இனியவை கூறல்…!

IMG_2056.jpg

“என்னது… இதெல்லாம் தமிழ் சொற்கள் இல்லையா?!” – விவரம் சொல்லும் கவிஞர் மகுடேசுவரன்

கவிஞர் மகுடேசுவரன்

 

கீழுள்ளவை அனைத்தும் அரசு ஆட்சி மட்டத்தில் பயன்படுத்தப்படும்
தமிழல்லாத பிறமொழிச்சொற்கள். அடைப்புக்குறிக்குள் அவற்றுக்குரிய
தமிழ்ச்சொற்களைக் காணலாம்.

இன்றைய தமிழில் ஆங்கிலச்சொற்கள் மிகுதியாகக் கலந்துவிட்டன.
ஆங்கில வழிக்கல்வி தலையெடுக்கத் தொடங்கிய பிறகு ஆங்கிலக்
கலப்பு கட்டுக்கு அகப்படாதவாறு பெருகிவிட்டது.

நம் மொழியில் ஆங்கிலம் போன்ற பிற மொழிச் சொற்கள் கலப்பது
ஏதோ தற்கால நிலவரம் என்று கருதிக்கொண்டிருக்கிறோம்.
பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வடமொழி, அரபி, உருது,
பாரசீகம், இந்தி முதலிய பல்வேறு மொழிச்சொற்கள் தொடர்ந்து
கலந்தவாறே இருந்தன.

வடமொழிக்கலப்பு மிகுதியாகித் தோன்றியதுதான் `மலையாளம்’
என்பது நாமறிந்ததே.

ஆங்கிலத்திற்கும் வடமொழிக்கும் எதிராக நாம் தனித்தமிழ்ச்
சொற்களை ஆக்குகிறோமே தவிர, இன்னும் அசையாமல்
நிலைத்திருக்கும் உருது, பாரசீகம், இந்தி மொழிச்சொற்களைப்
பற்றி நாம் நினைத்தே பார்க்கவில்லை.

அச்சொற்கள் எவை என்கின்ற அறிதலும் நமக்கு இல்லை.
எடுத்துக்காட்டாக நாம் அடிக்கடி பேச்சிலும் எழுத்திலும் பயன்
படுத்தும் சொல் ‘பரவாயில்லை’.

இந்தப் பரவாயில்லை என்பதில் உள்ள ‘பரவா’ தமிழில்லை.
‘பர்வாநஹி’ என்ற உருதுச்சொல்தான் ‘பரவாயில்லை’
ஆயிற்று என்கிறார் தமிழண்ணல்.

அதனைத் தமிழில் நாம் ‘தேவலை’ என்கிறோம்.
‘தேய்வு இல்லை’ என்பதுதான் பேச்சு வழக்கில் தேவலை
ஆகிவிட்டது. குறையொன்றுமில்லை என்பதுதான் அதன்
செம்பொருள்.

அதனைத்தான் உருதுத் தொடராக ‘பரவாயில்லை’ என்று
இன்னும் கூறிக்கொண்டிருக்கிறோம்.

அலமாரி, கிராம்பு, சாவி, சன்னல், பாதிரி ஆகியவை
போர்த்துக்கீசியச் சொற்கள் என்றால் நம்புவீர்களா.
ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்த்துக்கீசியர்கள்
நம் துறைமுகங்களைக் கைப்பற்றி வாணிகம் செய்தபோது
அவர்களுடைய மொழிச்சொற்கள் தென்மொழிகளில் பரவின.

அலமாரி என்பதற்கு ‘நிலைப்பேழை’ என்றும், கிராம்பு
என்பதற்கு ‘இலவங்கம்’ என்றும், சாவி என்பதற்குத்
‘திறவுகோல்’ என்றும், சன்னல் என்பதற்கு `காலதர்’ என்றும்,
`பாதிரி’ என்பதற்குக் ‘கிறித்தவ இறையடியார்’ என்றும்
நாம் தமிழில் ஆள வேண்டும்.

ஆனால், சன்னல் தமிழ்ச்சொல் போலவும், காலதர் பிறமொழிச்
சொல்போலவும் தோன்றுமாறு நாம் பழக்கத்திற்கு
அடிமையாகி இருக்கிறோம். கால் என்றால் காற்று,
அதர் என்றால் வழி. காற்று வரும் வழி என்பதால்தான் காலதர்.

—————————————–

தமிழ்ச் சொற்கள்

தமிழ்த் திரைப்படத்துறையில் அதன் முதலாளிக்கு இன்னமும்
‘தயாரிப்பாளர்’ என்ற பெயர்தான். படத்தினை வாங்கி
விற்பவர்க்கு ‘விநியோகஸ்தர்’ என்பது பெயர்.

விநியோகம் வடமொழி என்பது தெரிகிறது. தயார், தயாரி
ஆகியவை தமிழல்ல என்பதை நாம் அறிவோமா?

சங்கீதத்தை ‘இசை’ என்றும் போட்டோகிராபியை ‘ஒளிப்பதிவு’
என்றும் தமிழாக்கிய நாம் தயாரிப்பாளரையும்
விநியோகஸ்தரையும் மறந்துவிட்டோம்.

தயார் என்பதற்கு ‘அணியம்’ என்ற தமிழ்ச்சொல் உண்டு.
‘விநியோகம்’ என்பதற்குச் ‘சேர்ப்பனை’ என்ற சொல்லை
நான் முன்மொழிந்தேன்.

கொண்டு சேர்க்கும் பணியைச் செய்பவர். விநியோகஸ்தர்
என்பவர் ‘சேர்ப்பனையாளர்’. தயாரிப்பவரை என்னென்று
சொல்வது?

அவரே படத்தினை முதலிட்டு ஆக்குபவர். கறுப்பு வெள்ளைக்
காலத்தில் படத்தயாரிப்பாளரை ‘முதலாளி’ என்றே
அழைத்தார்கள். முதல் இடும் ஆள் முதலாளிதானே!

அச்சொல்லாலேயே ஒரு தயாரிப்பாளரை அழைத்தால் என்ன
குடிமுழுகிப்போய்விடும்?

