சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்…’

திருச்செந்துாருக்கும், சந்தனத்துக்கும் முக்கிய தொடர்பு
உண்டு. ஒரு நாடோடி பாடலில்,

‘சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்…’ 

என்னும் பாடல் வரி இடம் பெற்றுள்ளது. முருகன் வீற்றிருக்கும்
இப்பகுதிக்கு, சந்தன மலை என்றும் பெயர் இருக்கிறது.

பதினைந்தாம் நுாற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர்,
திருப்புகழில், ‘சந்தனப் பைம்பொழில் தண் செந்தில்’ என்று,
சந்தன சோலையாக, திருச்செந்துார் இருந்ததைக் குறிப்பிடுகிறார்.

தற்போது, சந்தன மரம் எதுவும் இல்லை. ஆனால், பிரசாதத்தில்
திருநீறு போல், சந்தனத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு.

திருச்செந்துாரில் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வோர், கோவில்
எல்லையைத் தாண்டக் கூடாது என்பதும், விசேஷ தகவல்.
கிழக்கில் கடற்கரை, மேற்கில் துாண்டு கை விநாயகர் சன்னிதி,
வடக்கில் வள்ளியம்மன் குகை, தெற்கில் நாழிக் கிணறு
ஆகியவற்றை, ஆறு நாட்களுக்கு கடக்கக் கூடாது.

உண்ணா நோன்பு, பேசா நோன்பு, பகலில் ஒருவேளை உண்பது
ஆகிய வழிமுறைகளை, பக்தர்கள் பின்பற்றுகின்றனர்.
சூரசம்ஹாரம் முடிந்த பின், பழச்சாறு அருந்தி, விரதம் முடிக்க
வேண்டும்.

திருச்செந்துார் சென்று, கொடி மரத்தை வணங்கி, தீர்க்காயுளுடன்
வாழுங்கள்.

——————————

– தி. செல்லப்பா
வாரமலர்

விஷ்ணுவின் அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை

நல்லதை நினையுங்கள் – நபிகள் நாயகம்

* பரிசுத்த நினைவின் காரணமாக எத்தனையோ
சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக மாறி விடுகின்றன.

* பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால்
எத்தனையோ பெரிய நன்மைகள் அற்பக் காரியங்களாகி
விடுகின்றன.

* பொது இடங்களில் நடைபாதைகளில் நிழல் தரும்
மரத்தடிகளில் அசுத்தம் செய்யாதீர்கள்.
சிறுநீர் கழிக்கும் போது பேசாதீர்கள்.
அதனால் இறைவன் கோபம் கோபப்படுகிறான்.

* கடன் கொடுத்து ஒருவருக்கு உதவி செய்வது தருமத்தைச்
சாரும்.

* அழகிய முறையில் எவர் கடனைத் திருப்பித் தருகிறாரோ
அவர் தான் உங்களில் மேலானவர்.

—————————————

நபிகள் நாயகம்
நன்றி- தினமலர்

கபீர் சொல்கிறேன், கேளுங்கள்!

என் பெயர் கபீர். நான் ஒரு நெசவாளி. என்னிடம் ஒரு தறி
உள்ளது. அதைக் கொண்டு நான் துணி நெய்கிறேன்.
ஒரு நூலை இன்னொரு நூலோடு கோப்பேன். அதை
வேறொரு நூலோடு சேர்ப்பேன். அவ்வளவுதான் என்
வேலை. அவ்வளவுதான் தெரியும் எனக்கு.

நான் எப்போதும் அமைதியாகவே இருப்பேன். ஆனால்
என் தறி ஓயாமல் தாளமிட்டுக்கொண்டே இருக்கும்.
அந்தத் தாளம் எனக்குப் பிடிக்கும். ஒரு நாள் அந்தத்
தாளத்துக்கு ஏற்றாற்போல் சில சொற்களை ஒன்றன் பின்
ஒன்றாகச் சொல்லிப் பார்த்தேன்.

மீண்டும் மீண்டும் அவ்வாறு சொன்னபோது, அந்தச்
சொற்கள் இணைந்து ஒரு பாடலாக மாறிவிட்டதை
உணர்ந்தேன்.

