வீணை நாரதர்! – சிறுவர் கதை

நாரதரை அனைவரும், ‘வீணை நாரதர்…’ என்றே அழைப்பர்.
காரணம், வீணை இல்லாமல் அவரை, யாரும் பார்க்க முடியாது.

‘வீணை வாசிப்பதில், தம்மை விட கெட்டிக் காரர் யாரும்
கிடையாது…’ என்று, சவால் விடுமளவுக்கு கர்வம் வந்து விட்டது.

‘வீணையை உம்மை போல், யார் வாசிக்க முடியும்’ என்று,
நாரதரை பார்க்கிறவர்கள், முகஸ்துதி செய்தனர். அதனால்,
நாரதரின் கர்வம் அதிகரித்தது.

இந்நிலையை, கண்ட கிருஷ்ணர், அவரது கர்வத்தை அழிக்க
தீர்மானித்தார்.

”மகாமுனியே… வீணையில் தங்களுக்குள்ள சாமர்த்தியத்தை
பற்றி கேள்விப்படாதவர்களே இல்லை. சிவனும், பார்வதியும்
தங்களது வாசிப்பை கேட்க ஆசைப்படுகின்றனர்;
சரி என்று சொல்லுங்கள்; இப்போதே அவர்களிடம் அழைத்து
செல்கிறேன்…” என்றார்.

இதை கேட்டு மிகவும் மகிழ்ந்த, நாரதர், ”சிவனும், பார்வதியும்
என் வாசிப்பை கேட்க ஆசைப்படுகின்றனரா…
அப்படியானால், அனைவரும் என்னை புகழ்வது நியாயம் தான்!
இப்போதே கைலாயம் சென்று, என் திறமையை
காண்பிக்கிறேன்..” என்றார்.

நாரதருடன் கைலாயம் சென்றார் கிருஷ்ணர்.

வழியில், பெரிய மாளிகை ஒன்றை கண்டனர்; அந்த, அழகிய
மாளிகையில் யார் இருக்கின்றனர் என்று தெரிந்து
கொள்வதற்காக, இருவரும் உள்ளே நுழைந்தனர்.

அங்கு, அழகிய மங்கையர் இருந்தனர்; ஆனால், அவர்கள்
அனைவருக்கும் ஒரு குறை இருந்தது.

ஒருத்திக்கு, கை ஒடிந்து கிடந்தது; இன்னொருத்திக்கு, கால்
ஒடிந்து கிடந்தது; மற்றொருத்திக்கு ஒரு கண் இல்லை.

அந்த அழகிய பெண்களை பார்த்து, ”இத்தனை அழகிய
மங்கையரான உங்களுக்கு, இப்படி அங்கஹீனம் செய்தவர் யார்…”
என்று கேட்டார் நாரதர்.

‘இது, சங்கீத மாளிகை; நாங்கள் அனைவரும் ராகங்கள்…
நாரதர் என்பவர், தம் வீணையில் ராகம் வாசிக்கிறேன் என்று
கூறி,தப்புதப்பாக வாசித்து எங்களை இப்படி அங்கஹீனம்
செய்து வைத்திருக்கிறார்…’ என்று கூறினர்.

இதை கேட்டதும், நாரதரின் கர்வம் ஒழிந்து விட்டது;
உடனே, கிருஷ்ணரை பார்த்து, ”நாம் இப்போது, கைலாயம்
போக வேண்டாம்…” என்று கூறினார்.

அகந்தை, சாதாரண மனிதன் என்ன, முனிவரையும்
விட்டபாடில்லை என்பது புரிகிறதா குட்டீஸ்; எப்பவும் பெருமை
காட்டாதீங்க…

———————————–
சிறுவர் மலர்

Advertisements

லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.

லட்சுமி கடாட்சம் க்கான பட முடிவு

கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி :

சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்

பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில்.
செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர்
வீட்டில் கொட்டி கிடந்தது.

ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய
மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும்
செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை
நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன்.

நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.

எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற
உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும்
என்றால் கேட்டுப் பெற்றுக்கொள்.

ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’
என்றாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில்
உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக்
கூறினார்.

மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம்
குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.
ஆனால் அவர்கள்
அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர்.

‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான
பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை
கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று
அடுக்கிக் கொண்டே போனார்கள்.

 

அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம்,
‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம்,
மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும்,
அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை.

ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி
வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ,
அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய
இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல்
போய்விடும்.

 

எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு
நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி
தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.
இளைய மகள்
கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது.

அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார்
வியாபாரி.
அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி
தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில்
உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க
வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம்.
இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’
என்று வியாபாரி கேட்டார்.

 

லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு
மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய்.
எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி
வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள்
இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது
என்று முடிவு எடுத்துள்ளேன்.

எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே
தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே
தங்கிவிட்டாள்.

 

‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து
வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில்
மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய
செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால்
சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம்
நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி
கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.

ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை
போடுவதைத் தவிருங்கள்.

——————————–
வாட்ஸ் அப் பகிர்வு

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்

காஞ்சி பரமாச்சாரியார் ஒரு பிரசங்கத்தின் போது கூறியது:

லாட்டரி சீட்டில் லட்ச ரூபாய் பரிசு விழுந்தால், ஒருவன்
, ‘ஹா’ என்று ஒரு கணம் திகைத்துப் போய் உட்கார்ந்து விடுவான்.

அப்போது, சுவாசம் நின்று, மூர்ச்சையாகி, நினைவும் இல்லாமல்
போய் விடுகிறது. சில வினாடிகளுக்கப்புறம், ‘அப்பாடி…’ என்று
சுவாசம் வெளிப்படுகிறது.

அளவுக்கு மீறி இன்பம் வந்தாலும், துக்கம் ஏற்பட்டாலும், சுவாசம்
நின்று, நினைவு அற்று விடுகிறது.

இதிலிருந்து, சுவாசம் அடங்கினால் நினைவு அற்று விடும்.
நினைவு அற்றால் சுவாசம் அடங்கி விடும் என்று தெரிகிறது.
பிரணாயாமம் செய்து, மூச்சை அடக்கி, அதன் வழியே மனசை
அடக்கச் சொல்வதன் தத்துவம் இதுவே!

இதே போல் உள்ளத்தில் துன்பமோ, பக்தியோ அதிகமானால்
கண்ணில் நீர் வழிகிறது. இதிலிருந்து மனசுக்கும், கண்ணுக்கும்
சம்பந்தம் இருப்பது தெரிகிறது.

கோபம் வந்தால் உதடு துடிக்கிறது; மனசுக்கும், உதட்டுக்கும்
சம்பந்தம் இருப்பதால் இவ்வாறு ஏற்படுகிறது, இப்படியே கண்
சிவப்பது, கை, கால் ஆடுவது எல்லாம் மனதின் ஓட்டத்தை
பொறுத்து நடக்கின்றன.

அதாவது, உள்ளே ஏற்படும் உணர்ச்சிக்கு ஏற்ப, வெளியே
சில காரியங்கள் ஏற்படுகின்றன. இதையே திருப்பி, வெளியே
சில காரியங்களை செய்தால், அதனால், உள்ளே இன்ன இன்ன
விளைவுகளை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று பெரியவர்கள்
கண்டுபிடித்துள்ளனர்.

மிலிட்டரிக்காரன், ‘யூனிபார்ம் போட்டாலே வீரத்தன்மை
வருகிறது…’ என்கிறானல்லவா… அப்படியே, பக்தி, சாந்தம்,
சத்தியம் வரவேண்டும் என்றால் வெளியே சில சின்னங்களைப்
போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறினர், நம் பெரியோர்.