இன்றைக்கு வரைக்கும் ஆட்சி மட்டத்தில் எண்ணற்ற அரபி,
உருது, இந்துஸ்தானிச் சொற்கள் பயில்கின்றன. கைது, கைதி
ஆகியன தமிழ்ச்சொற்களா என்று இன்றைக்கு ஆராய்ந்து
கொண்டிருந்தேன்.

கை என்ற சொல் வருவதால் கைதாகுபவர் கைக்கட்டிய
நிலையில் விலங்கிடப்படுவதால் ஏதேனும் பொருள் தொடர்பு
இருக்குமா என்ற அடிவிருப்பம்.

ஆனால், அவை அரபியிலிருந்து இந்திக்கு வந்த சொற்களாம்.
கைதுக்குச் சிறைப்பிடி என்றும் கைதிக்குச் சிறையாள்
என்றும் தமிழில் ஆள வேண்டும்.

அரசு மட்டத்தில் இன்றைக்குள்ள எண்ணற்ற உருது, இந்திச்
சொற்களை இன்னும் நாம் கைவிடவில்லை. பஞ்சாயத்து
என்பது பிறமொழிச்சொல் என்றால் அதற்கு மாற்றானது
என்று ‘கிராமசபை’ என்னும் வடமொழிச் சொற்களாலான
ஒரு தொடரைத்தான் உருவாக்கித் தருகிறார்கள்.

கிராமமும் சபையும் வடமொழிச்சொற்கள் என்கையில்
பஞ்சாயத்துக்குக் ‘கிராமசபை’ என்பது எப்படித் தமிழாகும்?
பஞ்சாயத்து என்பது ஐவர்குழு என்னும் பொருளுடையது.
நாம் அதனை ‘ஐம்பேராயம், ஐம்பெருங்குழு’ என்று
தமிழாக்கலாமே.

———————————————

கீழுள்ளவை அனைத்தும் அரசு ஆட்சி மட்டத்தில் பயன்படுத்தப்
படும் தமிழல்லாத பிறமொழிச்சொற்கள். அடைப்புக்குறிக்குள்
அவற்றுக்குரிய தமிழ்ச்சொற்களைக் காணலாம்.

சர்க்கார் (அரசு), தாலூக்கா (வட்டம்), தாசில்தார் (வட்டாட்சியர்),
ஜில்லா (மாவட்டம்), மனுதாரர் (வேண்டுவோர்), மராமத்து
(இடைச்சீர்திருத்தம்), மாகாணம் (மாநிலம்), மாஜி (முன்னாள்),
முகாம் (இடைத்தங்கலிடம்), மேஜை (நிலைப்பலகை),
இரசீது (பெறுகை உறுதி), இராஜினாமா (விலகல்), வக்கீல்
(வழக்கறிஞர்), வக்காலத்து (வழக்கேற்புறுதி), வகையறா
(முதலானோர்), வசூல் (பெறல்), வாய்தா (கெடு), வாபஸ்
(மீளப்பெறல்), வாரிசு (உரிமையர்), தஸ்தாவேஜு
(ஆவணங்கள்), தாவா (வழக்கு), திவால் (நொடிப்பு),
பந்தோபஸ்து (காப்பொழுங்கு).

இன்றைக்கும் ‘நபர்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
‘ஆள்’ என்பதுதான் அதற்குரிய தமிழ்ச்சொல். பதில் என்பதும்கூட
தமிழில்லை. விடை, மறுமொழி என்பதுதான் அதற்குரிய தமிழ்ச்
சொல்.

ரத்து செய்வது என்பதிலுள்ள ‘ரத்துக்கு’ முறையான
தமிழ்ச்சொல் இல்லை. ‘அறுநீக்கம், நீக்கறல்’ என்று அதனைப்
பொருத்தமாய்த் தமிழாக்க வேண்டிய தேவை இருக்கிறது.

மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்கின்றனர்.
மசோதாவும் தமிழில்லை. தாக்கலும் தமிழில்லை.
மசோதா என்பது சட்ட முன்வடிவு, தாக்கல் என்பது பதிதல்.
இச்சொற்களுக்கு மாற்றான தமிழ்ச்சொற்களை நாம்
எப்போது தமிழ் வழக்கில் கொண்டுவரப்போகிறோம்?

தமிழ் மொழியரசாகக் கருதப்படவேண்டிய தமிழ்நாட்டரசு
தன் புதிய திட்டங்களுக்கு ஆங்கிலப் பெயர்களைச்
சூட்டுவதில் தயங்கா நிலை எடுத்திருப்பதைக் காண்கிறோம்.

ஸ்மார்ட் கார்டு என்று அரசு மட்டத்திலேயே வழங்குகிறார்கள்.
அதற்கொரு தமிழ்ச்சொல் ஆக்கமாட்டீர்களா என்ற என்
நிலைக்கூற்றுக்கு விரைவில் தமிழ்ச்சொல் ஆக்கி அளிக்கப்
படும் என்று துறைசார் அமைச்சர் சிட்டுரையில் ஓராண்டுக்கு
முன்பே மொழிந்திருந்தார்.

இன்னும் ஆக்குகிறாரா, தெரியவில்லை.

—————————————
நன்றி-விகடன்

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’,

அமெரிக்காவில் புலவர் கீரன் நிகழ்த்திய கம்ப ராமாயணச் சொற்பொழிவு ஒன்று ஃபேஸ்புக் நண்பர் ஒருவருடைய தயவில் கிடைத்தது. கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

வழக்கம்போல் உணர்ச்சிமயமான குரல் + தொனியில் மிக அருமையான பேச்சு. ஏழு நாள்களில் கம்பனை முழுமையாக விவரிப்பது சாத்தியமில்லை என்பதால், சில முக்கியமான பாடல்களைமட்டும் எடுத்துக்கொண்டு விளக்குகிறார், அவற்றினூடே கதையைச் சொல்கிறார்.

இப்படி அவர் எடுத்துக்கொண்ட ஒரு பாடல், நம் எல்லாருக்கும் நன்கு தெரிந்த ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’, மிதிலையில் கன்னிமாடத்தில் சீதையும், கீழே சாலையில் நடந்து செல்லும் ராமனும் எதேச்சையாகக் கண்கள் கலந்து காதல் வயப்படும் காட்சி.