கபீர் நீ எப்படி இவ்வளவு இனிமையாகப் பாடுகிறாய் என்று
சிலர் கேட்கும்போது எனக்குக் கூச்சமாக இருக்கும்.
நான் அல்ல, என் தறியே பாடுகிறது என்று சொல்லிவிடுவேன்.
அவர்கள் சிரிப்பார்கள். அதென்ன தறி எப்படிப் பாடும்
என்பார்கள். அது உண்மை என்பது அவர்களுக்குத் தெரியாது.

நீங்களே சொல்லுங்கள். தறி இல்லாவிட்டால் எனக்குத்
தாளம் என்றால் என்னவென்று தெரியாமல் போயிருக்கும்.
தாளம் என்றால் என்னவென்று தெரியாவிட்டால்
நான் எப்படிப் பாடலை உருவாக்கியிருப்பேன்?

பாடுவதற்கு மட்டுமல்ல, எப்படி வாழ வேண்டும் என்றும்
அதைவிட முக்கியமாக எப்படி வாழக் கூடாது என்றும்
தறியே எனக்குக் கற்றுக் கொடுத்தது.
எப்படி என்று சொல்கிறேன், கேளுங்கள்.

போன வாரம் சந்தையில் ஒரு தகராறு. ஒரு பண்டிதரையும்
ஓர் ஏழைப் பெண்ணையும் போட்டு ஒரு கூட்டம் அடித்துக்
கொண்டிருந்தது. உள்ளே புகுந்து அவர்களைக்
காப்பாற்றினேன். என் முதுகிலும் சில அடிகள் விழுந்தன.

இவர்கள் செய்த தவறு என்ன? எதற்காக இந்தத் தாக்குதல்?

“கபீர், இந்தப் பண்டிதருக்குத் தாகம் ஏற்பட்டிருக்கிறது.
அதற்காகப் போயும் போயும் இந்தப் பெண்ணிடமிருந்தா
தண்ணீர் வாங்கிக் குடிப்பது? அதான் அடிக்கிறோம்”
என்றார்கள்.

—————-

எனக்குச் சிரிப்பு வந்தது. தண்ணீர் குடிப்பது ஒரு தவறா
என்று கேட்டேன். “அப்படி இல்லை, கபீர்.
பண்டிதர் உயர் சாதியைச் சேர்ந்தவர். இந்தப் பெண்ணோ
தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர். இவரிடமிருந்து பண்டிதர்
எப்படித் தண்ணீர் வாங்கிக் குடிக்கலாம்?

இந்தப் பெண்ணுக்குதான் புத்தியில்லை என்றால் படித்த
பண்டிதருக்கும்கூடவா புத்தி பேதலித்துவிட்டது? இப்படியா
மரபுகளை மீறி நடந்துகொள்வது? இவர்களை உதைத்தால்
தான் மற்றவர்களுக்கும் அறிவு வரும்.

இதில் நீ தலையிட வேண்டாம் கபீர். இல்லாவிட்டால்
உனக்கும் சேர்த்து உதை விழும்!”

இரண்டு நாட்களுக்கு முன்பு இன்னொரு மோதல்.
ராமர் பெரியவரா, ரஹீம் பெரியவரா? யாருக்கு செல்வாக்கு
அதிகம்? யாருக்கு சக்தி அதிகம்? யாரை வணங்கினால்
நிறைய நன்மைகள் கிடைக்கும்?

இரண்டு குழுக்கள் ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்து நின்று
சுடச்சுட வாதம் செய்துகொண்டிருந்தன. வெறுமனே வாய்
சண்டையாக இருந்தால் பரவாயில்லை. நீயா, நானா
பார்த்துவிடுவோம் என்று அடிதடியிலும் இறங்கிவிட்டார்கள்.
இத்தனைக்கும், அவர்களில் பலர் கற்றறிந்த அறிஞர்கள்!

இதற்கெல்லாம் கோபப்படுவதா அல்லது வருத்தப்படுவதா?
கண்ணுக்குத் தெரியாத சாதியையும் மதத்தையும் வைத்துக்
கொண்டு ஏன் அவர்கள் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்?

பாமரர்களுக்கு எதுவும் தெரியாது, சரி. பண்டிதர்களுக்கும்
அறிஞர்களுக்கும்கூடவா உண்மை தெரியாது? ஏன் அவர்கள்
வீணாகச் சண்டையை வளர்க்கிறார்கள்?
அவர்கள் படிக்காத நூல்களா?