அவை, வெளி வேஷம் என்று நினைத்தால், வெறும் வேஷமாகவே
போய் விடுகின்றன. ‘ஆத்மார்த்தமாக ஜீவனைப் பரிசுத்தம்
செய்து கொள்வதற்காகவே விபூதி, ருத்திராட்சம் போன்ற
சின்னங்களை அணிகிறேன்…’ என்று நினைத்தால்,
உண்மையிலேயே உள்ளே பரிசுத்தம் ஏற்படுகிறது.
புறச் சின்னங்களும் ஆத்மாவுக்கு பயன்படுகின்றன.

————————————-

நடுத்தெரு நாராயணன்
வாரமலர்

ஒரே இடத்தில் 108 திவ்ய தேசம்

இரண்டும் ஒரே திசையில்….

ஜன்னல் தத்துவம்

சொர்க்க வாசல் திறக்காத கோயில்

இறக்கை லிங்கம்!

சிவலிங்கத்திற்கு இறக்கை இருக்கிறது என்றால் அது ஆச்சரியம் தானே!

கோவை – சத்தியமங்கலம் சாலையில், 32 கி.மீ., தூரத்திலுள்ளது,
அன்னூர்; ஒரு காலத்தில், இப்பகுதி, வள்ளிக்கிழங்கு செடிகள்
நிறைந்த வனமாக இருந்தது. அன்னி என்ற வேடன் இங்கு
வேட்டையாட வருவான்.

உயிர்களைக் கொல்வது பாவம் என்று தெரிந்தாலும், வேறெந்த
வேலையும் தெரியாத காரணத்தால், வேட்டையாடி வந்தான்.
ஒருநாள் விலங்குகள் எதுவும் சிக்கவில்லை; பசி தாங்காமல்
வள்ளிக்கிழங்கை வெட்டி சாப்பிட்டான்.

கிழங்கை வெட்டிய பின்பும், அது, அளவில் குறையாமல் அப்படியே
இருந்தது. ஆச்சரியத்துடன் மேலும் கிழங்கை வெட்ட, கிழங்கின்
நீளம் குறையவே இல்லை. கிழங்கின் முழு நீளத்தையும் அறியும்
ஆவலில், மிக ஆழமாக வெட்டவே கிழங்கில் இருந்து ரத்தம்
வெளிப்பட, அதிர்ச்சியடைந்தான்.

அப்போது ‘இனி, உயிர்களைக் கொல்லும் கொடிய பாவத்தை
செய்யாதே… இதுவரை நீ செய்த பாவங்கள் அனைத்தும்
மன்னிக்கப்பட்டு விட்டது’ என்று அசரீரி ஒலித்தது.

மன்னனிடம் சென்று நடந்ததை தெரிவித்தான், வேடன். உடனே,
ரத்தம் வந்த இடத்தில் தோண்டச் சொன்னன் மன்னன். மண்ணிற்கு
அடியில் ஒரு லிங்கம் இருந்தது; ஆனால் அதை எடுக்க முடியவில்லை.

அன்றிரவு மன்னின் கனவில் தோன்றிய சிவன்,
‘நான் அவ்விடத்திலேயே குடியிருக்க விரும்புகிறேன். அதனால்,
வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டாம்…’
எனக் கூறினார். எனவே லிங்கம் இருந்த இடத்தில் கோவில்
கட்டினான், மன்னன்.

அன்னி எனும் வேடனுக்கு அருள்புரிந்ததால், அன்னீஸ்வரர் என்றும்,
பாவச்செயலை செய்த வேடனை மன்னித்ததால், மன்னீ்ஸ்வரர்
என்றும் பெயர் பெற்றார் சிவபெருமான்.

மேலும் இத்தலம் அன்னியூர் எனப்பட்டு, அன்னூர் என, திரிந்து விட்டது.
கல்வெட்டுகளில் இவ்வூர் ‘மேற்றலைத் தஞ்சாவூர்’ என
குறிப்பிடப்பட்டுள்ளது.

பெங்குவின் பறவையைப் போன்று, லிங்கத்தின் இருபுறமும் இறக்கை
வடிவம் உள்ளது. கருடன் தன் இறக்கைகளை மடக்கி அமர்ந்திருப்பது
போன்றும் தெரியும். எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், கீழே இருக்கும்
மிகச்சிறிய பொருளையும் கவனிக்கக்கூடியது, கருடன்.