‘சீதையும் ராமனும் வேண்டுமென்றே சைட் அடிக்கவில்லை, தற்செயலாக(Accidentally)தான் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்’ என்கிறார் புலவர் கீரன், ‘இதற்குச் சாட்சி கம்பனுடைய பாட்டிலேயே உள்ளது!’

இப்படி அவர் சொன்னதும், என்னுடைய ஆர்வம் அதிகரித்தது. காரணம், எனக்குத் தெரிந்து அந்தப் பாட்டில் ‘தற்செயல்’ என்கிற வார்த்தையோ அதற்கான குறிப்போ இல்லை, சீதையும் ராமனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள் என்றுதான் கம்பர் சொல்கிறாரேதவிர, எது எதேச்சையாக நிகழ்ந்தது என்று அவர் குறிப்பிடவில்லை.

ஆனால், கீரன் அடித்துச் சொல்கிறார், ‘அது தற்செயலான நிகழ்வுதான், அதற்கான குறிப்பு அந்தப் பாட்டிலேயே இருக்கிறது, கொஞ்சம் பிரித்து மேயவேண்டும், அவ்வளவுதான்!’

முதலில் அந்தப் பாட்டைத் தருகிறேன், அதன்பிறகு, கீரன் தரும் அட்டகாசமான (அதேசமயம் ரொம்ப Practicalலான) விளக்கத்தைச் சொல்கிறேன்:

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி

கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று

உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!

இதற்கு என்ன அர்த்தம்?

எண்ணுவதற்கே அரிய நலன்களைக் கொண்டவள் (சீதை) இப்படி (முந்தின பாட்டில் சொன்னபடி) நின்றிருக்க, அண்ணலும் (ராமனும்) அவளைப் பார்த்தான், அவளும் அவனைப் பார்த்தாள், அவர்களுடைய கண்கள் ஒன்றை ஒன்று கவ்வி உண்டன, இருவரும் நிலை தடுமாறினர், இருவருடைய உணர்வுகளும் ஒன்றாகிவிட்டன.

அவ்ளோதான். நோ விபத்து, நோ தற்செயல், கம்பர் அப்படிச் சொல்லவில்லை!

பொறுங்கள், கீரன் அவர்களுடைய விளக்கத்தைப் பார்ப்போம்.

‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ : இந்த வாசகம் முதலில் சரியா?

ஒரு கடை வாசலில் போர்ட், ‘ஞாயிற்றுக்கிழமையும் கடை உண்டு’ என்று எழுதியிருக்கிறது. அதற்கு என்ன அர்த்தம்? ’மற்ற ஆறு நாள்களும் கடை உண்டு, கூடவே ஞாயிற்றுக்கிழமையும் கடை உண்டு’ என்பதுதானே? ‘திங்கள்கிழமையும் கடை உண்டு, செவ்வாய்க்கிழமையும் கடை உண்டு, புதன்கிழமையும் கடை உண்டு’ என்று யாராவது நீட்டிமுழக்குவார்களா?

ஒருவர் ‘தயிர் சாதமும் சாப்பிட்டேன்’ என்கிறார். அதற்கு என்ன அர்த்தம்? குழம்பு, ரசம் எல்லாம் சாப்பிட்டிருக்கிறார், அதோடு தயிர் சாதமும் சாப்பிட்டார் என்பதுதானே?

’இந்த வருஷமும் அவன் பரீட்சையில ஃபெயில்’ என்றால் என்ன அர்த்தம்? இதற்குமுன் பல வருஷங்கள் ஃபெயிலாகியிருக்கிறான் என்பதுதானே?’

இதே வழக்கத்தின்படி, கம்பர் ‘அண்ணலும் நோக்கினான்’ என்று சொல்லியிருந்தாலே போதும், அந்த ‘உம்’மில் ‘அவளும் நோக்கினாள்’ என்பதும் விளங்கிவிடும், அதைத் தனியாகச் சொல்லவேண்டியதில்லை.

ஆக, கம்பர் ‘அண்ணல் நோக்கினான். அவள் நோக்கினாள்’ என்று எழுதியிருக்கவேண்டும், அல்லது ‘அண்ணலும் நோக்கினான்’ என்பதோடு நிறுத்திக்கொண்டிருக்கவேண்டும். இரண்டு ‘உம்’கள் இந்த வாக்கியத்தில் அவசியமே இல்லை.

ஆனால், கம்பர் வேண்டுமென்றே இரட்டை ‘உம்’ போடுகிறார். ஏன்?

இதைதான் கீரன் பிடித்துக்கொள்கிறார். ‘தமிழில் ஒரே ஒரு சூழ்நிலையில்மட்டும் இரண்டு ‘உம்’கள் தேவைப்படும்’ என்கிறார். எப்போது?

சாலையில் ஒரு விபத்து நடக்கிறது, இரு வாகனங்கள் எதிரெதிரே வந்து மோதிக்கொள்கின்றன. அதை நேரில் பார்த்த ஒருவரிடம் ‘எப்படிய்யா விபத்து நடந்துச்சு?’ என்று கேட்டால், அவர் என்ன பதில் சொல்வார்?

‘இவனும் இடதுபக்கமா வந்தான், அவனும் அதேபக்கமா வந்தான், மோதிகிட்டாங்க.’

இந்த இடத்தில் ‘இவனும் இடதுபக்கமா வந்தான்’ என்பதோடு நிறுத்தினால் செய்தி முழுமையடையாது, ‘அவனும் அதேபக்கமா வந்தான்’ என்பதை வலியச் சேர்த்தால்மட்டுமே விபத்து நேர்ந்தது புரியும். அது திட்டமிட்டு நடந்தது அல்ல, தற்செயலானது என்பதும் புரியும்.

அந்தப் ‘பத்திரிகையாளர் உத்தி’யைதான் கம்பர் கச்சிதமாகப் பயன்படுத்துகிறார். ‘அண்ணலும் நோக்கினான்’ என்பதோடு நிறுத்தாமல், ’அவளும் நோக்கினாள்’ என்பதைச் சட்டென்று அடுத்த வாக்கியத்தில் கோப்பதன்மூலம் ஒரு சிறிய பரபரப்பை உண்டாக்குகிறார், தற்செயலாக இரு பார்வைகளும் சந்தித்துக்கொண்டுவிட்டன, ஜோடி சேர்ந்துவிட்டன என்று வாசிக்கிற நமக்குப் புரியவைக்கிறார்.