எனக்கு ஓர் எழுத்துகூட எழுதவோ படிக்கவோ தெரியாது.
எனக்குத் தெரிந்த ஒரே நூல், என் தறியில் உள்ள நூல்
மட்டும்தான். அது எப்போதும் தூய்மையான வெள்ளை
நிறத்தில் இருக்கும்.

அந்த நூலின்மீது உங்களுக்குத் தேவைப்படும் சாயத்தை
நீங்கள் ஏற்றிக்கொள்ளலாம். நீங்கள் எந்தச் சாயத்தை
ஏற்றினாலும் அது ஏற்றுக்கொள்ளும். அந்தச் சாயத்துக்கு
ஏற்றாற்போல் தன் தோற்றத்தை அது மாற்றிக்கொள்ளும்.

பச்சை சாயம் பூசினால் நூலும் பச்சையாகிவிடும்.
நீலத்தை ஏற்றினால் நீலம். சிவப்பு வேண்டுமா, அதையும்
ஏற்றுக்கொள்ளும்.

சிலருக்குச் சிவப்பு பிடிக்கும். சிலருக்கு வெள்ளை.
சிலருக்கு நீலம். எனக்குப் பச்சை.
ஒருவர் ராம், ராம் என்கிறார். இன்னொருவர் ரஹீம் என்கிறார்
. நான் இந்த இரண்டையும் கலந்துகொள்கிறேன் என்கிறார்
இன்னொருவர்.

எனக்கு இந்த இரண்டும் வேண்டாம் என்கிறார் இன்னொருவர்.
உனக்கு ஏன் பச்சைப் பிடித்திருக்கிறது என்பீர்களா?
இனி நீலம் போடாதே என்று சண்டையிடுவீர்களா?
எல்லோரும் ஒரே வண்ண ஆடையைத்தான் அணிந்துகொள்ள
வேண்டும் என்று வற்புறுத்துவீர்களா?

நான் நெய்து தரும் ஆடை கோயிலுக்கும் போகிறது,
மசூதிக்கும் போகிறது. என் தறிக்கு மதம் தெரியாது.
சாதி தெரியாது. படித்தவரா, பண்டிதரா, பாமரரா என்று
அது பார்ப்பதில்லை. உனக்கொரு நூல், எனக்கொரு நூல்,
கடவுளுக்கு ஒரு நூல் என்று அது பேதம் பிரிப்பதில்லை.
வெள்ளை உள்பட எல்லா நிறங்களையும் என்னுடைய தறி
நேசிக்கிறது.

நான் என் தறியின் மாணவன். நான் ஆடைகளில்
வண்ணங்களைப் பார்ப்பதில்லை. நூலை மட்டுமே
பார்க்கிறேன். சாதிகளை, மதங்களைப் பார்ப்பதில்லை.
மனிதனை மட்டுமே பார்க்கிறேன்.

ஒருபோதும் எதையும் பிரிக்காதே, இணைத்துக்கொண்டே
இரு என்கிறது என் தறி. நூல்களை இணைத்து ஆடைகளையும்
சொற்களை இணைத்து பாடல்களையும் உருவாக்கிக்கொண்ட
இரு என்கிறது தறி.

ஒரு மனிதர் இன்னொருவரோடு இணையும்வரை,
அவர் வேறொருவரோடு இணையும்வரை பாடிக்கொண்ட இரு
என்கிறது தறி.

எனவே நான் பாடுகிறேன். எனக்காகவோ உங்களுக்காகவோ
அல்ல, நமக்காக.
———————

(கபீர் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.
எளிய பாடல்கள் மூலம் மத ஒற்றுமையை வலியுறுத்தியவர்.)

———————
-மருதன்
ஓவியங்கள்: லலிதா
நன்றி- தி இந்து

முதல் விநாயகர் கோவில்!


தமிழகத்தில் முதன் முதலில் எழுப்பப்பட்ட விநாயகர்
கோவில், துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுக மங்கலத்தில்
உள்ள ஆயிரத்தெண் விநாயகர் ஆலயம் என்கிறது,
வரலாறு.