அதுபோல், யாருக்கும் தெரியாது என்றெண்ணி நாம் செய்யும்
தவறுகளையும், பாவங்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்
சிவன் என்பதை, இந்த வடிவம் நமக்கு உணர்த்துகிறது.

அத்துடன், பாவங்களை உணர்ந்து திருந்தி, ‘இனி பாவம் செய்ய
மாட்டேன்…’ என இவரது சன்னதியில் உறுதி எடுத்தால், இதுவரை
செய்த பாவங்களை மன்னித்து விடுவார், சிவன்.

பொதுவாக, சிவன் கோவில்களில், லிங்கம் கிழக்கு நோக்கியே
இருக்கும்; ஆனால் இங்கு மேற்கு நோக்கி உள்ளது.

அம்பாள் அருந்தவச் செல்வி என்ற பெயரில் அருளுகிறாள்;
இவளுக்கு வௌ்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
திருமணத்தடை நீங்க, இந்நீளில் அம்பாளை வழிபடுவர்.
தலவிருட்சத்தின் கீழுள்ள சர்ப்பராஜர் சன்னிதியில், ஏழு நாகங்கள்
உள்ளன. ராகு – கேது எனப்படும் நாகதோஷம், மாங்கல்ய தோஷம்
நீங்க இங்கு வேண்டிக் கொள்வர்!

—————————————-

– தி. செல்லப்பா
வாரமலர்

சனீஸ்வரா காப்பாத்து!

சனி பகவானை மனமார வணங்கிச் சரணடைந்தால்,
எந்தச் சங்கடமும் இல்லை. சந்தோஷத்துக்குக் குறைவுமில்லை.

சனி பகவான் கோபக்காரரா. ஆமாம். பாசக்காரரா.
நிச்சயமாக. எல்லவாற்றுக்கும் மேலாக, தவறு செய்பவர்களைக்
கண்டு கோபம் கொள்வார்.

நல்லவர்களைக் கண்டு, பாசம் பொழிவார். இன்னும் முக்கியமாகச்
சொல்லவேண்டும் என்றால்… தவறென்றால் தவறுதான்.
கண்டிப்பதிலும் கறார் காட்டுவதிலும் தண்டனை வழங்குவதிலும்
சனீஸ்வரர்… ஓர் நீதியரசர்!

ஆகவே, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்கள், சத்திய
வாழ்க்கையை வாழ்பவர்கள், சனி பகவானைக் கண்டு பயப்படத்
தேவையில்லை.

‘அட… நல்லதுக்குத்தான் காலமில்லை. நல்லவங்களுக்குத்தான்
காலமில்லை’ என்றெல்லாம் பொருமுகிறவர்கள், சனிக்கிழமை
நன்னாளில், சனீஸ்வரருக்கு உகந்த நாளில், கோயிலுக்குச் சென்று,
நவக்கிரகங்களில் வீற்றிருக்கும் சனீஸ்வரர் முன்னே நின்று,
மனதார வேண்டுங்கள்.

‘சனீஸ்வரா… நான் எந்தத் தப்பும் பண்ணலைப்பா. நீதான்
காப்பாத்தணும்’ என மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள்.
நல்லவர்களைக் காத்தருள்வதுதான் சனி பகவானின் தலையாய
வேலையே!

ஆகவே, சனி பகவானைச் சரணடையுங்கள். சனி பகவான்,
நம்மைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டால்தான் பிரச்சினை.
நாம் சனீஸ்வரரையும் சனிபகவான் வழிபாட்டையும் கெட்டியாகப்
பிடித்துக் கொண்டு வாழ்ந்தால், நமக்கு எந்தப் பிரச்சினையும்
இல்லை.

சனி பகவான் இருக்கிறார். நல்ல விஷயங்களுக்கெல்லாம்
எப்போதும் துணை நிற்பார். சங்கடங்களையெல்லாம் தீர்ப்பார்.
சந்தோஷங்களையெல்லாம் தந்தருள்வார் சனீஸ்வரர்!

—————————————— வி.ராம்ஜி
தி இந்து

 

நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!


