
பொதுவாக ஒரு கருப்பன் கோயில் இருக்கிறது. இந்தக் கோயில்
நிர்வாக பொறுப்பு யாரிடம் இருக்க வேண்டும் என்பதில் இரு
ஊர்களுக்கும் மோதல். ஜல்லிக்கட்டு நடத்தி வெற்றிபெறும்
ஊருக்கு நிர்வாகம் தரப்படும் எனப் பேசி முடிவுசெய்யப்படுகிறது.
இதற்காக 18 காளைகளை ஒரு ஊரும், 18 மாடு பிடி வீரர்களை
இன்னொரு ஊரும் களமிறக்கத் தயாராகின்றன.
இதற்காக முன்னாள் மாடு பிடி வீரரான ஆடுகளம் நரேனின்
மகன் சசிகுமாரை ஊருக்குக் கூட்டி வர சென்னை
புறப்படுகிறார்கள் ஊர் பெரியவர்கள். சென்னையில் மகனுடன்
வாழும் ஆடுகளம் நரேன் ரேஸ் குதிரை பயிற்சியாளராக இருக்கிறார்.
ஊருக்கு நல்லது மட்டுமே செய்யவேண்டும் என நினைக்கும்
வள்ளலார் பக்தர். இதனால் தொடர்ந்து ஏதேனும் பிரச்னையில்
சிக்கிக்கொள்கிறார். அவரை மீட்டு ‘இதெல்லாம் நமக்கு எதுக்கு?’
என ஒதுங்கிப்போகச் சொல்கிறார் சசிகுமார்.
இந்த நேரத்தில்தான் ஊருக்கு உதவ வேண்டி ஊர் பெரியவர்கள்
இவர்களை நாடி வருகிறார்கள். ஊருக்காக ஜல்லிக்கட்டில் சசிகுமார்
களம்கண்டரா, கோயில் நிர்வாகம் யார் கைகளுக்குச் சென்றது
என்பதுதான் ‘காரி’ படத்தின் கதை.
ஜீவகாருண்யம், மனிதனுக்கும் விலங்குக்குமான பந்தம்,
மாட்டிறைச்சி மாஃபியாவின் அட்டூழியங்கள், நகரங்களின்
நலனுக்காகச் சுரண்டப்படும் கிராமங்கள் எனப் பல பிரச்னைகளை
ஒரே படத்தில் பேச முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர்
ஹேம்நாத்.
ஆனால், இத்தனை விஷயங்கள் இருப்பதாலேயே எதையுமே
அழுத்தமாகச் சொல்லாமல் கடக்கிறது படம். சிட்டியிலிருந்து
கிராமத்துக்குத் திரும்பும் இளைஞனாகப் பார்த்துப் பழகிய சசிகுமார்.
ஜல்லிக்கட்டு, ரேஸ் குதிரை பயிற்சி எனக் களம் மட்டுமே புதுசு.
மற்றபடி, நண்பனின் துரோகம், ஊருக்காக வெகுண்டெழும் வீரம்
என டெம்ப்ளேட் சசிகுமார் கதாபாத்திரம். இன்னும் எத்தனை
நண்பர்கள் சசிகுமார் முதுகில் குத்துவார்களோ தெரியவில்லை!
காளை வளர்க்கும் ஊர்க்கார பெண்ணாக அறிமுக நாயகி பார்வதி
அருண் வசீகரிக்கிறார். நடிப்புத்திறமையை வெளிப்படுத்தக்
கிடைத்திருக்கும் சில காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்கிறார்.
ஆடுகளம் நரேன், பாலாஜி சக்திவேல், நாகி நீடு முக்கிய
கதாபாத்திரங்களில் பெரிய குறை எதுவும் இல்லாமல்
நடித்திருக்கிறார்கள். வழக்கமான உடல்மொழி, சுமாரான வசனங்கள்
என ரெடின் கிங்ஸ்லி செய்யும் காமெடிகள் எதுவும் எடுபடவில்லை.
படத்தின் பிற்பாதியில் திடீரென காணாமலும் போய்விடுகிறார்.

ராமநாதபுரத்தில் இருக்கும் காரியூர், சிவனேந்தல் ஊர்களுக்கு
இறைச்சி ஏற்றுமதி செய்யும் கார்ப்பரேட் வில்லனாக ஜே.டி.சக்கரவர்த்தி.
நடிப்பில் தொடங்கிக் கலை இயக்கம் வரை அவர் தொடர்பான
காட்சிகள் முழுக்க செயற்கைத்தனம் வழிந்தோடுகிறது. எந்த ஒரு
பாதிப்பையுமே நம்மிடம் ஏற்படுத்தாத இந்தக் காட்சிகள் பெரும்
சோர்வை ஏற்படுத்துகின்றன.
இவர்களுடன் படத்தில் அம்மு அபிராமியும் இருக்கிறார். இரண்டாம்
பாதியில் அவர் எதற்காக வருகிறார், அங்கு என்ன செய்கிறார் என்பது
அவருக்கு மட்டுமே வெளிச்சம்.
காளை தொடர்பான காட்சிகளை நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியதற்காக
மொத்த படக்குழுவுக்கும் பாராட்டுகள். ஒளிப்பதிவாளர் கணேஷ்
சந்திராவுக்கும், எடிட்டர் சிவநந்தீஸ்வரனுக்கும் ஸ்பெஷல் பூங்கொத்துகள்.
கிளைமாக்ஸ் ஜல்லிக்கட்டு காட்சியில் மிளிர்கிறது இவர்களது உழைப்பு.
இசையமைப்பாளர் இமானின் பின்னணி இசை மற்றும் பாடல்களில்
புதிதாக எதுவுமில்லை. ஓகே ரகம்.
கிராமங்களின் புகழ் பாடுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால்,
அதற்காக நகரங்களில் இருப்பவர்களைத் தீயவர்களாகச் சித்தரிக்கும்
போக்கு இந்தப் படத்திலும் தொடர்கிறது. குறிப்பாக, முதல் பாதியில்
வரும் அந்த ஹோட்டல் காட்சி அபத்தம்.
அதே போல நம் மரபுகளையும் கலாசாரத்தையும் தூக்கிப்பிடிப்பதில்
எந்தப் பிரச்னையும் இல்லை, அதனுடன் ஆங்காங்கே பழைமைவாத
கருத்துகளையும் தூக்கிப்பிடிப்பதைத் தவிர்க்கலாம்.
‘இதெல்லாம் எப்படி பாஸ் நடக்கும்?’ என இரண்டாம் பாதியில் பல
லாஜிக் முரண்களும் நம்மைத் தலைசுற்ற வைக்கின்றன.
ஒரே ஒரு பிரச்னையை இன்னும் ஆழமாக, தெளிவான புரிதலுடன்
அணுகியிருந்தால் இந்த `காரி’ சீறியிருக்கும்!
-நன்றி: விகடன்
மறுமொழியொன்றை இடுங்கள்