கி.மு., 2300 ஆண்டுகளுக்கு முன், கோமார வல்லபன்
என்ற அரசன், நர்மதை நதிக்கரையிலிருந்து,
ஆயிரம் வேத பண்டிதர்களை அழைத்து, யாகம் நடத்த
முடிவு செய்தான்.

999 பேர் மட்டுமே வந்திருக்க, மன்னன் தவித்தபோது,
விநாயகரே வேத பண்டிதராக வடிவெடுத்து யாகம்
நடத்த உதவியதால், ‘ஆயிரத்தெண் விநாயகர்’ என்று
பெயர் பெற்றார்.

இங்கு, ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் விளங்கும்
இக்கோவிலில், சித்திரை மாதத்தில், 10 நாட்கள்
பிரம்மோற்சவம் நடைபெறும்.

—————————-
எஸ். சங்கீதா
வாரமலர்

பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும்-குட்டிக்கதை!

krishna

குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.

கிருஷ்ணர் – உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். கதையை சொல்ல ஆரம்பித்தார்…

நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையா சமைப்பது, அவரை பிரித்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.

அரசருக்கு வித்தியாசமான சுவையை செய்துகொடுத்து பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து அரசருக்குப் பரிமாறினான்.

தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அச்சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி சமைக்குமாறு கட்டளையிட்டார். அதோடு அந்தச் சமையல்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.

திருதராஷ்டிரா இப்போது சொல் என்றார் கிருஷ்ணன்..

அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.

வசிஷ்டரின் சமையல்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்துவிட்டார். ஆயினும் அதை வசிஷ்டர் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார், அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே!

சமையல்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான் என்றார் திருதராஷ்டிரன்.

புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது மன்னன் செய்ததே தவறு எனக் கூறினாய்.

அத்தகைய நீதிதான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது.

ஆனால், நான்சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.

அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய வேதனை அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய். ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்.

தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார்.

தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.

நாம் செய்த தவறுகள் நம் பிள்ளைகளைச் சேரும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வோம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம்.

ஓம் நமோ நாராயணா…!

நன்றி- தினமணி

குழந்தையிடம் ஆசி பெறுவோம்:



குழந்தையிடம் ஆசி பெறுவோம்:

நம் வீட்டு குழந்தைகளுக்கு பிறந்தநாள் என்றால்,
பெரியவர் களெல்லாம் இணைந்து வாழ்த்துச் சொல்வோம்.

ஆனால், இந்தச் சின்னக்கண்ணன் நமக்கெல்லாம்
ஆசி தருபவன். ஏனெனில், அவனே இந்த உலகில்
எல்லாமாக இருக்கிறான்.

நாம் அவனை உறவினனாக பார்க்கலாம்.
ஆம்…தாயாய், தந்தையாய், குருவாய், குழந்தையாய்,
நண்பனாய், அரசனாய், சீடனாய், மந்திரியாய்,
நல்லாசிரியனாய், தெய்வமாய், சேவகனாய்..
.எப்படி வேண்டுமானாலும் அவனைக் காணும்
உரிமையை அவன் நமக்கு அளித்துள் ளான்.

அவனது அவதார நன்னாளில், மகாகவி பாரதியார்
பாடிய கண்ணன் பிறப்பு பாடலை நாமெல்லாம் பாடி
மகிழ்வோமா!


———

கண்ணன் பிறந்தான் எங்கள்
கண்ணன்பிறந்தான் இந்தக்
காற்றதை எட்டுத்திசையிலும் கூறிடும்
திண்ணமுடையான் மணி
வண்ணமுடையான் உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்
பண்ணை இசைப்பீர் நெஞ்சிற்
புண்ணை யொழிப்பீர் இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை
எண்ணிடைக் கொள்வீர் நன்கு
கண்ணை விழிப்பீர் இனி
ஏதும் குறைவில்லை; வேதம் துணையுண்டு.

கண்ணன் பிறந்த ஆவணி மாத ரோகிணி நட்சத்திரம்,
மற்றும் பிறந்த திதியான அஷ்டமியைக் கணக்கிட்டு
கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

இவ் விழாவை வட நாட்டினர் சிறப்பாக கொண்டாடுகின்றனர்
அன்று கண்ணன் லீலைகளை சித்தரிக்கும் பொம்மைகளை
வைத்து வீடுகளில் கொலு பிரதானமாக இடம்பெறும்.