அப்புறம் என்ன நடந்தது? இங்கே படிக்கலாம்: https://nchokkan.wordpress.com/2012/08/06/kv01/

***
என். சொக்கன் …

விவேக சிந்தாமணியும் அவிவேக சிந்தாமணியும்

மனிதன் எப்படி வாழவேண்டும் என அறிவுரைகளை,
வாழ்வியலை சொல்லும் கவிதைநூல் ஒன்று உள்ளது!

விவேக சிந்தாமணி என்று பெயர்!
அந்த பழமையான நூலில் பல்வேறு கருத்துகள்
உள்ளது!

உதாரணத்துக்கு ஒன்று கீழே:

ஆபத்துக்கு உதவாத பிள்ளை
அரும்பசிக்கு உதவாத அன்னம்;
தாபத்தை போக்கா தண்ணீர்,
தரித்திரம் அறியா பெண்டீர்;
கோபத்தை அடக்கா வேந்தன்,
குருமொழி கொள்ளா சீடன்;
பாவத்தை போக்கா தீர்த்தம்,
பயனில்லை ஏழும்தானே!

————————————-

இதைபோலவே, வாழ்க்கையை சிறந்த முறையில் அமைத்துக்
கொள்ளாமல், மனம்போன போக்கில் வாழந்து… வருத்தப்படும்
கவிஞர் ஒருவர் எப்படியெல்லாம் வாழக் கூடாது என்பதை
அறிந்து கொள்ளுங்கள் என்று அவிவேக சிந்தாமணி என்ற
தலைப்பில் கவிதைகளை எழுதிஉள்ளார்!

பொதுவாக யாரையாவது முன்வைத்துதான் அறிவுரையோ,
உபதேசமோ செய்ய இயலும்! அவ்வாறு யாருக்கு உபதேசிப்பது
என்பது கவிஞருக்கு தெரியவில்லை போலும்!

அதனால் என்ன? இருக்கவே இருக்கிறான், இறைவன் என்று
ஒருவன்! என்று நினைத்து, அதிலும் அன்புகொண்ட
அன்னையைப் போலுள்ள, மதுரை மீனாட்சியிடம்
முறையிடுவது போல நினைத்து, தன்னைப்பற்றி புலம்புகிறான்!

அவன் புலம்பலில் அவனது உள்ளத் துடிப்பு தெரிகிறது!
ஆதங்கம் தெரிகிறது! அவனது துன்பமும் அனுபவமும் தெரிகிறது!

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் கூட தெரிகிறது!
அவன் எழுதிய அவிவேக சிந்தாமணி எனக்கும் பிடித்தவைகள்
ஆகும்!

————————————-

கவிஞர் கண்ணதாசன் எழுதிய அவிவேக சிந்தாமணியில்
இரண்டு பாடல்களை கீழே பாருங்கள்:

பாடல் ஒன்று }
திருடனும் அரகரா சிவசிவா,
என்றுதான் திருநீறு பூசுகிறான்!
சீட்டாடும் மனிதனும் தெய்வத்தின்
பேர்சொல்லி சீட்டை புரட்டுகிறான் ;
முரடனும் அரிவாளில் காரியம்
பார்த்தபின் முதல்வனை கூவுகிறான்,
முச்சந்தி மங்கையும் முக்காடு
நீக்கையில் முருகனை வேண்டுகிறாள்;

வருடுவாருக்கு எல்லாம் வளைகின்ற தெய்வம்
என் வாழ்க்கையைக் காக்கவில்லையே!
மலர்கொண்ட கூந்தலை தென்றல் தாலாட்டிடும்
மதுரை மீனாட்சி உமையே?

—————————————–

பாடல் இரண்டு}
தான்பெற்ற பிள்ளையை ஏன் பெற்றோம்
என்றுதான் தாயன்று மாண்டு போனாள்!
தந்தையும் இப்பிள்ளை உருபடாது என்றுதான்’
தணலிலே வெந்து போனான்!
ஊன்பெற்று யானுமோர் உயிர்கொள்ள வைத்தவன்,
உயரத்தில் ஒளிந்து கொண்டான்!
உதிரத்தின் அணுவிலே தமிழன்னை மட்டும்தான்
கருவாக வந்து நின்றாள்!

வார்கின்ற கவியன்றி வேறொன்றும் இல்லையே,
வைகையில் பூத்த மலரே!
மலர்கொண்ட கூந்தலை தென்றல் தாலாட்டும்
மதுரை மீனாட்சி உமையே?

———————————————
–ஓசூர் ராஜன்
http://generationneeds.blogspot.com/2011/12/blog-post_24.htm

 

பெண்பாவம் பொல்லாதது

PEN_PAVAM_POLLATHU

தலைவியை மணம் செய்து கொள்ள நினையாமல்
இரவுக்குறியில் சந்தித்துக் களவு வாழ்க்கை வாழ்வதிலே
பெருவிருப்பம் கொண்டிருந்தான் தலைவன்.

இதனையறிந்த தோழி, தலைவிக்கு மணவாழ்க்கை
நிகழவேண்டுமென எண்ணினாள். தலைவனிடம்
இதைப் பற்றி எப்படிப் பேசுவது எனச் சிந்தித்தாள்.

ஒருநாள் இரவு நேரத்தில், தலைவியின் வீட்டுக்குப்
பின்புறம் உள்ள வேலியோரத்தில் பிறர் அறியாதவாறு
தலைவியைச் சந்திக்க தலைவன் வந்ததைத் தோழி
அறிந்தாள்.

அந்நேரத்தில் அங்கு நின்றிருந்த தலைவன்
கேட்கும்படியாகத் தலைவியிடம் தோழி பேசுகிறாள்.

“ஒருநாள் நம் இல்லத்திற்கு விருந்தினர்கள் வந்திருந்தனர்.
தலைவனும் அவர்களுடன் வந்தான். அவனைக் கண்டு
ஐயம் கொண்ட அன்னை, அன்றுமுதல் பகைவரது
போர்க்களத்தின் பக்கத்திலுள்ள ஊரினர் எவ்வாறு
தூங்காமல் இருப்பரோ, அவர்கள் போன்று இரவில்
தூங்காமல் இருக்கிறாள்.

