ஆண்களின்(அண்ணன்) அவசர முடிவால் பெண்களுக்கு (தங்கை) ஏற்படும் மாறாத வடுக்கள் கொஞ்சமல்ல. கெளரவத்துக்காக அவரசத்தில் ஆண் எடுக்கும் சில முடிவுகள் அந்தப்பொழுதில் சரியானதாக இருந்தாலும் அதன் பின் விளைவுகள் காலம் முழுவதும் உறுத்திக்கொண்டும், மனதை வருத்திக்கொண்டும் இருக்கும். அந்த மாதிரி ஒரு குடும்பக் கதையின் ஆராத ரணம்தான் ‘மருத’.
பாரதிராஜாவின் சீடரான ஜி.ஆர்.எஸ். கதைக்காக பெரிதாக மெனக்கெடவில்லை. தென் மாவட்டங்களில் ‘செய்முறை’ என்ற மொய் கலாச்சாரத்தைதான் கதைக்கருவாக எடுத்துக்கொண்டுள்ளார்.
படத்தோட கதை என்ன?
‘பருத்திவீரன்’ சரவணன், ராதிகா இருவரும் பாசமலர்கள். உறவு விட்டுப்போய்விடக்கூடாது என்பதற்காக ஊதாரி ஒருவரைத் தங்கைக்கு மணமுடித்து வைக்கிறார்.
தங்கை மகன் (நாயகன்) காதுகுத்து நிகழ்வில் கெளரவத்தை விட்டுத்தரமாட்டேன் என்ற ஆவேசத்தோடும் வீராப்போடும் தங்கையின் பொருளாதாரத்தை மனதில் கொள்ளாமல் செய்முறை செய்கிறார்.
ஒரு கட்டத்தில் ராதிகா விதவையாகிறார். இதற்கிடையே நாயகன் ஜி.ஆர்.எஸ். மாமன் மகள் லவ்லின் சந்திரசேகரை துரத்தித் துரத்திக் காதலிக்கிறார்.
இந்த நிலையில் தன் மகளை வசதியான மாப்பிள்ளைக்கு மணமுடித்துவைக்க தான் செய்த செய்முறை பாக்கியை வசூலிக்க பத்திரிகை அடிக்கிறார் சரவணனின் மனைவி விஜி சந்திரசேகர். கையறு நிலையில் இருக்கும் ராதிகாவால் செய்முறை செய்ய முடிந்ததா?, அதனால் அவர் சந்திக்கும் அவமானம் என்ன? நாயகனின் காதல் கனவு நிறைவேறியதா? என்பனவற்றைச் சொல்வது கதை.
படத்தின் மொத்த கவன ஈர்ப்பையும் ராதிகா, விஜி சந்திரசேகர் ஆகிய இரு பெண்கள் பெறுகிறார்கள்.
அமைதியான நடிப்பில் ராதிகாவும் ஆக்ரோஷமான நடிப்பில் விஜியும் நடிப்பின் உச்சம் தொட்டிருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு பிறகு விஜிக்கு கோலிவுட், டோலிவுட் சினிமாவில் எதிர்மறை வேடத்துக்காக தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தால் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
நாயகனாக படத்தின் இயக்குநரான ஜி.ஆர்.எஸ். நடித்திருக்கிறார். மீட்டர் முள் உடையுமளவுக்கு நடிப்பில் வேகம். ஆனால் நக்கல், நையான்டி போன்ற உணர்வுகளை அநாவசியமாக செய்திருக்கிறார்.
நாயகி லவ்லின் சந்திரசேகர் நவநாகரீகமாக வளர்ந்தவர். ஆனால் தாவணி, பாவடையில் கிராமத்துப் பெண்ணாகவே மாறி வியப்பைத் தருகிறார். அத்தையிடம் பரிவு, மாமனிடம் பொய்க் கோபம் என இரசிக்க வைக்கிறார்.
‘பருத்திவீரன்’ சரவணன் ஆரம்பத்தில் கம்பீரமாக அறிமுகமாகி பின் அடங்கிப் போவது என நடிப்பின் பல பரிமாணங்களைத் தொட்டிருக்கிறார்.
சீரியசான கதையில் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார் கஞ்சாகருப்பு. வேல ராமமூர்த்தி, மாரிமுத்து ஆகியோரும் தங்கள் வேலையில் குறை வைக்கவில்லை.
படத்துக்குப் பெரிய பலம் இளையராஜாவின் இசை. பாடல்கள், பின்னணி இசை என இசை ராஜாங்கம் நடத்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பட்டுக்கோட்டை ரமேஷ் கதையை சிதைக்காமல் கச்சிதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இயக்குநர் ஜி.ஆர்.எஸ். செய்முறை கலாச்சாரம் வழியாக தமிழர்களின் வாழ்வியலை மண்வாசத்துடன் சொல்லியிருப்பதை வரவேற்கலாம்.
… ஷாஷா
நன்றி-சினிமாவலை.காம்
மறுமொழியொன்றை இடுங்கள்