுகொடுக்கின்ற பாடம்
என்றுமே சிறந்தது.தோல்விகள் நம்மை செதுக்கும் வாழ்க்கை
அனுபவமாக ஏற்றுக்கொள்வதற்கு, நாம் தோல்வியை
நேசிக்கவேண்டும்.

தோல்வியை நேசிக்கின்றபோது நமக்கு வாழ்க்கையில்
வெற்றி வெகுதுாரமில்லை.

‘தோல்வியை கண்டு கலங்காதே மனிதனே!அது உன்னை
பட்டைத்தீட்டும் அனுபவம்தானே.உனக்குள் புதைந்திருக்கும்
ஆற்றலை வெளிப்படுத்து,துணிவோடு உழைத்திடு,
தோல்வியை எதிர்க்கொண்டு.அத்தருணம் தோல்விகள் துாரம்
ஓடும் உன்னை கண்டு,

வாழ்க்கையில் வெற்றிபெறு; அதுதரும் உற்சாகத்தினை
துணைகொண்டு

‘.–நிக்கோலஸ் பிரான்சிஸ்
(தன்னம்பிக்கை எழுத்தாளர் )
நன்றி- தினமலர்

« Older entries