நீராடச்சென்ற ஒளிபொருந்திய நெற்றியையுடைய பெண்
ஒருத்தி, நன்னன் என்னும் மன்னன் தோட்டத்தில் இருந்த
மாமரத்திலிருந்து விழுந்து, ஆற்றுநீரில் அடித்து வந்த
மாங்காயைத் தின்றுவிட்டாள்.

இதனால் உண்டாகிய குற்றத்திற்காக அப்பெண்ணின்
தந்தை, எண்பத்தொரு களிற்று யானைகளையும்,
அப்பெண்ணின் எடைக்கு நிகரான பொன்னாலான
பாவையையும் கொடுத்தான்.

அதனை ஏற்காத மன்னன் அப்பெண்ணைக் கொலை
செய்தான். அதனால், நன்னன் மீண்டுவர முடியாத
கொடிய நரகத்திற்குச் சென்றான். அத்தகைய
நரகத்திற்கு நம் அன்னையும் போவாளாக’ என்றாள்.

——-
“மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றென்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே’ (குறுந்- 292)

——–
தலைவனைச் சந்திக்க முடியாத வகையில் தலைவிக்குப்
பாதுகாப்பு மிகுந்திருக்கிறது என்பதை அன்னையின்
செயல் மூலம் தலைவனுக்கு உணர்த்தினாள்.

இதன் மூலம் இரவில் இனியும் தலைவியைச் சந்திக்க
முடியாது என்பதைத் தலைவன் கேட்கும்படித் தெளிவுபட
தோழி கூறிவிட்டாள். மேலும், தலைவனைச் சந்திக்க
விடாமல் தடுக்கும் அன்னை, பெண்ணைக் கொலை
செய்த நன்னன் அடைந்த நரகத்தை அடைவாள் எனவும்
கூறப்பட்டுள்ளது.

இரவில் தலைவன் வரவை ஊரினர் அறிந்தால்
“அலர்’ ஏற்பட்டு தலைவிக்கு அவப்பெயர் உண்டாகும்.
மேலும், தலைவன் திருமணத்தை நீட்டித்துக்கொண்டே
சென்றால், தலைவி துயரப்பட்டு இறக்கவும் நேரிடலாம்.

அதனால், தலைவனுக்குப் பாவம் ஏற்படலாம் எனக்
கூறுவதாகவும் அமைகிறது. இக்கூற்றைக் கேட்ட
தலைவன் உன்னை விரைவில் மணம்செய்து கொள்வான்
எனக்கருதவும் இடமுண்டு.

இன்றைக்கும் ஆண்களில் சிலர் பெண்களிடம்
“திருமணம் செய்து கொள்கிறேன்’ எனக்கூறி, காலம்
நீட்டித்து ஏமாற்றுவதைக் காணமுடிகிறது.

இதனால், பெண்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்
குறியாகி விடுகிறது. இத்தகைய பெண்பாவம்
பொல்லாதது என்கிற செய்தியைத்தான் புலவர்கள்
அன்றே நம் சங்க இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.

—————————

– முனைவர் கி. இராம்கணேஷ்
நன்றி- தமிழ்மணி

நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் |

உவமைக் கவிஞர்’ என்று சிறப்பிக்கப்பெறும் சுரதா,
சங்க இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடும்
பயிற்சியுமுடையவர்.

புறநானூறு என்பதைப் புயநானூறு’ என்று தன் மகன்
மழலை மொழியிற் சொன்னதைக் கேட்டு, அதற்கும்
சுவையானதொரு விளக்கம் தந்து கவிதை பாடியவர்.

விழிகளும் புயங்களும் வீரத்தைக் காட்டிடும்
உறுப்புகள் ஆதலின் ஓங்குபுகழ் நூலாம்
புறநா னூற்றைப் புயநா னூறெனக்
கூறுவ தாலே குற்ற மில்லை
(தேன்மழை, பக்.171-172)

இவ்வாறே நற்றிணை, குறுந்தொகை முதலான
அகத்திணை நூல்களிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு.

குறுந்தொகைப் பற்கள் முத்தின்
குடும்பமே; நெருங்கி நீண்டு
நிறந்தரும் நினது கூந்தல்
நெடுந்தொகைச் செல்வம் அன்றோ?
(தே.ம. பக்.68)

மாடத்திலும் கூடத்திலும்’ என்னும் கவிதையில் மாதவியைக்
கோவலன் இப்படி வருணிப்பதாகப் பாடுகிறார் சுரதா.
அகநானூற்றுக்கு நெடுந்தொகை என்று பிறிதொரு பெயர்
வழங்குவதை இதில் பொன்போல் பொதிந்திருக்கிறார் அவர்.
மேலும்,

பூத்த சோலைப் பூங்குயில் போன்றவள்
சாயல் குறுந்தொகைத் தமிழே;
நாயகன் வாய்மொழி நற்றிணைத் தமிழே!
(தே.ம. ப.261)

என்பதும் அவர் பாடலே.

கன்னலென இனிப்பவளே! சங்க நூலின்
கற்பனைபோற் சிறந்தவளே! (தே.ம.ப.60)

என்று தொகைநூல்கள் அனைத்தையும் ஒரே கொத்தாகக்
கருத்தில் இருத்தி அவர் உவமிக்கும் இடமும் உண்டு.
இத்தகைய ஈடுபாட்டோடு சங்க இலக்கியத்தில்
தமக்கிருந்த பயிற்சியைப் பின்வருமாறு வெளிப்
படுத்துகிறார் சுரதா.

சினந்தணிந்த செங்கதிரோன்’ என்று பாடத்
தேன்சங்கப் பாடல்களில் பயிற்சி வேண்டும்;
மனந்திறந்து சொல்லுகிறேன் சங்க நூலின்
வழிப்புலமை என்னைப்போல் இவர்க்கு முண்டு
(சுரதா’ இதழ், 15-04-1968, ப.5)

என்பது கவிஞர் சுரதாவின் வாக்கு மூலம்.
கவிஞர் எழில்முதல்வனின் இனிக்கும் நினைவுகள்’
என்னும் கவிதை நூலுக்குக் கொடுத்த அணிந்துரையில்
இப்படிப் பதிவு செய்திருக்கிறார் அவர்.

