:
–
தேவையான பொருட்கள்:
–
கடலை பருப்பு – 1 கப்
வெல்லம் – 1 கப்
கோதுமை மாவு – ¾ கப்
மைதா – ¾ கப்
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – ¼ தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 1 கப்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
–
செய்முறை:
–
பூரணம் தயாரிக்க:
–
முதலில் வெல்லத்தையும், ஏலக்காயையும் தனித்தனியாகப் பொடித்துக்
கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். கடலை பருப்பை சுத்தம்
செய்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு நன்றாக வேகவைத்து
தண்ணீரை வடிகட்டி மசித்துக்கொள்ளவும்.
வெல்லத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றவும்.
அதை அடுப்பில் வைத்து, மிதமான சூட்டில் வெல்லம் நன்றாகக் கரைந்ததும்
வடிகட்டிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் மசித்து வைத்திருக்கும் கடலை பருப்பு,
வெல்லப்பாகு, கால் மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள் மற்றும் ஒரு மேஜைக்
கரண்டி துருவிய தேங்காய் சேர்த்து கிளறவும். கலவையில் இருக்கும் தண்ணீர்
வற்றும் வரை மிதமான சூட்டில் வதக்கவும்.
பூரணம் கெட்டியாகாமல் தளர்வாக இருக்கும்போதே அடுப்பை அணைக்கவும்.
பூரணத்தை அடுப்பின் வெப்பத்திலேயே வைத்திருக்கவும்.
மேல் மாவு தயாரிக்க:
அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவையும், மைதா மாவையும் சமஅளவு
எடுத்துக்கொள்ளவும். அதனுடன் கால் மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும்
உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பின்பு இந்த மாவில் சிறிது சிறிதாக தண்ணீர்
சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தைவிட மிருதுவாக இருக்குமாறு பிசைந்து
கொள்ளவும்.
பின்னர் அதில் 3 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, மாவின் வெளிப்புறம்
முழுவதும் தடவி சுமார் ஒரு மணி நேரம் வரை ஊற விடவும். அதன் பிறகு ஒரு
பட்டர் பேப்பரில் எண்ணெய்யைத் தடவவும். அதில் ஊற வைத்திருக்கும் மாவை
எடுத்து உருண்டையாக உருட்டி, கைகளாலேயே பக்குவமாக சப்பாத்தி வடிவத்தில்
தட்டிக் கொள்ளவும்.
பின்னர் பூரணத்தை உருண்டையாக உருட்டி, தட்டிய மாவின் நடுவில் வைத்து,
மாவை மடித்து மீண்டும் உருட்டிக் கொள்ளவும்.
இந்த உருண்டையை எண்ணெய்யில் தோய்த்து பட்டர் பேப்பரில் வைத்து மீண்டும்
கைகளின் மூலம் சப்பாத்தி வடிவத்தில் பக்குவமாகத் தட்டவும். பின்பு தோசைக்
கல்லை அடுப்பில் வைத்து, அது சூடானதும் மிதமான தீயில் தட்டி வைத்திருக்கும்
மாவைப் போட்டு அதன் மேலே நெய்யை தடவவும்.
ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டு, மீண்டும் நெய்யை தடவி சுட்டு
எடுக்கவும். இப்பொழுது சூடான மற்றும் இனிப்பான ‘பொப்பட்லு’ தயார்.
நன்றி-தினத்தந்தி- ’தேவதை’
Geetha Sambasivam said,
ஏப்ரல் 19, 2022 இல் 6:06 பிப
நாங்க போளி என்போம். போன வாரம் தான் பண்ணினேன். அதுவும் ரொம்பக் கொஞ்சமாகச் செய்தேன்.