————-
நன்றி-புதிய செய்தி

எது சரி? எது தவறு?- தர்ம சங்கடம்

IMG_0693.jpg

செய்ய முடிந்ததை செய்…

somberi-seedanukku-zenguru-thayaritha-theneer.jpg

ராஜுவும், மாலதியும் காதலர்கள்.
ஆனால், வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால்
அவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு அவர்களுடைய
குடும்பங்களோ, அவர்களைச் சேர்ந்த இனமோ ஒப்புக்கொள்ளத்
தயாராக இல்லை.

“சேர்ந்து வாழ முடியாதபோது, எதற்காக இந்த வாழ்க்கை..?
நாம் சேர்ந்து தற்கொலை செய்துகொள்வோம் வா..!” என்று
ராஜு சொன்னான். இருவருமாக மலை உச்சிக்குப் போய்ச்
சேர்ந்தார்கள். கைகளைக் கோத்துக்கொண்டார்கள்.

குதிக்க இருந்த கடைசித் தருணத்தில், அந்தப் பெண்,
“ராஜு, எனக்கு பயமாக இருக்கிறது. முதலில் நீ குதி..!
அதைப் பார்த்து நான் தைரியம் பெறுகிறேன்!” என்று
கூறினாள். ராஜு,

“ஐ லவ் யூ மாலதி..!” என்றான். சட்டென்று விளிம்பிலிருந்து
குதித்துவிட்டான். யாரும் எட்ட முடியாத பள்ளத்தில் போய்
ராஜு விழுந்ததை மாலதி பார்த்தாள்.

அவளும் குதிப்பதற்காகத் தயாரானாள். கடைசித் தருணத்தில்,
‘இப்போது ராஜுவே இல்லை. ராஜு இல்லை என்றால்,
என் காதல் இல்லை. காதல் இல்லை என்றால், ஜாதிப் பிரச்சினை
இல்லை. குடும்பப் பிரச்சினை இல்லை. சமூகப் பிரச்சினை இல்லை..

பிரச்சினையே இல்லாதபோது, நான் எதற்கு என் உயிரை
விடவேண்டும்..?’ என்று அவளுக்குத் தோன்றியது.
கீழே பள்ளத்தைப் பார்த்து, “ராஜு, ஐ லவ் யூ..!” என்று ஒருமுறை
கத்திவிட்டு, வீட்டைப் பார்த்துத் திரும்பி நடந்தாள்.

—————————
குறிப்பு:

என்னுடையது, என்னுடையவன் என்று நினைக்கும்போது
அதை ஒட்டிய செயல்கள் இப்படித்தான் இருக்கும்.

ஆன்மிகப் பாதையில் பயணம் செய்பவர்கள், அவ்வாறு குறுக்கிக்
கொள்வதில்லை. ‘இவனுக்குச் செய்வேன், இவனுக்குச் செய்ய
மாட்டேன்’ என்று சொல்வதில்லை.

‘என்னால் இந்தத் தருணத்தில் இதைச் செய்ய முடியும். இதைச்
செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்றால், அதைச் செய்வேன்.’
என்றுதான் முடிவெடுத்துச் செயல்படுவார்கள்.

———————————–
சோம்பேறி சீடனுக்கு ஜென்குரு தயாரித்த தேநீர்! –
ஜென் கதைக்கு சத்குரு சொன்ன விளக்கம்

இதைத்தான் ஜென் குரு அவரிடம் குறிப்பிடுகிறார்.

————————-

தவமும், திருநீறும்!

E_1491901895.jpg
விபூதி என்ற சொல்லுக்கு, ஐஸ்வர்யம் என்று பொருள்;
அதனால் தான் விபூதியை, திருநீறு என்கிறோம்.

விபூதியின் பெருமை குறித்து, ‘மந்திரமாவது நீறு…’ என,
பதிகமே பாடியிருக்கிறார், திருஞான சம்பந்தர்.
தமிழில் உள்ள சதக நூல்கள் பலவும், திருநீற்றின்
மகிமையை விரிவாக பேசுகின்றன.