சுடர்சினம் தணிந்து குன்றம் சேர (195)
கதிர்சினந் தணிந்த கையறு மாலை (387)
எனக் குறுந்தொகையில் வருவனவற்றை
அறிந்திருந்ததாலேயே அவர் இங்ஙனம் பாடினார்.
இனி, சங்க நூல்களில் அவருக்கிருந்த மிக நுட்பமான
புலமைக்கு ஒரு சான்று காட்டுவோம்.

அவருக்குப் பொன்றாப் புகழ்குவித்த திரையிசைப்
பாடல்களுள் ஒன்று,

அமுதும் தேனும் எதற்கு? – நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
எனத் தொடங்குவதாகும். எத்தனை முறை கேட்டாலும்
சலிப்பின்றி மனம் களிப்புறச் செய்யும் பாடல் அது. அதில்,

நிலவின் நிழலோ உன் வதனம் – புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்
என்று காதலியின் அழகில் மனங்கிறங்கிப் பாடுகிறான்
காதலன்.

நிழல் படிந்தோ ஆடை அழுக்காகும்’ (தே.ம. ப.184) என்று
பாடிய சுரதா, இங்கு நிலவின் நிழலோ?’ என்று பாடியதன்
பொருள் என்ன? நிலவின் ஒளியே என்று
பாடியிருக்கலாமே – என நினைக்கத் தோன்றும்.

ஆம், கவிஞர் சுரதா, ஒளி’ என்னும் பொருளில் தான் நிழல்’
என்பதை இங்கு எடுத்தாண்டிருக்கிறார். அவர் வாக்கு
மூலத்தில் வருவதுபோலத்தான் சங்கப் பாடல்களில்
அவருக்கிருந்த தேர்ச்சியின் விளைவே இது.

சரி, சங்கப் பாடல்களில் நிழல் என்பதற்கு ஒளி என்னும்
பொருள் எங்கே கிடைக்கிறது?

நிழல்திகழ் சுடர்த்தொடி ஞெகிழ ஏங்கி’ என
நற்றிணையிலும் (371-6),
நிழல் திகழ் நீல நாகம்’ எனச்
சிறுபாணாற்றுப்படையிலும் (95)
வருவதை அறிந்தே பாடினார் அவர்.

—————

நரை கூறிய அறிவுரை

கோசல நாட்டு மன்னன், திருமால் அவதாரமாம் இராமனைத்
திருமகனாகப் பெற்ற பேறு வாய்த்தவன். ஒரு நாள் தன்
தலையில் முடி ஒன்று நரைத்திருப்பதைக் கண்டான்.

அந்த நரைமுடி அவனுக்கு ஓர் அறிவுரை கூறியது;
இராவணன் உயிருக்கு முடிவு கட்டியது. இதனை,

மன்னனே அவனியை மகனுக்கு ஈந்துநீ
பன்னரும் தவம்புரி பருவம் ஈதெனக்
கன்ன மூலத்தினில் கழற வந்தென
மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர்!
 –
என்றார் கம்பர். “மன்னா! நீ கானகம் சென்று தவம்
புரிவதற்குரிய காலம் வந்துற்றது; அரசாட்சி பொறுப்பை
மகனிடம் ஒப்படைப்பாய்’ என்பதே நரை கூறிய அறிவுரை.

நரை முடியினால் இராவணன் உயிருக்கு முடிவு வந்தது எவ்வாறு?
நரையைக் கண்ட காவலன் அரசாட்சிப் பொறுப்பை இராமனிடம்
ஒப்படைக்க நினைத்தான். கானகம் சென்று தவம் புரியலாம்
என்று எண்ணியவனுக்கு வானகம் செல்லும் அவலம் ஏற்பட்டது.

கைகேயி பெற்ற வரத்தினால் வையகம் பரதனுக்கு உரியதாயிற்று;
கானகம் இராமனுக்கு உரியதாயிற்று. கானகத்தில், மாரீசன்
மாயமான் வடிவில் வந்தான். இராமன், தன் பெண்மானாம்
சீதைக்கு அப்பொன்மானைப் பிடித்துத் தருவதற்காக அதன் பின்
சென்றான். இராவணன் சந்நியாசி வடிவில் வந்தான்;
சீதையைக் கவர்ந்தான்; இலங்கையில் சிறை வைத்தான்.

இராம – இரவாண யுத்தம் ஏற்பட்டது. இராவணன் முடித்தலை
சிந்த உயிரிழந்தான். நரைமுடி இத்தனைக்கும் காரணமாயிற்று.
எனவேதான்,

தீங்கிழை இராவணன் செய்த தீமைதான்
ஆங்கொரு நரையதா அணுகிற் றாமெனப்
பாங்கில் வந்திடு நரை படிமக் கண்ணடி
ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்!
 –
என்பார் கம்பர்.

——————————————-

-முனைவர் பா.நாகலட்சுமி
நன்றி-தமிழ்மணி

திட்டினாலும் தித்திக்கும்


“பொம்பளை சிரிச்சாப் போச்சு! புகையிலை விரிச்சா போச்சு!’

என்றொரு பழமொழி தமிழகத்தில் நாட்டுப் புறங்களில்
நிலவுகின்றது!

பலபேர் கூடியுள்ள இடங்களில் பலர் முன்னிலையில் பெண்கள்
வாய்விட்டுச் சிரிக்கக் கூடாது என்பது பண்டைய நம்பிக்கை!

கண்ணபிரானின் அரக்கு மாளிகையின் தரை பளிங்குக் கற்களால்
ஆனது. அதில் வழுக்கி விழுந்த துரியோதனனைக் கண்ட திரௌபதி
கலகலவெனச் சிரித்துவிட்டாள். தனக்கு அது அவமானம் எனத்
துரியோதனன் கருதியதால் கொண்ட வஞ்சமே, அரசசபையில் அவளைத்
துகிலுரிந்து அவமானப்படுத்தியது என்பார்கள்.