உண்மையான பக்தனின் அழுகையைப் பார்த்துக் கொண்டிருக்க
மாட்டார் ஆஞ்நேயர். ஓடிவந்து அபயக்கரம் நீட்டுவார்.
அருள் வழங்கி கைதூக்கி விடுவார் என்கிறார்கள் பக்தர்கள்.

உண்மையான பக்தன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு
உதாரணமாய் சொல்லவேண்டும் என்றால், முதலிடத்தில் இருப்பவர்
ஆஞ்சநேயர்தான்!

ஆமாம். தன்னை வீர அனுமன் என்றோ, ஜெய் அனுமன் என்றோ
சஞ்ஜீவி என்றோ பெருமையுடன் நாம் சொல்லிக் கொள்ளலாம்.
ஆனால் இதையெல்லாம் அவர் ஒருபோதும் விரும்பியதே இல்லை.
ராமபக்த அனுமன் என்று சொல்லும் போதே குதூகலமாகி விடுவார்
அனுமார்.

அந்த அளவுக்கு ஸ்ரீராமபிரான் மீது, ஆழ்ந்த பக்தியுடன் திகழ்ந்தவர்
அனுமன். அனுமாரின் பலம் அனுமாருக்கேத் தெரியாது என்பார்கள்.
ஒருவகையில் உண்மைதான். ஆனால் தன் பலமும் பராக்கிரமும்,
ராமபிரானை அனவரதமும் பூஜித்துப் போற்றுவதும் வணங்கித்
தொழுவதுமே என்று உறுதியாக இருந்தார் ஆஞ்சநேயப் பெருமான்.

அனுமனிடம் உள்ள இன்னொரு சிறப்பைப் பாருங்கள். எல்லா
தெய்வங்களும் அபய ஹஸ்தம் என்பதான முத்திரைகளில்தான்
தங்கள் திருக்கரங்களை வைத்திருப்பார்கள்.

அப்படியே திருக்கரங்களை வைத்தபடி நமக்கு அருள்பாலிப்பார்கள்.
ஆனால் அனுமனோ… தன் இரண்டுகைகளையும் கூப்பிய நிலையில்,
நம்மைப் போல, அதாவது ஒரு பக்தனைப் போல காட்சி தருவார்.
இதுவே அனுமனின் மகத்தான சிறப்பு என்று போற்றுகின்றனர்
பக்தர்கள்.

ஆகவே பக்தர்களின் தலைவனாகத் திகழும் அனுமனை,
அஞ்சனை மைந்தனை, ஆஞ்சநேயப் பெருமானை வணங்குங்கள்.
குறிப்பாக, சனிக்கிழமை நன்னாளில் மறக்காமல் வணங்குங்கள்.
அவனுடைய சந்நிதியில் நின்று கொண்டு, ‘ஜெய் அனுமன்’
‘ஆஞ்சநேயருக்கு ஜே’ என்று சொல்கிறோமோ இல்லையோ…
‘ஜெய் ராம்… சீதாராம்… ராம்ராம் சீதாராம்’ என்று ராமநாமத்தை
இப்படியாகவேனும் சொல்லுங்கள்.

அனுமன் சாலீசா பாராயணம் படியுங்கள். முடியாதவர்கள்,
அனுமன் சாலீசாவைக் காதாரக் கேளுங்கள். ஸ்ரீராம ஜெயம்
எழுதுங்கள்.

இதில் மகிழ்ந்து குளிர்ந்து போவான் அனுமன்.
உங்கள் குறைகளையெல்லாம் சொல்லி, வருத்தங்களையெல்லாம்
சொல்லி அனுமனிடம் அழுது புலம்பினால்… அவ்வளவுதான்…
உங்கள் அழுகையை அவனால்தாங்கிக்க் கொள்ளவே முடியாது.
ஓடோடி வருவான். உங்கள் துயரங்களைப் போக்குவான்.
உங்கள் வாட்டத்தையெல்லாம் போக்கியருள்வான் வாயுமைந்தன்.

———————————-
-வி.ராம்ஜி
தி இந்து

 

« Older entries