ஒருசமயம், சிவபெருமானிடம், பார்வதி தேவி, ‘பெருமானே…
விபூதி பூசுவதில் உங்களுக்கு அதிக விருப்பம் இருக்க
காரணம் என்ன?’ என்று கேட்க, தேவிக்கு, சிவபெருமான்
கூறிய கதை இது:

பிருகு வம்சத்தில் பிறந்த வேதியர் ஒருவர், கோடை காலத்தில்,
பஞ்சாக்கினி மத்தியிலும், பனிக்காலத்தில், குளிர்ந்த நீரிலும்
மற்றும் மழைக்காலத்தில் ஆகாயத்தை நோக்கி நின்றபடியும்
கடும் தவம் செய்தார்.

பசி எடுத்தால், அதுவும், மாலைப் பொழுதில் மட்டும்
சிறிதளவே உணவு உண்டு வந்தார். அவருடைய கடுந்தவத்தை
கண்டு, பறவைகள் எல்லாம் பரிவோடு, பழங்களை கொண்டு
வந்து, அவர் முன் வைத்தன; சிங்கம் மற்றும் புலி போன்ற
கொடிய விலங்குகள் கூட, எவ்விதமான அச்சமுமின்றி, அவர்
முன் சஞ்சரித்தன.

நாளாக நாளாக, பழங்களைக் கூட தவிர்த்து, இலைகளை
மட்டுமே உண்டார். அதனால், அவருக்கு, பர்ணாதர் என்ற
பெயர் உண்டானது. பர்ணம் என்றால், இலை.

ஒருநாள், பர்ணாதர், தர்பை புல்லை பறிக்கும் போது,
அவருடைய கையிலிருந்து, ரத்தம் ஒழுகத் துவங்கியது.
அதைப் பார்த்த பர்ணாதர், ‘ஆஹா… என் தவம் கை கூடியது…’
என்று ஆனந்தக் கூத்தாடினார்.

அதைக்கண்டு, பறவைகளும், விலங்குகளும் பயந்து ஓடின.

சிவபெருமான் ஒரு அந்தணரைப் போன்று அவர் முன் சென்று,
‘பர்ணாதா… ஏன் இப்படி குதிக்கிறாய்; தவம் கைகூடிவிட்ட
அகங்காரமா… அடக்கத்தினாலேயே பிரம்மா, தவசீலர்களான
முனிவர்கள் எல்லாம், பெரும்பேறு பெற்றிருக்கின்றனர்
என்பது உனக்கு தெரியாதா…’ என்றார்.

சிவன் வாக்கை, செவியிலேயே வாங்கவில்லை, பர்ணாதர்.
அதைக்கண்ட சிவபெருமான், தன் திருக்கரங்களால்,
பர்ணாதரின் கையை தீண்டினார். அடுத்த வினாடி,
பர்ணாதரின் கையில் வழிந்த ரத்தம் நின்று, அமிர்தம் வழியத்
துவங்கியது; சில வினாடிகளில், அதுவும் நிற்க, அமிர்தத்திற்கு
பதிலாக, திருநீறு வழியத் துவங்கியது.

அந்த அற்புதத்தை கண்டு வியந்து, அந்தணரின் திருவடிகளில்
சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, ‘சுவாமி… தாங்கள் யார்;
தயவுசெய்து உண்மையை கூறுங்கள்…’ என, வேண்டினார்.

அவருக்கு காட்சியளித்த சிவபெருமான், ‘பர்ணாதா…
உன் தவம் கண்டு மகிழ்ந்தேன்; அதன் காரணமாகவே,
இவ்வாறு விபூதியை உருவாக்கினேன்; நீ, கணாதிபர்களில்
ஒருவனாக ஆவாய்…’ என, வரம் கொடுத்தார்.

இவ்வரலாற்றை, பார்வதிதேவியிடம் விவரித்த சிவபெருமான்,
‘தேவி… தேவர்கள் அனைவரும், விபூதியை அணிவதன் மூலமே
மேன்மை பெறுகின்றனர்…’ என, விபூதியின் மகிமையை,
விரிவாக கூறினார்.

தவம் செய்பவர்களை தேடி, தெய்வம் வந்து அருள் புரியும்
என்பதை விளக்கும் வரலாறு இது!

——————————
பி.என்.பரசுராமன்
வாரமலர்

« Older entries