அதனாலேயே இப்பவும் கட்டுப் பெட்டியாக வாழும் குடும்பங்களில்
வாழும் பெண்கள் சிரிப்பு வந்தால் முந்தானையால் வாயை மூடிக்
கொள்வதைக் கிராமங்களில் காணலாம்.

ஆனால், பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பெண்கள் பார்த்தாலும்,
சிரித்தாலும், உதைத்தாலும், பாடினாலும், ஆடினாலும் எவை எவை
துளிர்த்து, அரும்பிப் பூக்கும் என்று பாடியுள்ள பாடல் ஒன்றுள்ளது.
அப்படியா சேதி! ஆச்சரியமாக இருக்கிறதே! என நம்மை வியக்க வைக்கும்
பாடல் இதோ!

தனிப்பாடல்

ஏடவிழ் மகிழ்சுவைக்க! எழில் பாலை நட்பு காட்டப்
பாடலம் நிந்திக்க! தேம்படி முல்லை நகைக்க! புன்னை
ஆட! நீள் குரா அணைக்க! அசோகம் உதைக்க! வாசந்தி
பாட! மா பார்க்க! வார் சண்பகம் நிழல்படத் துளிர்க்கும்!


இதன் விளக்கம்:

சுவைத்தால் மகிழமும்,
நட்பு காட்டினால் ஏழிலம் பாலையும்,
நிந்தித்தால் பாடலமும்(பாதிரியும்),
சிரித்தால் (நகைத்தால்) முல்லையும்,
ஆடினால் புன்னையும்,
அணைத்தால் குராவும்,
உதைத்தால் அசோகமும்,
பாடினால் வாசந்தியும்,
ஏறிட்டுப் பார்த்தால் மாமரமும்,
நிழல் பட்டால் சண்பகமும்,
பட்டுப் போயிருந்தாலும், துளிர்த்தும், அரும்பியும், பூத்தும்,
காய்த்தும், கனிந்து குலுங்கும் என்று பாடியுள்ளது வியப்பு
அல்லவா?

திட்டானாலும் தித்திக்கும் என்பது செந்தமிழின் சிறப்பு.

——————————–
நெல்லை ஆ.கணபதி
கலைமகள்
நன்றி-தினமலர்

குறள் பாட்டு: நட்பு

s3.jpg

நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் 
மேற்சென்று இடித்தல் பொருட்டு.
-திருக்குறள்
சிரித்துப் பழக மட்டுமே
நட்பு கொள்ளக் கூடாது
கட்டுப்பாடு மீறினால்
கடிந்து கண்டிக்க வேண்டுமே

நல்ல வழியில் நண்பனை
நடத்துவது நட்பாகும்
தப்பான வழியில் செல்லாமல்
தடுப்பது நல்ல நட்பாகும்

————-
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தாய் இல்லாத் தாலாட்டு!


–குழந்தையைப் பெற்றெடுத்த தாய் உயிரோடு இருந்தால்தானே
அக்குழந்தையைத் தாலாட்டி, பாலூட்டி, சிராட்டி வளர்க்க முடியும்?

ஆனால் பெற்ற தாய், அதைப் பெற்றவுடன் மறைந்து விட்டால்
அல்லது காணாமல் போய்விட்டால் அக்குழந்தையின்
நிலை – கதி என்ன என்பதை வார்த்தைகளால் வடிக்க முடியாது.

அதுபோலத்தான் ஓர் இலக்கியத்தைப் படைத்து(பெற்று)விட்டு
உடனே மறையும் அல்லது தன்னை – தன் பெயரை வெளிப்படுத்திக்
கொள்ளாத ஆசிரியரும்!

ஒவ்வோர் ஆசிரியருக்குமே தான் படைக்கும் ஓர் இலக்கியம்
ஒரு குழந்தையைப் போன்றதுதான்! அத்தகையதொரு தாயை இழந்த –
ஆசிரியர் பெயர் இன்னவென அறியாத ஒரு குழந்தைதான் (நூல்)
“கோதை நாச்சியார் தாலாட்டு’!

ஆசிரியர்(தாய்) யார் எனத் தெரியாத இத்தாலாட்டு 168 கண்ணிகளைக்
கொண்டுள்ளது. சில வரிகள் விடுபட்டுள்ளன.

“தாலாட்டு’ என்பது நாட்டுப்புறப்பாடல் வகைகளுள் ஒன்று.
அது முன்பு வாய்மொழி இலக்கியம்; ஏட்டில் எழுதாக் கவிதை!
ஆனால், பிற்காலத்தில் ஏட்டில் எழுதப்பெற்று, ஆசிரியர் பெயரும்
குறிக்கப்பட்டது. இது கிராமிய மக்களின் வாழ்க்கையையும்
உணர்வுகளையும் கூறும் இசைப்பாடல். பெரும்பாலும் இதை(தாலாட்டை)
நீலாம்பரி இராகத்தில் பாடுவது வழக்கம்.

ஆனால், சஹானா, யதுகுலகாம்போதி, ஆனந்த பைரவி முதலிய
இராகங்களிலும் பாடப்பட்டன. தாலாட்டுப் பாடல்களில் உவமை அணியும்,
உருவ அணியும் கைகோர்த்துப் பெரிதும் உலா வந்தன.

“எஸ்.வையாபுப்பிள்ளை உபசரித்தது’ என்ற குறிப்போடு ஓர் இணையத்தில்
வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலின் பதிப்பாசிரியர் பெரியன் ஸ்ரீநிவாசன்
புதல்வர் எஸ்.நம்பி என்பவர்.

இந்நூல் முன்னுரையின் சில பத்திகள் வருமாறு:
“சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா! ஆடிவரும் தேரே!”
என்று கண்ணனைப் பாடிய பாரதியின் அழியாக் கவிதைக்கு அவர்
மகள் காரணியாக இருந்தது போல், இப்படியானதொரு சிந்தனை
சென்ற நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒரு வைணவ அன்பருக்கு ஏற்பட்டு
அவர், விட்டுசித்தரின் வழியில், அவரது வரிகளை உரிமையுடன்
கையாண்டு அவரது மகளான கோதை நாச்சியாருக்கு ஒரு தாலாட்டுப்
பாடியுள்ளார்.

ஆழ்வார் திருநகரி என்னும் ஊர் தமிழ்த் தாத்தா உ.வே.சா.,
மகாவித்வான் இரா.ராகவையங்கார் போன்றோருக்குப் பண்டைத்
தமிழ்க் கருவூலங்களைத் தந்த புண்ணிய பூமியாகும். அத்தகைய
ஆழ்வார் திருநகரியில் கிடைத்திருக்கும் மற்றுமொரு தமிழ்க்
கருவூலம்தான், “கோதை நாச்சியார் தாலாட்டு’. ஏடுகளில் கண்டபடி
1928-இல் ஆழ்வார் திருநகரி திருஞான முத்திரைக் கோவை பதிப்பாக
வெளிவந்திருக்கிறது.

ஆக்கியோன் பெயர் ஏட்டில் அழிந்து விட்டதாலோ, இல்லை,
“நாடோடிப் பாட்டுக்கு தாய் தந்தை யாரோ?”
எனும் படியாகவோ இந்நூலை ஆக்கியோன் பெயர் விட்டுப்
போயிருக்கிறது. பழம் ஓலைச் சுவடிகளைச் சரியாகப்
பராமரிக்கவில்லையெனில் அவை பூச்சிகளின் வாய்க்கு இரையாகி
அழிந்துவிடுகின்றன.இந்நூலில் பல வரிகள் அச்சிடப் படாததற்குக் காரணம் அவை
வாசிக்கத் தக்கதாய் இல்லை என்று ஊகிக்கலாம். இல்லை, வாய்
மொழியாகக் கேட்ட பாடலைப் பதிவு செய்தவருக்கு ஞாபத்தில் வராத
வரிகளை எழுதாமல் விட்டு விட்டார் என்றும் கருதலாம்.

1928 புத்தகம் இது பற்றி ஒரு சேதியும் தராமல் நம்மை இப்படியெல்லாம்
ஊகிக்கவிடுகிறது” என்கிறது முன்னுரை.

இத்தாலாட்டில், ஸ்ரீவில்லிபுத்தூரின் அழகு, பேரிகை, எக்காளம்,
வீணை, செகண்டி, தும்புரு, மத்தளம் முதலிய இசைக் கருவிகள்,
கோதை நாச்சியாரின் திருவவதாரம், சூடிக்கொடுத்த நிகழ்வு,
மார்கழி நோன்பு, கோதை திருமணம் முதலியவை கூறப்பட்டுள்ளன.

———————-

தென்புதுவை விஷ்ணுசித்தன் திருவடியை நான்தொழுது
இன்பமுடன் தாலாட்டு இசையுடனே யான்கூறத்….(1)

தெங்கமுகு மாலானைச் சிறந்தோங்கும் ஸ்ரீரங்கம்
நம் பெருமாள் பாதம் நமக்கே துணையாமே (2)

பல்லக்கில் காணாமல் பந்தொடியார் காணாமல்
எல்லாருங் காணாமல் என்மகளை யாரெடுத்தார் (117)

ஒருமகளை யானுடையேன் உலகளந்த மாயவனாம்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய்!
(119)

அப்போது கோதையரும் அரங்கள் அடியைவிட்டு
இப்போதும் அய்யர் இணையடியைத் தான்தொழுதாள்
(121)

வாழ்த்தியே அய்யர் மகிழ்ந்து மகள்தனக்கும்
வாழ்த்தியே முற்று மகிழ்ந்து ரெங்கருக்கும் (122)

கோதையரும் வாழிகோயில்களும் தான்வாழி
சீதையரும்வாழி செகமுழுதும் தான்வாழி!(168)

என்று இத்தாலாட்டு நிறைவுபெறுகிறது.-
————-

ஜெர்மனி நா.கண்ணன் பதிவு (முன்னுரை) செய்துள்ள இத்தாலாட்டில்
இடம்பெறும் “அய்யர்’ (கண்ணி-121) என்பதற்கு, “”அய்யர் இணையடியை’
என்று சொல்வதிலிருந்து இப்பாடல் இயற்றப்பட்ட காலத்தில் “ஐயங்கார்’
என்ற ஒரு பிரிவு தோன்றவில்லையென்று தெரிகிறது. இல்லையெனில்,
பரம வைஷ்ணவரான விட்டு சித்தரை “ஐயங்கார்’ என்றே இத்தாலாட்டு
இயம்பியிருக்கும். 1928-இல் பதிப்பிக்கப்பட்டு இன்று
73 ஆண்டுகளாகின்றன (2001). இவ்வோலைச் சுவடி பதிப்பிக்கப்பட்ட
காலம் புத்தகத்தில் இல்லை.

ஐயங்கார் என்ற பிரிவு ஆங்கிலேயர் காலத்தில் உருவானது என்று சொல்வர்.
அப்படியெனில் இத்தாலாட்டு ஆங்கிலேயர் வருகைக்கு முன் எழுதப்
பட்டிருக்குமோ?” என்ற ஐயத்தையும் எழுப்பியுள்ளார்.
இது ஆராயப்பட வேண்டிய தாலாட்டு.

——————————————–
தாலாட்டு ஒரு வாய்மொழி இலக்கியக் கலை.
தாயின் தாலாட்டு கேட்டே அக்காலக் குழந்தைகள் தூங்கின.
அத்தாலாட்டின் மூலம் குழந்தைகளுக்கு நல்ல நல்ல
அறக்கருத்துகள், நீதிநெறிகள், தெய்வத்தின் மகிமை,

குழந்தையின் பெருமை, குலப்பெருமை, மாமன்மார்கள் பெருமை,
புராணக் கதைகள், பழமொழிகள் முதலியவை வாய்மொழிப்
பாடலாகப் பாடப்பட்டன. ஆனால், இன்றைக்கு செல்லிடப்பேசியின்
அழைப்பொலியையும், தொலைகாட்சி தொடரின் அல்லது அதில்
வரும் விளம்பரத்தின் ஒலியையும் கேட்டபடியே குழந்தைகள்
தூங்குகின்றன.

அதனால்தான், பண்டைக் காலத்திய தாலாட்டுகளும் தூங்கிப்போய்
விட்டன!

———————–
—By -இடைமருதூர் கி. மஞ்சுளா
தமிழ்மணி

« Older entries